மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 43 - அழைக்கிறதா புரோக்‌ஷிமா சென்டாரி?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?

செயற்கையாக உருவாக்கப்படும் வானொலி அலையையே 1977-ம் ஆண்டு வானியற்பியலாளர்கள் கண்டுகொண்டார்கள்.

கடந்த பகுதியில் எழுதியவற்றைப் பற்றி புரியவைப்பதற்காகச் சிறிய விளக்கம். அதிர்வுகள் (Vibration) உருவாக்கும் அலைகளே, நம்மை வந்தடைந்து ஒலியாகின்றன. அந்த அலைகள், அதிர்வெண்களால் (Frequency) கணக்கிடப்படு கின்றன. அவை ‘ஹெர்ட்ஸ்’ (Hertz) எனும் அலகால் அளக்கப்படுகின்றன. மனிதனால், 20 ஹெர்ட்ஸிலிருந்து (20Hz), 20 கிலோஹெர்ட்ஸ் (20KHz) வரையுள்ள ஒலியைத்தான் கேட்க முடியும். இது மிகமிகக் குறைந்த ஒலிச்செறிவு. இயற்கையில் உருவாகும் அதிக அளவிலான ஒலிகளை மனிதனால் கேட்க முடிவதில்லை. ஆனால், விலங்குகளால் அவை உணரப்படுகின்றன. நடைபெறப் போகும் பூமியதிர்ச்சியை, இரண்டு வாரங்களுக்கு முன்னரே மிருகங்களும் பறவைகளும் பாம்புகளும் உணர்ந்துகொள்கின்றன. இதிலுள்ள சகிக்க முடியாத உண்மை என்னவென்றால், அந்த விலங்குகளின் வழியே தான் மனிதன் பரிணாமம் அடைந்திருக்கிறான். அவற்றி லிருக்கும் அனைத்து மரபணுக்களையும் மனிதனும் கொண்டிருக்கிறான். ஆனால், அவை தக்கவைத்துக் கொண்டிருக்கும் பல உணர்வுகளை, மனிதனால் உணர முடிவதில்லை.

அனைத்தையும் இழந்திருக்கிறான். போகட்டும், இப்போது அங்கு செல்ல வேண்டியதில்லை. இயற்கையில் வாழும் உயிரினங்களில், அதிகபட்ச ஒலியளவைக் கிரகிக்கக்கூடியது ‘விட்டில்பூச்சி’ (Moth) இனம்தான். அவற்றால், 300 கிலோஹெர்ட்ஸ் (300KHz) அளவிலான ஒலியைக்கூட உணர முடியும். மனிதன்போல 15 மடங்கு அதிகமான ஒலியளவு. இயற்கையால் உருவாகும் ஒலிகள், அனைத்து ஊடகங்களாலும் கடத்தப்படக்கூடியவை. ஆனால், வெற்றிடங்களில் அவற்றால் கடக்க முடியாது. அந்த ஒலியலைகளை, ‘இயந்திர அலைகள்’ (Mechanical Waves) என்பார்கள். இதற்கு நேர்மாறாக, அதிக அதிர்வெண்களை உடையவை, ‘மின்காந்த அலைகள்’ (Elecromagnetic Waves) எனப்படுகின்றன. இவை வெற்றிடங்களிலும் பயணம் செய்யக்கூடியவை. இவற்றின் அலை நீளங்கள், மெகாஹெர்ட்ஸ் (MHz), ஜிகாஹெர்ட்ஸ் (GHz) அளவுகளில் காணப்படும். இந்த மின்காந்த அலைகள், வானொலி அலைகளெனவும் (Radio Waves - RF) சொல்லப்படுகின்றன. வானொலி அலைகளில், குறுகிய அலைநீளம்கொண்டவை மனிதனால், செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. அதிக நீளமுடைய வானொலி அலைகள், பேரண்டத்தில் நடைபெறும் தனித்துவமான இயற்கை நிகழ்வுகளால் உருவாகின்றவை. மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படும் வானொலி அலைகளே, கைப்பேசிகளிலும், வயர்லெஸ் உபகரணங்களிலும், வேறு பல தொடர்புச் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. பேரண்டவெளியில் ஆங்காங்கே காணப்படும், நியூட்ரான் நட்சத்திரங்கள், கருந்துளைகள் குவேசார்கள், மேக்னெட்டார்கள் போன்ற பொருள்களின் சுழற்சிகளாலும், மோதல்களாலும் அதிக நீளமுடைய வானொலி அலைகள் உருவாகின்றன. ஓரளவுக்கு ஒலியலைகளின் தன்மைகளை விளக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இனி மேலே செல்லலாம்...

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 43 - அழைக்கிறதா புரோக்‌ஷிமா சென்டாரி?

செயற்கையாக உருவாக்கப்படும் வானொலி அலையையே 1977-ம் ஆண்டு வானியற்பியலாளர்கள் கண்டுகொண்டார்கள். அதுவே, ‘வாவ் சிக்னல்’ (Wow Signal). அது நடந்து 42 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் செயற்கை வானொலி அலையை ஆஸ்திரேலியாவில் இருக்கும் பார்க்ஸ் விண்வெளி ஆய்வு மையம் (Parkes Observatory) கிரகித்திருக்கிறது. வாவ் சிக்னல், வெறும் 72 நொடிகளே இருந்தது. ஆனால், பார்க்ஸால் மூன்று மணி நேரத்துக்குத் தொடர்ச்சியாக உணரப்பட்டது. அதனாலேயே, இப்போது முன்னணியில் வைத்துப் பேசப்படும் நிகழ்வாகியிருக்கிறது. செயற்கையாக உருவாக்கப்படும் வானொலி அலைகள், பூமியிலிருந்து வருவதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. ஆனால், விண்வெளியிலிருந்து வந்ததுதான் ஆச்சர்யம். குறிப்பாக, சென்டாரி நட்சத்திரத் தொகுதியிலிருந்து (Centaurus) வந்திருக்கிறது. சூரியன்தான் பூமிக்கு மிக அருகிலிருக்கும் நட்சத்திரம். சூரியனுக்கு அடுத்ததாக அண்மையில் இருப்பவை சென்டாரி நட்சத்திரங்கள்தான். அவை மொத்தமாக மூன்று நட்சத்திரங்கள். ஆல்பா சென்டாரி A, ஆல்பா சென்டாரி B இரட்டை நட்சத்திரங்களுடன், புரோக்‌ஷிமா சென்டாரி நட்சத்திரமும் சேர்ந்த மூன்று நட்சத்திரத் தொகுதி அது. அவற்றில் பூமிக்கு மிக அருகில் இருப்பது புரோக்‌ஷிமா சென்டாரி நட்சத்திரம்தான். 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் புரோக்‌ஷிமா சென்டாரி நட்சத்திரம், சூரியனைவிட எட்டு மடங்கு எடை குறைந்தது. சிவப்பு நிறத்திலிருக்கும் குள்ள நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தை, ‘புரோக்‌ஷிமா சென்டாரி b’ (Proxima Centauri b), ‘புரோக்‌ஷிமா சென்டாரி c’ (Proxima Centauri c) எனும் இரண்டு கோள்கள் சுற்றிக்கொண்டிருக் கின்றன. அவற்றில் புரோக்‌ஷிமா சென்டாரி b எனும் கோள், உயிர்கள் வாழக்கூடிய அமைப்புடன் இருப்பதாகக் கருதுகிறார்கள். அங்கிருந்தே, வானொலியலைச் சமிக்ஞைகள் வந்ததாகவும் நம்பப்படுகிறது. அந்தச் சமிக்ஞைகளை ‘BLC1’ என்று அழைக்கிறார்கள். அதாவது, Breakthrough Listen Candidate 1 என்பதன் சுருக்கம். பூமிக்கு வெளியேயுள்ள கோள்களில் உயிரினங்களைத் தேடும் BLC திட்டத்தின் ஸ்தாபகராக இருப்பவர் யூரி மில்னெர் (Yuri Milner) எனும் கோடீஸ்வரர் என்று கடந்தமுறை சொல்லியிருந்தேன். அவரும், ஸ்டீபன் ஹாக்கிங்கும், மார்க் சக்கர்பெர்க்கும் இணைந்து, புதுமையான திட்டமொன்றை உருவாக்கினார்கள். அந்தத் திட்டத்தின் பெயர் Breakthrough என்றே ஆரம்பமாகிறது. அந்தத் திட்டம் பற்றி அறிந்தீர்களென்றால், ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே போவீர்கள். அதில் என்ன ஒளிந்திருக்கிறது என்பதையே இப்போது பார்க்கப்போகிறோம்!

மனைவி ஜூலியா மில்னெருடன் இணைந்து, 2015-ம் ஆண்டு Breakthrough Initiative எனும் அறிவியல் அமைப்பொன்றை உருவாக்கினார் யூரி மில்னெர். கணவனும் மனைவியும் கோடீஸ்வரர்களாக மட்டுமல்லாமல், இயற்பியல் அறிஞர்களாகவும் இருந்தார்கள். வெளிக்கோள் உயிரினங்களைத் தேடுவதற்கான திட்டங்களுக்கு விருதுடன் கூடிய பரிசும் அறிவித்திருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு, இயற்பியல் மேதையான ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் ஃபேஸ்புக் அதிபர் மார்க் சக்கர்பெர்க் ஆகியோரை இணைத்து, Breakthrough Starshot எனும் புதுமையான திட்டம் உருவானது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்கலங்களை, ஒரே சமயத்தில் புரோக்‌ஷிமா சென்டாரி b நோக்கி அனுப்புவதே அந்தத் திட்டத்தின் நோக்கம். அது எப்படி ஆயிரம் விண்கலங்களை ஒரே சமயத்தில் அனுப்ப முடியும்? அங்குதான் ஸ்டீபன் ஹாங்கிங் போன்ற இயற்பியல் மேதைகளின் புத்திசாலித்தனம் அடங்கியிருந்தது. இதுவரை மனித வரலாறு கண்டிருக்காத விந்தைத் திட்டம் அது.

ஆயிரம் விண்கலங்களை ஒன்றாக அனுப்புவது என்பது ரொம்ப அதிகப்பிரசங்கித்தனம் என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மைதான். அந்த ஆயிரம் விண்கலங்கள் எப்படியானவை என்று தெரிந்தால் திகைத்துப் போவீர்கள். ஒவ்வொன்றும் தபாலுறைகளில் ஒட்டப்படும் முத்திரையின் (Stamps) அளவும், மூன்று கிராமுக்கும் குறைவான எடையும்கொண்டவை அந்த விண்கலங்கள். இதுவரை அப்படியான மைக்ரோ விண்கலங் களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. அது மட்டுமல்ல ஆச்சர்யம்... ஸ்டார் ஷாட் விண்கலம் ஒவ்வொன்றும், துல்லியமாகப் படம் பிடிக்கக்கூடிய கேமராக்களையும், அவற்றில் எடுத்த படங்களை பெற்றுக்கொண்ட தகவல்களை பூமிக்கு அனுப்பும் தொடர்பு வசதிகளையும், சிறிய அளவு கணினியும் கொண்டது. பூமியிலிருந்து அனுப்பப்படும் நுண்ணிய விண்கலங்கள், புரோக்‌ஷிமா சென்டாரி b கோளை அணுகியதும், அதைப் பலவிதங்களில் படமெடுத்து ஆராயும். பின்னர் அந்தத் தகவல்களைப் பூமிக்கு அனுப்பும். ஓர் அங்குல அளவுகொண்ட அந்த விண்கலங்களில் கேமராவும் கணினியும் பொருத்திக் கொள்வதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். அவற்றில் உந்தித்தள்ளும் எரிபொருள் விசைக்கருவிகளை எப்படிப் பொருத்துவது... விண்கலம் என்பது, பூமியிலிருந்து விசையுடன் ஏவப்பட வேண்டுமல்லவா? சந்திரனுக்கோ, செவ்வாய்க்கோகூட அல்ல. 40,208,000,000,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கோளுக்கு அவ்வளவு சக்திவாய்ந்த மோட்டாரையும், அதை இயக்குவதற்கேற்ற எரிபொருளையும் எங்கிருந்து பெறுவது? அறிவியல் சாதிக்கப்போகும் ஆச்சர்யம் அதில் அடங்கியிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கிங் உயிரோடு இருந்தபோது உருவாகப்பட்ட அந்தத் திட்டம், 2025-ம் ஆண்டளவில் செயல்படுத்தப்படும் எனச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அவர் இறந்துபோனார். அப்படியிருந்தும் அதே வேகத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கிங் இருந்த இடத்தை நிரப்புவதற்காக, ஹார்வர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியரான ‘ஆபிரஹாம் லோப்’ (Abraham Loeb) இணைந்திருக்கிறார். இந்தத் தொடரைப் படித்துவரும் உங்களுக்கு, ஆபிரஹாம் லோப் பழக்கமானவர்தான். ‘ஒமுவாமுவா’ எனும் விண்கல் பற்றிய ஆராய்ச்சியில் அவர் முக்கியப் பங்காற்றியதாகச் சொல்லியிருக்கிறேன்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 43 - அழைக்கிறதா புரோக்‌ஷிமா சென்டாரி?

ஸ்டார்ஷாட் விண்கலங்களை எப்படி விண்வெளிக்கு அனுப்பவிருக்கிறார்கள் தெரியுமா? வெவ்வேறு இடங்களிலிருந்து வெளிவரும் சக்திவாய்ந்த லேசர் கதிர்களில் பல ஒன்றாகக் குவிக்கப்பட்டு, 100 ஜிகாவாட் (Gigawatt) சக்தியை உருவாக்கும். அந்த ஒன்றுசேர்ந்த லேசர், மிகச்சிறிய விண்கலங்களின்மேல் பாய்ச்சப்பட்டு, அதிக வேகத்தில் விண்வெளியை நோக்கி உந்தப்படும். 100 ஜிகாவாட் சக்தியென்பது, மிகப்பெரிய அணு உலையிலிருந்து பெறும் ஆற்றலுக்குச் சமமானது. அதிகபட்சமாக, ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாகப் பாய்ச்சப்படும் லேசர் கதிர்கள், அந்த விண்கலங்களை ஒளியின் வேகத்தின் ஐந்தில் ஒரு மடங்கு வேகத்தில் இயங்கவைக்கும். அதே வேகத்தில் புரோக்‌ஷிமா சென்டாரி நோக்கிப் பயணமாகும். அப்படிப் பயணிக்கும் ஸ்டார்ஷாட் விண்கலங்கள், பத்து ஆண்டுகளில் தங்கள் இலக்கை அடையும். அதாவது, 2025-ல் விண்கலங்கள் செலுத்தப்பட்டால், 2035-ல் புரோக்‌ஷிமா சென்டாரி b-யைச் சென்றடையும். அங்கு சேகரிக்கும் தகவல்களை பூமிக்கு அனுப்பினால், அவை நான்கு ஆண்டுகளில் பூமியை வந்தடையும். அனுப்பப்படும் தகவல்கள் ஒளியின் வேகத்தில் பூமிக்கு விரையும். நான்கு ஒளியாண்டு தூரத்தை, நான்கு ஆண்டுகளில் கடக்கும். Breakthrough Starshot திட்டம், மொத்தமாகப் பதினைந்து ஆண்டுகளுக்கானது. ஒவ்வொரு நுண் விண்கலத்துக்கும் தனித்தனியாக லேசர் கற்றைகள் பாய்ச்சப்பட்டு, விண்வெளி நோக்கி வீசப்படும். ஆயிரம் கலங்களும் மொத்தமாக இலக்கை நோக்கி அடையாவிட்டாலும், பெரும்பான்மையானவை இலக்கை அடையும். அந்தத் திட்டம் 100 மில்லியன் டாலரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மில்னெரும், சக்கர்பெர்க்கும் உலகக் கோடீஸ்வரர்கள் என்பதால் அந்தத் திட்டத்துக்கான செலவு பற்றிக் கவலையே இல்லை. அதையும் மீறிப் பல கோடீஸ்வரர்கள் அந்தத் திட்டத்துக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இதில் ஒளிந்திருக்கும் மர்மச் செய்தி ஒன்றை நீங்கள் அவதானித்திருக்க மாட்டீர்கள் என்றே நான் நினைக்கிறேன். அது என்ன தெரியுமா?

2019-ம் ஆண்டு ஏப்ரலில்தான் புரோக்‌ஷிமா சென்டாரியிலிருந்து முதன்முதலாக சமிக்ஞை வந்தது. அது இயற்கையில் உருவானது இல்லையென்று நம்பப்படுகிறது. அப்படியென்றால் அது எங்கிருந்து வந்ததோ அங்கே, இப்படியான ஒலியை உருவாக்கக்கூடிய உயிரினங்கள் வாழலாம் எனச் சந்தேகிக்கிறார்கள். இவையெல்லாம் கடந்த ஓராண்டுக்குள் நடைபெற்றிருக்கும் சம்பவங்கள். ஆனால், வேற்றுக்கோளில் உயிரினங்களைத் தேடி, ஸ்டார்ஷாட் திட்டம் 2016-ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. சனிக்கோளின் சந்திரன்கள், வியாழக்கோளின் சந்திரன்கள் போன்றவற்றில் உயிரினங்கள் வாழலாம் என்ற சந்தேகங்கள் வலுவாக இருந்தபோதும், அங்கே எந்த விண்கலத்தையும் அனுப்பாமல், சொல்லி வைத்ததுபோல, ஆல்பா சென்டாரி மற்றும் புரோக்‌ஷிமா சென்டாரியை நோக்கி விண்கலங்களை அனுப்பும் திட்டத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கிய தீர்க்கதரிசனம், கொஞ்சம் ஆச்சர்யத்தையும், நிறைய மர்மத்தையும் தருகிறதல்லவா?

(தேடுவோம்)