மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 47 - டாக்கியான் துப்பாக்கியால் சுடட்டுமா?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

அருமையானதோர் அறிவியல் கோட்பாட்டைச் சுட்டுக் கொல்வதற்கும், பொய்கூறிப் பிழைப்பதற்குமான கருவியாகப் பயன்படுத்துவதாகச் சொல்லியிருக்கிறேன்.

ஒரு பொருளின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, அதற்கான நேரம் சுருங்கிக்கொண்டே வருமென்று ஐன்ஸ்டீன் சொன்னதாக, கடந்த பகுதியில் சொல்லியிருந்தேன். அப்படி வேகம் அதிகரித்து, ஒளியின் வேகத்தை அடையும்போது, நேரம் உறைந்துபோவதாகவும் பார்த்தோம். இன்றுவரையுள்ள அறிவியலின்படி, ஒளியின் வேகத்தில் மனிதனால் பயணம் செய்யவே முடியாது. அதற்குத் தடையாக இருப்பது எடை. எடையுள்ள எந்தப் பொருளுக்கும் ஒளிவேகம் சாத்தியமே இல்லை. அதனால், ஒளியின் வேகத்தில் எடையில்லாத துகள்களால் மட்டுமே இயங்க முடியும். அதற்கு உதாரணமாக, போட்டான் (Photon), கிராவிட்டான் (Graviton), குளுவான் (Gluon) போன்ற எடையில்லாத் துகள்களைச் சொல்லலாம். முழுமையான ஒளியின் வேகம் இல்லாமல், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்துக்கு அண்மையில், மியூவான் (Muon), நியூட்ரினோ (Neutrino) போன்ற துகள்கள் நகர்கின்றன.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 47 - டாக்கியான் துப்பாக்கியால் சுடட்டுமா?

பிரான்ஸ், சுவிஸ் நாடுகளின் எல்லையில், துகள்களை மோதவைத்துப் பரிசோதனை செய்யும், ‘ஹாட்ரான் பெருந்துகள் மோதி’ (Large Hadron Collider) பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். நிலத்தின் கீழ் 170 மீட்டர் ஆழத்தில், 27 கி.மீ வட்டப் பாதையில் குழாய்கள் அமைக்கப்பட்டு, இரு திசைகளிலிருந்தும், ஹாட்ரான் துகள்கள் அனுப்பப்பட்டு மோதவிடப்படுகின்றன. அவை மோதும்போது, பெருவெடிப்பு உருவாகி, பல புதிய துகள்கள் சிதறடிக்கப்படும். அப்படியான புதிய துகள்களைக் கண்டுபிடிப்பதே, ‘LHC’ (Large Hadron Collider)-ன் நோக்கம். அது நூறு நாடுகள் ஒன்று சேர்ந்து அமைத்திருக்கும் ‘CERN’ (European Organization for Nuclear Research) எனும் அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்தப் பெருந்துகள் மோதியூடாக இருபக்கமும் அனுப்பப்படும் ஹாட்ரான் துகள்கள், 99.999999% ஒளியின் வேகத்தில் அந்த வட்டப்பாதையில் சுழலவிடப்பட்டு மோதவிடப்படுகின்றன. ஹாட்ரான் துகள்களை ஒளியின் வேகத்துக்கு அண்மையில் கொண்டுவருவதற்கு அதிக அளவிலான சக்தி தேவைப்படுகிறது. பிரமாண்டமான ஆற்றல் வாய்ந்த காந்தங்கள், அதற்கான சக்தியைப் பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. “அதிகமாக அறிவியல் பேசிவிட்டேனோ? சரி விடுங்கள்... இங்கு நான் சொல்லவந்தது, மனிதனால் ஒளியின் 99.999999% வேகத்தில் துகள்களை இயங்கைவைக்க முடியும்” என்பதைத்தான். ஆனால், அதுகூட 100% ஒளியின் முழுமையான வேகம் கிடையாது. அப்படியென்றால், ‘ஒளியின் வேகத்தை மிஞ்சி, அதிக வேகத்தில் எதுவுமே இயங்குவதில்லையா?’ என்று கேட்டால், ஆச்சர்யமான பதில் கிடைக்கிறது.

ஒளியைவிட அதிக வேகத்தில் பேரண்டம் விரிவடைந்துகொண்டிருக்கிறது என்பதாகக் கணித்திருக்கிறார்கள். ‘அது எப்படி... பேரண்டத்தின் உள்ளேயிருக்கும் எந்தப் பொருளாலும் ஒளியைவிட வேகமாக இயங்கவே முடியாது என்றால், பேரண்டம் எப்படி அந்த வேகத்தில் விரிவடைகிறது?’ என இந்த இடத்தில் உங்களுக்குச் சிறிய தடுமாற்றம் ஏற்படும். நான் முன்னர் கூறியதை மீண்டும் படித்துப் பாருங்கள். பேரண்டத்தின் உள்ளே எந்தப் பொருளாலும் ஒளிவேகத்துக்கு அதிகமாக நகர முடியாது. ஆனால், பேரண்டத்துக்கு வெளியே அந்த விதி செல்லாது. பேரண்டம் தனது எல்லையிலும், தனக்கு வெளியேயும்தான் தன்னை விரிவடையச் செய்கிறது. தன்னைத்தானே ஒளியைவிட அதிக வேகத்தில் விரியவைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், தனக்குள்ளே இருக்கும் எதையும் அந்த வேகத்தை அடைய அனுமதிப்பதில்லை. என்ன புரியவில்லையா? சரி, இந்த உதாரணத்தைப் பாருங்கள். இது மிகச்சரியான ஒப்பீடாக இல்லாவிட்டாலும்கூட, உங்களுக்கு ஒரு புரிதலைக் கொடுக்கும். நீங்கள் தொடருந்து வண்டியொன்றில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். அது 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. வண்டியினுள்ளே பயணிகள் நடக்குமிடத்தில் சிறு குழந்தையொன்று முன்னும் பின்னுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வைச் சரியாகப் பாருங்கள். அந்தக் குழந்தை, தனக்குரிய வேகத்தில் முன்பின் ஓடிக்கொண்டிருக்கலாம். ஆனால், வெளியே தொடருந்து தனக்குரிய வேகத்தில் போய்க்கொண்டிருக்கும். தொடருந்தின் வேகத்தைக் குழந்தையால் நெருங்கவே முடியாது. தொடருந்துக்கு வெளியே இருக்கும் வேகத்தை, அதனுள் இருக்கும் எவராலும் அடைய முடியாது. இதுபோலத்தான் பேரண்டத்தின் வேகமும். அது தன்னை வெளிப்புறமாக ஒளியின் வேகத்தில் விரித்துக்கொண்டே செல்கிறது. இப்போது உங்களுக்கு, “பேரண்டம் ஒளியைவிட அதிக வேகத்தில் விரிந்தால், நமக்கு அருகேயுள்ள நட்சத்திரங்களும், நட்சத்திரக் கூட்டங்களும் நம்மைவிட்டு விலகிச் செல்ல வேண்டுமல்லவா... ஆனால், வானத்திலுள்ள நட்சத்திரங்கள் எப்போதும் அங்கேதான் இருக்கின்றனவே?” எனும் கேள்வி தோன்றியிருந்தால், நீங்கள் ஒரு சிறந்த அவதானி. இதற்கான பதிலைப் பின்னர் சொல்கிறேன். அதற்கு முன் இன்னுமொரு சந்தேகத்தைப் பார்த்துவிடலாம். “ஒருவேளை, ஒளியைவிட அதிக வேகத்தில் பொருளொன்றால் இயங்க முடிந்தால், அது எப்படி நடந்துகொள்ளும்?” இதுவோர் அற்புதமான கேள்வி. அறிவியல், இதன் சாத்தியம் பற்றி நிறையவே சிந்தித்தது. அதன் மூலம் நடக்கக்கூடியவற்றையும் கூறியது. அவை அனைத்தும் நம்ப முடியாத விந்தைகள். ஒளியின் வேகத்துக்கு இத்தனை ஆற்றலா எனத் திகைப்பீர்கள்.

‘ஜெரால்ட் ஃபீன்பெர்க்’ (Gerald Feinberg) எனும் ஜெர்மானிய இயற்பியலாளரால், 1967-ம் ஆண்டு ஓர் ஆராய்ச்சி முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி ‘டாக்கியான்’ (Tachyonic Particles) எனும் துகள்கள் இருக்கலாம் எனவும், அவை எப்போதும் ஒளியின் வேகத்துக்கு அதிக வேகத்திலேயே இயங்கிக்கொண்டிருப்பவை எனவும் சொல்லப்பட்டது. டாக்கியான்கள் ஒளியின் வேகத்துக்குக் குறைந்த வேகத்துக்கு வரவே மாட்டாதவை. இந்தப் புரட்சிகரமான ஆராய்ச்சியிலிருந்து, டாக்கியான்கள் எனும் கற்பனைத் துகள்கள் இருக்கலாம் எனும் முடிவுக்குச் சிலர் வந்தனர். ஐன்ஸ்டீன், ஒளிவேகத்துக்கும் அதிகமாக எதுவும் இயங்க முடியாதென்று சொல்லியிருந்த நிலையில், இப்படியான துகள் இருக்க முடியாது எனவும் சிலர் கருதுகிறார்கள். ஐன்ஸ்டீனின் கூற்றில் டாக்கியானுக்குச் சாதகமான ஓட்டையொன்றும் இருந்தது. எந்தப் பொருளும் தனது வேகத்தை ஒளியின் வேகத்துக்குக் கொண்டு செல்ல முடியாது என்றுதான் ஐன்ஸ்டீன் சொல்லியிருந்தார். அதாவது, ஒளிவேகம் எனும் எல்லைக்கோட்டை எந்தப் பொருளாலும் தாண்ட முடியாது என்றார். ஆனால், பேரண்டம் தோன்றிய ஆரம்பக் கணங்களிலேயே, அப்படியான வேகத்தில் இயங்கக்கூடிய குவான்டம் துகள்கள் உருவாகியிருக்கலாம். அந்தத் துகள்கள் ஒளிவேகம் எனும் எல்லைக்கோட்டைத் தாண்ட வேண்டிய அவசியமே இல்லாதவை. காரணம், அவை ஏற்கெனவே தாண்டிய நிலையிலேயே உருவாகியிருந்தன. அந்தத் துகள்களையே, `டாக்கியான்கள்’ என்கிறோம் என டாக்கியான்களுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள். இன்றுவரை டாக்கியான் துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஹிக் போசான்கள்கூட (Higg Bosons) இருக்கலாம் எனச் சொல்லப்பட்டு, பல தசாப்தங்களின் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டன. அதுபோல, டாக்கியான்களும் இருப்பதாகப் பிரேரரிக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை எதிர்காலத்தில் அவை கண்டுபிடிக்கப்படலாம். அறிவியல் செல்லும் விந்தைநிலையில் எல்லாமே சாத்தியம்தான். ஒருவேளை டாக்கியான் துகள்கள் இருந்தால், என்ன நடக்கும் என்று சொல்கிறேன் கேளுங்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 47 - டாக்கியான் துப்பாக்கியால் சுடட்டுமா?

எதிர்கால மனிதன் டாக்கியான் துகள்களைக் கண்டுபிடிக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தத் துகள்களைக்கொண்டு அவனால் பல பொருள்களை உருவாக்க முடியும். அவை எப்படி இயங்கும் தெரியுமா? ஒரு பேச்சுக்கு, டாக்கியான் துகள்களாலான துப்பாக்கி ஒன்றை நீங்கள் உருவாக்குகிறீர்கள். அதை எடுத்துக்கொண்டு, இந்த மாதிரியான கட்டுரைகளை எழுதும் என்னை மன்னிக்கவே முடியாத கோபத்தில், சுட்டுக்கொல்ல வருகிறீர்கள். பலபேர் இருக்குமிடத்தில், மகாத்மா காந்தியைக் கோட்சே சுட்டதுபோல, கைகளைக் கூப்பியபடி சுடத் தீர்மானிக்கிறீர்கள். ஆனால், அந்தத் துப்பாக்கி டாக்கியான்களால் உருவாக்கப்பட்டதால், நீங்கள் என்னைச் சுடுவதற்கு ஆயத்தப்படுத்துவதற்கு முன்னரே, நான் குண்டடிபட்டுச் செத்துவிழுவேன். காரணம், டாக்கியான்கள் ஒளியைவிட அதிக வேகத்தில் இயங்குவதால், அந்தச் செயல் நடந்ததாக அருகிலிருப்பவர்களுக்குத் தெரிவதற்கு முன்னரே, செயல் நடந்து முடிந்திருக்கும். நீங்கள் சுடுவதற்கு முன்னரே நான் செத்துவிழுவேன். அருகிலிருந்தவர்கள் என்ன நடந்ததென்றே தெரியாமல் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போது, நீங்கள் உங்கள் கூப்பிய கையில் துப்பாக்கியை அழுத்துவீர்கள். அதைக் கவனிக்க யாரும் இருக்கப்போவதில்லை. சுடுவதென்னும் உங்கள் செயலுக்கு முன்னரே, குண்டுபட்ட விளைவு நடந்திருக்கும். இதையெல்லாம் ஏற்கெனவே நீங்கள் அறிந்துவைத்திருந்ததால், அப்படியே துப்பாக்கியை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீடு திரும்புகிறீர்கள். என்னா ஒரு வில்லத்தனம்... நான் கூறியவை உங்களுக்குப் புரிகிறதா? இல்லையென்றால், இன்னுமோர் உதாரணம் சொல்கிறேன்.

டாக்கியான்களால் உருவாக்கப்பட்ட தொலைபேசி ஒன்று என்னிடம் இருக்கிறது. அதன் மூலம் நடப்பதைச் சொல்லும் ஞானியாக என்னைப் பிரபலப்படுத்திக்கொள்கிறேன். உலகமே என் போன்ற முக்காலமும் அறிந்தவன் இல்லையென்று கொண்டாடுகிறது. நான் எப்படிப் பிரபலமானேன்? டாக்கியான் தொலைபேசி இருந்தால், அது மிகச் சுலபமானது. உங்கள் எதிர்காலத்தை அறிவதற்காக, மாலை 5 மணிக்கு என்னைச் சந்திப்பதற்கு வருகிறீர்கள். ஊரிலுள்ள முதல்தர கோடீஸ்வரர் நீங்கள். நானும், எனது நண்பனும் வீட்டின் ஹாலில் உட்கார்ந்திருக்கிறோம். நீங்கள் 5 மணிக்கு வருகிறீர்கள். முன்னால் உங்களை அமரச் சொல்லிவிட்டு, உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் விலாவாரியாகச் சொல்கிறேன். யாருக்குமே தெரியாத, உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தையும் சொல்கிறேன். கழுகார் உங்களை ரகசியமாகப் பேட்டியெடுத்ததையும் சொல்கிறேன். நீங்கள் ஆடிப்போய்விடுகிறீர்கள். “தெய்வமே!” என்று ஆச்சர்யத்தில் உறைந்துபோகிறீர்கள். அப்புறமென்ன, பணமழைதான்.

ஆனால், நடந்தது இதுதான். நீங்கள் 5 மணிக்கு வந்து என் முன்னால் அமர்கிறீர்கள். நான் எதுவும் பேசாமல், உங்கள் விவரம் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறும்படி சைகையால் கைகாட்டுகிறேன். உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும், உங்கள் அந்தரங்க விஷயங்களையும் சொல்கிறீர்கள். அதைக் கேட்டுக்கொண்டிருந்த என் நண்பன் அடுத்த அறைக்குச் சென்று, டாக்கியான் தொலைபேசியில் எனக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறான். நடந்தவை அனைத்தையும் சொல்கிறான். ஆனால், அது டாக்கியான் தொலைபேசி என்பதாலும், அது ஒளியைவிட அதிக வேகத்தில் இயங்குவதாலும், அவன் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் எனக்கு 4:45 மணிக்கே கிடைத்துவிடுகிறது. அதாவது, நீங்கள் என்னிடம் வருவதற்குக் கால் மணி நேரத்துக்கு முன்னரே உங்களைப் பற்றிய அனைத்தையும் நான் அறிந்துவிடுகிறேன். எல்லாம் நீங்கள் உங்கள் வாயால் சொன்னவைதான். பின்னர், நீங்கள் 5 மணிக்கு வந்ததும், பேசுவதற்கு முன்னரே உங்களைப் பற்றிய அனைத்தையும் சொல்கிறேன். நீங்கள் அதிர்ச்சியடைகிறீர்கள். அவை சரிதானா என்று கேட்பதுபோல, உங்களைப் பேசும்படி சைகையால் சொல்கிறேன். நான் சொன்னவை அனைத்தும் சரியானவையே என்பதை நிரூபிக்க மீண்டும் எனக்கு வரிசையாகச் சொல்கிறீர்கள். அப்போது நண்பன் எழுந்து அடுத்த அறைக்குள் செல்கிறான். டாக்கியான் துகள்கள் பற்றி நான் சொன்னவை இப்போதாவது உங்களுக்குப் புரிந்ததா? புரியாவிட்டால் மீண்டும் நிதானமாகப் படியுங்கள். யாருக்குத் தெரியும், எதிர்காலத்தைச் சொல்பவர்களிடம் நிஜமாகவே டாக்கியான் தொலைபேசிகள் இருக்கலாம்.

பார்த்தீர்களா! அருமையானதோர் அறிவியல் கோட்பாட்டைச் சுட்டுக் கொல்வதற்கும், பொய்கூறிப் பிழைப்பதற்குமான கருவியாகப் பயன்படுத்துவதாகச் சொல்லியிருக்கிறேன். இது ரொம்பத் தப்புதான். இதற்காகவே என்னைச் சுடலாம். ஆனாலும், நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒளிவேகத்தின் ஆச்சர்யங்கள் இத்துடன் முடிந்துபோகவில்லை. ஆச்சர்யங்கள் நிறையவே காத்திருக்கின்றன. அவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்...

(தேடுவோம்)