
அறிவியல் உலகம் சமீபத்தில் சாதித்துக்காட்டிய சம்பவம் ஒன்றை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கருந்துளை ஒன்றின் (Black hole) நிஜமான படத்தை 2019, ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட்டார்கள்.
கண் உயர்த்திப் பார்க்கையில், விண்வெளியாக விரிந்திருக்கும் ஒட்டுமொத்தப் பேரண்டமும், மர்மங்களாலும் விந்தைகளாலும் தன்னைப் போர்த்திக்கொண்டிருக்கிறது. அந்த மர்மங்களின் பிரமாண்டம் புரியாமல், அதைத் தேடி நாம் உலகின் வரலாறுகளைக் கூறு போட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் நினைப்பது, நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது, நாம் கற்பிப்பது போன்ற அனைத்தையும் பொய்யாக்கிச் சிரித்தபடி இருக்கிறது பேரண்டம். அதன் ஒவ்வொரு புள்ளியும் மர்மம்தான். அது பற்றித் தெரிந்துகொண்டிருப்பதில் பெரும்பகுதி உண்மையில்லை. அதன் உண்மைகளை அறிந்தால், இதுவரை மர்மங்களென்று நாம் பேசிக்கொண்டிருப்பவை ஒன்றுமேயில்லை என்றாகிவிடும். அப்படிப்பட்ட பேரண்டத்தின் பெரும் விந்தைகளை நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். பேரண்டத்தில் ஒளிந்திருக்கும் ஒவ்வொரு மர்மமும் உங்களைத் திகைக்கச் செய்யும். அவற்றில் சிலவற்றை நாம் அறிந்துகொள்வோமா... அங்கு என்ன ஒளிந்திருக்கிறது என்பதை நிதானமாகப் பார்க்கலாமா?

அறிவியல் உலகம் சமீபத்தில் சாதித்துக்காட்டிய சம்பவம் ஒன்றை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கருந்துளை ஒன்றின் (Black hole) நிஜமான படத்தை 2019, ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட்டார்கள். எந்தவொரு பொருளை விண்வெளியில் காண முடியாதோ, எந்தப் பொருள் கண்டுபிடிப்பதற்குக் கடினமானதோ, அந்தப் பொருளைப் படமெடுத்து, ஒட்டுமொத்த உலகையே மிரட்டியிருந்தார்கள். ‘மெஸ்ஸியர் 87’ (Messier 87 சுருக்கமாக M87) காலக்ஸியின் மையத்திலிருக்கும் பிரமாண்டமான கருந்துளையின் படம்தான் அது. அதைப் படமெடுப்பதற்கு முக்கியக் காரணமாயிருந்தவர் ‘கேட்டி போமான்’ (Katie Bouman) எனும் பெண் வானியலாளர். M87 காலக்ஸி, 55 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. பொதுவாக, காலக்ஸிகள் எல்லாமே ராட்சசக் கருந்துளைகளை (Super Massive Black holes) மையமாகக் கொண்டவைதான். அப்படியிருக்கும் பட்சத்தில், நமது சொந்த காலக்ஸியான மில்கி வேயின் (Milky Way Galaxy) மையத்திலும், அது போன்ற ராட்சசக் கருந்துளை ஒன்று இருக்க வேண்டுமல்லவா? மில்கி வே காலக்ஸியின் மையத்திலும் பிரமாண்டமான கருந்துளை உண்டு. சூரியனைப்போல, அது நான்கு மில்லியன் மடங்கு எடைகொண்டது. பூமியிலிருந்து வெறும் 26,000 ஒளியாண்டு தூரத்தில்தான் இருக்கிறது. ‘இவ்வளவு அருகேயிருக்கும் கருந்துளையைப் படமெடுக்காமல், 55 மில்லியன் ஒளியாண்டு தூரத்திலிருப்பதை ஏன் எடுத்தார்கள்?’ என்ற கேள்வி எழுகிறதல்லவா?
மில்கி வே காலக்ஸியின் மையக் கருந்துளையின் படத்தை எடுப்பதே ஆராய்ச்சியாளர்களின் விருப்பமும்கூட. சொந்த வீட்டிலிருப்பவர்களை விட்டுவிட்டு, எங்கோ இருப்பவர்களை எவராவது படமெடுப்பார்களா... அதை யார்தான் விரும்புவார்கள்? ஆனால் அதற்கொரு நிர்பந்தம் ஏற்பட்டது. மில்கி வேயின் கருந்துளையைப் பார்ப்பதற்குச் சில தடைகள் இருந்தன. ‘சஜிட்டாரியஸ்’ (Sagittarius Constelation) எனும் நட்சத்திரத் தொகுதியை பூமியிலிருந்து நாம் பார்க்க முடியும். அதை ஜோதிடர்கள், ‘தனுசு ராசி’ என்றழைக்கிறார்கள். கிரேக்கப் புராணங்களில் சொல்லப்படும் குதிரை உடலும், மனிதத் தலையும்கொண்ட ‘குரோட்டோஸ்’ (Krotos) எனும் உப கடவுள், வில்லைப் பிடித்திருப்பதாகச் சஜிட்டாரியஸ் தொகுதி அடையாளப்படுத்தப்படுகிறது. சஜிட்டாரியஸின் ஊடாக மட்டுமே மில்கி வேயின் மையப் பகுதியைக் காண முடியும். தொலைநோக்கிகள் மூலமாகச் சிரமத்துடன் சஜிட்டாரியஸை ஊடறுத்துப் பார்த்தால், கருந்துளையைக் கண்டுபிடிக்கலாம். அதைப் பார்க்க முடியாதபடி, கருந்தூசிப் படலங்கள் மறைத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றைத் தாண்டிப் பார்ப்பதற்கு நவீன தொலைநோக்கிகள் தேவைப்படுகின்றன. அதோடு பார்வைக் கோணமும் சரியானதாக இல்லை. முழுமையான கருந்துளையைப் பார்க்க முடிவதில்லை. ஆனாலும், அதைப் படமெடுத்தே தீருவோம் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அதனாலேயே மில்கி வேயின் மையக் கருந்துளைக்கு, சஜிட்டாரியஸ் A* (Sagittarius A*) என்று பெயருமிட்டிருக்கிறார்கள். அந்தக் கருந்துளை பற்றிச் சொல்ல வந்தேனென்று நினைத்தீர்களா? இல்லை, சஜிட்டாரியஸ் நட்சத்திரத் தொகுதியிலிருந்து பூமிக்கு வந்த செய்தி பற்றியே சொல்லப்போகிறேன். இன்றுவரை வானியல் ஆராய்ச்சியில் விடை கிடைக்காத மர்மமாக, அந்தச் செய்தியே இருந்துவருகிறது.

1977, ஆகஸ்ட் 15-ம் தேதி அந்தச் சம்பவம் நடந்தது. ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழக (Ohio state university) வானியல் அவதானிப்பு நிலையத்தில் (Big Ear Radio Telescope), பூமிக்கு வெளியேயுள்ள கோள்களில் புத்திசாலி ஜீவராசிகள் வசிக்கிறார்களா எனும் ஆராய்ச்சிகள் நடந்துவந்தன. விண்வெளியிலிருக்கும் குறிப்பிட்ட நட்சத்திரத் தொகுதிகளுக்கு தொலைநோக்கி திருப்பப்பட்டு, அங்கிருந்து சமிக்ஞைகள் வருகின்றனவா என்று உறுமீன் வருகைக்குக் காவலிருக்கும் கொக்காக, நிதானமாகக் காத்திருந்தார்கள். வேற்றுக்கோள்களில் ஜீவராசிகளைத் தேடுவதற்கென்றே, SETI (Search for Extrateresstrial Intelligence) எனும் மிகப்பெரிய அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அந்த அமைப்பின் ஒரு பகுதியாகவே ஓஹியோ பல்கலைக்கழகமும் இயங்கியது. யாருமே நம்ப முடியாத அந்தச் சம்பவம், ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு 10:16 அளவில் நடந்தேறியது. எதிர்பார்த்திருந்தாலும், எதிர்பார்க்காத சமயத்தில் விண்வெளியிலிருந்து ஒரு சமிக்ஞை (Signal) கிடைத்தது. அப்போது பணியிலிருந்தவர் ‘ஜெர்ரி ஏமான்’ (Jerry Ehman). அங்கிருந்தது, இன்றைய அதிநவீன தொலைநோக்கி போன்றதல்ல. தான் கிரகிக்கும் சமிக்ஞைகளைத் தாள்களில் எழுத்து வடிவத்தில் பிரின்ட் செய்யும். விண்வெளியிலிருந்து கிரகித்த சமிக்ஜையால், திடீரென அந்த பிரின்ட்டர் இயங்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 72 நொடிகள் நீண்ட சமிக்ஜையாக இருந்தது. பிரின்ட் செய்யப்பட்ட காகிதத்தில் ‘6EQUJ5’ எழுத்துகள் காணப்பட்டன. அதைப் பார்த்ததும் துள்ளிக்குதித்தார் ஏமான். உடனடியாகத் தனது பேனாவா சுற்றி வட்டமிட்டு, ‘வாவ்!’ (Wow!) என்று எழுதினார். அதுவே, ‘வாவ் சிக்னல்’ என்று உலகம் முழுவதும் ஆச்சர்யமாகக் கொண்டாடப்படுவது. ‘அப்படி என்னதான் வாவ் சிக்னலில் விசேஷம் இருக்கிறது?’ என்றுதானே கேட்கிறீர்கள்... சொல்கிறேன்.

நாம் கேட்கும் சத்தமென்பது, காற்றின் துகள்களின் அதிர்வுகள் நம் காது வரை நுழைந்து செவிப்பறையைத் தட்டுவதால் உணரப்படுவது. குரல்களாகவும், இயற்கையில் ஏற்படும் ஒலிகளாகவும் அதைக் கேட்கிறோம். ஆனால், ஒலியென்பது அதுமட்டுமல்ல. மின்காந்த அலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள், ஒளியாகவும் ஒலியாகவும் கடத்தப்படுகின்றன. அவற்றை வானொலி அலைகளென்று (Radio Waves) சொல்கிறோம். இந்த வானொலி அலைகளின் குறிப்பிட்ட சில அலைவரிசைகளை, இயற்கையாக உருவாக்க முடியாது. கைப்பேசிகள், தொலைக்காட்சிகள், ராணுவத் தொலைத் தொடர்புகள் போன்றவை இந்த அலைவரிசைகள் மூலமாகவே அனுப்பப்படுகின்றன. இவை ‘ஹெர்ட்ஸ்’ (Hertz) அலகால் அளக்கப்படுபவை. வாவ் சிக்னல், 1,420 மெகாஹெர்ட்ஸ் (MHz) அளவுடையதாக இருந்தது. அது மிகக்குறுகிய அலை. அதை இயற்கையாக உருவாக்க முடியாது. சில காரணங்களால் இந்த அலைவரிசையை பூமியில் பயன்படுத்தக் கூடாது எனக் கட்டுப்பாடும் இருக்கிறது. அப்படியான நிலையில்தான் அந்தச் சமிக்ஞை வந்தது. அது வந்த இடம், சஜிட்டாரியஸ் நட்சத்திரத் தொகுதி. அடுத்த சில நாள்களில், உலகம் முழுக்கப் பரபரப்பானது. ‘ஏலியன்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம்’ என்பதாகவே நினைத்தார்கள். அனைத்துத் தொலைநோக்கிகளும் சஜிட்டாரியஸ் நோக்கித் திருப்பப்பட்டன. ‘இன்னொரு தடவை அந்த ஒலி கேட்காதா?’ என்று தவமிருந்தார்கள். ஊஹூம், அதன் பின்னர் எந்தச் சத்தமும் அங்கிருந்து வரவேயில்லை. அந்த மர்ம ஒலியின் பின்னால் என்ன ஒளிந்திருந்தது என்பது தெரியவில்லை. ஆனால், 42 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்கான பதில் வேறொரு இடத்திலிருந்து கிடைத்தது. பூமிக்கு மிக அருகிலிருந்தே சமிக்ஞை அனுப்பப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டிருக்கும் ‘பார்கெஸ் வானொலித் தொலைநோக்கி’ (Parkes Radio Telescope) 2019-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வலிமையற்ற ஒலிச் சமிக்ஞைகளை கிரகித்துக் கொண்டது. பூமிக்கு அருகிலிருக்கும் ‘புரோக்ஷிமா சென்டாரி’ (Proxima Centauri) நட்சத்திரத்திலிருந்தே அந்த ஒலி சமிக்ஞை வந்திருந்தது. அந்தச் செய்தியை அவர்கள் உடனே வெளியிடவில்லை. ஆனால், எப்படியோ அதை அறிந்துகொண்ட கார்டியன் பத்திரிகை, மெல்லக் கசியவிட்டது. சூரியனுக்கு அடுத்து, 4.25 ஒளியாண்டு தொலைவில் மூன்று நட்சத்திரங்கள் ஒன்றாக ஒரே இடத்தில் இருக்கின்றன. ஆல்பா சென்டாரி A, ஆல்பா சென்டாரி B, புரோக்ஷிமா சென்டாரி ஆகிய மூன்று நட்சத்திரங்கள். முதலிரண்டும் ஒன்றையொன்று சுற்றிக்கொண்டிருக்கும் இரட்டை நட்சத்திரங்கள் (Binary Stars). புரோக்ஷிமா சென்டாரி, சிவப்பு நிறக் குள்ள நட்சத்திரம் (Red Dwarf). இதை பூமிக்கு ஒப்பான கோளொன்று சுற்றிக்கொண்டிருக்கிறது. அந்தக் கோளிலிருந்துதான், புதிய சமிக்ஞை வந்ததாகச் சொல்கிறார்கள். பூமியைவிட 1.17 மடங்கு பெரிதாகவும், நீர் மற்றும் காற்றுவெளி மண்டலத்தை அது கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். அங்கிருந்து வந்த ஒலி, 982 மெகாஹெர்ட்ஸ் அளவுகொண்டது. கிட்டத்தட்ட ‘வாவ் சிக்னல்’ போன்றது. இந்த ஒலியையும் இயற்கையால் உருவாக்க முடியாது. நிச்சயமாக, செயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அப்படியென்றால், யார் அதை உருவாக்கியிருப்பார்கள்? இப்படியொரு கேள்வி எழுந்தாலும், இம்முறை யாரும் அவசரப்படவில்லை. அந்த ஒலி பூமியிலிருந்தும் வந்திருக்கலாம் என்று, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தார்கள். அப்படி வரவில்லை என்பது புரிந்தது. ஒருவேளை, பூமியைச் சுற்றும் சாட்டிலைட்டிலிருந்து வந்திருக்கலாம் என்றும் ஆராய்ந்தார்கள். அதற்கும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. கிட்டத்தட்ட பூமியிலிருந்து அந்த சமிக்ஞை வரவில்லை என்ற முடிவுக்கு இப்போது வந்திருக்கிறார்கள். ஆனாலும், எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை. ஏலியன்கள் உருவாக்கிய ஒலி அது என்று சிலர் சந்தேகப்பட்டாலும், வெளிப்படையாக எந்த வானியல் ஆராய்ச்சியாளரும் அப்படிச் சொல்லவில்லை. ஆனால், இந்த மொத்தச் சம்பவங்களையும் சரியாகப் புரிந்துகொண்டால், அங்கு ஏதோ மர்மம் புதைந்திருப்பது தெரியும். அந்த மர்மத்துக்குக் காரணமானவர் ஒருவர்.
புரோக்ஷிமா சென்டாரி நட்சத்திர அவதானிப்பை, ‘BLC1’ (Breakthrough Listen Candidate 1) எனும் திட்டத்தின் மூலம் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கார்டியன் பத்திரிகை கசியவிட்ட செய்தியை, 18 டிசம்பர், 2020-ல், உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டு உலகத்துக்கு அறிவித்தது BLC1. அது, 100 மில்லியன் டாலர் செலவில் 2016-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு முதலீடு செய்தவர், ரஷ்யாவின் கோடீஸ்வரரான ‘யூரி மில்னெர்’ (Yuri Milner). இவர், ஃபேஸ்புக், ட்விட்டர், ஃபிளிப்கார்ட், வாட்ஸ்அப், அலிபாபா, ஷியோமி போன்ற உலகின் மிகப் பிரபலமான நிறுவனங்களுக்கு முதலீட்டாளராக இருக்கிறார். இவரை ஏன் முக்கியப்படுத்தி எழுதுகிறேன் தெரியுமா? மில்னெரும், ஃபேஸ்புக் அதிபர் மார்க் சக்கர்பெர்க்கும், ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களும் இணைந்து ஒரு திட்டத்தை உருவாக்கியிருந்தார்கள். இந்த சமிக்ஞை புரோக்ஷிமா சென்டாரியிலிருந்து வருவதற்கு முன்னரே, புரோக்ஷிமா சென்டாரியுடன் தொடர்புகொண்டிருந்தது அந்தத் திட்டம். நம்பவே முடியாத அந்த அதிசயத் திட்டம் பற்றி அடுத்த இதழில் சொல்கிறேன்!
(தேடுவோம்)