மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 40 - டாரெட் போகலாம் வருகிறீர்களா? - எங்கிருந்து வந்தான்?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

1954-ம் ஆண்டின் கோடைக்காலத்தில், உல்லாசப் பிரயாணிகளால் ஜப்பான் நிரம்பிக்கொண்டிருந்தது.

உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா? மனித வரலாற்றில் இதுவரை, இப்படியானதொரு மர்மச் சம்பவம் நடந்ததே இல்லை. உலகத்தில் நடைபெற்ற மர்மச் சம்பவங்களைச் சொல்லும்போது, அந்தச் சம்பவத்தைத் தவிர்த்துவிட்டு, யாரும் கடந்து செல்ல முடியாது. அதனாலேயே, மிகவும் முக்கியமான ‘டாரெட்’ மனிதனின் கதையை உங்களுக்குச் சொல்ல முடிவெடுத்தேன். அதைத் தெரிந்துகொள்ளாமல் நீங்களும் இருக்கக் கூடாது. அந்தச் சம்பவம், உண்மையாக நடந்ததா இல்லையா என்பதற்கான எந்த ஆதாரமும் என்னிடம் கிடையாது. நடந்ததாகப் பலர் பல இடங்களில் பதிவுசெய்திருக்கிறார்கள். அது நிஜமாகவே நடந்திருக்கும் பட்சத்தில், அங்கு ஒளிந்திருப்பதன் விளக்கங்களை நாம் பார்க்கலாம். ஒருவேளை பொய்யாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. அதைவிட அதிக பொய்களை இனிவரும் நாள்களில் தேர்தல் சமயம் என்பதால் சந்திக்கப்போகிறீர்கள். அதனால், பொய்களை எதிர்நோக்க உங்களை அது தயார்ப்படுத்தும். இனி நாம் கதைக்குள் இறங்குவோம். சரி, இப்போது நாம் எங்கே போகிறோம் தெரியுமா? ஜப்பானுக்கு. சரியான கடவுச்சீட்டைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள்...

1954-ம் ஆண்டின் கோடைக்காலத்தில், உல்லாசப் பிரயாணிகளால் ஜப்பான் நிரம்பிக்கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில், தன்னை மீளக்கட்டமைக்க ஆரம்பித்த ஜப்பானுக்கு வியாபாரரீதியாகவும் பலர் வந்துகொண்டிருந்தனர். டோக்கியோவிலிருக்கும் ‘ஹனேடா’ விமான நிலையம் (Haneda Airport, Tokyo) சுறுசுறுப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பாவிலிருந்து வந்த விமானம் ஒன்று அப்போதுதான் தரையிறங்கியிருந்தது. விமானத்தின் பயணிகள் கடவுச்சீட்டைப் பரிசோதனையிடும் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். நீண்டநேரப் பயணத்தின் அயர்ச்சியால், பயணிகளிடம் பதற்றம் காணப்பட்டது. ஆனால், எந்தவிதமான அவசரமோ பதற்றமோ இல்லாமல், கடைசியாக அவன் நின்றுகொண்டிருந்தான். இன்றைய காலம்போல, இறுக்கமான பரிசோதனைகள் அப்போது இல்லை. வெகுசீக்கிரத்தில் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு, ஒவ்வொருவராக அனுப்பப்பட்டார்கள். அவனுக்கான சமயமும் வந்தது. ஜப்பானியர்களுக்கே உரித்தான பணிவுடனும் உபசரிப்புடனும் வணக்கத்தைத் தெரிவித்து, கடவுச்சீட்டை வாங்கிக்கொண்டார் சுங்க அதிகாரி. கடவுச்சீட்டைப் பார்த்தார். அவனையும் நிமிர்ந்து பார்த்தார். ஐரோப்பியர்களுக்கே உரிய எடுப்பான தோற்றத்துடன் கோட், டை அணிந்து பயணக் களைப்பு எதுவுமில்லாமல் அவன் காணப்பட்டான். அதிகாரியைப் பார்த்து சினேகத்துடன் சிரித்தும் கொண்டான். ஆனால், சுங்க அதிகாரியின் முகத்திலிருந்த சிரிப்பு மெல்ல வடியத் தொடங்கியது. முகம் இறுக்கமானது.

அவனது கடவுச்சீட்டை உள்ளேயும் வெளியேயுமாகப் பலமுறை பார்த்துவிட்டு, “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அடுத்த நொடியிலேயே “டாரெட்..!” (Taured) என்ற பதில் அவனிடமிருந்து கிடைத்தது. தொடர்ந்து, “கடவுச்சீட்டில் அது இருக்கிறதே!” என்று சிரித்தபடி சொன்னான். அதிகாரியிடமிருந்து வந்த அடுத்த கேள்வியை அவன் எதிர்பார்க்கவேயில்லை. “டாரெட் எங்கிருக்கிறது?” என்றார் அதிகாரி. “என்ன?” (What?) என்ற ஒற்றைச் சொல்லைச் சற்று அழுத்தமாகவும் கோபத்துடனும் சொன்னான். ‘என்ன முட்டாள் இவன்? விமான நிலையத்தில் பணிபுரியும் ஒருவனுக்கு, டாரெட் எங்கிருக்கிறது என்பதுகூடவா தெரியாமல்போகும்?’ என்று நினைத்துக்கொண்டான். “ஏன், ஏதாவது பிரச்னையா?” என்று கேட்டான். அவனது கோபத்தையும் முகத்திலிருக்கும் தெளிவையும் கண்டு அதிகாரி குழம்பிப்போனார். “சற்றுப் பொறுங்கள்...” என்று சொல்லி, யாருக்கோ தொலைபேசினார். அடுத்த கணம் அவர்களை நோக்கி இரண்டு காவலதிகாரிகள் வந்தனர். இருவரும் சுங்க அதிகாரியிடம் சென்று, மெல்லிய குரலில் பேசினார்கள். அவனது கடவுச்சீட்டைக் காட்டிச் சுங்க அதிகாரி ஏதோ சொன்னார். பின்னர், அவனிடம் வந்த காவலதிகாரிகள், “எங்களுடன் வர முடியுமா?” என்று, அவனது பதிலை எதிர்பார்க்காமல் தோளில் கைவைத்து சினேக பாவனையுடன் அழைத்துச் சென்றார்கள். அழைத்துச் சென்றதில் சினேகம் என்பது பாவனையாகத்தான் இருந்ததேயொழிய, கைகளின் அழுத்தம் கடுமையைத் தெரிவித்தது. நடக்கக் கூடாத ஏதோவொரு விபரீதம் நடந்திருப்பதாக அவன் புரிந்துகொண்டான். கையில் வைத்திருந்த பிரீஃப்கேஸுடன் அவர்களுடன் சென்றான்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 40 - டாரெட் போகலாம் வருகிறீர்களா? - எங்கிருந்து வந்தான்?

காவலதிகாரிகள் தங்களின் உயரதிகாரியின் அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார்கள். அதற்குள் நடந்த அனைத்தையும் உயரதிகாரி அறிந்திருக்க வேண்டும். அறைக்குள் நுழையும்போதே, அவனது பெயரைச் சொல்லி, மிகவும் மரியாதையுடன் அழைத்து கைகுலுக்கி நாற்காலியில் அமரச் சொன்னார். மரியாதைக்குரிய ஒருவன் அவன் என அவர் புரிந்திருந்தார். அதனால், சினேகத்துடனேயே கேள்விகளைக் கேட்டார். “எங்கிருந்து வருகிறீர்கள்?” “டாரெட்.” அதே கேள்வி, அதே பதில். “டாரெட் எங்கிருக்கிறது?” இப்போது அவன் மிகவும் குழம்பிப்போனான். ‘இவருக்குமா டாரெட்டைத் தெரியாது? இவரைப் பார்த்தால் பல ஆண்டுகள் பணிபுரியும் அனுபவஸ்தராகத் தெரிகிறதே! டாரெட் எங்கிருக்கிறதென்று இவருக்கும் எப்படித் தெரியாமல் போகும்?’ சிந்தித்ததால், பதில் சொல்லச் சற்றுத் தாமதமானது. அதற்குள், அதே கேள்வியை மீண்டும் கேட்டார். “சொல்லுங்கள் மிஸ்டர்... டாரெட் எங்கிருக்கிறது?” “நிஜமாகவே டாரெட் எங்கிருக்கிறதென்று உங்களுக்குத் தெரியாதா?” “இல்லை. அதனால்தான் உங்களை விசாரிக்கிறோம். உங்கள் கடவுச்சீட்டுபோல இதுவரை நாங்கள் எதையும் கண்டதில்லை. அதில் குறிப்பிட்டிருக்கும் நாட்டையும் எங்களுக்குத் தெரியாது. அதோ பாருங்கள்... (எதிர்ச் சுவரிலிருந்த உலக வரைபடத்தைக் காட்டி) அந்த வரைபடத்தில் இருக்கும் எல்லா நாடுகளுக்கும் நான் பயணம் செய்திருக்கிறேன். ஆனால், டாரெட் நாட்டை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை” முகத்தை அதே கனிவுடன் வைத்துக்கொண்டுதான் பேசினார். அப்போதுதான் தனக்குப் பின்னால் சுவரிலிருந்த உலகப்படத்தைப் பார்த்தான். அவனது முகம் பிரகாசமானது. அதை அதிகாரியும் கவனித்துக்கொண்டார். உலக மேப்பை நோக்கி அவன் சென்றான். அங்கே தன்னுடைய நாடிருக்கும் இடத்தை விரலால் சுட்டிக் காட்டினான். அவனும் அந்த நேரத்தில் அதிலிருப்பதையும் படித்தான். அவன் காட்டிய இடம், ஸ்பெயினுக்கும் பிரான்ஸுக்கும் இடையே ‘அண்டோரா’ (Andorra) எனும் பெயருடன் காணப்பட்டது. மயக்கம் வராத குறையாகச் சோர்வுடன் நாற்காலியில் அமர்ந்துகொண்டான். ‘இது என்ன, டாரெட்டை, `அண்டோரா’ என்று குறித்துவைத்திருக்கிறார்கள்? ஓ... ஓ... அதுதான் இவர்களுக்கு டாரெட் என்று சொன்னது புரியவில்லையா?’ என்று நினைத்தான். தனது பிரீஃப்கேஸிலிருந்த, அடையாள அட்டை, ஓட்டநர் அனுமதி, வங்கிச் செக்குகள், ஜப்பானுக்குக் கொண்டுவந்த ஆவணங்கள் அனைத்தையும் வெளியே எடுத்து, அதிகாரியிடம் கொடுத்துப் பரிசோதிக்கும்படி சொன்னான்.

ஆரம்பத்திலிருந்தே அவன் பொய் சொல்பவனாக அந்த உயரதிகாரிக்குத் தோன்றவில்லை. அவனொரு மதிக்கப்படக்கூடிய பிரஜை என்பதைப் புரிந்திருந்தார். அவன் கொடுத்த ஆவணங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தார். அனைத்தும் பக்காவாக இருந்தன. அவன் துளியும் பொய் சொல்லவில்லை. வியாபாரத்தில் ஈடுபடும் மிகப்பெரிய தொழிலதிபர் அவன் என்பதை உறுதிசெய்துகொண்டார். இப்போது அவருக்கே சந்தேகம் ஏற்பட்டது. ‘நிஜமாகவே டாரெட் இருக்கிறதோ... நாம் அதை அண்டோரா என்று தப்பாகச் சொல்கிறோமோ?’ என்ற தலைகீழ்ச் சந்தேகம் உருவானது. அதையும் சரிபார்த்துவிடலாம் எனத் தீர்மானித்தார். ஸ்பெயின் விமான நிலையத்துக்கு நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அங்கிருந்த அவருக்கு இணையான உயரதிகாரியிடம் டாரெட் பற்றி விசாரித்தார். ‘அப்படி எந்தவோர் இடமும் ஐரோப்பாவில் இல்லை’ என்று பதில் வந்தது. “சாரி” என்று சொன்னபடி அவனைப் பரிதாபமாகப் பார்த்தார். ‘இவன் யார்?’, ‘இவன் எங்கிருந்து வருகிறான்?’, ‘இந்த அளவுக்கு ஒருவனால் பொய் சொல்ல முடியுமா?’, ‘பொய் சொல்பவன் தவறான நாட்டுக் கடவுச்சீட்டுடன் விமான நிலையத்துக்கு வருவானா?’, ‘அப்படி வந்திருந்தாலும், எப்படி விமானத்தில் பயணம் செய்தான்?’, ‘பொய் சொல்லி இங்கு வர வேண்டிய அவசியம் என்ன?’ எத்தனை கேள்விகள்... எதற்கும் பதில் கிடைக்கவில்லை. அனைத்தையும் அவனிடம் அப்படியே கேட்டார். அவன் அழும்நிலைக்குப் போய்விட்டான். அப்போது ஓர் ஆச்சர்யம் நடந்தது. அதுவரை ஆங்கிலத்தில் உரையாடியவன், ஜப்பானிய மொழியில் பேச ஆரம்பித்தான். திகைத்துப்போனார் அதிகாரி. ஐரோப்பியன் ஒருவன் அந்த அளவுக்குத் தெளிவான உச்சரிப்புடன் ஜப்பான் மொழி பேசியதை அவர் இதுவரை கண்டதில்லை. அவ்வளவு சரளம்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 40 - டாரெட் போகலாம் வருகிறீர்களா? - எங்கிருந்து வந்தான்?

தான் ஜப்பான் தொழிற்சாலை ஒன்றுடன் செய்துகொண்ட வியாபார ஒப்பந்தக் கடிதம் கோப்பினுள் இருப்பதாகவும், அந்தத் தொழிற்சாலையின் விலாசமும், தொலைபேசி இலக்கமும் அதிலிருப்பதாகவும், அவர்களுடன் தொடர்புகொண்டு கேட்கும்படியும் ஜப்பானிய மொழியில் சொன்னான். துள்ளியெழுந்தார் அதிகாரி. ‘அப்பாடா! இந்த விஷயத்துக்கு முடிவு கிடைக்கப்போகிறது’ என்று ஒப்பந்தத்தை வாங்கிப் பார்த்தார். அவன் சொன்னதுபோல, அனைத்தும் இருந்தன. காவலர்களை அழைத்து, அந்த விலாசத்திலுள்ள தொழிற்சாலையில் விசாரிக்கக் கட்டளையிட்டார். தொலைபேசியை அவனிடம் கொடுத்து, அவர்களுடன் பேசவும் அனுமதித்தார். அவன் டயல் செய்த இலக்கம் கிடைக்கவே இல்லை. எதிர்ப்பக்கத்திலிருந்து எதுவும் கேட்கவில்லை. வெறும் காற்றுச் சத்தம் மட்டும் கேட்டது. வெளியே சென்று போலீஸாருடன் தொடர்புகொண்டு விசாரித்த காவலதிகாரிகள் திரும்பி வந்தனர். ‘அப்படியொரு கம்பெனியோ, அவர் கொடுத்த விலாசமோ இல்லை’ எனத் தெரிவித்தனர். இரவாகிவிட்டபடியால், அதற்கு மேல் அந்த விஷயத்தில் அதிகாரியால் ஈடுபட முடியவில்லை. விமான நிலையத்திலுள்ள இடத்தில் அவனைப் பாதுகாப்பில் வைக்கச் சொன்னார். நாளை ஏதாவது முடிவெடுத்துப் போலீஸிடம் ஒப்படைக்கலாம் எனத் தீர்மானித்தார். அவனிடம் ஓர் இரவு மட்டும் தங்கும்படி கேட்டுக்கொண்டார். கவலையுடன் அவனும் சம்மதித்தான். ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று தெரிந்திருந்தது. அது என்னவென்று மட்டும் தெரியவில்லை.

இரண்டு காவலர்களின் பாதுகாப்புடன் ஓர் அறையில் தங்கவைக்கப்பட்டான். அவனது பிரீஃப்கேஸை உயரதிகாரி வாங்கி வைத்துக்கொண்டார். அடுத்த நாள் வருவதாகச் சொல்லி, அறையைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். காலையில் சுடச்சுட காபியுடன் அவனது அறையைக் காவலாளிகள் மெல்லத் தட்டிவிட்டுத் திறந்தார்கள். அங்கே அவனைக் காணவில்லை. அந்த அறையில் வெளியே செல்வதற்கு வேறு ஜன்னல்களோ கதவுகளோ இருக்கவில்லை. முன் கதவு பூட்டப்பட்டுக் காவலர்கள் இருவர் உட்கார்ந்திருந்தனர். அப்படியிருந்தும், புகைபோல அவன் காணாமல்போயிருந்தான். எங்கு தேடியும் அவனில்லை. சிறிது நேரத்தில் உயரதிகாரி வந்தார். நடந்தவையெல்லாம் சொல்லப்பட்டன. “அட! அவன் பிரீஃப்கேஸ் என்னிடம் இருக்கிறதே!” என்று சொன்னபடி, விரைந்து அறையைத் திறந்து உள்ளே சென்றார். அலமாரிக்குள் வைத்திருந்த அவனது பிரீஃப்கேஸை எடுப்பதற்காக அலமாரியைத் திறந்தார். அங்கே அவனது பிரீஃப்கேஸ். அதையும் காணவில்லை!

என்னாச்சு..? அடுத்த இதழ்வரை கொஞ்சம் பொறுத்துத்தான் இருங்களேன்.

(தேடுவோம்)