மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 36 - தொலைவிலிருந்து வந்தது யார்?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

‘ஓமுவமுவா’ (Oumuamua) எனும் பெயரை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹாரிஸ் ஜெயராஜின் பாடல் வரிகள் என்று நினைத்துவிட்டீர்களா? சேச்சே!

இதுவரை பல மர்மங்களைப் பார்த்திருக் கிறோம். உண்மையாகவே நடந்தவையா, இல்லையா எனும் கேள்வியுடனேயே அவற்றுடன் பயணித்துமிருக்கிறோம். ஆனால், நம் கண்முன்னே நடந்த நிஜமான மர்மம் ஒன்றை இப்போது பார்க்கப் போகிறோம். மிகச் சமீபத்தில்தான் அது நடைபெற்றது. அந்த மர்மத்தால், இந்த நிமிடம்வரை அறிவியல் உலகமே இரண்டாகப் பிரிந்து, குழாயடிச் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறது. கேட்கையில் மிகச் சாதாரணமாகத் தோன்றும் அந்தச் சம்பவம், இறங்கி ஆராயும்போது பெரும் திகைப்பை ஏற்படுத்தும். அந்த மர்மத்தின் ஆழத்தில் என்ன ஒளிந்திருக்கிறது என்பதையே நாம் பார்க்கப்போகிறோம்...

அந்தச் சம்பவம் நடந்தது 2017-ம் ஆண்டில். அந்தச் சம்பவத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைப் பாருங்கள். எந்தக் கட்டடமும் அருகில் இல்லாத மிகப்பெரிய வெளியொன்றில், பெட்ரோல் ஸ்டேஷன் ஒன்றின் உரிமையாளர் நீங்கள். பலவிதமான கார்களும், மோட்டார் வாகனங்களும் அவ்வப்போது பெட்ரோல் நிரப்பிவிட்டுச் செல்லும். அன்றும் அப்படித்தான். தூரத்தில் வெகுவேகமாக வாகனமொன்று ஸ்டேஷனை நோக்கி வந்துகொண்டிருந்தது. வழக்கமாகவே பலவிதமான வாகனங்கள் வருவதால், அந்த வாகனத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பணிசெய்யும் பையன் பெட்ரோலை நிரப்பிவிடுவான் என்று அலட்சியமாக இருந்துவிடுகிறீர்கள். வேகமாக வந்த வாகனம், பெட்ரோலை நிரப்பிக்கொண்டு மீண்டும் வேகமெடுத்துச் செல்ல ஆரம்பிக்கிறது. அப்போதுதான் அதை நீங்கள் கவனிக்கிறீர்கள். அதுவரை பார்த்தேயிருக்காத வாகனம் அது. உங்களால் கற்பனைகூடச் செய்ய முடியாத வடிவத்தில் இருந்தது. வடிவம் மட்டுமல்ல... அதன் நிறம், அதன் வேகம், செல்லும் திசை அனைத்தும் நீங்கள் எதிர்பார்க்காதவிதத்தில் இருக்கின்றன. ‘அட! இது என்ன வகையான வாகனம்... எங்கிருந்து வருகிறது... வரும்போதே நிதானமாக அவதானித்திருக்கலாமே’ என்று கவலைப்படுகிறீர்கள். இனி அப்படியொரு வாகனத்தை நீங்கள் காணவே முடியாது. அது, அதிவேகத்துடன் கண்ணிலிருந்து மறைந்துபோகிறது. இன்றுவரை உங்களைத் தூங்கவிடாமல் தவிக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 36 - தொலைவிலிருந்து வந்தது யார்?

இது போன்ற சம்பவம் ஒன்றுதான் 2017, அக்டோபர் 19-ம் தேதியில் நடைபெற்றது. அதை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதன் தொடர்ச்சியை அறிய மாட்டீர்கள்.

‘ஓமுவமுவா’ (Oumuamua) எனும் பெயரை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹாரிஸ் ஜெயராஜின் பாடல் வரிகள் என்று நினைத்துவிட்டீர்களா? சேச்சே! நிஜமாகவே ஓமுவமுவா எனும் பெயர்கொண்ட பொருளொன்று விண்வெளியூடாகச் சூரியக் குடும்பத்தினுள் நுழைந்தது. நுழைந்து உள்ளே வரும்போது, பெட்ரோல் ஸ்டேஷனுக்கு வரும் வழமையான வாகனங்கள்போலவே அதையும் நினைத்துவிட்டார்கள். ஏதோவொரு வால்நட்சத்திரம் (Comet), சூரியனின் ஈர்ப்பை நோக்கி நகர்கிறது என்றுதான் அசட்டையாக இருந்தார்கள். வால்நட்சத்திரம் என்பதால், வழமைபோல அதற்குப் பெயரொன்றையும் கொடுத்தார்கள். சர்வதேச வானியல் கூட்டமைப்பு (International Astronomical Union), விண்வெளிக்குள் பிரவேசிக்கும் பொருள்களுக்கு அவற்றின் தன்மையையும், ஆண்டையும் வைத்து பெயரிடுவார்கள். அதன்படி, ஓமுவமுவாவுக்கு, ‘C/2017 U1’ என்று பெயரிடப்பட்டது. அதிலுள்ள ‘C’ எழுத்து,

Comet என்பதைக் குறிக்கும். ‘ராபர்ட் வெரிக்’ (Robert Weryk) என்பவரே முதன்முதலாக அதை அவதானித்தவர். ஹவாய் நாட்டிலிருக்கும் வானியல் அவதானிப்பு நிலையத்திலிருந்து (Pan STARRS Haleakala Observatory, Hawaii) முதன்முறையாக அதைக் கண்டுகொண்டார். பூமியிலிருந்து 33 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில், சூரியனை நோக்கி அது நகர்ந்துகொண்டிருந்தது. அதைக் கண்டுபிடித்து நாற்பது நாள்களில், சூரியனின் மிகச்சமீபமான புள்ளியை நெருங்கியது. சூரியஒளியில் பளபளவென ஜொலிக்கவும் ஆரம்பித்தது. அப்போதுதான் அந்த ஆச்சர்யத்தை அவர்கள் அவதானித்தார்கள். வால்நட்சத்திரங்கள், கல்லால் அல்லது இரும்பால் அல்லது ஏதோவொரு கனிமத்தால் உருவானதாக இருக்கும். அந்தப் பாறைகளை தடித்த பனிக்கட்டிப் பாளங்கள் (Eis) சூழ்ந்து மூடியிருக்கும். அதனால் அவை பளபளத்து ஒளிரும். வால்நட்சத்திரங்கள் சூரியனை அணுகும்போது, பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்து, பாறையின் தூசுக்களுடன் வால்போல ஆகி, நீண்டு ஒளிரும். அதை ‘கோமா’ (Coma) என்பார்கள். அந்த கோமாவைவைத்தே வால்நட்சத்திரங்கள் அறியப்படுகின்றன. சூரிய ஒளியால் உருகிச் சிதறும் துகள்கள் கொடுக்கும் உந்துதலால், வால்நட்சத்திரம் முன்னோக்கி வேகமெடுக்கும். ஓமுவமுவாவில், வால்நட்சத்திரங்களுக்கு நடக்கும் எதுவும் நடைபெறவேயில்லை.

ஓமுவமுவா, சூரியனை நெருங்கும்போது அதிலிருக்கும் பனிக்கட்டிகள் உருகிச் சிதறும் என்றுதான் நினைத்தார்கள். அப்படி நடக்கும்போது, வால்நட்சத்திரங்களின் பருமனும் குறைந்துவிடும். கிட்டத்தட்ட பத்து சதவிகிதத்துக்கும் அதிகமான உருவம் குறைந்துவிடும். எதுவும் நடக்கவில்லை. அப்போதுதான் ‘அட! இது வால்நட்சத்திரமே இல்லை. நாம் தப்பாகப் புரிந்துகொண்டுவிட்டோம். இதுவொரு ‘விண்கல்’ (Asteroid) என்று முடிவுக்கு வந்தார்கள். உடனடியாக அதன் பெயரும் ‘A/2017 U1’ என்று மாற்றப்பட்டது. இதிலிருக்கும் ‘A’ எழுத்து

Asteroid-க்கானது என்று நான் சொல்லத் தேவையில்லை. நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள். இத்துடன் முடிந்திருந்தால் இந்தக் கட்டுரையை நான் எழுத வேண்டிய அவசியமே இருந்திருக்காது. வானியலின் மிகப்பெரிய மர்மமும் தொலைந்துபோயிருக்கும். ஓமுவமுவாவுக்கு மூன்றாவதாகப் பெயர் மாற்ற வேண்டிய சூழ்நிலையும் உருவானது. அதுவே, தமக்குள் இரண்டாகப் பிரிந்து இன்றுவரை விஞ்ஞானிகள் விவாதித்து, முடிவுக்கு வர முடியாத விஷயமாகியிருக்கிறது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 36 - தொலைவிலிருந்து வந்தது யார்?

வானியற்பியல் தற்போது அட்டகாசமாக வளர்ந்துவிட்டது. பூமியிலிருந்து ஏவிவிடப்பட்ட விண்கலம், சொல்லிவைத்ததுபோலச் செவ்வாயின் கிரேட்டர் பள்ளத்தில் புள்ளியிட்டதுபோல இறங்கியிருக்கிறது. அவ்வளவு துல்லியமாக அறிவியல் வளர்ந்தாகிவிட்டது. சூரியஈர்ப்பு, புவியீர்ப்பு, வேறு கோள்களின் ஈர்ப்புகள், அவை கொடுக்கும் தள்ளுவிசை (Trajectory) போன்றவற்றையெல்லாம் விரல்நுனியில் கணிக்கும் துல்லியமான அறிவியல் வந்துவிட்டது. அதன்படி ஓமுவமுவா, சூரியனை நெருங்கியதும் அது பெறும் விசையால் வேகமெடுத்துத் தள்ளப்பட வேண்டும். இயற்கையாக உருவான அனைத்தும் அப்படியான விசையுடன் நகர்த்தப்படுவதுதான் இயற்பியல் விதியும்கூட. ஆனால், ஓமுவமுவா அந்த விதிகளையெல்லாம் பொய்யாக்கி, அனைவரையும் ஏமாற்றிவிட்டுத் தனக்கான தனிப்பாதையில், அதிக வேகத்தில் பயணிக்க ஆரம்பித்தது. சூரிய குடும்பத்திலிருக்கும் விண்கற்களும், வால்நட்சத்திரங்களும், கோள்களும், நீள்வட்டமான (Eclipse) பாதையிலேயே சூரியனைச் சுற்றிவருகின்றன. ஒரு சில பொருள்கள், விதிவிலக்காகப் பரவளைவுப் (Parabolic) பாதையில் நகரும். ஆனால், ஓமுவமுவாவோ அதிபரவளைவுடைய (Hyperbolic) பாதையில் சூரியனைக் கடந்தது. சூரியஈர்ப்புக்குட்பட்ட எந்தப் பொருளும் பரவளைவாக நகர்வது கிடையாது. அப்படியொன்று நகருமாயின், சூரியக் குடும்பத்துக்குச் சம்பந்தமே இல்லாத தொலைதூர இடத்திலிருந்து வந்திருக்க வேண்டும். ஓமுவமுவா, சூரிய குடும்பத்துக்கானதில்லை. வெகுதொலைவிலிருந்து அது வந்திருக்கிறது. மில்க்கி வே காலக்ஸிக்கு அப்பாலிருந்தும் வந்திருக்கலாம் என்றும் இப்போது சந்தேகிக்கிறார்கள். அதனால், அதன் பெயரையும் ‘1I/2017 U1’ என்று மாற்றினார்கள். I எனும் ஆங்கில எழுத்து Interstellar என்பதையும், முதன்முதலாகச் சூரியக் குடும்பத்துக்கு வெளியேயிருந்து வந்ததால், 1I எனவும் விசேஷப் பெயர் கொடுக்கப்பட்டது. இந்த இடத்தில் ஓமுவமுவா பற்றிய விவரங்களைப் பார்த்துவிடலாம்.

ஹவாய் மொழியில், Oumuamua என்றால் ‘தொலைதூரத்திலிருந்து வந்த தூதர்’ என்று அர்த்தம்கொள்ளலாம். அதன் நீளம் 200 மீட்டரிலிருந்து 1,000 மீட்டர்வரை என்கிறார்கள் (சரியான நீளம் தெரியவில்லை). அதன் அகலமோ, நீளத்தின் பத்திலொரு பங்கு சிறியதாக இருக்கிறது. கிட்டத்தட்ட மிக நீண்டதொரு புகைக்கும் சுருட்டு வடிவத்தில் காணப்படுகிறது. அதன் மேற்பரப்பு, விண்கற்கள், வால்நட்சத்திரங்கள்போலப் பத்து மடங்கு அதிகமாகப் பிரதிபலிப்பதோடு, அழுத்தமான தரையையும்கொண்டிருக்கிறது. அதன் நிறம் கருஞ்சிவப்பாகக் காணப்படுகிறது. மொத்தத்தில் அதன் எந்த அமைப்பும், இயற்கையாக உருவான பிரபஞ்சப் பொருளை உணர்த்தவில்லை. விண்வெளியில் உலாவரும் எந்தப் பொருளும், இந்த அளவுக்குக் குறைந்த அகலமும், அதிக அளவு நீளமுமாக இருக்கவே முடியாது. வெகுதொலைவிலிருந்து பயணம் செய்யும் ஒரு விண்கல், இப்படியான நீள அகலத்துடன் காணப்பட முடியாது. ஓமுவமுவா விண்வெளியில் சுழலும் விதமும் ஆச்சர்யமானது. அடிப்பக்கமும் மேற்பக்கமும் எப்போதும் ஒரே நிலையிலிருக்க, நீளமான திசையில் அது மெதுவாகச் சுழல்கிறது. அதன் நடவடிக்கை எதுவுமே, சாதாரணமான அனுமானங்களுக்குள் அடங்கக்கூடியதாக இல்லை. அதன் இயல்பற்ற நடவடிக்கைகளால், அது இயற்கையாக உருவான பொருளே அல்ல என்ற முடிவுக்குப் பலர் வந்திருக்கிறார்கள். அது ஏலியன்களால் உருவாக்கப்பட்ட விண்கலம் என்று சொல்கிறார்கள். சூரியனைவிட்டு ஓமுவமுவா விலகியபோது, அது எடுத்துக்கொண்ட வேகத்தைக் கண்டு திகைத்துப்போயிருக்கிறார்கள். இயற்கையான பொருளால் அப்படியொரு வேகத்தை எடுக்கவே முடியாது. வால்நட்சத்திரமாக இருந்தாலாவது, பனிக்கட்டிகளின் உருகலால் ஏற்படும் உந்துவிசை, அந்த வேகத்தைக் கொடுத்திருக்கலாம் என்று சொல்லலாம். ஆனால், அதில் பனிக்கட்டிகளே இருக்கவில்லை. அது போன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஓமுவமுவா நிச்சயம் ஏலியன்கள் உருவாக்கிய விண்கலம்தான் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியரான ‘ஆபிரஹாம் லோப்’ (Prof.Abiraham Loeb) திட்டவட்டமாகச் சொல்கிறார்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 36 - தொலைவிலிருந்து வந்தது யார்?

அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைப் பற்றியோ, அதன் வானியல் ஆராய்ச்சித்துறை பற்றியோ நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. உலகின் முதல்தரப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. அதன் பேராசிரியரான ஆபிரஹாம் லோப் வகித்த பதவிகளையும், தலைமைப் பொறுப்புகளையும் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் படிக்கும் ஜூனியர் விகடனின் ஒரு பக்கமளவுக்கு நீண்டிருக்கும். அவர் எவ்வளவு பிரபலமானவர் என்பதையும், துறை சார்ந்த அவரது அறிவு ஆகியவற்றையும் இணையத்தில் தேடிப்பாருங்கள். திகைத்துப்போவீர்கள். அவரே `ஓமுவமுவா, ஏலியன்களால் அனுப்பப்பட்ட விண்கலம்தான்’ என்கிறார். அதற்காக அவர் கொடுக்கும் விளக்கங்களை எவராலும் மறுக்க முடியாது என்பதும் உண்மை.

லோப்-ன் கருத்தை ஏற்றுப் பல விஞ்ஞானிகள், அது ஏலியன்களின் விண்கலம்தான் என்று ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதுபோலவே, அது இயற்கையாக உருவான பொருள்தான் என்றும் பல விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இரு பகுதியின் கருத்துகளையும் யாராலும் தூக்கியெறிய முடியாது. லோப்-ன் கடுமையான வாதத்தால், பல இயற்பியலாளர்கள் நழுவலான பதில்களைச் சொல்லி முடிக்கிறார்கள். எது எப்படியிருந்தாலும், இன்றுவரை ஓமுவமுவா என்ன பொருள் என்பது மர்மமாகவே இருக்கிறது. அந்த மர்மத்தை இனி எவராலும் தீர்க்கவும் முடியாது. காரணம் ஓமுவமுவா நம்மைவிட்டுப் பிரிந்து மீண்டும் வரவோ, காணவோ முடியாத அளவு வெகுதொலைவுக்குச் சென்றுவிட்டது.

விஞ்ஞானிகளால் நிரூபிக்கவே முடியாதபடி ஒரு பொருள் சூரியக் குடும்பத்தினுள் நுழைந்து அகன்றது, இதுவே முதல் தடவை. அவர்கள் அனைவரையும், கேள்விக்குறியின் வளைவுக்குள் தொங்கவைத்துவிட்டு, சனிக்கோளுக்கும் நெப்டியூனுக்குமிடையில் தனியாகப் பயணம் செய்துகொண்டிருக்கிறது. மணிக்கு 1,40,000 கிலோமீட்டர் வேகத்தில் நம்மைவிட்டு விலகிச் செல்லும் ஓமுவமுவா, இனி மனித வரலாற்றிலேயே காண முடியாதபடி மறைந்துபோகும்!

(தேடுவோம்)