மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 50 - நீர் பற்றி நீயறிவாயா?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

பூமியில் 72 சதவிகிதம் இருப்பது நீர்தான். மனித உடலில் 60 சதவிகிதமாக இருப்பதும் அதுவே

மனிதனுக்கு நீர் எவ்வளவு முக்கியமானது என்பது உங்களுக்குத் தெரியும். அது நிறைவுறக் கிடைக்கும்போது, அதன் அவசியம் புரிவதில்லை. நீரே இல்லாது போனால்? அப்போதுதான் தெரியும் நமக்கு. நீரின்றி அமையாது உணவு; நீரின்றி அமையாது உயிர்; நீரின்றி அமையாது உலகு. தாகம் தீர்க்க, குளிக்க, சுத்தம் செய்ய என்று அன்றாட தேவைக்கெல்லாம் நீர் தேவைப்படுகிறது. நீரைத் தவிர தாகத்துக்கு வேறெதையும் நம்மால் குடிக்கக்கூட முடியாது. அப்படி வேறொன்றைக் குடித்தாலும்கூட அதில் மறைமுகமாக நீர் இருக்கும். உயிரினங்களைக் காப்பாற்றுவதற்கு, இயற்கையே உருவாக்கிக் கொடுத்திருக்கும் அதிசயம் அது. இதுவரை எங்கெல்லாமோ ஒளிந்திருப்பவற்றைப் பற்றியெல்லாம் பேசினோம். இப்போது நீரில் ஒளிந்திருக்கும் ஆச்சர்யத்தைப் பார்க்கப்போகிறோம். “நீரில் என்ன ஆச்சர்யம் ஒளிந்திருக்க முடியும்?” என்றுதானே நினைக்கிறீர்கள். கூடவே வாருங்கள், சும்மா ஜாலியாகப் பார்த்துவிட்டு வரலாம்...

பூமியில் 72 சதவிகிதம் இருப்பது நீர்தான். மனித உடலில் 60 சதவிகிதமாக இருப்பதும் அதுவே. நம் மூளையில் 73%, இதயத்தில் 72%, சுவாசப்பையில் 83%, தோலில் 64%, தசைகளில் 79% என எல்லாமே நீர்தான். எலும்பில்கூட 31 சதவிகிதம் நீர் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் எவரைப் பார்த்தும் இந்தக் கேள்வியைக் கேட்டுப்பாருங்கள். “உன் உடம்பில் ஓடிக்கொண்டிருப்பது என்ன?” உடனே, “ரத்தம்!” என்று பதில் வரும். மனிதனின் உடலில் ஓடிக்கொண்டிருப்பது, நிஜத்தைச் சொன்னால் நீர்தான். மனித ரத்தத்தில் 85% அளவில் நீர் இருக்கிறது. வெறும் 15% ரத்த அணுக்களைக் கொண்டிருப்பதால், ‘ரத்தம்’ என்கிறோம். எஞ்சியிருக்கும் 85% நீரைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. போகட்டும். நீங்கள் மது அருந்துபவரா... ஆமாம் என்றால் இதைத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் வாங்கும் மது பாட்டிலொன்றைக் கையிலெடுத்து, அதில் எழுதியிருப்பதைப் படியுங்கள். அதில், ஆல்கஹாலின் சதவிகிதம் 35% -லிருந்து 40% அளவுவரை இருக்கும். அதன் அர்த்தம், ஆல்கஹால் போக எஞ்சியிருக்கும் 65% முதல் 60% வரை அந்த பாட்டிலில் இருப்பது நீர் மட்டும்தான். அந்த மதுவை, 1,000 ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கியிருந்தால், அதில் 650 ரூபாயை நீருக்காகவே கொடுத்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரிகிறதா... அவ்வளவு விலையான தண்ணீர் நமக்கெதற்கு... என்ன யோசிக்கிறீர்கள்? இதை நான் நகைச்சுவையாகச் சொன்னாலும், இன்று நீரைப் பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இந்த அளவு மக்கள்தொகைப் பெருக்கத்திலும், அத்தனை பேருக்கும் நன்னீரை பூமி வைத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சரியான விதத்தில் பகிர்ந்தெடுத்தால், யாரும் எப்போதும் நீருக்காகக் கஷ்டப்படவே வேண்டியதில்லை.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 50 - நீர் பற்றி நீயறிவாயா?

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் பிரமாண்டமான அளவுகொண்ட நன்னீர்நிலை, கடலடியிலேயே இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பணம் கொடுக்கும், இணையதள வசதியை மேம்படுத்த வேண்டுமென்பதால், கடலடியினூடாகப் பாரியக் குழாய்கள் மூலமாக, விரைவாகச் செய்திகளைக் கடத்தும் வயர்களை (Fiber Obtic Cables) அமெரிக்காவிலிருந்து ஆசியாவரை உலகமெங்கும் அமைத்திருக்கிறார்கள். இதன் மூலம் 10 ட்ரில்லியன் டாலர் பணம், தினமும் வணிகப் பரிமாற்றமாக நிகழ்கிறது. அதுமட்டுமல்ல, ஒரு நாட்டிலிருந்து தொலை தூரமுள்ள வேறு நாடுகளுக்கு ஆழ்கடல் குழாய்கள் மூலம் பெட்ரோலிய எரிபொருள்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. அதன் மூலமும் கோடி கோடியாக டாலர் பரிமாறப்படுகிறது. ஆனால், மனிதனுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் நீரை மட்டும் யாரும் இப்படிக் கொண்டு சென்று இலகுபடுத்துவதில்லை. மாறாக, ஒரு பகுதி கார்ப்பரேட் கம்பெனிகள் (திட்டமிட்டே) தங்கள் கழிவுகளை நன்னீர்நிலைகளில் கலந்துவிட, இன்னுமொரு பகுதி கார்ப்பரேட்டுகள் குளிர்பானங்களுக்கு நிலத்தடி நீரைச் சுரண்டியெடுக்க, மற்றுமொரு பகுதி கார்ப்பரேட் கம்பெனிகள் நன்னீரை பாட்டில்களில் அடைத்து நமக்கே விற்பனை செய்கின்றன. எல்லாமே திட்டமிட்டபடி நடப்பதுபோல. சரி இவற்றையெல்லாம் நாம் பேசப்போனால், அரசியலாகிவிடும். அது நம் நோக்கமுமில்லை. நம் வழியில் நாம் நகர்ந்துவிடலாம் வாருங்கள்.

பொருள்கள் (Matter) ஐந்து பிரதானமான நிலைகளைக் (States) கொண்டவை. அவற்றில் மூன்று நிலைகளை நாம் நன்கு அறிவோம். திண்மம், திரவம், வாயு என்பவையே அவை. அவை தாண்டி, மேலும் இரண்டு நிலைகளும் உண்டு. அந்த இரண்டைப் பற்றியும் இப்போது நாம் மறந்துவிடலாம். நமக்கு முக்கியமானவை, முதல் மூன்று நிலைகள் மட்டுமே. உலகிலுள்ள எந்தப் பொருளை நீங்கள் எடுத்துக்கொண்டாலும், அவை அணுக்களாலும், மூலக்கூறுகளாலும் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும். ஒரு பொருளிலுள்ள மூலக்கூறுகள் அதிகமான இடைவெளியுடன், குறைந்த செறிவுடன் (Dense) இருந்தால், அது வாயு நிலையில் இருக்கும். அதன் மூலக்கூறுகள் சற்று நெருக்கமாக அடுக்கப்படும்போது, திரவநிலைக்கு மாறும். மேலும் மூலக்கூறுகளுக்கிடையே இடைவெளி இல்லாமல், அதிகமான செறிவாகும்போது, அந்தப் பொருள் திண்மமாக மாறுகிறது. இவையெல்லாம் நீங்கள் எட்டாம் வகுப்பிலேயே படித்தவைதான். மூலக்கூறுகளின் செறிவு அதிகரிக்க, எடையும் அதிகரிக்கும். உதாரணத்துக்கு, தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். அதைக் குளிரூட்டியில் வைத்தால், திண்மமாக மாறத் தொடங்கும். அப்படி திடமான தேங்காய் எண்ணெய்க் கட்டியை எடுத்து, திரவமாக இருக்கும் தேங்காய் எண்ணெயில் இட்டீர்களாயின், திண்மக் கட்டி, அதனுள் அமிழ்ந்துவிடும். காரணம், தேங்காய் எண்ணெய், திரவமாக இருப்பதைவிடத் திண்மமாக இருக்கும்போது, அதிக எடை கொண்டதாக இருப்பதுதான். அதுபோலத்தான், பெரும்பாலான பதார்த்தங்களால் உருவான திண்மம், அதன் திரவத்தினுள் அமிழ்ந்து போகும். ஆனால், இந்தப் பொதுவிதிக்கு நீர் மட்டும் விதிவிலக்காக இருக்கிறது. நீருக்கு இந்தத் தன்மை எதிர்மாறாக அமைந்திருக்கிறது. அதுவே, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் வாழ்வாதாரத்துக்கும் உதவியாகிறது.

நீரைக் குளிரவைத்து, அதன் மூலம் பெறப்படும் பனிக்கட்டிகளை (Ice Cubes) நீரினில் இட்டீர்களென்றால், அவை அமிழ்ந்து போக வேண்டும். ஆனால், அவை மிதக்கின்றன. திரவநிலையிலிருந்து இறுக்கமான பனிக்கட்டிகள் மட்டும் எப்படி நீரில் மிதக்கின்றன? இங்குதான் நீருக்கென அற்புதத் தன்மையை இயற்கை கொடுத்திருக்கிறது. அதன் மூலம், பிற உயிர்களும் காப்பாற்றப்படுகின்றன. நீர், திரவமாக இருந்து திண்மமாக மாறும்போது, நீர் மூலக்கூறுகள் (H2O) நெருக்கமாகி, இறுக்கமாகி எடை அதிகரிக்க வேண்டும். ஆனால், நீருக்கு மட்டும் அப்படி நடப்பதில்லை. நீர் மூலக்கூறுகளான H2O, நெருக்கமாக அடுக்கப்படும்போது, நீரில் இருப்பதைவிட மேலும் விலகியிருக்கும் நிலையிலேயே இறுக்கமடைகின்றன. அதனால், நீரிலிருக்கும் மூலக்கூறுகளைவிட, பனிக்கட்டியில் இருக்கும் மூலக்கூறுகள் குறைவாகின்றன. ஒரு கனஅடி நீரில் இருக்கும் H2O மூலக்கூறுகளைவிட, ஒரு கனஅடி பனிக்கட்டியிலிருக்கும் H2O மூலக்கூறுகள் குறைவானவை. இது நீருக்கு இருக்கும் அதிசயமான சிறப்புத்தன்மை. அதனால், பனிக்கட்டியின் எடை, நீரின் எடையைவிடக் குறைவாகிறது. எனவே, பனிக்கட்டி நீரில் மிதக்கிறது. “இதனால் உயிரினங்களுக்கு அப்படி என்ன நன்மை?” என்றுதானே கேட்கிறீர்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 50 - நீர் பற்றி நீயறிவாயா?

ஏனைய பதார்த்தங்களைப்போல, நீரும் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். குளிர்ப் பிரதேசங்களில் இருக்கும் நீர்நிலைகளின் நீரானது, கடுமையான குளிர்காலங்களில் பனிக்கட்டியாக மாறுகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அந்தச் சம்பவங்கள் குளிர்ப் பிரதேசங்களில் மட்டுமே நடப்பதால், அவை பற்றி அதிகம் தெரியாமலும் இருக்கலாம். ஜெர்மனியிலுள்ள மிகப்பெரிய ஏரிகளும், குளங்களும் குளிர்காலங்களில் உறைந்துவிடுகின்றன. கடல்கள்கூட அவ்வப்போது உறைகின்றன. அப்படியான சந்தர்ப்பங்களில், நீர்நிலைகளின் மேற்புறம் திடமான பனிக்கட்டியாகிவிடும். அதன்மேல் மனிதர்கள் நடந்து செல்வார்கள். சறுக்கி விளையாடுவார்கள். அந்த அளவுக்குப் பனிக்கட்டி தடித்த படலமாக உறைந்து திடமாகக் காணப்படும். ஆனால், உறைந்த பனியின் கீழ், நீர் அப்படியே இருக்கும். பனிக்கட்டியில் துளையிட்டு, அதனூடாகத் தூண்டிலைச் செலுத்தி, கீழேயுள்ள மீன்களைப் பிடித்து உண்பது சாதாரணமாக நடக்கும் செயல். ஏரிகளின் மேற்பரப்பில் பனிக்கட்டி உறைந்திருக்க, கீழ்ப்பகுதி நீரில் மீன்கள் வாழ்கின்றன. ஒருவேளை, ஏனைய பதார்த்தங்கள்போல நீர், பனிக்கட்டியாகத் திண்மமானதும், நீரினுள் அமிழ்ந்துபோகுமானால், மேலே நீர் உறைந்து உறைந்து, அவை அடிமட்டம் நோக்கிச் செல்லும். மீண்டும் மேலேயுள்ள நீர் மேலும் உறையும். இப்படித் தொடர்ந்து நடைபெற்றுவந்தால், ஏரி நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்துவிடும். அதனால், அந்த ஏரியில் எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படும். குளிர்காலம் ஒன்றில் நீர்நிலைகளிலுள்ள அனைத்து உயிரினங்களும் இறந்துபோனால், அதன் பின்னர் அங்கு எந்த உயிரினமும் இருக்காது. அதன் பாதிப்பு ஏனைய உயிரினங்களையும் தொடரும். பூமியின் சமநிலையும் குலைக்கப்பட்டு, மொத்த உயிரினங்களும் அழிந்துபோகும். இந்த ஒரே காரணத்தால், நீருக்கு மட்டும் உறையும் நிலைக்கான தன்மையை இயற்கை மாற்றியமைத்துக் கொடுத்திருக்கிறது. அதை இயற்கை என்று சொல்ல விருப்பமில்லை எனில், உங்கள் இறைவன் என்று நீங்கள் சொல்வதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

கடந்த இருபத்தைந்து வாரங்களாக, ‘ஜூனியர் விகடனின்’ ஐம்பது இதழ்களில் உங்களுடன் ஒன்று சேர்ந்து நான் பயணம் செய்திருக்கிறேன். `என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?’ தொடரின் இறுதிப் பகுதி இது. கொரோனாவின் தாக்கத்தின் மத்தியிலும், எனக்கான அங்கீகாரத்தை ‘ஜூனியர் விகடன்’ வாசகர்களாகிய நீங்கள் தந்திருக்கிறீர்கள். தொடரொன்று எழுதுவதற்காக ‘ஜூவி’ என்னை அணுகியபோது, அறிவியல் தொடர் எழுதலாம் என்றுதான் நினைத்தேன். ஜூவி ஆசிரியர் குழுமத்துடன் பேசியதில், ஒரு வித்தியாசமான ‘காக்டெய்ல்’ தொடராக எழுதலாமென்று முடிவானது. விந்தைகளும், மர்மங்களும், புதிர்களுமாக இருந்துவரும் உலகச் சம்பவங்களைக் கலந்து தந்திருக்கிறேன். நீங்களும் உங்கள் முழுமையான ஆதரவைத் தந்திருக்கிறீர்கள். அதற்கு என் நன்றிகள். இத்துடன் இந்தத் தொடர் முடிவடைந்தாலும், வேறொரு சமயத்தில், வேறொரு தளத்தில் உங்களை நான் சந்திக்கலாம். காலம் அதற்கான பதிலைச் சொல்லட்டும். நன்றி!

(நிறைந்தது)

ராஜ்சிவா

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 50 - நீர் பற்றி நீயறிவாயா?

இலங்கையின் கிழக்கு மாகாணமான திருகோணமலையில் பிறந்து, வடக்கு பருத்தித்துறையில் வளர்ந்த இராஜரட்ணம் சிவலிங்கம் என்பவரே பின்னாள்களில் ‘ராஜ்சிவா’ எனும் பெயரில் அறிவியல் எழுத்தாளராகப் பரிணமித்தவர். போராட்ட சூழ்நிலை காரணமாக ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்து, மேற்கல்வியை அங்கு தொடர்ந்தார். தான் புரிந்துகொண்ட அறிவியலை, இலகுவாகத் தமிழில் கொடுக்க வேண்டும் என்பதே அவர் விருப்பம். “உன்னால் அறிவியல் சிக்கல் ஒன்றை இன்னுமொருவருக்குப் புரியவைக்க முடியவில்லையெனில், உனக்கு அது முழுமையாகப் புரியவில்லை என்றே அர்த்த மாகிறது” எனும் ஐன்ஸ்டீனின் கூற்றுதான், இவரின் அறிவியல் எழுத்துக்கு அடித்தளமானது. இதைக் கருத்தில்வைத்து, கடுமையான குவான்டம் இயற்பியலை மிகவும் எளிமையான முறையில் எழுத ஆரம்பித்தார். `எப்போது அழியும் இந்த உலகம்?’, `இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?’, `நிலவில் ஒருவன்’, `இறந்த பின்னும் இருக்கிறோமா?’ ஆகிய நான்கு புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரின் கட்டுரைகள் தமிழகத்தின் பெரும்பாலான இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.