
மனிதன், கலங்களாலும் (Cells) ஞாபகங்களாலும் (Memories) வடிவமைக்கப்பட்டவன். கலங்கள், அடிப்படைத் துகள்களால் (Fundamental Particles) உருவாக்கப்பட்டவை
இயங்கிக்கொண்டிருக்கும் மனிதனை இயக்குவதே ‘உயிர்’ என்கிறோம். உங்களுக்குத் தெரிந்த ஒருவரை நேற்றுவரை பெயர் சொல்லி அழைத்திருப்பீர்கள். அவர் பெயரை ‘எக்ஸ்’ என்று வைத்துக்கொள்ளலாம். எக்ஸ் இறந்ததும், “பாடி எங்கே இருக்கிறது?” என்றுதான் கேட்பீர்கள். எக்ஸ் காணாமல்போய், பாடியாகியிருக்கும். ‘எக்ஸின் உயிர் போய்விட்டது’ என்றும் சொல்வீர்கள். மரணத்தில், உடலைவிட்டு உயிர் வெளியே போய்விடுகிறது எனப் பலர் நம்புகிறார்கள். மதங்கள் அதையே வலியுறுத்துகின்றன. ஆனால், இயற்பியல் இதற்கு நேரெதிர் நிலையுடையது. உயிரென எதுவும் கிடையாதென்று திடமாகச் சொல்கிறது.
வீட்டுக்கு வெளிச்சம் தரும் விளக்கு, மின்சாரம் துண்டிக்கப்பட அணைந்துபோகிறது. வீடே இருட்டாகிறது. அதுபோலத்தான் மரணமும். உடலைவிட்டு எதுவும் வெளியே போவதில்லை என்கிறது இயற்பியல். ஆன்மிகமும் அறிவியலும் தெரியாத கேள்விக்கு பதில்சொல்ல முயல்கின்றன. மரணத்தின் எல்லையை இரண்டும் தாண்டியதில்லை. அங்கு என்ன ஒளிந்திருக்கிறது எனக் கண்டுபிடிக்கவும் முடியாது. மரணத்தைத் தாண்டியவர் மீண்டுவந்தது கிடையாது. மரண விளிம்புவரை (Near to Death) சென்று திரும்பியிருக்கிறார்கள். ஆனால், அதைத் தாண்டிச் சென்று திரும்பியவர்கள் யாருமில்லை. யேசுநாதர் மூன்று நாள்களில் உயிர்த்தெழுந்ததாகவும், பாம்பு கடித்து இறந்த பிள்ளை உயிர்த்தெழுந்ததாகவும் மதங்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. உயிர்த்தெழுதல், மறுபிறப்பு, எழுபிறப்பு, சொர்க்கம், நரகம் அனைத்தையும் மதங்களே வலியுறுத்துகின்றன. இயற்பியலோ இவற்றை அடியோடு நிராகரிக்கிறது. அதற்குத் தேவையானவை ஆதாரங்கள். ‘நான் நம்ப வேண்டுமா... நிரூபித்துக் காட்டு’ என்கிறது. ஒரே அடம். ஆனாலும், உயிர் பிரிவதை நிரூபித்துக் காட்டினார் ஒருவர்.

1901-ம் ஆண்டு, அமெரிக்க மருத்துவரான ‘டன்கன் மெக்டுகால்’ (Duncan Macdougall), உயிர் 21 கிராம் எடையுடையது என்று ஆராய்ச்சி மூலம் நிரூபித்துச் சொன்னார். இறக்கும் தறுவாயிலிருக்கும் சிலரைப் படுக்கையோடு, துல்லியமாக எடையளக்கும் கருவியுடன் இணைத்து, இறக்கும் தருணத்தில் அவர்களின் எடை குறைவதைக் கணித்துக்கொண்டார். அந்த எடையிழப்புக்குச் சுவாசமோ, வியர்வையோ, வேறெந்தக் கழிவுகளோ காரணமில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார். அவர் பரிசோதித்த ஆறு நபர்களின் உயிரின் எடையும் 21 கிராமாக இருந்தது. அதன் மூலம், `உயிரின் எடை 21 கிராம்’ எனத் தெரிவித்தார். அதே ஆராய்ச்சியை நாய்களுக்குச் செய்து பார்த்ததில், எந்த எடையிழப்பும் ஏற்படவில்லை. அதனால், நாய்களுக்கு ஆன்மாவே கிடையாது என்றும் முடிவுக்கு வந்தார். இதைவைத்து 2003-ம் ஆண்டு ‘21 Grams’ எனும் திரைப்படம் ஒன்று வெளியானது. பின்னர் வந்த விஞ்ஞானிகள், மெக்டுகாலின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘மூளையின் செயலிழப்பா, இதயத்தின் செயலிழப்பா, எதைவைத்து அவர் இறப்பை கணித்தார்?’ எனும் கேள்வி எழுந்தது. அதனால், 21 கிராம் உயிர்க்கொள்கை கைவிடப்பட்டது. அதேசமயத்தில், அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் புதிய கருத்து உருவானது. ‘மரணத்தின்போது மனிதனிடமிருந்து உணர்வு (Consciousness) பிரிகிறது’ என்று சொல்லப்பட்டது. ஆன்மிகத்துக்கு ஆதரவானதுபோல அந்தக் கருத்து இருந்தாலும், வெளியேறுவது ஆன்மாவோ, உயிரோ அல்ல உணர்வுதான் (Consciousness) என்பது, மாறுபட்ட கருத்தாகவே இருந்தது. நவீன இயற்பியலின் கோட்பாடுகளையும் அதற்கான ஆதாரங்களாகக் கொடுக்கவும் செய்தார்கள். இதனால் இயற்பியல் சற்றுத் தடுமாறிப்போனது உண்மைதான். இயற்பியலின் எந்தக் கோட்பாடுகளை ஆதாரமாகக் கொடுத்தார்கள் என்பதையே இந்தப் பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம்.
மனிதன், கலங்களாலும் (Cells) ஞாபகங்களாலும் (Memories) வடிவமைக்கப்பட்டவன். கலங்கள், அடிப்படைத் துகள்களால் (Fundamental Particles) உருவாக்கப்பட்டவை. ஞாபகங்களோ, தகவல்களால் (Informations) ஆனவை. மனிதன் இறந்த பிறகு, இவையிரண்டும் பிரபஞ்சவெளியில் கலந்துவிடுகின்றன. அடிப்படைத் துகள்களையும், தகவல்களையும் அழிக்கவே முடியாது என்பது இயற்பியலின் அடிப்படை விதி. அதனால், அடிப்படைத் துகள்கள் பிரபஞ்சத்தில் கலந்து விட, தகவல்கள் பிரபஞ்சத்தின் ஏதோவோர் இடத்தில் பதியப்படுகின்றன. அந்த இடம், கருந்துளைகளின் சுவர்களாகவும் இருக்கலாம். ஒரு மனிதனுடைய ஞாபகத் தகவல்களையே, ‘உணர்வுகள்’ (Consciousness) என்கிறார்கள். இவற்றையெல்லாம் முன்னரே சொல்லியிருந்தேன். நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இனிச் சொல்லப்போவதைப் புரிந்துகொள்வதற்கான மீட்டல் இது.
மனிதனுள் ஞாபகங்கள் பலவிதங்களில் பதியப்படுகின்றன. வாழ்நாள் முழுவதும் புலன்களால் அறிந்துகொண்டவற்றை நிரந்தரமான ஞாபகமாகவும், அவற்றை மீட்டெடுத்து அந்தந்த நேரத்தில் கணித்துக்கொள்ளும் தற்காலிக ஞாபகமாகவும் இரு வகைகள் அவனிடம் உண்டு. அத்துடன் ஞாபகங்கள் முடிந்து விடுவதில்லை. உடலெங்கும் பரவியிருக்கும் ஒவ்வொரு கலத்திலுமுள்ள ‘டிஎன்ஏ’ (DNA)-க்களில் மரபுசார்ந்த ஞாபகங்கள் பதிக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கலமும் மூன்றுமீட்டர் நீளமுள்ள டிஎன்ஏ-க்களைக் கொண்டிருக்கும். சராசரி மனிதனொருவனின் உடலில், 37 ட்ரில்லியனுக்கும் அதிகமான கலங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு கிராம் டிஎன்ஏ, 2,15,000 டெராபைட் அளவுள்ள ஞாபகத்தைப் பதிந்துவைக்கக்கூடியவையென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உடலில் மூளை மட்டுமே ஞாபகங்களைக்கொண்டிருப்பதில்லை. இவற்றுடன், ஆணின் விந்துகளிலும், பெண்ணின் முட்டைகளிலும் ஒருவிதமான ஞாபகங்கள் பதிந்திருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்துதான், ஒரு மனிதனின் மொத்த ஞாபகங்களாகின்றன. இவை கணினியில் பதிவான தகவல்களாகப் பதிக்கப்பட்டிருக் கின்றன. இவையே, உணர்வாக ஒரு மனிதனை இயக்கிக்கொண்டிருக்கின்றன. அதையே உயிரென்றும் நாம் புரிந்துகொள்கிறோம். இந்த உணர்வுதான் மரணத்தின் பின்னர் பிரபஞ்சவெளிக்குச் சென்று பதிவாகிறது.
நவீன இயற்பியலின்படி, பிரபஞ்சவெளியில் இருக்கும் அனைத்தும் அதிர்வுகளாகத் (Vibration) துடித்துக்கொண்டிருக்கின்றன. வெவ்வேறுவிதமான அதிர்வெண்களுடைய (Frequency), அலைகள் (Waves) அவை. அடிப்படைத் துகள்களெல்லாம் ஆற்றல்கொண்ட புலங்களாக (Fields), பிரபஞ்சவெளியெங்கும் அதிர்ந்து கொண்டிருக்கின்றன. ‘குவான்டம் புலக் கோட்பாடு’ (Quantum Field Theory), இதையே சொல்கிறது. நுண்ணிய அளவுகொண்ட குவான்டம் துகள்கள், நுண்ணதிர்வுகளைக் கொண்டுள்ளன. மனித உணர்வுகளும் அதிர்வுகளாகவே பிரபஞ்சவெளியில் பதிவாகின்றன. ‘உணர்வுகள், அலைகளுடன் தொடர்புகொண்டவை. உணர்வுகளால், அலைகள் பாதிக்கப்படுகின்றன’ என்று குவான்டம் இயங்கியலின் கோட்பாடொன்று சொல்கிறது. அந்தக் கோட்பாட்டை முன்வைத்துத்தான் ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ், உண்மை என நிறுவ முயல்கிறார்கள். அது என்ன கோட்பாடு என்பதைப் பார்க்கலாம் வாருங்கள்.

ஐன்ஸ்டீன், நீல்ஸ் போர் (Niels Bohr) இருவரும் இயற்பியலின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஒருநாள் இரவு, வீட்டு முற்றத்தில் அவர்கள் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் தெரிந்த நிலாவைக் காட்டி ஐன்ஸ்டீன் கேட்டார், “சந்திரன் வானத்தில் இருப்பதால் அதை நாம் பார்க்கிறோமா அல்லது நாம் பார்ப்பதால், சந்திரன் வானத்தில் இருக்கிறதா?” இது என்ன இடக்கு மடக்கான கேள்வி என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், அந்தக் கேள்வியை ஐன்ஸ்டீன் ஏன் கேட்டார் என்பதை நீல்ஸ் போர் புரிந்துகொண்டார். கேள்விக்கான அடிப்படைக் காரணம், குவான்டம் இயங்கியல். குவான்டம் இயங்கியலின் சில முடிவுகளை ஐன்ஸ்டீனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எலெக்ட்ரான் போன்ற அடிப்படைத் துகள்களின் விந்தைச் செயற்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்தார். குவான்டம் இயங்கியல் சொல்வதுபோல இருக்கவே முடியாது என்று நம்பினார். ஐன்ஸ்டீன் சறுக்கிய இடமாக அதைச் சொல்லலாம். அணுக்களைவிட, மிகச்சிறிய நுண்ணிய குவான்டம் துகள்களின் நடவடிக்கைகள், சாதாரணத் துகள்களைப்போல இருப்பதில்லை. சாதாரணத் துகள்கள், இயற்பியல் விதிகளுக்குட்பட்டவையாக இருக்கும். ஆனால், குவான்டம் துகள்களோ சொல் கேளா குழப்படிப் பையன்கள் போன்றவை. அவற்றில் ஒரு செயல்பாட்டை விமர்சிப்பதற்கே ஐன்ஸ்டீன் அந்தக் கேள்வியை முன்வைத்தார். குவான்டம் துகள்கள், உதாரணமாக எலெக்ட்ரான் துகள்கள், இரு நிலைகளைக்கொண்டிருப்பதாக, குவான்டம் இயங்கியல் சொல்கிறது. ஒரு சமயம் துகளாகவும், மறு சமயம் அலையாகவும் இருக்கும். துகள் என்பதன் அர்த்தமே, அது ஒரு பொருள் போன்றது என்பதாகும். அங்கே இருக்கிறது, அப்படி இருக்கிறது என்றெல்லாம் அது பற்றிச் சொல்ல முடியும். ஆனால், அலைகள் அப்படியானவையல்ல. அலைகள் என்றாலே அது ஒரு பொருள் இல்லையென்றாகிவிடும். அனைத்து இடத்திலும் பரவிக் காணப்படும். கடலலைகளை நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டாம். ஒலி அலைகள் கண்ணுக்குத் தெரியாதவை. எங்கிருக்கிறது எனத் தெரியாமல், இருக்குமிடமெங்கும் பரவிக் காணப்படும். ஒரு துகள் அலையாகவும் இருக்குமென்று சொல்வது, பொருளொன்று மாயமாக மறைவது போலாகிறதல்லவா? இத்துடன் துகள்களின் இன்னுமொரு தன்மையையும் குவான்டம் இயங்கியல் சொல்கிறது. ‘ஒரு துகளை, நமது புலன்களினூடாக அவதானித்துக் கொண்டிருக்கும்போது, அது துகளாகவே இருக்கும். அதை எவரும் அவதானிக்காத பட்சத்தில்தான் அது அலையாக மாறுகிறது’ என்கிறது குவான்டம் இயங்கியல்.
ஒரு துகளை யாராவது அவதானித்தால் அது பொருளாகவும், அவதானிக்காவிட்டால் அலையாகவும் மாறி மறைந்துவிடுகிறது. பிரபஞ்சத்திலிருக்கும் அனைத்துப் பொருள்களும் துகள்களால் ஆக்கப்பட்டவை. நீங்கள், நான், சந்திரன், சூரியன் எல்லாமே அடிப்படைத் துகள்களால் உருவானவைதான். அதனால், நிலாவை யாரும் அவதானிக்காவிட்டால், அது அங்கிருக்காது. அலைகளாக மாறிப் பிரபஞ்ச வெளியெங்கும் பரவிக் கலந்துவிடும். அதை யாரும் பார்த்தாலோ, அவதானித்தாலோ மறுபடியும் நிலாவாகிவிடும். இது அம்புலி மாமா கதையல்ல. ‘இரட்டைத்துளைப் பரிசோதனை’ (Double slit experiment) மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இங்கு அவதானிப்பது என்பது, பார்த்தல் மட்டுமல்ல. அனைத்துப் புலன்களையும் இயக்கும் உணர்வைக் (Consciousness) குறிக்கிறது. அதனால்தான், ஐன்ஸ்டீனும் அப்படியொரு கேள்வியைக் கேட்டார். நீங்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும்போது, உங்கள் மனைவி தேநீர் கப்புடன் உங்களுக்குப் பின்னால் நிற்கிறாரென்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் நிற்பதை எந்தவிதத்திலும் நீங்கள் உணராத பட்சத்தில், அங்கு உங்கள் மனைவி இருக்க மாட்டார். அவர் அலையாக அறை முழுவதும் பரவியிருப்பார். உங்கள் புலன்களில் ஏதாவதொன்றினால் அவரை உணர ஆரம்பித்த கணத்தில் மீண்டும் மனைவியாகிவிடுவார். `என்னடா இது! இதுவரை படித்த மர்மங்களில் இதுவே மிகப்பெரிய மர்மமாக இருக்கிறதே!’ என்று தோன்றுகிறதல்லவா? ஆம், இது மர்மம்தான். குவான்டம் இயற்பியலில் துகள்களின் நடவடிக்கைகள் மர்மமானவைதான். நீங்கள் அறிவியல் விரும்பியாக இருக்கும் பட்சத்தில் அவற்றையும் நான் சொல்லலாம். முடிவு உங்கள் கையில். சரி, மனித உணர்வு, துகள்களின் நிலைகளை மாற்றுகிறதென்று அறிவியல் ஒப்புக்கொள்வதை முன்வைத்து, ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் உண்மையென்று நிறுவ முயல்கிறார்கள். பணம் சம்பாதிக்க நினைக்கும் ஆன்மிகவாதிகள் இதைத் தங்கள் பிரசாரமாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் சிலரின் அட்டகாசத்தைத் தாங்க முடியாத இயற்பியலாளர்கள், இரட்டைத்துளைப் பரிசோதனையில் சொல்லப்பட்ட உணர்வு என்பதே தப்பான கணிப்பு என்று நிரூபிக்கிறார்கள்.
மரணத்தின் பின்னரும், நாம் மரணிக்காமல் உணர்வுகளாக இருப்போம் என்பதைச் சிந்திப்பதை ஒருபுறம் வைத்துவிட்டு, நமக்காகத் தரப்பட்டிருக்கும் நிஜமான, இந்த அற்புதமான வாழ்க்கையை ஜாலியாக வாழுங்கள்!
(தேடுவோம்)