
இரண்டு வெவ்வேறுகாலப் பரிமாணங்களில் (Dimension) வாழ்பவர்கள் ஒன்றாக இணைக்கப்படுகிறார்கள். இப்படி நடப்பது சாத்தியம்தானா...
‘டென்னிஸ் குவைடு’ (Dennis Quaid) நடித்து, 2000-ம் ஆண்டு வெளிவந்த ‘ஃப்ரீக்வென்ஸி’ (Frequency) படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். வித்தியாசமான அறிவியல் திரைப்படம். ஒருவேளை பார்க்காமலிருந்தால், பார்த்துவிடுங்கள். வெவ்வேறு காலங்களில் வசித்துக்கொண்டிருக்கும் ஓர் அப்பாவும் மகனும், ஹாம் (HAM Radio) கருவி மூலமாக ஒருவரோடு ஒருவர் தொடர்புகொண்டு உரையாடுவதாகப் படம் அமைந்திருக்கும். 1969-ம் ஆண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவும், 1999-ம் ஆண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் மகனும் ஒரு வானொலித் தொலைத் தொடர்புக் கருவியுடன் பேசுகிறார்கள். 1969-ல் மகனுக்கு வயது 6. அதே மகன் 36 வயதான நிலையில் அப்பா இறந்துபோயிருப்பார். அந்த இறந்துபோன அப்பாவும், பெரியவனாகிவிட்ட மகனும் அவர்கள் வாழ்ந்த ஒரே வீட்டில் அமர்ந்துகொண்டு பேசுவார்கள். ஒருவரையொருவர் பார்க்க முடியாது. குரல்வழிப் பேச்சு மட்டும்தான். அதாவது, மகன் இறந்தகாலத்தில் வாழும் அப்பாவுடனும், அப்பா எதிர்காலத்தில் வாழும் மகனுடனும் நிகழ்காலத்தில் பேசுகிறார்கள். படத்தில் நடக்கும் சம்பவத்தின் தன்மை புரிவதற்குக் கடினமாக இருக்கும் என்பதால், இந்த அளவுக்கு விளக்கிச் சொல்கிறேன். இது கொஞ்சம் தலையைச் சுற்றவைக்கும் விஷயம்தான். திரைப்படத்தைப் பார்க்கும்போது தெளிவாகப் புரியும்.
இரண்டு வெவ்வேறுகாலப் பரிமாணங்களில் (Dimension) வாழ்பவர்கள் ஒன்றாக இணைக்கப்படுகிறார்கள். இப்படி நடப்பது சாத்தியம்தானா... இரு வேறு காலங்களில் வாழ்பவர்களால் ஒரே சமயத்தில் தொடர்புகொள்ள முடியுமா? இன்றுள்ள அறிவியல், `முடியும்’ என்றே சொல்கிறது. அது எப்படிச் சாத்தியமாக முடியும்... கேட்பதற்கு விந்தையாக இருக்கிறதல்லவா? இது சாத்தியமாகுமென்றால், என்றோ இறந்துபோன தாத்தா, பாட்டியுடன் இப்போதும் நாம் பேசலாம். இப்போது அவர்களுடன் பேச முடியுமென்றால், அவர்கள் இறந்தகாலத்தில் இந்தச் சமயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகுமே... அது எப்படி முடியும்? இன்றைய இயற்பியலில் இவையெல்லாமே சாத்தியம் எனச் சொல்லும் கோட்பாடுகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ‘பல்பரிமாணக் கோட்பாடு’ (Multidimensional Theory). “ஹலோ ராஜ்சிவா! என்ன நீங்க, டாரெட் மனிதனின் கதையைச் சொல்லிவிட்டு, அப்புறம் என்ன நடந்தது என்பதை விளக்காமல், ஃப்ரீக்வென்ஸி, பரிமாணம் அது இது என்று எதையெதையோ அளக்கிறீர்கள்...” இப்படித்தானே நீங்கள் நினைக்கிறீர்கள்? நானும் அங்கேதான் நிற்கிறேன். டாரெட் மனிதனுக்கு என்ன நடந்தது என்பதைப் புரியவைக்கவே பரிமாணத்தை இழுத்தேன். சரி, கடைசியாக விட்ட இடத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன்.

டாரெட்டிலிருந்து வந்ததாகச் சொன்ன மனிதன் மறைந்துபோனான். சரி... ஒரு மனிதன் அனைவரையும் ஏமாற்றிவிட்டு மாயமாக மறைந்துவிட்டான் என்பதைக்கூட நம்பலாம். ஆனால், விமான நிலையக் காவலதிகாரியின் அறையைத் திறந்து, பூட்டிவைக்கப்பட்டிருந்த அலமாரிக்குள்ளிருக்கும் பெட்டியை அவன் எடுத்திருக்கலாம் என்று சொல்வதை நம்ப முடியாது. ஒரே இரவில் பெட்டியுடன் எப்படி அவன் காணாமல் போனான்? அதற்கான பதில் யாரிடமும் இல்லை. சொல்லப்பட்ட மொத்தச் சம்பவங்களும், மாயாவியின் மர்மக் கதைபோலவே இருக்கின்றன. அப்படியொரு சம்பவம் நடந்திருக்கவே முடியாது என்றே பலர் சொல்கிறார்கள். ‘பிரையான் அலஸ்பா’ (Briyan W.Alaspa) என்பவர் எழுதிய `The Man from Taured’ புத்தகத்தின் கதையையே, நிஜமாக நடந்ததாகக் கதைகட்டி விட்டிருக்கிறார்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால், ஜப்பானில் நடந்த அந்தச் சம்பவத்தின் அடிப்படையில்தான் அந்தப் புத்தகமே எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
எது எப்படியிருந்தாலும், அந்தச் சம்பவம் நடந்ததா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இரண்டாம் உலகப்போரில் அதிக அளவில் அழிவைச் சந்தித்த இரு நாடுகள் ஜெர்மனியும் ஜப்பானுமே. ஆனால், அவ்வளவு அழிவுகளிலிருந்தும் தங்களை மிக விரைவாக மீளக் கட்டியெழுப்பியதும் அந்த இரு நாடுகள்தான். 1954-ம் ஆண்டில் மிகவும் சுறுசுறுப்பாகத் தன்னை உருவாக்கிக்கொண்டிருந்த ஜப்பானில் அப்படியானதொரு சம்பவம் நடைபெற்றிருக்கலாம். இன்றுபோல கணினிப் பதிவுகள் இல்லாத காலம் அது. அதனால், நடந்தது உண்மைதானா எனச் சரிபார்க்க முடியவில்லை. ஒருவேளை அந்தச் சம்பவம் நடந்திருந்தால், அங்கு என்ன மர்மம் ஒளிந்திருக்கும் என்பதையே நாம் பார்க்கப் போகிறோம்.
டாரெட் மனிதன் பூமியின் இன்னுமொரு பரிமாணத்திலிருந்து வந்திருக்கலாம் என்று சிலரால் நம்பப்படுகிறது. மூன்று பரிமாணங்களையே நாம் அறிந்திருக்கிறோம். அவை தாண்டி, மேலும் பல பரிமாணங்கள் இருப்பதாக இயற்பியல் சொல்கிறது. ஒரே இடத்தில் இரு வேறு பரிமாணங்கள் ஒன்றாகவே இணைந்திருக்கலாம். அவை இரண்டிலும் வெவ்வேறு நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக் கலாம். ஒன்றையொன்று அறியாமல், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அவை நடக்கலாம். இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்கள் வீட்டின் இன்னொரு பரிமாணத்தில், சிங்கமொன்று மானைத் துரத்திக்கொண்டிருக்கலாம். அதையறியாமல், ஜாலியாக காபி அருந்தியபடி நீங்கள் ஜூ.வி-யைப் படித்துக்கொண்டிருக்கலாம். இயற்கையில் ஏற்படும் ஒரு தற்செயல் தவற்றால் (கணினிகளில் ஏற்படும் Error-போல) அந்தப் பரிமாணத்திலிருக்கும் ஒருவர், இந்தப் பரிமாணத்துக்குள் நுழைந்து, மீண்டும் திரும்பிவிடுகிறார். அது போன்ற தவறொன்றினால், டாரெட் மனிதன் தனது காலப்பரிமாணத்திலிருந்து, நமது காலப்பரிமாணத்துக்குள் நுழைந்திருக்கலாம் அல்லவா? நாம் பேய்களையும் தேவதைகளையும் இந்த அடிப்படைகளில்தான் காண்கிறோமா தெரியவில்லை. இப்போது நீங்கள் மிகவும் குழம்பிப்போயிருப்பீர்கள். பரிமாணம் பற்றி முழுமையாக அறிந்தால் மட்டுமே இதைப் புரிந்துகொள்ள முடியும். இல்லையெனில், அறிவியலும் மர்மக் கதைகள்போலாகிவிடும்.

பரிமாணங்களை நீங்கள் எந்த அளவுக்கு அறிந்துவைத்திருக்கிறீர்கள்? பூமி முப்பரிமாணமுடையது என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு கறுப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு முப்பரிமாணத் (3D) திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். நாம் இயங்கக்கூடிய ஊடகமொன்றைப் பரிமாணம் என்று சொல்லலாம். ஒரு நேர்கோட்டை எடுத்துக்கொண்டால், அதில் முன்பின்னாக நகரலாம். அதனால் அதை ஒரு பரிமாணம் என்று சொல்கிறார்கள். முன்பின்னாகவும், இடம்வலமாகவும் நகரக்கூடிய தட்டைவெளி, இரண்டு பரிமாணங்கள்கொண்டது. முன்பின், இடம்வலம், மேல்கீழாக நகர முடிந்தால், அது முப்பரிமாணம் ஆகிறது.
பூஜ்ஜியப் பரிமாணம் என்ற ஒன்றும் இருக்கிறது. ஒரு பரிமாண நேர்கோட்டிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் பூஜ்ஜியப் பரிமாணம் எனப்படுகிறது. `பிக் பாங்’ பெருவெடிப்புக்கு முன்னர் பிரபஞ்சம் முழுவதும், பூஜ்ஜியப் பரிமாணமுள்ள ஒற்றைப் புள்ளியாகத்தான் (Singularity) ஒடுங்கியிருந்திருக்கிறது. பிக் பாங்கின் ஆரம்ப கணத்தில் எந்தப் பரிமாணமும் இல்லை. அதன் பின்னர் ஏற்பட்ட பெருவெடிப்பால், ஒவ்வொரு கணம் கணமாகப் பிரபஞ்சம் பிரமாண்டமாக விரிவடைய ஆரம்பித்தது. காலமும் இடமும் சேர்ந்து பெரிதாகிக்கொண்டே வந்தன. காலம் இல்லாமல் இடமில்லை. இடமில்லாமல் காலமும் இல்லை. இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிள்ளைகள்போல ஒன்றாகவே வளர ஆரம்பித்தன. இன்றும் வளர்ந்துகொண்டிருக்கின்றன. அதனாலேயே வெளியையும் காலத்தையும் வெவ்வேறாகப் பிரிக்காமல், ‘காலவெளி’ (Space Time) என்னும் ஒற்றைச் சொல்லால் ஐன்ஸ்டீன் அடையாளப்படுத்தினார்.
நாம் இயங்கக்கூடிய ஊடகத்தைப் பரிமாணம் என்று எடுத்துக்கொண்டால், காலத்துக்கு ஊடாகவும் நாம் இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குப் புரியும். பிக் பாங் ஆரம்ப கணத்திலிருந்து 13.8 பில்லியன் ஆண்டுகள், காலத்தால் பயணமாகியிருக்கிறோம். இப்போதும், நொடி நொடியாக நகர்ந்துகொண்டிருக்கிறோம். அதனால் காலமும் ஒரு பரிமாணமென்று ஐன்ஸ்டீன் தெரிவித்தார். மூன்று பரிமாணங்களுடன், நான்காவதாகக் காலத்தைக் குறிப்பிடுகிறார். பலருக்குக் காலம் எப்படிப் பரிமாணமாகும் என்பது புரிவதில்லை. நேர்கோட்டையும், தட்டைப் பரப்பையும், மூடிய உருவத்தையும் மூன்று பரிமாணங்களாக மனிதனால் ஏற்க முடிகிறது. அவன் விருப்பப்படி அப்பரிமாணங்களில் முன்பின்னாக நகரவும் முடிகிறது. ஆனால், காலம் அப்படியானதல்ல. அதற்கு மனிதனின் விருப்பம் முக்கியமில்லை. மனிதனுக்குக் கட்டுப்படாமல் தானாகவே எதிர்காலத்தின் திசைநோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால், காலத்தை நான்காவது பரிமாணமாக மனிதனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
காலம் எனும் நான்காம் பரிமாணத்தை நீங்கள் இப்படிப் புரிந்துகொள்ளலாம். ஓர் இடத்துக்கு நீங்கள் தூரத்தால் பயணம் செய்தால், நேரத்தாலும் பயணம் செய்கிறீர்கள் என்பதே உண்மை. ஒரு விமானப் பயணச் சீட்டை நீங்கள் பார்த்திருக்கலாம். அதில், நீங்கள் சென்றடையும் தூரம் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால், நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். பெரும்பாலான நாடுகளில், வாகனப் பயணங்கள் தூரத்தில் சொல்லப்படுவதற்கு பதிலாக, நேரத்திலேயே சொல்லப்படுகின்றன. ஓர் இடத்தைக் குறிப்பிட்டு, ‘அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது?’ என்று கேட்டால், ஒரு மணி நேரத்தில் இருக்கிறதென்றோ, 40 நிமிட நேரத்தில் என்றோ பதில் சொல்வார்கள். காலத்தைப் பரிமாணமாக ஏற்றுக்கொண்டதன் விளைவுதான் இவை.
ஆனாலும் ஒரு சந்தேகம் எப்போதும் உங்களிடம் இருக்கும். “நாம் இருக்கும் இடத்தைவிட்டு நகராமல் ஒரே புள்ளியில் அமர்ந்திருந்தாலும், காலம் நகர்கிறதே... இந்த இடத்தில், அது இடத்துடன் சேர்ந்து நகர்வதில்லையே?” என்று நினைப்பீர்கள். காலம் பிரபஞ்சத்துக்குரியது. அதனாலேயே யாருக்கும் கட்டுப்படாமல், தன்னிச்சையாகவே எப்போதும் நகர்கிறது. இடமும் (வெளி) பிரபஞ்சத்துக்கானதே. நீங்கள் ஆடாமல் அசையாமல் நிலையாக உட்கார்ந்திருந்தாலும், பூமி உங்களைச் சுமந்தபடி, சூரியனைச் சுற்றுவதற்காக ஓடிக்கொண்டே இருக்கிறது. அதனால் பூமியின் வேகத்தில் நீங்களும் வெகுதூரம் பயணம் செய்கிறீர்கள். பூமியையும் உங்களையும் சேர்த்துக்கொண்டு சூரியன், பால்வெளி மண்டலத்தைச் சுற்றி ஓடுகிறது. பால்வெளியோ பேரண்ட விளிம்பை நோக்கி விரைகிறது. பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் காலத்துடன் இணைந்து நகர்ந்தபடியேதான் இருக்கின்றன. எதனாலும், அசையாமல் ஓரிடத்தில் இருக்க முடியாது. காலத்தின் நான்காவது பரிமாணத்தை நீங்கள் ஓரளவுக்குப் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இறுதியாக ‘ஃப்ரீக்வென்ஸி’ படத்தில் என்ன நடந்தது என்பதையும் பார்த்துவிடலாம்... ஒரு வீட்டில் அமர்ந்துகொண்டிருக்கும் இறந்தகால அப்பாவையும், எதிர்கால மகனையும் காலமெனும் பரிமாணம் இணைக்கிறது. அவர்கள் இருவரும் முன்பின்னாக காலப் பரிமாணத்தில் இணைகிறார்கள். இருவரும் வாழும் முப்பரிமாண உலகை, அதிர்வுகள் மூலம் (Frequency) நாற்பரிமாணக் காலம் இணைத்துக்கொள்கிறது. நம்பவே முடியாத மர்மக் கதையொன்றைப் படித்ததுபோல இருக்கிறதல்லவா? டாரெட் மனிதனின் சம்பவமும் இதுபோல ஒரு நம்ப முடியாத மர்மக் கதைதான். நிஜமென நிறுவும்வரை எல்லாமே மர்மங்கள்தான். அவற்றைத் தேடுவதும் வியப்பதும்தான் மனித இயல்பு!
(தேடுவோம்)