மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 8 - பால்டிக் கடலடியில் பறக்கும்தட்டா?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

விடிந்ததும், சகல ஏற்பாடு களுடன் அந்த இடம் நோக்கிச் சென்றார்கள். அந்த இடத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமமிருந்தது.

‘பால்டிக் கடலடியில் வட்ட வடிவத்துடன் காணப்படுவது என்ன?’ என்ற கேள்வியுடனேயே வீடு சென்றார்கள், ‘ஓஷன் எக்ஸ்’ குழுவினர். யாருக்கும் தூக்கம் வரவில்லை. `எப்போது விடியும்... என்னதான் அதுவெனப் பார்ப்போம்...’ என்று மனம் துடித்துக்கொண்டேயிருந்தது. புதையலைவிட மேலானதொன்றை நாம் அடையப்போகிறோமென அவர்களின் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது. அந்தப் பொருள் கல்போல இருந்தாலும், கல் அல்லவென்று அனுபவம் சொன்னது. அப்படியென்றால் அது என்ன? “ஒருவேளை அப்படியும் இருக்குமோ...” என்ற சந்தேகமும் தோன்றியது. அந்தச் சந்தேகமே ஒரு பதற்றத்தையும் தோற்றுவித்தது. அனைவரின் மனதிலும் இருந்த அந்தச் சந்தேகம், ‘அது ஒரு பறக்கும்தட்டோ?’ என்பதுதான். நாளைய தினம், நம் சந்தேகங்களைத் தீர்த்துவைத்துவிடும் என்ற நினைப்புடன் தூங்கிப்போனார்கள், அவர்கள் வாழ்க்கையையே அடுத்த நாள் மாற்றப்போவது தெரியாமல்!

விடிந்ததும், சகல ஏற்பாடு களுடன் அந்த இடம் நோக்கிச் சென்றார்கள். அந்த இடத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமமிருந்தது. ஆனாலும், ஒருவழியாக அந்த வட்டப் பொருளின் இடத்தைக் கண்டுகொண்டார்கள். இம்முறை தரமான சோனார் கருவிகளுடன் சென்றதால், மானிட்டர் திரைகளில் அதன் உருவம் தெளிவாகவே தெரிந்தது. கப்பலில் இருந்தபடி, அதை நிதானமாக ஆராய ஆரம்பித்தார்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 8 - பால்டிக் கடலடியில் பறக்கும்தட்டா?

60 மீட்டர் அளவான அந்த பிரமாண்டத்தின் மேற்பரப்பை அங்குலம் அங்குலமாக அளந்தார்கள். மானிட்டர் திரையில் தெரிந்த காட்சிகள், அவர்களைத் திகைக்கவைத்தன. எதுவாக இருக்குமென்று அவர்கள் சந்தேகப்பட்டார்களோ, அதுவாகவே காணப்பட்டது. கடலின் அடித்தளத்தில் அமைதியாக அமர்ந்திருந்தது ஒரு பறக்கும்தட்டு. இல்லை, இல்லை! பறக்கும்தட்டு போன்ற ஏதோவொன்று. இதை அவர்கள் எதிர் பார்க்கவில்லை. கடலில் இறங்கி, ஆழச்சுழியோடி ஆராய்வதாகவே முன்னர் தீர்மானித்திருந்தார்கள். இப்போது, தயக்கமும், ஒருவித பயமும் தோன்றின. ஒருவேளை பறக்கும்தட்டாக இருந்தால், எப்படிக் கீழே போவது? என்ன ஆபத்து காத்திருக்கிறது என்பதே தெரியாமல் போக முடியாது அல்லவா? ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகத் தெரியும். அது பல நூற்றாண்டுகள் பழைமையானது, அதனால் அங்கு உயிருடன் யாரும் இருக்க முடியாது. தெளிவாக ஆராய்ந்துவிட்டுச் சுழியோடிச் செல்லலாம் என நினைத்தார்கள்.

60 மீட்டர் விட்டம்கொண்ட அந்த வட்டப் பொருள், எட்டு மீட்டர் உயரமுடையதாக இருந்தது. ஒரு விளையாட்டு மைதானத்தில் அது நிறுத்தப்பட்டிருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். இரண்டடுக்குகொண்ட இரு வீடுகள் ஒன்று சேர்ந்த உருவத்துடன் அது காணப்படு மல்லவா? அதன் மேற்பகுதியில் பலவித வடிவங்களுடன் துளைகளும், ஹாரிடார் போன்ற அமைப்புகளும், உள்ளே நுழையக்கூடிய துவாரங்களும் காணப்பட்டன. இயற்கையால் ஒருபோதும் உருவாக்க முடியாத சதுரம், வட்டம், நீள் சதுரம், 90 டிகிரி செங்குத்தான திருப்பங்கள் கொண்ட துளைகளே காணப்பட்டன. அவை அனைத்தும் நேர்த்தியான நேர்க்கோடுகளுடனும் இருந்தன. விளிம்புகள் 90 டிகிரியில் வெட்டப் பட்டிருந்தன. மொத்தத்தில் அது தானாக உருவாகியது அல்ல, உருவாக்கப்பட்டது. அதிலிருந்த இன்னோர் ஆச்சர்யம், இடதுபுறக் கீழ்ப்பக்கத்தில் படிகள் போன்ற அமைப்பு காணப்பட்டது. அந்தப் படிகள் ஒவ்வொன்றும் சம அளவுடனும், ஒரே உயரத்துடனும் வெட்டப் பட்டிருந்தன. அதைப் பறக்கும்தட்டு என்று சொல்வதைத் தவிர வேறுவழியே இருக்கவில்லை. இவையனைத்துக்கும் சிகரம் வைத்ததுபோல, அந்தப் பறக்கும்தட்டு, வட்டமான மேடையொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்குமேல், இந்த விஷயத்தை மறைத்துவைப்பது சிக்கலைத் தரும் என்று ஓசன் எக்ஸ் குழுவினர் உணர்ந்து கொண்டார்கள். உலகத்துக்கு வெளிப்படுத்தும் நேரம் வந்ததாக நினைத்தார்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 8 - பால்டிக் கடலடியில் பறக்கும்தட்டா?

ஸ்வீடனைச் சேர்ந்த ஊடகங்களை அழைத்து, தாங்கள் கண்டுபிடித்தவற்றை விளக்கமாகச் சொன்னார்கள். அடுத்த கணமே தீயெனப் பற்றிக்கொண்டது செய்தி. ஆனாலும், அதுவொரு பறக்கும்தட்டு என்பதை அரசுகளோ, அறிவியல் அமைப்புகளோ ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. பறக்கும்தட்டல்ல என்று நிரூபிப்பதற்கான காரணங்களை முன்வைத்தார்கள். ‘கடலடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் அது உருவாகியிருக்கலாம்’, ‘கடலில் விழுந்த விண்கல்லாக இருக்கலாம்’, ‘உலகப் போர்களில் ஈடுபட்ட கப்பல்களின் உடைந்த துண்டாக இருக்கலாம்’ என்னும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அது பறக்கும்தட்டு கிடையாது என்று மறுப்பதே அவர்கள் நோக்கமாக இருந்தது.

ஓஷன் எக்ஸ் குழுவினரும் பலவித நிபுணர்களைச் சந்தித்தார்கள். விஞ்ஞானிகள் சிலரையும் தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள். அந்த விஞ்ஞானிகள் கூறிய கருத்துகள் வேறாக இருந்தன. “இந்தப் பொருளை, பறக்கும்தட்டென்று எங்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும், இது இயற்கையாகவும் உருவாகவில்லை. நிச்சயம் யாரோ உருவாக்கியிருக்கிறார்கள். அது மனிதனா, இல்லையா எனும் கருத்துக்குள் போக விரும்ப வில்லை” என்றார்கள். அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தினார்கள். “பால்டிக் பகுதியில் எரிமலை தோன்றுவதற்கான புவியியல் சான்றுகள் எதுவும் கிடையாது. அவ்வளவு பெரிய விண்கல் விழுந்திருக்கவும் வாய்ப்பில்லை. அந்தப் பெரிய கல் விழுந்திருந்தால், சூழவிருந்த அனைத்து நாடுகளும் அழிந்திருக்கும். 60 மீட்டர் விட்டமான பொருள் உடைந்துவிழும் அளவுக்குப் பெரிய போர்க்கப்பல்கள் உலகப் போரில் பயன்படுத்தப் படவில்லை” என்று சுட்டிக்காட்டினார்கள். அத்துடன், “இயற்கையால் இவ்வளவு நேர்த்தியான வட்ட வடிவப் பொருளையும், 90 டிகிரி கோணங்களையும், நேர்கோட்டு விளிம்புகளையும், செங்குத்தாகக் கீழே இறங்கும் ஹாரிடார் அமைப்புகளையும் உருவாக்கவே முடியாது” என்றார்கள். பறக்கும்தட்டாக இருப்பதற்கே சாத்தியம் அதிகமானது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 8 - பால்டிக் கடலடியில் பறக்கும்தட்டா?

இப்போது நிலைமை இறுகியது. “பால்டிக் கடலில் பறக்கும்தட்டா?” என்று, உலக ஊடகங்கள் அலற ஆரம்பித்தன. எங்கும் இதுவே பேச்சு. வழமைபோல, கேலிகளும் இல்லாமலில்லை. கடலில் இறங்கிப் பரிசோதிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. அதையும் ஓஷன் எக்ஸ் குழுவினர் செய்தார்கள். ‘ஸ்டெஃபான் ஹோகெபோர்ன்’ (Stefan Hogeborn) என்னும் சுழியோடியை அனுப்பிவைத்தார்கள். பறக்கும்தட்டைப் பார்த்துவந்த அவர் கூறிய தகவல்களும் படங்களும் அனைவரையும் வாயடைத்துப் போகவைத்தன. அவர் கூறியவை இவைதான். “கோடைக்காலத்தில் கடல்நீரின் வெப்பநிலை 7°C-யாக இருந்தது. ஆனால், அந்தப் பொருளை அண்மித்து, அதன்மேலே நீந்தும்போது, வெப்பநிலை கடும்குளிராக மாறியது. பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலையை உணர்ந்தேன். ஆனால், அதன் மேற்புறத்தைவிட்டு விலகும்போது, வெப்பநிலை மீண்டும் சாதாரணமான நிலைக்கு வந்தது. அந்தப் பொருளின் மேலே, எலெக்ட்ரானிக் கருவிகள் இயங்க மறுத்தன. ஏதோவொரு கதிர்வீச்சு இருப்பதாகப்பட்டது. விலகிச் சென்றால், அவை மறுபடியும் இயங்க ஆரம்பித்தன. அந்தப் பொருளைத் தொட்டபோது, அந்த இடம் கருமையாக மாறியது. அதுவொரு கான்கிரீட் கட்டடம்போலவே எனக்குத் தெரிந்தது. நீண்டகாலம் இருந்ததால் கல்லாக மாறியிருக்கலாம் அல்லது யாரோ கல்லாக மாற்றிவிட்டுச் சென்றிருக்கலாம். விடைகள் தேடியே போனேன். ஆனால், முன்பைவிட அதிக கேள்விகளுடன் திரும்பி வந்தேன்” என்கிறார் ஸ்டெஃபான். அந்தப் பொருளின் சிறிய துண்டுடனே மேலே வந்தார்.

ஸ்டெபான் கொண்டுவந்த துண்டை ஆராய்ந்து பார்த்ததில், ‘லிமோனைட்’ (Limonite), ‘கோதைய்ட்’ (Goethite) ஆகிய உலோகங்களின் சேர்க்கையால் உருவானதாகவும், 1,40,000 ஆண்டுகள் பழைமையானதாகவும் அது இருந்தது. எதிர்த்தவர்கள் அனைவரும் வாயடைத்துப் போனார்கள். மறுக்கக்கூடிய எந்தக் காரணமும் அவர்களிடம் இருக்கவில்லை. அப்போதுதான் எதிர்பாராத திசையிலிருந்து தாக்குதல் நடந்தது. ஆராய்ச்சிகள் அனைத்தையும் முடக்கிப்போட்டது.

ஃபாக்ஸ் தொலைக்காட்சி (Fox News TV) நிறுவனம், “பால்டிக் கடலடியில் இருப்பது பறக்கும்தட்டல்ல, அது இயற்கையாக உருவானது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஓஷன் எக்ஸ், தங்கள் சொந்த நலனுக்காகப் பெரிதுபடுத்துகிறார்கள்” என்று செய்தி வெளியிட்டது. உலக அளவில் முக்கியச் செய்தி நிறுனங்களில் ஃபாக்ஸும் ஒன்று. எதற்கு அப்படியான செய்தியை வெளியிட்டதென்று ஓஷன் எக்ஸ் குழுவினர் குழம்பினார்கள். அதோடு எல்லாமே முடிந்துபோயின. பாதிக்கப்பட்டவர்கள் ஓஷன் எக்ஸ் குழுவினர் மட்டுமே! அதுவரை 2,20,000 யூரோக்களைச் செலவிட்டு ஆராய்ச்சி செய்திருந்தார்கள். அடுத்த ஆராய்ச்சிகளைத் தொடர்வதற்கான வசதிகளை ஃபாக்ஸ் நிறுனத்தின் செய்தி தடுத்து நிறுத்தியது. கிடைக்கவிருந்த ஸ்பான்சர்கள் கைவிரித்தார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஸ்வீடன் கப்பல்படை, தாங்களே ஆராய்கிறோம் என்று வாக்களித்து, எதுவும் செய்யாமல் கிடப்பில் போட்டது. முயற்சிகளை மட்டும் ஓஷன் எக்ஸ் கைவிடவில்லை. மீண்டும் அந்த இடத்தை ஆராய்ந்தார்கள். அப்போது, அந்த வட்டப் பொருளுக்கு மிக அருகிலேயே இன்னுமொன்றை அவர்கள் கண்டுபிடித்தார்கள். மீண்டும் பறக்கும்தட்டுப் பேச்சுப் பரவ ஆரம்பித்தது. ஓஷன் எக்ஸ் கூறியவை உண்மைதான் என நிரூபிக்கும் சாட்சியானது அது.

பறக்கும்தட்டின் இடத்திலிருந்து 1,500 மீட்டர் தொலைவில், ‘விமான ஓடுபாதை’ (Runway) ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். பெரிய விமானம் கடலடியில் மோதியிறங்கி, அதே வேகத்தில் நேராகச் சென்று நிறுத்தப்பட்டதுபோல அந்த ஓடுபாதை காணப்பட்டது. 300 மீட்டர் நீளமான ஓடுபாதையின் அடையாளம் தெளிவாக இருந்தது. அதன் முடிவுக்குச் சற்றுத் தள்ளி, நேர்த்திசையில் நின்றுகொண்டிருந்தது ஓஷன் எக்ஸ் குழுவினர் கண்டுபிடித்த பறக்கும்தட்டு. அதாவது, அந்தப் பறக்கும்தட்டு, கடலில் இறங்கி 1500 மீட்டர் ஓடி, நிறுத்தப்பட்டதுபோல. இதைப் படிக்கும் உங்களால் வழக்கம்போல நம்ப முடியாமலே இருக்கும். என்னாலும் முழுமையாக நம்ப முடியவில்லை. ஆனால், கிடைத்த தரவுகள் அனைத்தும் உண்மையானவை. 2021-ம் ஆண்டு, தங்கள் புதிய ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கிறது ஓஷன் எக்ஸ். அவர்களின் ஆராய்ச்சிகளுக்குப் பங்களிப்பு செய்வதற்குப் பலர் முன்வந்திருக்கிறார்கள். அந்த ஆராய்ச்சிகளின் முடிவில், மேலும் பல மர்மங்கள் வெளிவரலாம். அதுவரை, ‘என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?’ என்னும் கேள்வியுடன், விளக்கப்படாத மர்மமாகக் கடலடியிலேயே புதைந்திருக்கும் அந்தப் பொருள்!

(தேடுவோம்)