மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 38 - உயிரா... உணர்வா... இல்லை அதிர்வா?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

தனிமங்களை எப்படி வரிசைப்படுத்துவது என்று திண்டாடியவருக்கு, தானாகவே அட்டவணைக் காட்சியாகத் தோன்றியது

தமிழ்நாட்டைச் சேர்ந்த சீனிவாச ராமானுஜன் அவர்களை, இங்கிலாந்துக்கு அழைத்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைத்தார் கணிதப் பேராசிரியரான G.H.ஹார்டி. தனக்குத் தோன்றிய கணிதச் சமன்பாடுகளையெல்லாம் குறிப்பேடுகளில் எழுதுவதுதான் ராமானுஜனின் வழக்கம். கணிதத்தை முறையாக வடிவமைப்பது எப்படியென்று ஹார்டி கற்றுக்கொடுத்தார். ராமானுஜனின் கணிதத் திறமையைக் கண்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமே திகைத்துப் போயிருந்தது. அதனால், அவருக்கு ‘FRS’ (Fellowship of the Royal Society) விருதைக் கொடுத்து கௌரவித்தது. அதே போன்ற விருதை, டிரினிட்டி காலேஜும் அவருக்கு வழங்கியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இளவயதிலேயே நோயால் பாதிக்கப்பட்டார் ராமானுஜன். நோய் தீவிரமானதால், தமிழ்நாட்டுக்கே திரும்பினார். அங்கு நோய்ப் படுக்கையில் இருந்தபோதும், கணிதச் சமன்பாடுகள் அவருக்குத் தோன்றிக்கொண்டே இருந்தன. 32 வயதில் அவர் இறந்தும்போனார். மரணப்படுக்கையில் அவர் எழுதிய மூன்று குறிப்புப் புத்தகங்களில், நூற்றுக்கணக்கான கணிதச் சமன்பாடுகள் போடப்பட்டிருந்தன. அதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்தச் சமன்பாடுகளில் சிலவற்றை ராமானுஜனாலேயே சரிபார்த்துக்கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்டவை அவருக்கு எப்படித் தோன்றியிருக்க முடியும்?

இறப்பதற்கு முன்னர், ‘நாமகிரித் தாயாரிடமிருந்து எனக்குக் கணிதங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றைக் குறிப்பெடுத்துக்கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதைச் சரியாகப் புரிவதாயின், எங்கோ ஓரிடத்திலிருந்து அனுப்பப்படும் கணிதச் சமன்பாடுகளை, அவர் கிரகித்துக்கொண்டிருக்கிறார். அதையே, குலதெய்வமான நாமகிரித் தாயால் அனுப்பப்படுகிறது என்று சொல்லியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாக்குமூலம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். சொந்தத் திறமையால் உருவாகும் கணிதத்தை, யாரோ அனுப்பியதாகச் சொல்கிறார் என்றும் நினைப்பீர்கள். இது போன்ற கூற்றுகளை ராமானுஜன் மட்டுமல்ல, வேறு பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

வேதியியல் தனிமங்களை முறையாக அட்டவணைப்படுத்தியவர் ‘மெண்டலீவ்’ (Mendeleev Periodic Table) எனும் ரஷ்யர். தனிமங்களை எப்படி வரிசைப்படுத்துவது என்று திண்டாடியவருக்கு, தானாகவே அட்டவணைக் காட்சியாகத் தோன்றியது. அந்தச் சமயத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களையும் வரிசைப்படுத்தக்கூடியவாறு அட்டவணையை உருவாக்கினார். அந்த ஆச்சர்யத்தை அவரே பதிவிட்டிருந்தார். அவரைப்போல, மைக்கேல் ஃபாரடே, ஐன்ஸ்டீன், நிக்கோலா டெஸ்லா, ஆப்பிள் நிறுவத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோரும், அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான தரவுகளைக் காட்சிகளாக எங்கிருந்தோ கிரகித்துக்கொண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவை உண்மையா, பொய்யா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பல காகங்கள் உட்கார்ந்து, பல பனம்பழங்கள் விழுந்தது நடந்திருக்கிறது. அவற்றில் நிக்கோலா டெஸ்லாவுக்கு நடந்தது வேறு லெவெல்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 38 -  உயிரா... உணர்வா... இல்லை அதிர்வா?

டெஸ்லா, தனது கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படைகள், பிரபஞ்ச வெளியிலிருந்து கிடைத்ததாகச் சொல்லியிருக்கிறார். கணிதத்தில் மிகத்திறமையானவராக இருந்திருக்கிறார். கல்லூரிப் படிப்பு முடிந்த சமயத்தில், அவருக்கு நடந்த சம்பவத்தைக் கேளுங்கள். டெஸ்லாவும் அவரது நண்பரும் புதாபெஸ்ட் நகரிலுள்ள பூங்காவில் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென அவருக்குள் விதவிதமான சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்தன. எங்கிருந்தோ அனுப்பப்படும் தகவல்கள் காட்சிகளாக அவருக்குத் தோன்ற ஆரம்பித்தன. அதற்கு முன்னர் பார்த்திருக்காத வடிவங்கள் அவை. பூங்காவின் மண்தரையில் அந்த வடிவங்களைக் குச்சியொன்றால் வரைய ஆரம்பித்தார். முடிந்ததும் பார்த்தால், டெஸ்லாவாலேயே நம்ப முடியவில்லை. அது ‘இண்டக்‌ஷன் மோட்டார்’ (Induction Motor) ஒன்றின் வரைபடமாக இருந்தது. அதை அப்படியே மனதில் பதித்துக்கொண்டார். பின்னர் அமெரிக்கா சென்று, முன்னர் தோன்றிய வரைபடத்துக்கு உயிர்கொடுத்து, இண்டக்‌ஷன் மோட்டாரை உருவாக்கினார். உலகமெங்கும் இண்டக்‌ஷன் மோட்டார் அறிமுகமானது. டெஸ்லா சாதாரண ஒரு மனிதரல்ல. பல உபகரணங்களின் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர். அமெரிக்காவில் அவரின் ஆரம்ப நாள்கள், தாமஸ் ஆல்வா எடிசனிடம் மாத ஊதியப் பணியாளராக்கியிருந்தது. ‘மாறுதிசை மின்சாரம் (Altenating Current) மூலம் அமெரிக்கா முழுவதும் மின்சாரத்தை வழங்க முடியும்’ என்று எடிசனுக்குக் கூறினார். அது சாத்தியமே இல்லையென்று எடிசன் ஏற்றுக்கொள்ள மறுத்தார். “முடிந்தால், அதை உருவாக்கிக்காட்டு... நான் உனக்கு 50,000 டாலர் தருகிறேன்” என்று பந்தயமும் கட்டினார். சில நாள்களிலேயே டெஸ்லா அதை உருவாக்கினார். எடிசன் திகைத்துப்போனார். ``50,000 டாலர் எங்கே?’’ என்று டெஸ்லா கேட்டதற்கு, “உனக்கு அமெரிக்கர்களின் நகைச்சுவை புரியவில்லை” என்று அவரை வேற்று நாட்டவர் எனும்விதத்தில் கிண்டலடித்தார் எடிசன் எனும் மாபெரும் ஏமாற்றுக்கார முதலாளி. கடைசிவரை பணத்தைக் கொடுக்கவேயில்லை. அந்த மாறுதிசை மின்சாரத்தால் உருவான வியாபாரம், அமெரிக்காவில் அப்போதே பல மில்லியன் டாலரை அவருக்குப் பெற்றுக்கொடுத்தது. டெஸ்லா 87 வயதில்தான் இறந்தார். தனிமனிதனாக, ஒரு ஹோட்டல் அறையில் வசித்துவந்தார். அவர் இறந்தபோது, அமெரிக்க அரசு அவருடைய அறையிலிருந்த அனைத்துப் பொருள்களையும் ரகசியமாகக் கைப்பற்றியது. டெஸ்லா, யாருக்கும் தெரியாமல் விதவிதமான ஆராய்ச்சிகளைச் செய்துவந்ததை, உளவாளிகள் மூலம் அரசு அறிந்திருந்தது. 700-க்கும் அதிகமான கண்டுபிடிப்புகளை விவரமாகக் குறித்துவைத்திருந்தார் டெஸ்லா. அனைத்தும் நவீன உலகின் நம்பவே முடியாத கண்டுபிடிப்புகள். போருக்கு உபயோகப்படுத்தக்கூடிய நவீன ஆயுதங்களின் பொறிமுறைகளும் அவற்றில் அடக்கம். அவையெல்லாம் டெஸ்லாவுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று... ஒரு மனிதனால் இத்தனை கண்டுபிடிப்புகளை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? டெஸ்லாவிடமிருந்த அற்புதமான குணம் உலகறிந்தது. தனது கண்டுபிடிப்புகளை இலவசமாக உலக மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று டெஸ்லா விரும்பினார். உலகம் முழுவதுக்குமான இலவச மின்சாரத்தை மக்கள் பெற வேண்டும் எனப் பாடுபட்டவர். டெஸ்லாவின் கொள்கைகளைச் செயல்படுத்தப்போவதாக இப்போது ஒருவர் முன்வந்திருக்கிறார்.

இன்று, டெஸ்லாவின் பெயரில் மிகப்பெரிய நிறுவனமொன்றை, ‘எலான் மஸ்க்’ (Elon Musk) உருவாக்கியிருக்கிறார். உலகம் முழுவதும் ‘டெஸ்லா’ எனும் பெயரில் மின்சார கார்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. டெஸ்லாவின் கனவை நிறைவேற்றுவதாக, இலவசமாக இணைய இணைப்பைக் கொடுக்கக்கூடிய சாட்டிலைட்களை வரிசையாக விண்வெளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். இவரின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ (Space X) நிறுவனம், விண்வெளியில் பல சாதனைகளைப் புரிந்துகொண்டிருக்கிறது. இவற்றுடன், எலான் மஸ்க் செய்யும் நூதனமான ஆராய்ச்சிதான் இங்கு முக்கியமானது. ‘நியூராலிங்க்’ (Neuralink) எனப்படும் ஓர் ஆராய்ச்சித் திட்டத்தை அவர் உருவாக்கியிருக் கிறார். அதன் மூலம் ஓர் உயிரினத்தின் மூளைக்குள், கணினியிலிருக்கும் தகவல்களைக் கிரகிக்கும் அமைப்பை ஏற்படுத்துவது. கணினியால் கொடுக்கப்படும் தகவலின்படி அந்த உயிரினத்தை இயங்கவைப்பது. ஒரு பன்றியின் தலையில் மிகச்சிறிய அளவிலான சிப் (Neuralink Chip) ஒன்றைப் பதித்து, அதை இயக்கிக் காட்டியிருக்கிறார் மஸ்க். அதுபோல, மனிதர்களுக்கும் சிப்களைப் பதித்து பலவித நன்மைகளைச் செய்ய முடியும் என்று கூறுகிறார். இந்தத் திட்டத்தைப் பற்றி எந்த விமர்சனத்தையும் முன்வைப்பதல்ல என் நோக்கம். ஆனால், டெஸ்லாவின் பல கனவுகளை நனவாக்குவதாகச் சொல்லும் எலான் மஸ்க்கின் இந்தத் திட்டத்தின் அடிநாதம் என்னவென்பதை உங்களுக்குப் புரியவைப்பதுதான் நோக்கம்.

ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் எப்படிச் செயல்படுகிறது என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நான் என்ன சொல்லவருகிறேன் என்பது புரியும். ஒவ்வொரு மனிதனும் இறக்கும்போது, அவனது உணர்வுகள் (உயிரென்று நாம் நம்புவது) பிரபஞ்ச வெளியில் சங்கமமாகின்றன. அப்படிப் பதிந்திருக்கும் உணர்வுகளைக் கிரகித்துக்கொள்வதே ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ். அதன் அடிப்படையில்தான், எலான் மஸ்கின் நியூராலிங்க்கும் செயல்படுகிறது என்பது புரிகிறதா? பிரபஞ்ச வெளியில் பதிந்திருக்கும் தகவல்களுக்கு பதில், கணினியில் பதிந்திருக்கும் தகவல்கள். அந்தத் தகவல்களை வயர்கள் இணைப்பின்றி, ஒரு சிப்மூலம் மனிதனை உணரவைக்க முயல்கிறார்கள். ஆகாஷிக் ரெக்கார்ட்ஸில் இயற்கையாக எது நடைபெறுகிறது என்று சொல்கிறார்களோ, அதைச் செயற்கையாக உருவாக்குகிறார் எலான் மஸ்க். இது உங்களுக்கு ஆச்சர்யமாக இல்லையா... எலான் மஸ்க் இதை நடைமுறைக்குக் கொண்டுவர நினைப்பது உங்களுக்கு எதை உணர்த்துகிறது... இதுவும் ஒரு செயற்கை ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ்தான் அல்லவா?

மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்புதல், உயிரெனும் கான்ஷியஸ் உணர்வுகள், பிளாக்ஹோல் சுவர்களில் இன்ஃபர்மேஷன் பதிவுகள், ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் எல்லாமே ஒரே விஷயத்தையே தொட்டுச் செல்கின்றன.

நிக்கோலா டெஸ்லா
நிக்கோலா டெஸ்லா

மனித உணர்வுகள் (Consciousness), பிரபஞ்ச வெளியில் எங்கோ பதிவாகியிருக்கின்றன; கணினியில் தரவுகள் பதிவுசெய்யப்பட்டிருப்பது போல. அந்தத் தகவல்களைக் (Information) குறித்து முன்னர் பார்த்திருந்தோம். அவையனைத்தும் அலைகளாகப் பல்வேறு அதிர்வெண்களின் துடிப்புகளாக (Frequency) அதிர்ந்து கொண்டிருக்கின்றன. அந்தத் துடிப்புகளைச் சிறப்புத்தன்மைகொண்ட மனிதர்கள் சிலரால் கிரகிக்க முடிகிறது. அந்தச் சிறப்பைக் கொண்டவர்களே, அற்புதச் சாதனையாளர்களாக விளங்குகிறார்கள். ஒருசில மனிதர்களின் திறமைகளைப் பார்க்கும்போது, இவர்களால் எப்படிச் செய்ய முடிகிறது என்று அதிசயித்திருப்போம். நான்கு வயதேயாகாத சிறுவர்கள் சிலரின் அசாத்தியத் திறமைகளைப் பார்த்து வியப்பின் உச்சிக்கே போயிருப்போம். அந்தத் திறமைகள் ஒருசிலருக்கு மட்டும் எப்படிக் கிடைக்கின்றன? அவர்களே பிரபஞ்ச வெளியின் துடிப்புகளைக் கிரகிப்பவர்கள் என்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் அப்படியான உணர்சக்தி இருந்தாலும், ஒருசிலரால் மட்டும், அதிக அளவில் உணர முடிகிறது. ஆன்டெனாக்களின் தரத்தைப் பொறுத்தே அவற்றின் உணரும் தன்மை இருக்குமல்லவா... அப்படித்தான் இதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், ஜோதிடம் சொல்லும் சிலரும், கடவுளின் பெயரால் ஏமாற்ற நினைக்கும் சிலரும், தங்களுக்கும் இது போன்று ஆகாயத்திலிருந்து தகவல்கள் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். தங்களை அறிவியல்கொண்டு நிறுவ முயல்கிறார்கள். அவர்களில் வெகு சிலர் உண்மையானவர்களாக இருக்கக்கூடும். ஆனால், பண வரவுக்காக விசேஷத்தன்மை உள்ளதாக எவர் சொல்கிறாரோ, அவர் நிச்சயம் போலியானவராகவே இருக்க முடியும்.

இதுவரை ஆகாஷிக் ரெக்கார்ட்ஸைப் படித்துவந்த உங்களுக்கு, அதை நம்பும் வகையிலேயே சொல்லியிருக்கிறேன். நான் சொன்னதால் அது உண்மையாகிவிடாது. நானும் அதை நம்புகிறேன் என்ற அர்த்தமுமில்லை. நீங்களும் முழுமையாக நம்ப வேண்டியதில்லை. இப்படியான ஆச்சர்யங்களும் மர்மங்களும் உலகத்தில் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதுதான் முக்கியமானது. எனக்குத் தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். அதில் ஒளிந்திருக்கும் உண்மையைக் கண்டுபிடிப்பது உங்கள் கடமை. ஆனாலும், இத்துடன் இது முடிந்து போகவில்லை. ‘அதிர்வுகளே பிரபஞ்ச வெளியின் இயக்கத்தின் அடிப்படை’ என்று சொல்லப்பட்டதால், அறிவியலில் இவற்றுக்கான விளக்கம் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தால், நவீன அறிவியலின் ஆச்சர்யமான முடிவொன்று கொஞ்சம் திகைக்கவைக்கிறது. அதைத் தெரிந்துகொள்ளும்போது, ‘அப்போ, இவையெல்லாம் உண்மைதானா?’ என்ற திகைப்பு ஏற்படுகிறது. அதனால், அறிவியலின் அந்த ஆச்சர்யத்தை அடுத்த பதிவில் பார்த்துவிடுவோம்!

(தேடுவோம்)