மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 45 - வெறுமையா... முழுமையா?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

அண்ணாநகரில் நிறுத்தப்பட்டிருக்கும் காரின் அளவாகவே அணுக்கரு இருக்கும். அவ்வளவு சிறியது அணுக்கரு.

பூமியிலிருக்கும் பெரும்பான்மையான பொருள்களுக்கு அடிப்படையானவை அணுக்கள் (Atoms). ஒவ்வொரு பொருளும் அணுக்களாலேயே கட்டமைக்கப்படுகின்றன. வெவ்வேறு அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை (Molecules) உருவாக்க, அவை பொருள்களாக உருமாறுகின்றன. பொருள்களுக்கு அடிப்படையாக இருக்கும் அணுவொன்றை இப்போது நாம் எடுத்துக்கொள்ளலாம். அது, அணுக்கரு (Nucleus), எலெக்ட்ரான் எனும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். அணுக்கருவுக்குள் புரோட்டானும், நியூட்ரானும் இருப்பது தனிக்கதை. அங்கு நாம் இப்போது போக வேண்டியதில்லை. ஓர் அணுவை, சென்னை மாநகரம் அளவுக்குப் பெரிதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அண்ணாநகரில் நிறுத்தப்பட்டிருக்கும் காரின் அளவாகவே அணுக்கரு இருக்கும். அவ்வளவு சிறியது அணுக்கரு. மிகுதியாக இருக்கும் எஞ்சிய இடமெல்லாம் வெறுமையாகவே காணப்படும். ஒட்டு மொத்தச் சென்னையை, எலெக்ட்ரான்கள் என்னும் சிறிய பட்டாம்பூச்சிகள் சிறகடித்துச் சுற்றிக்கொண்டிருக்கும். அணுவில் 99.999999999% பகுதி வெறுமையானதே! எதுவுமே இல்லாத வெறுமை. இதன்படி, கோடிக்கணக்கான அணுக்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கும் பொருள்களும் 99.999999999% வெறுமையானவையாகவே இருக்கும். இதைப் படிக்கும் நீங்களும், நீங்கள் அமர்ந்திருக்கும் கதிரை, உங்கள் நாய்க்குட்டி அனைத்தும் வெறுமையாக இருப்பவைதான். சாதாரண வெறுமை கிடையாது. முழுமையான வெறுமை. ஆனால், நீங்கள் வெறுமையாக இருப்பதாகச் சொன்னால், உங்களால் நம்ப முடியுமா? கொரோனா காலத்தில், ‘நாளொரு மேனியும் பொழுதொரு கிலோவுமாக’ அதிகரித்துக் கொண்டிருக்க, உங்களை வெறுமையானவர் என்று சொன்னால், அடிக்க வருவீர்களல்லவா? ஆனால், நிஜம் அதுதான். இயற்பியலைப் பொறுத்தவரை, ஐந்தடி ஆறங்குலமும், 75 கிலோவும் இருக்கும் நீங்கள், ஒரு குண்டூசி முனையளவு சிறியவர்தான். முள்ளம்பன்றி, தன் முட்களை நீட்டி, தன்னைப் பெரிதாக்கிக் காட்டுவதுபோல உங்களைப் பெரிதாக உணர்கிறீர்கள். அது எப்படி... ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? பூமியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும், பொருள்களும் ஒன்றுமேயில்லாத வெறுமையானவர்களே. வெறுமையை முழுமையாக உணர்வதாகச் சொல்லலாம். இதனுள் மிகப்பெரிய அறிவியல் ஆச்சர்யம் அடங்கியிருக்கிறது. அதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டால், மிரண்டுபோவீர்கள். அப்படிப்பட்ட அறிவியல் ஆச்சர்யங்களை ஒவ்வொன்றாக நாம் பார்க்கப்போகிறோம். இப்போது இன்னுமோர் உதாரணத்தையும் பார்த்துவிட்டு நாம் மேலே செல்லலாம்...

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 45 - வெறுமையா... முழுமையா?

‘இருக்கின்றன என்று நாம் நம்புபவை அனைத்தும் உண்மையாகவே இருக்கின்றனவா?’ இந்தக் கேள்வியை, ஏதோ வார்த்தை விளையாட்டாக நான் கேட்பதாக உங்களுக்குத் தோன்றும் அல்லது தத்துவார்த்தமான கேள்வியாகவும் இருக்கும். நம்பிக்கை சார்ந்தோ, கடவுளின் இருப்பைக் கேள்வியாக்குவதற்கோ இந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை. இதன் அர்த்தம் மிகவும் சாதாரணமானது. பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் போன்ற புலன்வழி அறிவால், ஒரு பொருளின் இருப்பை நாம் அறிந்துகொள்கிறோம். பல சமயங்களில் பகுந்தறிந்தும் புரிந்துகொள்கிறோம். புலன்களின் அடிப்படையைக்கொண்டு, ‘இருக்கின்றன’ என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் பொருள்கள் அனைத்தும் உண்மையிலேயே இருக்கின்றனவா என்பதே என் கேள்வி. ஓர் உதாரணத்துடன் இதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். பொருள்களில் ஒளி படும்போது நிழல் உருவாகிறது. அந்த ‘நிழல்’, இருக்கிறது என்பதில் உங்களுக்கு எந்தவிதச் சந்தேகமும் இருந்ததில்லை. காரணம், அதைக் கண்ணால் கண்டிருக்கிறீர்கள். தினம் தினம் அனுபவிக்கிறீர்கள். ஆனால், அந்த நிழல், நிஜமாகவே இருக்கிறதா? இப்போது எனது கேள்வியைக் கொஞ்சமாவது நீங்கள் புரிந்திருப்பீர்கள். உங்கள் கண்ணுக்கு அப்பட்டமாகத் தெரியும் நிழலை, இல்லையென்று உங்களால் சொல்ல முடியாதல்லவா... அப்படியென்றால், நிழல் இருக்கிறது என்றுதானே அர்த்தம்... ஒருவேளை நிழலென்ற ஒன்று இருந்தால், அது எதனால் உருவாக்கப்பட்டது? உண்மையைச் சொல்வதென்றால், நிழல் எதனாலும் உருவாக்கப்படவில்லை. எதனாலும் உருவாக்கப்படாத ஒன்றை, இருக்கிறதென்று எப்படிச் சொல்ல முடியும்? ஒளியால் ஊடுருவ முடியாத பொருளின் பகுதியையே நிழல் என்கிறோம். ஆனால், அந்தப் பொருளோ, அதில் படும் ஒளியோ, அதைப் பார்க்கும் நீங்களோ, துகள்களால் உருவாக்கப்பட்டவர்கள். நிஜமாக இருக்கும் ஏதோவோர் அடிப்படைத் துகள்களின் கட்டமைப்பால் உருவானவர்கள். ஒளியை எடுத்துக்கொண்டால், அது போட்டான் (Photon) துகள்களாலானது. போட்டான் துகள்கள் எடையே இல்லாத நுண்ணிய துகள்கள். ஆனால், நிழல் அப்படியானது இல்லை. போட்டான்களின் இல்லாமையிலிருந்து உருவாகியிருக்கிறது. நம் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிவதால் நிழல் இருக்கிறது என்பதை நாம் நம்புகிறோம். ஆனால், அப்படியொன்று உண்மையிலேயே இல்லை. இப்படியான இல்லாமையையும், இருப்பவையும் பற்றியே நாம் பார்க்கப்போகிறோம். இல்லாமையில் இருப்பவையாக ஒளிந்திருக்கும் இது போன்ற உண்மைகளைக் காணலாம் வாருங்கள்.

இரவு வானில் நட்சத்திரங்கள் ஆங்காங்கே மின்னிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள். சிறு புள்ளியாகத் தெரியும் ஒவ்வொரு நட்சத்திரமும், சூரியனைவிடப் பல மடங்கு பெரியது. விண்வெளியில் தெரியும் இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையேயான இடைவெளியை கவனித்திருக்கிறீர்களா? மிகப்பெரிய, இருண்ட பரப்பாகக் காணப்படும். சரியாகக் கவனித்தால், அண்டவெளியே இருளாகத் தெரியும். நட்சத்திரங்கள், நெபுலாக்கள், காலக்ஸிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால், அண்டவெளியின் 5% அளவுதான். மீதி எல்லாமே இருள். பொருள்களற்ற வெறுமையுடன் இருண்டு பரந்திருக்கிறது. எஞ்சிய 95%-ஆக இருக்கும் இருட்டுப் பகுதி நிஜத்தில் வெறுமையானதல்ல. அதன் 27%-ல் கரும்பொருளும் (Dark Matter), 68%-ல் கருஞ்சக்தியும் (Dark Energy) இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அறிவியல் இந்த இரண்டையும் என்னவென்று இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை. அவை இருக்கின்றன என்பது தெரியும். அவற்றால் உருவாகும் விளைவுகளும் தெரியும். ஆனால், அவை என்ன மாதிரியானவை என்பது மட்டும் தெரியவில்லை. நிழல் இருக்கிறது. வெயிலுக்கு இளைப்பாற இடமும் கொடுக்கிறது. ஆனால், அந்த நிழல் என்னவென்று நமக்குத் தெரியாததுபோல, கரும்பொருள், கருஞ்சக்தி இரண்டும் இருக்கின்றன என்று தெரிந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பிக் பாங் வெடிப்பால் விரிந்த பேரண்டம், இந்த நொடிவரை விரிந்துகொண்டேயிருக்கிறது. குறிப்பிட்ட வேகத்தில் அது விரியவில்லை. வேக முடுக்கத்துடன் (Acceleration) விரிகிறது. வேகத்துக்கும், வேக முடுக்கத்துக்குமான வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமென்று நம்புகிறேன். ஒரு வாகனம், மணிக்கு 10 கி.மீ வேகத்துடன் சென்றால், ஒரு மணி கழிந்த பின்னரும் அதன் வேகம் மாறாமல் 10 கி.மீ ஆகத்தான் இருக்கும். ஆனால், ஒரு வாகனம் மணிக்கு 10 கி.மீ/ம வேகமுடுக்கத்தில் சென்றால், ஒவ்வொரு மணிக்கும் அதன் வேகம் பத்துப் பத்தாக அதிகரித்துக்கொண்டு செல்லும். பேரண்டத்தின் வேகமும் ஒவ்வொரு நொடிக்கும் மடங்குகளாக அதிகரித்துக்கொண்டு செல்கிறது. இன்றைய நிலையில், ஒளியின் வேகத்தையும் தாண்டி நம்பவே முடியாத வேகத்துடன் தனது எல்லையை விரித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது பேரண்டம். ஒரு வாகனம் வேகம் பெற வேண்டுமென்றால், அதற்குரிய சக்தியைக் கொடுப்பதற்கு எரிபொருள் தேவை. அதுபோல, பேரண்டம் விரிவடைவதற்கும் ஒரு சக்தி உதவ வேண்டும். பேரண்ட விரிவுக்கான சக்தியைக் கொடுப்பதே கருஞ்சக்தி (Dark energy). பேரண்டம் அதிக வேகத்தில் விரிந்துகொண்டிருப்பதால், அதிலுள்ள காலக்ஸிகள் ஒவ்வொன்றும், ஒன்றையொன்று பிரிந்து விலகிச் செல்கின்றன. இந்தச் செயற்பாடுகள் அனைத்துக்கும் கருஞ்சக்திதான் மூலகாரணமாக இருக்கிறது. ஆனால், கருஞ்சக்தி எப்படித் தொழில்படுகிறது, என்ன வடிவத்தில் இருக்கிறது, எப்படி உருவானது என்பதற்கான எந்த விளக்கமும் நம்மிடம் இல்லை. சிறிதாக இருந்து படிப்படியாக விரிவடைவதால் அண்டத்தில் உருவாகும் புதிய அண்டவெளியை, எப்படிக் கருஞ்சக்தி நிரப்புகிறது என்பதும் இன்றுவரை மர்மமே. கருஞ்சக்தி, ஒரு பொருளா (துகளா) இல்லை வேறொன்றா என்பதும் தெரியவில்லை. பொருளாக இல்லாவிட்டால், வெறுமையாக இருக்கிறது என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும்?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 45 - வெறுமையா... முழுமையா?

கருஞ்சக்தியைப்போல, அண்டவெளியின் 27% அளவில் இருக்கும் கரும்பொருள்களையும் (Dark matter) அறிவியலால் இனம் காணமுடியவில்லை. கரும்சக்தி, காலக்ஸிகளை ஒன்றுடன் ஒன்று தள்ளுகிறதென்றால், காலக்ஸிகளுக்குள் இருக்கும் நட்சத்திரங்களைப் பிரியவிடாமல் ஒன்றுடன் ஒன்று இழுத்துவைத்திருப்பது கரும்பொருளே (Dark Matter). ஈர்ப்புவிசைக்கு இந்தக் கரும்பொருளே காரணமென்றும் நம்புகிறார்கள். இவற்றையும் அறிவியலால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு பொருள் கண்ணுக்குத் தெரிய வேண்டுமென்றால், அதன்மீது ஒளிபட்டுத் தெறிக்க வேண்டும். ஆனால், கரும்பொருள்களில் ஒளிபட்டுத் தெறிக்க முடிவில்லை. அந்த அளவு சிறியவையாக இருப்பதே காரணம். போட்டான் துகள்கள் மிகச்சிறிய நுண்துகள்கள். அந்த போட்டான் துகள்களும் தொட முடியாத அளக்கு இவை மிகச்சிறியவையாக இருக்கின்றன. அதனால், அவை இருக்குமிடம் கறுப்பாகக் காணப்படுகிறது. அவை கறுப்பாக இருப்பதால், ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாமல் இயற்பியலாளர்கள் தவித்துக்கொண்டிருக் கிறார்கள். கரும்பொருள்கள் உண்மையாகவே துகள்களா என்பதுகூடத் தெரியவில்லை. ஆனால், அவை இருக்கின்றன என்பதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். அறிவியலின் மிக முக்கியமான மர்மமாகச் சொல்லப்படுபவை, கருஞ்சக்தி மற்றும் கரும்பொருள் என்னவென்பதுதான். பேரண்டத்தின் மாபெரும் மர்மங்கள் இவை.

கருஞ்சக்தியும், கரும்பொருளும் பேரண்டத்தை நிறைத்திருந்தாலும், மனிதனின் அறிவுக்குள் அகப்படாததால் இல்லாதவையாகவே புரிந்துகொள்ளப்படுகின்றன. அதனாலேயே, பேரண்டம் 95% வெறுமையானது என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியானாலும், அவற்றைக் கண்டுபிடிக்கும் அறிவை மனிதன் வளர்த்துக்கொள்ளும்வரை அவை புரியாத புதிராகவே இருக்கப்போகின்றன. ஆனால், குவான்டம் இயங்கியல் (Quantum Mechanics) இவையனைத்தையும் வேறு பாதையில் திருப்பிவிடுகிறது. நாம் புரிந்துகொண்டிருக்கும் அனைத்தையும் தலைகீழாக மாற்றிச் சொல்ல முயல்கிறது. அறிவியல் என்றாலே, புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டிருப்பதுதான் அல்லவா? ஆச்சர்யங்களை இனிதான் பார்க்கவே போகிறோம். இப்போது சொன்னவை அனைத்தும் அவற்றின் முன்னோட்டங்கள்தான்!

(தேடுவோம்)