மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 7 - பால்டிக் கடலடியில் பதுங்கியிருப்பது என்ன?

பால்டிக் கடலடி
பிரீமியம் ஸ்டோரி
News
பால்டிக் கடலடி

மிகப்பெரிய பாய்மரக் கப்பல்களில் பயணங்கள் நடந்திருக்கின்றன. கடல்வழியாகப் பொக்கிஷங்கள் கொண்டு செல்லப்படும்போது, அவற்றைக் கைப்பற்றுவதற்குக் கொள்ளையர் களும் தயாராவது சகஜம்தானே!

பால்டிக் கடல் பற்றி உங்களில் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். ஜெர்மனி உட்பட, ஒன்பது ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளைக் கொண்ட சிறிய கடல். குறிப்பாக, பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான மிகப்பெரிய வளைகுடாவைக்கொண்ட கடல். சிறிய கடல் என்றா சொன்னேன்? இல்லை, சமுத்திரங்களுடன் ஒப்பிடும்போது சிறிய கடல். ஆனால், 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்புகொண்ட கடல் பிரதேசம். முதலாம், இரண்டாம் உலக மகா யுத்தங்கள் நடைபெறுவதற்கு முன்னரான காலங்களில், மன்னராட்சிகள் கொடிகட்டிப் பறந்த நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கான கடற்பகுதியென்றும் சொல்லலாம். உலக நாடுகளைக் கைப்பற்றி, அங்கிருந்து கொள்ளையடித்த விலைமதிப் பில்லாத பொக்கிஷங்களை வணிகத்துக்காகவும், பண்டமாற்றுகளுக்காகவும், பரிசுக்காகவும் கொண்டு செல்வதற்கு இந்த பால்டிக் கடல்வழி பயன்பட்டது.

மிகப்பெரிய பாய்மரக் கப்பல்களில் பயணங்கள் நடந்திருக்கின்றன. கடல்வழியாகப் பொக்கிஷங்கள் கொண்டு செல்லப்படும்போது, அவற்றைக் கைப்பற்றுவதற்குக் கொள்ளையர் களும் தயாராவது சகஜம்தானே! இங்கே கடற்கொள்ளையர்களின் தாக்குதல்களும் அதிகமாகவே நடந்தன. ஒருபுறம் நாடுகளுக்கிடையே யான கடற்போர்கள். மறுபுறம் கடற்கொள்ளையர் களின் தாக்குதல்கள். கூடவே முதலாம், இரண்டாம் உலக யுத்தங்கள் ஆகியவற்றால் பல கப்பல்கள் பால்டிக் கடலில் மூழ்கியிருக்கின்றன. உங்களால் இதை நம்ப முடியுமாவெனத் தெரியவில்லை, ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிறிய, பெரிய கப்பல்கள் பொக்கிஷங்களுடன் இங்கே மூழ்கியிருக்கின்றன. பல கோடிப் பெருமானமுள்ள விலையில்லாப் பொருள்களைத் தன்னுள்ளே அடக்கியபடி சிரித்துக்கொண்டிருக்கிறது பால்டிக். இதைப் புதையல் வேட்டைக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் அட்சய பாத்திரம் என்றும் சொல்வார்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 7 - பால்டிக் கடலடியில் பதுங்கியிருப்பது என்ன?

பல நூற்றாண்டுகளாக இந்தக் கடலில் பயணம் செய்த கப்பல்களின் வரலாறுகள், எங்கெங்கோவெல்லாம் பதிவுகளாக இருக்கின்றன. அவற்றில் ஏற்றிச் சென்ற பொருள்களின் விவரங்களும் பதியப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட விவரங்களைத் தேடிக் கண்டெடுத்து, அந்தக் கப்பல் எந்த இடத்தில் மூழ்கியிருக்கலாம் என்று ஓரளவுக்குக் கணித்தபடி, தனிநபராகவோ, குழுக்களாகவோ அந்தப் புதையலைத் தேடுபவர் களே கடலின் ‘புதையல் வேட்டைக்காரர்கள்’ (Treasure Hunters). பால்டிக் கடலில் புதையல் வேட்டைக்காரர்கள் சற்று அதிகம்தான். வெளிப்படையாகவே தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு புதையலைத் தேடிச் செல்வார்கள். பல நாடுகளுக்கிடையே பால்டிக் கடல் அமைந்திருப் பதால், இதன் கடற்பரப்பு யாருக்கும் சொந்த மானதில்லை. சர்வதேசக் கடல் பகுதியாகவே பார்க்கப்படுகிறது. அங்கு புதையல்களை எவர் கண்டெடுக்கிறாரோ, அவருக்கே அதன் பெரும்பகுதி சொந்தமுமாகிறது.

“அட! இது ரொம்ப நல்ல தொழிலாக இருக்கே!” என்று நீங்கள் அதில் இறங்கிவிட முடியாது. முப்பாட்டன் கொல்லைப்புற இருட்டறையின் ரகசியக் கதவுக்குப் பின்னால் ஒளித்துவைத்திருந்ததைத் திறந்து எடுப்பதுபோல, அவ்வளவு சுலபத்தில் கடல் புதையல்களை எடுத்துவிட முடியாது. கடல் என்பது நிலத்தைப் போலச் சாமானிய இடமுமல்ல. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... 1969-ல் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பியிருக்கிறோம். அன்றிலிருந்து இன்றுவரை, சூரியன் உட்பட பல கோள்களை நோக்கி விண்கலங்களை அனுப்பிவைத்திருக் கிறோம். வாயேஜர் விண்கலங்கள் சூரியக் குடும்ப எல்லையைக்கூடத் தாண்டி வெளியே சென்றுவிட்டன. ஆனால் பூமியில், நமக்கு அருகிலேயே இருக்கும் கடலை நம்மால் சரிவர ஆராய முடியவில்லை. அதிகப்படியாக, 11 கிலோமீட்டர் ஆழமுடன் இருக்கும் கடலுக்குள் போய்வர மனிதன் திணறிப்போகிறான்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 7 - பால்டிக் கடலடியில் பதுங்கியிருப்பது என்ன?

30 மீட்டர்களுக்குக் கீழே கடல் கரிய பிரதேசமாகிவிடும். நீரின் அழுத்தமும், கும்மிருட்டும் கடலை மனிதனிடமிருந்து அந்நியமாக்கிவிட்டன. கடலின் கீழேயிருக்கும் கடலடிப் பிரதேசங்கள் எத்தனை கோடிக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பில் நம்மிடமிருந்து ஒளிந்திருக்கின்றன என்று யோசனை செய்து பாருங்கள். அதன் ஒவ்வொரு மீட்டரிலும் ஏதோவொன்று ஒளிந்திருக்கலாம். அவற்றைக் கண்டுபிடிப்பது மனித இனத்தால் முடியவே முடியாத காரியம். அவ்வப்போது, ஒரு டைட்டானிக்கைத் தேடியோ, அபிஸ் (Abyss) எனும் கடல் ஆழம் தேடியோ கடலின் அடிக்கு மனிதன் சென்று வந்ததோடு சரி. கடலின் 99.99999999 சதவிகித கடலடிப் பகுதியை மனிதன் காணவில்லை என்பதுதான் உண்மை. பால்டிக் கடற்பகுதியும் அப்படியான ஒன்றுதான். குறிப்பிட்டு ஓரிடத்தில் தேடினாலேயொழிய, அந்தக் கடலின் அடியில் என்ன இருக்கிறதென்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். கடலில் புதையல் தேடுபவர்கள்கூட, குறிப்புகளின் அடிப்படையிலேயே அவற்றைத் தேடுகின்றனர்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 7 - பால்டிக் கடலடியில் பதுங்கியிருப்பது என்ன?

புதையல் வேட்டைக்காரர்கள், தங்கள் வாழ்நாளின் மொத்தத்தையும் புதையல் ஒன்றைத் தேடுவதற்காகவே செலவழிப்பவர்கள். எத்தனை ஆண்டுகள் செலவழிகின்றன என்பது அவர்களுக்குப் பிரச்னை கிடையாது. எப்போதாவது ஒரு தடவை, ஒரு புதையல் அகப்பட்டாலே போதுமானது. கோடீஸ்வரர் ஆகிவிடலாம். கதைகளில் கேள்விப்படும் கற்பனைப் புதையல்களை இங்கு நான் சொல்லவில்லை. வரலாற்றில் பதியப்பட்ட நிஜமான புதையல்களைச் சொல்கிறேன். பால்டிக் கடலில் புதையலைத் தேடும் தொழில்முறைச் சுழியோடிகளில், ‘பீட்டர் லிண்ட்பெர்க்’ (Peter Lindberg), ‘டென்னிஸ் ஏஸ்பெர்க்’ (Denis Asberg) ஆகிய இருவரும் ஒரு குழுவாக இணைந்து இயங்குபவர்கள். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர்களின் புதையல் தேடும் குழுவுக்கு, ‘ஓஷன் எக்ஸ்’ (Ocean X) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 7 - பால்டிக் கடலடியில் பதுங்கியிருப்பது என்ன?

ஒருநாள், எதிரொலியால் கடலடியிலிருக்கும் பொருள்களைக் கண்டுபிடிக்கும் சோனார் (Sonar) கருவி பொருத்தப்பட்ட சிறிய கப்பல் மூலம் கடலை ஆராய்ந்துகொண்டிருந்தவர்கள், கப்பலொன்று அமிழ்ந்துபோயிருந்ததைக் கண்டுபிடித்தார்கள். என்றோ மூழ்கிய கப்பல் அது. உடனடியாக நீரில் மூழ்கி, அந்தக் கப்பலுக்குள் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என்று பார்த்தார்கள். அங்கு மூழ்கியிருந்தவையெல்லாமே பாட்டில்கள். நூற்றுக்கணக்கான ஒயின் (Wine) பாட்டில்கள். அனைத்தையும் மேலே கொண்டுவந்து பரிசோதித்துப் பார்த்ததில், 350 ஆண்டுகளுக்கு முன்னரான ஒயின் என்று தெரிந்தது. இப்போதும் பருகக்கூடிய நிலையில் அவை இருந்தன. பாட்டில்கள்தானேயென்று அலட்சியமாக விட்டுவரவில்லை. அந்த ஒவ்வொரு ஒயின் பாட்டிலின் இன்றைய மதிப்பு 21,000 யூரோக்கள். கடற் புதையல்கள் எவ்வளவு அற்புதமானவையென்று புரிகிறதல்லவா? இப்படியான பல கடல் புதையல்களை ‘ஓஷன் எக்ஸ்’ குழுவினர் கண்டெடுத்திருக்கிறார்கள். அதனால், பால்டிக் கடலை ஆராய்வதே அவர்கள் முழுநேரப் பணியானது. இதுவரை படித்துவந்த உங்கள் மனதில், ‘கடல் புதையல் ஒன்றின் மர்மத்தை இவர் நமக்குச் சொல்லப் போகிறார்’ என்றே தோன்றியிருக்கும். ஆனால், இந்த இடத்திலிருந்து நம் திசையே மாறிவிடப்போகிறது. இதுவரை நான் சொல்லியிருந்த மர்மங்களை யெல்லாம் தூக்கியெறியக்கூடிய உச்சமான மர்மம் நோக்கிச் செல்லப்போகிறீர்கள். இனி நான் சொல்லப்போகும் எதுவுமே கற்பனையோ, சந்தேகத்துக்குரியவையோ கிடையாது. கண்முன்னே நடந்த சம்பவங்கள். ஆனால், மிரட்டல் ரகம்...

2011-ம் ஆண்டு, ஜூன் மாதம் 19-ம் தேதியன்று, பால்டிக் கடற்பகுதியில் இருக்கும் ‘ஏலாண்ட்’ (Aland) தீவுக்கு வடக்குப்புறமாகப் புதையலைத் தேடிக்கொண்டிருந்த ஓஷன் எக்ஸ் குழுவுக்கு, மிகப்பெரியதொரு கப்பல் புதைந்திருப்பதாகச் சோனார் கருவி சுட்டிக்காட்டியது. ‘நல்லதொரு வேட்டை இன்றைக்கு’ என்ற மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். ஆனால், அவிழ்க்கவே முடியாத மிகப்பெரிய ஆச்சர்யமொன்றைக் கடலுக்குள் காணப்போகிறார்களென்று அந்தக் கணத்தில் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அடுத்த தினங்களில் உலகம் முழுவதும் அவர்களின் பெயர்களையே உச்சரிக்கப்போகிறது என்பதும் தெரியவில்லை. கடலுக்குள் அமிழ்ந்திருப்பது என்ன வகையான கப்பல் என்பதை சோனார் கருவி மூலம் கணிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்கள். அவர்களுக்குக் கிடைத்த பதிலோ பயங்கரமானது.

60 மீட்டர்கள் விட்டமுடைய வட்ட வடிவமான மிகப்பெரிய பொருளொன்று கடலடியில் இருப்பதாக சோனார் சொன்னது. வட்ட வடிவத்தில் கப்பல்கள் இருப்பதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். கற்பாறையாக இருக்கலாமோ என்று பார்த்தால், இவ்வளவு நேர்த்தியான வட்டத்தில் இயற்கையாகப் பாறைகள் அமைவது அபூர்வத்திலும் அபூர்வம். அத்துடன், 60 மீட்டர் வட்டம் என்பதும் சாதாரண அளவு கிடையாது. கிட்டத்தட்ட ஒரு போயிங் விமானத்தின் நீள அகலம்கொண்ட வட்டப் பொருள். கடல் மட்டத்திலிருந்து சோனார் கருவி மூலம் அதன் விளிம்புகளைக் கணித்தபடி, மையப்பகுதிக்கு மேலே வரும்போது, சோனார் அலைகளில் குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்தன. என்ன பொருள் அதுவென்று சரியாகக் கணிக்க முடியவில்லை. இப்போது இருப்பதைவிடத் துல்லியமாக அளக்கக்கூடிய கருவிகளுடன் வந்தால் மட்டுமே அது எதுவெனத் தெரிந்துகொள்ள முடியும். அதற்குப் பின்னரே, நீரில் மூழ்கி அதை நேரில் கண்டுகொள்ளலாம். அவர்களுக்கு முன்னால் இன்னுமொரு சவாலும் இருந்தது. அதுவரை அவர்கள் கண்டெடுத்த புதையல்கள், சாதாரணமாகவே சுழியோடி மேலே கொண்டுவரக்கூடிய ஆழம் குறைந்த பகுதியிலேயே இருந்தன. ஆனால், இந்தப் பொருள் இருப்பதோ 90 மீட்டர் ஆழத்தில். அவ்வளவு ஆழத்தில் சுழியோடி வெளிவருவதற்குத் தகுதியான நபர்களும் அவர்களுக்குத் தேவைப்பட்டனர். அதனால், அந்த இடத்தைச் சரியாகக் குறித்து வைத்துக்கொண்டு, சகல ஏற்பாடுகளுடன் மீண்டும் வருவதற்காக ஸ்வீடன் நோக்கிச் சென்றார்கள்.

‘என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?’ என்ற கேள்வி மட்டுமே அவர்களின் மனதுக்குள் இருந்தது. உங்களுக்கும் அந்தக் கேள்வி இருக்கிறதல்லவா? அதை அடுத்த பகுதியில் சொல்லட்டுமா?

(தேடுவோம்...)