மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - உலகைக் காக்க வந்தவர்களா இவர்கள்? - 6

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

உமையவளின் ஞானப்பாலை உண்ட காரணத்தால், மூன்று வயதான திருஞானசம்பந்தர் தேவாரம் பாடியதாக வரலாறு சொல்கிறது. அந்தக் காலகட்டங்களில் அதுவோர் அதிசய நிகழ்வுதான்

விவாதத்துக்குரிய ஒரு விந்தைத் தகவலுடன் இன்று நாம் சந்திக்கிறோம். 2006-ம் ஆண்டு ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை ஒன்றின் அடிப்படையில் இதை நான் எழுதுகிறேன். இந்தக் கட்டுரை மூலம் எந்தவித மூடநம்பிக்கையையும் உங்களுக்குள் நான் விதைக்கப்போவதில்லை. இங்கு குறிப்பிடுபவை எதுவும் நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவும் எழுதப்படவில்லை. ‘இப்படியெல்லாம் இருக்கின்றன’ என்று சுட்டிக்காட்டுவது மட்டுமே என் நோக்கம். நான் சுட்டிக்காட்டுவதை நம்புவதா, விடுவதா என்பதற்கான முழுச் சுதந்திரமும் உங்களுக்கு உண்டு. நீங்கள் படிக்கப்போகும் இந்தக் கட்டுரையின் தலைப்பான, `Are They Here to Save the World?’ என்பதுகூட, நியூயார்க் டைம்ஸ் கொடுத்ததுதான். செவ்வாய்க் கோளிலிருந்து வந்தவனாகச் சொல்லப்படும் பொரிஸ்காவின் கதை, கடந்த பகுதியுடன் முடிந்துபோனாலும், அவன் கொடுத்த பேட்டிகளின் அடிப்படையில் இது தொடர்கிறது. “நான் செவ்வாயிலிருந்து இங்கு வந்து பிறந்ததுபோல, மேலும் பலர் பூமியில் பிறந்திருக்கிறார்கள்” என்று சொன்னான் பொரிஸ்கா. பின்னர் வேறொரு பேட்டியில், “பூமியில் வாழும் இண்டிகோ சிறுவர்களில் நானும் ஒருவன்” என்றும் சொல்லியிருந்தான். பொரிஸ்கா கூறிய அந்த ‘இண்டிகோ சிறுவர்கள்’ (Indigo Children) யார்... அவர்களுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் என்ன சம்பந்தம்? - இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடியே நமது இன்றைய பயணம் ஆரம்பமாகிறது.

உமையவளின் ஞானப்பாலை உண்ட காரணத்தால், மூன்று வயதான திருஞானசம்பந்தர் தேவாரம் பாடியதாக வரலாறு சொல்கிறது. அந்தக் காலகட்டங்களில் அதுவோர் அதிசய நிகழ்வுதான். மூன்று வயது குழந்தை தேவாரப் பதிகம் பாடுவது என்பது ஆச்சர்யமான செயல்தான். மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பல நூறு ஆண்டுகள் கழிந்துவிட்ட இன்றைய காலத்தில், நம்பவே முடியாத அசாத்தியத் திறமைகளுடன் சில சிறுவர்கள் இருப்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ‘இந்தச் சிறுவயதில் இப்படியெல்லாம் இவர்களால் எப்படிச் செய்ய முடிகிறது?’ என்று வியக்க வைக்குமளவுக்கு, அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். பியானோ வாசிக்கும் சிறுவனாகவோ, டிரம்ஸ் இசைக்கும் குட்டிப் பையனாகவோ, அசத்தலான சித்திரங்களை வரையும் சிறுமியாகவோ உலகின் வெவ்வேறு இடங்களில் வசித்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்ந்த வல்லுநர்களின் திறமைகளைவிட அதிக திறமைகளை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். சரியாகச் சொல்வதானால், சிறப்புக் குழந்தைகள் அவர்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - உலகைக் காக்க வந்தவர்களா இவர்கள்? - 6

உங்கள் வீட்டில்கூட, ஒரு வயதே யாகாத குழந்தையொன்று இருக்கலாம். அதனிடம் உங்கள் மொபைல்போனைக் கொடுத்தால், அதை அன்லாக் செய்வதோடு யூடியூப் வீடியோக் களையும் பார்க்க முயலும். அப்போது, `என் சமத்துக் குட்டி, இந்த வயசுலயே எவ்வளவு கெட்டித்தனம்?’ என்று புளகாங்கிதம் அடைவீர்கள். சில வீடுகளில், பொருள்களையெல்லாம் சிதறடித்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் இன்னொரு குழந்தை இருக்கும். இந்த இரண்டு குழந்தைகளின் நடவடிக்கைகளும் சாதாரணமான குழந்தைகளின் நடவடிக்கைக்கு எதிராக இருக்கும். இந்தக் குழந்தைகள் அதிக அளவிலான ஆற்றல்களை வெளிப்படுத்துபவர்களாக இருப் பார்கள். வளர்ந்து செல்லும் தொழில்நுட்பம், வாழ்க்கை முறை, சூழ்நிலை போன்ற காரணிகளால் இந்த வகைப் பரிணாம வளர்ச்சி குழந்தைகளிடம் உருவாகியிருப்பது சகஜம்தான். ஆனால், இப்படியானவர் களில் வெகுசிலர், ‘இண்டிகோ சிறுவர்கள்’ என்று அறியப்படுகின்றனர். மனநல ஆராய்ச்சியாளர்களில் சிலர்தான் இவர்களை `இண்டிகோ சிறுவர்கள்’ என்று வரையறுத்திருக் கிறார்கள்.

முதன்முதலாக ‘நான்ஸி டேப்பெ’ (Nancy Ann Tappe) எனும் மனநல ஆராய்ச்சியாளர் ஒருவர் ‘இண்டிகோ சிறுவர்கள்’ எனும் பதத்தை, 1970-ம் ஆண்டில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். சில விசேஷமான குணங்களையுடைய சிறுவர்களுக்கு, இந்தப் பெயரைக் கொடுத்தார். சான்டியாகோவில் வசிக்கும் நான்ஸி, மனித மூளையின் அபூர்வச் செயல்பாடுகளை ஆராயும் ஒருவர். தனது ஆராய்ச்சிகளில், மனிதர்களின் உடலைச் சூழ்ந்திருக்கும் ஒளிவட்டத்தை (Aura) விசேஷப் படப்பிடிப்புக் கருவி மூலம் படம்பிடிப்பது அவரது வழக்கம். மஞ்சள், சிவப்பு, நீலம், ஆரஞ்சு போன்ற நிறங்களில் மனிதர்களின் ஆராக்கள் காணப்படுவதை அவர் அவதானித்திருந்தார். அவை சாதாரணமானவையே! ஆனால், விசேஷத் திறமைகொண்ட சில சிறுவர்களைப் படமெடுத்துப் பார்த்தபோது அவர்களின் ஆரா, கருநீல நிறமாக (Indigo Aura) இருப்பதைக் கண்டு வியப் படைந்தார். அதுவரை யாருக்கும் கருநீல நிறத்தில் ஆரா இருக்க வில்லை. யார் யார் விசேஷக் குழந்தைகள் என்று அறியப் பட்டார்களோ, அவர்களின் ஆராக்கள் எல்லாமே ஒரே மாதிரியான கருநீல வெளிச்சத்தில் இருந்தன. இந்த ஆராய்ச்சியைப் பலமுறை, பல இடங்களில், பல சிறுவர்களுக்குச் செய்து பார்த்த பின்னரே அவர் இந்த முடிவுக்கு வந்தார். ‘இண்டிகோ சிறுவர்கள்’ என்னும் பெயரை அந்தச் சிறுவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இண்டிகோ சிறுவர்கள் பற்றிப் பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. அது சார்ந்து பல புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. அதிக அளவிலான புத்திஜீவித்தனம் (I.Q), ஆழமான உள்ளுணர்வு, அதீத தன்னம்பிக்கை, கட்டுப்பாடுகளை எதிர்க்கும் மனப்பான்மை, ஒழுங்குகளுக்கு அடிபணியாமை, மிகையான உடற்செயற்பாடுகள் போன்றவை இண்டிகோ சிறுவர்களின் பொதுவான குணாம்சங்கள். இவற்றுடன் அவர்களுக்கேயுரிய அசாதாரணமான தனித்தன்மையும், திறமைகளும் சேர்ந்து காணப்படும். இந்தவரையில் இண்டிகோ சிறுவர்களின் சிறப்பம்சம் நின்றிருந்தால், அதிக அளவான விமர்சனங்கள் தோன்றியிருக்காது. ஒருசில இண்டிகோ சிறுவர்கள், தங்களை யாரோ வழிநடத்துவதாகச் சொல்கிறார்கள். அத்துடன், `பூமியைக் காப்பாற்ற நாங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறோம்’ என்றும் சொல்கிறார்கள். அவர்களின் உள்மனங்களுடன் யாரோ பேசுவதாகவும் சொல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் மூன்றிலிருந்து ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள். இந்தச் சிறுவர்களால் அந்த அளவுக்குப் பொய்யாகக் கற்பனை செய்து இப்படி உருவாக்கிச் சொல்ல முடியாது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - உலகைக் காக்க வந்தவர்களா இவர்கள்? - 6

உதாரணமாக, ஆஸ்திரேலியாவிலிருக்கும் இரண்டு வயது இண்டிகோ சிறுவனுக்கு நடந்ததைப் பாருங்கள். ஒருநாள் திடீரெனத் தந்தையைப் பார்த்து, “அப்பா! உனக்கு மைக்கேல் ஆஞ்சலோவைத் தெரியுமா?” என்று கேட்டான். தகப்பன் அதைக் கேட்டுப் பயந்தே போய்விட்டார். அடுத்த வீட்டிலிருப்பவர்களையே யாரென்று தெரியாது அவனுக்கு. ஆனால், அவன் என்றுமே கேள்விப்பட்டிராத மைக்கேல் ஆஞ்சலோவின் பெயரை எப்படிச் சொல்ல முடியும்? “உனக்கு அவரை எப்படித் தெரியும்?” என்று தகப்பன் கேட்க, “ரொம்ப ரொம்ப காலத்துக்கு முன்னர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது கொஞ்சம் மறந்துவிட்டேன்” என்றிருக்கிறான். பயத்தில் நிலைகுலைவதைத் தவிர, தகப்பன் என்ன முடிவுக்கு வர முடியும் சொல்லுங்கள்? இது போன்ற சம்பவங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரக்கணக்கில் இண்டிகோ சிறுவர்களின் பெற்றோர்களுக்கு நடந் திருக்கின்றன. ஒவ்வொரு இண்டிகோ சிறுவனுக்கும் இப்படியான ஒரு கதை இருக்கிறது. ஆனாலும், சில மனநல மருத்துவர்கள் இதையெல்லாம் பலமாக மறுக்கிறார்கள். “இந்தக் குழந்தைகளிடம் அப்படி எந்தவொரு விசேஷத் திறமையும் கிடையாது. இவர்கள் `ஹைப்பர் ஆக்டிவிட்டி’ என்னும் கோளாறு கொண்ட சிறுவர்கள், அவ்வளவுதான்” என்று சொல்கிறார்கள்.

“மேலே சொல்லியிருக்கும் அனைத்து குணங்களும், A.D.D (Attention-Deficit Disorder) அல்லது A.D.H.D (Attention Deficit Hyperactivity Disorder) போன்ற கோளாறுகளுக்கான அறிகுறிகளே! தங்கள் குழந்தைகளின் குறைபாடுகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத பெற்றோர்கள், அவர்களுக்கு அதிசய சக்தி இருக்கிறது. அவர்கள் விசேஷக் குழந்தைகள் என்று நம்ப விரும்புகிறார்கள்” என்று அந்த மனநல மருத்துவர்கள் வாதாடுகிறார்கள். இண்டிகோ சிறுவர்களை வகைப்படுத்தும் மனநல ஆராய்ச்சியாளர்கள் ஒருபுறமும், `இல்லை, இவர்கள் A.D.D, A.D.H.D போன்ற கவனக் குறைபாட்டுக் கோளாறு உடையவர்கள்’ எனும் மனநல மருத்துவர்கள் இன்னுமொரு புறமுமாகப் பிரிந்து, இந்தக் குழந்தைகள் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றின் நடுவே, உலகம் முழுவதும் ஐந்து லட்சம் இண்டிகோ சிறுவர்கள் இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள். மற்றவர்கள் காணாததை இண்டிகோ சிறுவர்கள் காண்கிறார்கள். மற்றவர்கள் உணராததை இண்டிகோ சிறுவர்கள் உணர்கிறார்கள். தாங்கள் முன்னர் பார்த்தே அறியாத சம்பவங்கள், இடங்கள் பற்றிப் பேசுகிறார்கள். காணாத நபர்களைப் பற்றித் தெளிவாகச் சொல்கிறார்கள். அனைத்தும் நம்ப முடியாதவையாக இருக்கின்றன. இதை உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கும் என்னால்கூட நம்ப முடியவில்லை. ஆனாலும், இந்தச் சிறுவர்கள் அத்தனை பேரும் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள் என்று சுலபமாகச் சொல்லிவிட்டு நகர முடியவில்லை. இவ்வளவு அசாத்தியத் திறமைகளை அவர்கள் எப்படிப் பெற்றுக்கொண்டார்கள் என்பது மாபெரும் கேள்வியாகவே இருக்கிறது. என்னதான் ஒளிந்திருக்கிறது இவர்களிடம் என்பது மட்டும் தெரியவில்லை.

இண்டிகோ பிள்ளைகள் நம்மிடம் கேட்பது இதைத்தான்: “எங்களை A.D.D மற்றும் A.D.H.D கோளாறுள்ளவர்களாக முத்திரை குத்தாதீர்கள்...தயவுசெய்து, எங்களை `இண்டிகோ சிறுவர்கள்’ என்று முத்திரை குத்தி ஏனைய சிறுவர்களிட மிருந்து தனியாகப் பிரித்து விடாதீர்கள். எந்த முத்திரையும் எங்களுக்குத் தேவையில்லை. சாதாரணக் குழந்தைகள்போலவே நாங்களும் வாழ ஆசைப்படுகிறோம்!”

இதைப் படித்த பிறகு, பலவித விமர்சனம் உங்களுக்குத் தோன்றும். அதற்கு முன் தயவுசெய்து, ‘Indigo Evelution’ என்னும் டாக்குமென்டரிக் காணொளியை ஒரு தடவை பார்த்துவிட்டு விமர்சியுங்கள்.

(தேடுவோம்...)