மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 9 - எங்கே ஷெல்லி?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே

டீஜீயாக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட ட்ரில்லியன் தொகையிலான உயிர்கள் பூமியில் அலைந்துகொண்டிருந்தன.

இது நடந்தது, எழுபத்தைந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர். விண்வெளியில் வெகுதொலைவில், ‘டீஜீயாக்’ (Teejeeack) என்னும் கோள் இருந்தது. அதில் வசித்தவர்களும், சூழவிருந்த தொன்னூறு கோள்களில் வசித்தவர்களும் ஒன்றுசேர்ந்து, கூட்டமைப்பொன்றை (Galactic Confederacy) ஏற்படுத்தியிருந்தனர். அந்தக் கோள்களின் கூட்டமைப்பு, தங்கள் அதிபராக ‘ஷீனு’ (Xenu) என்பவரைத் தெரிவு செய்தது. ஷீனு நல்லபடியாக ஆட்சி செய்துவந்தார். அப்போது, டீஜீயாக் கோளில் மக்கள்தொகை பெருகியது. பூமியைக் கண்ணாடியில் பார்ப்பது போன்று அப்படியே இருக்கும் டீஜீயாக். பூமியின் மனிதர்கள்போலவே அங்கும் வாழ்ந்தார்கள். டீஜீயாக்கில், கார்கள், விமானங்கள் அனைத்தும் இருந்தன. மக்கள்தொகை பெருகிய சூழ்நிலையில், ஷீனோ ஒரு முடிவெடுத்தார். அந்த நடவடிக்கைதான் இப்போது பூமியில் வாழும் மனிதர்களின் சாபமாகிப்போனது.

ஷீனோ செய்தது இதுதான். டீஜீயாக்கின் மக்கள் தொகை அதிகரித்ததால், அவர்களில் பாதிப்பேரை உயிருடன் உறையவைத்து, மிகச்சிறிய பொட்டலங் களாக மடித்தார். அந்தப் பொட்டலங்களை, விண்கலங்களில் பூமிக்கு அனுப்பிவைத்தார். அந்த விண்கலங்கள், பூமியிலிருக்கும் ‘DC 8’ ரக விமானங்கள் போல இருந்தன. விண்கலங்களில் கொண்டு வரப்பட்ட டீஜீயாக் உடல் பொட்டலங்கள், பூமியிலிருந்த எரிமலைகளில், ஹைட்ரஜன் குண்டுகளுடன் சேர்த்துப் போடப்பட்டன. அப்போது ஏற்பட்ட வெடிப்பால், உடல்கள் அழிந்தன. ஆனால், அவர்களின் உயிர்களோ இறப்பில்லாதவை. அதனால், அவை பூமியில் அலைந்தன. அவற்றில் பில்லியன் உயிர்களை ஒன்றாகச் சேர்த்துப் பூமியில் மனிதர்களை ஷீனோ உருவாக்கினார். நம்ம பிரம்மாபோல என்று வைத்துக்கொள்ளுங்கள். ``ஹலோ... ஹலோ… எங்கே ஓடுறீங்க? எனக்குப் புரிகிறது. மர்மங்களைச் சொல்கிறேன் பேர்வழியென்று, ‘மார்வெல்’ கதை சொன்னதுபோல இருக்கில்லையா? அவெஞ்சர்ஸையே பார்த்த உங்களுக்கு, அம்புலிமாமா கதையை நான் சொல்கிறேனா?” நம்புங்கள், நான் சொல்வது மர்மம்தான். அதுவும் நிஜமான மர்மம். பொறுமையாகத் தொடர்ந்து படியுங்கள். ‘அட! எங்கேயோ கேட்ட கதைபோல இருக்கே!’ என்றும் தோன்றும். ஆனால் அவற்றுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தொடர்ந்து படியுங்கள்.

லஃபாயெட் ரொனால்டு ஹப்பார்டு
லஃபாயெட் ரொனால்டு ஹப்பார்டு

டீஜீயாக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட ட்ரில்லியன் தொகையிலான உயிர்கள் பூமியில் அலைந்துகொண்டிருந்தன. அவை ‘தேட்டன்’ (Thetan) எனப்படுகின்றன. மரணமற்ற தேட்டன்களை ஒன்றுசேர்த்து, மனிதர்களை உருவாக்கினார் ஷீனோ. மனிதனின் ஒவ்வோர் உறுப்பும், ஒரு தேட்டனால் உருவாக்கப்பட்டது. உதாரணமாக, கைவிரல்களின் ஒவ்வொரு பாகமும், தனித்தனித் தேட்டன் ஆவியாக இருக்கும். ஒவ்வொரு மனிதனும், பில்லியன் கணக்கான தேட்டன்களால் உருவாக்கப்பட்டான். பூமியில் வாழும் மனிதன், மனிதனேயல்ல. பலகோடி தேட்டன்களாலான கூட்டு உயிர். அதனால், மனிதனாகவே மனிதனால் வாழ முடியவில்லை. தேட்டன்களிடமிருந்து அவனுக்கு விடுதலை கிடைக்க வேண்டும். அந்த விடுதலையைக் கொடுப்பதுதான், ‘சயன்டாலஜி’ (Scientology) என்னும் மதம். உலகையே கலங்கடித்த மதம். நம்புங்கள், நான் மேலே சொன்ன கதையின் ஒவ்வோர் எழுத்தும் உண்மையானது. சயன்டாலஜியை உருவாக்கிய, ‘லஃபாயெட் ரொனால்டு ஹப்பார்டு’ (Lafayette Ronald Hubbard) கூறிய கதைதான் இது. இந்தக் கதையை நம்பித்தான், லட்சக்கணக்கில் அமெரிக்க, ஐரோப்பியர்கள், சயன்டாலஜியில் சேர்ந்தார்கள். உலகப் பிரபலங்கள், உயர் மட்டத்தினரில் பலர் சேர்ந்தார்கள். அதிக அளவில் பணமும் சேர ஆரம்பித்தது. `இந்த மார்வெல் கதையை நம்மூர்க் குழந்தையே நம்பாதே, இவர்களெல்லாம் எப்படி நம்பினார்கள்?’ என்றுதானே நினைக்கிறீர்கள். அப்படி நம்பவைக்கும் புத்திசாலித்தனத்தைக் கொண்டிருந்தார் ஹப்பார்டு. சயன்டாலஜியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் ஹப்பார்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்.ரோன் ஹப்பார்டு ஓர் அறிவியல் புனைவெழுத்தாளர். ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியவர். மார்வெல் கதைகள் போலப் பல அறிவியல் புனைவுகள் இவரால் உருவாக்கப்பட்டன. 1950-ல் ‘டயனெடிக்ஸ்’ (Dianetics) என்னும் மன ஆரோக்கியத்துக்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அது கொடுத்த தாக்கத்தால், சயன்டாலஜி மதத்தை 1953-ல் உருவாக்கினார். இவரின் பேச்சுத்திறனில் பலர் மயங்கிப்போனார்கள். குடும்பமாக இணைந்தார்கள். கையிலிருக்கும் பணம் அனைத்தையும் மெல்ல மெல்லப் பறிகொடுத் தார்கள். இணைந்தவர்கள் வெளியே செல்ல முடியாதவாறு வலைகளைப் பின்னிக்கொண்டார் ஹப்பார்டு.

சயன்டாலஜியில் இணைபவர்களை, இ-மீட்டர் (E-meter) என்னும் கருவியுடன் இணைத்து அளக்கிறார்கள். அவர் சிந்திக்கும் போது, இ-மீட்டரின் முள் அங்குமிங்கும் அசையும். அதைக்கொண்டு, ஹப்பார்டு கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதிலை எழுதவைப்பார். மனதிலிருக்கும் அத்தனை உண்மைகளையும் வெளிப்படையாக எழுது வார்கள். அவர்கள் உண்மைகளை எழுதும்போது, உடலிலிருக்கும் தேட்டான் ஆவிகள் விலகிச் செல்லும். முழுமையாகத் தேட்டான்கள் விலக வேண்டுமென்றால், அவர்களின் அந்தரங்கங்கள் அனைத்தையும் எழுத வேண்டும். படிப்படியாக ஹப்பார்டின் வலையில் விழுவார்கள். தங்கள் அந்தரங்கங்களை, அவர்கள் கைப்படவே எழுதிக் கொடுப்பார்கள். அவை ரகசியமாகப் பாதுகாக்கப்படுமென்று வாக்குறுதியளிக்கப்படும். ஆனால், அவர்களை அங்கிருந்து வெளியே செல்லவிடாமல் சிறைவைக்கும் துருப்புச் சீட்டாகவும் அதுவே இருக்கும். மனதிலுள்ள அந்தரங்கங்களை, இ-மீட்டர் மூலம் வெளிப்படுத்தி, உடலிலிருக்கும் அனைத்துத் தேட்டான் ஆவிகளையும் துரத்தி, சுத்தமான மனிதனை உருவாக்குவதுதான் சயன்டாலஜியின் அடிப்படை.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 9 - எங்கே ஷெல்லி?

‘இது என்ன முட்டாள்தனமாக இருக்கிறது?’ என்றுதான் யோசிப்பீர்கள். ஆனால், மந்திரித்த கோழிகள்போல சயன்டாலஜி நோக்கி மக்கள் படையெடுத்ததுதான் நடந்தது. அப்படிச் சென்றவர்களில் முக்கியமானவர், ஹாலிவுட் நடிகரான ஜான் ட்ரவோல்டா. அவர் ஹப்பார்டை முழுமையாக நம்பினார். ‘சாட்டர்டே நைட் ஃபீவர்’ என்னும் திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமாக இருந்த காலமது. அவர் இணைந்ததால், ஹாலிவுட்டில் பலர் இணைந்துகொண்டனர். யாரெல்லாம் சயன்டாலஜியில் இணைந்திருந்தார் களென்று கூகுள் செய்து பார்த்தீர்களென்றால், திகைத்தே போய்விடுவீர்கள். அந்த அளவுக்குப் பல பிரபலங்கள் இணைந்திருந்தார்கள். ஒவ்வோர் இ-மீட்டர் பரிசோதனைக்கும் பல ஆயிரம் டாலர்களைக் கொட்டினார்கள். சில காலம் கழிந்ததும் இழந்த தொகையைக் கணக்கிட்டால், பல லட்சங்களைத் தாண்டியிருக்கும். என்றாவது உண்மை தெரிந்து, வெளியே போக முயன்றால் மிரட்டப்படுவார்கள். ‘அவர்கள் கைப்பட எழுதிக்கொடுத்த உண்மைகளை வெளியிடுவோம்’ என்று பயமுறுத்தப்படு வார்கள். மீடியாக்களுக்கு, மூன்றாம் நபர்கள்போலக் கொடுக்கவும் செய்வார்கள். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. மிகப்பெரிய தொகையொன்றைக் கொடுத்துவிட்டு, ‘எதையும் வெளியே சொல்ல மாட்டேன்’ என உறுதியளித்து வெளியே வரலாம். அதற்குக் கொடுக்கப்படும் பணம் மிகவும் அதிகம். இவை பிரபலங்களுக்கு நடப்பவை. சாதாரண மக்களின் கதியோ தாங்க முடியாதது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 9 - எங்கே ஷெல்லி?

சாதாரணமானவர்கள் சயன்டாலஜியில் இணைந்தால், அம்மாபெரும் ஸ்தாபனத்தின் சகல பணிகளையும் அவர்களே செய்ய வேண்டியவர்களாகிறார்கள். அவை, ஆன்மிகப் பணிகளென்று நம்பவைக்கப்படு கிறார்கள். டாய்லெட் சுத்தமாக்குவதிலிருந்து அனைத்துப் பணிகளையும் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். மறுப்பவர்களுக்கு அதிகபட்சத் தண்டனைகள் அளிக்கப்படும். குடும்பமாக இணைந்தவர்கள், தனித் தனியாகப் பிரிக்கப்படுகிறார்கள். பல ஆண்டுகள் தனித்தனியாகப் பிரிந்தே ஆன்மிகத்தை வளர்ப்பார்கள். இதை எதிர்த்துக் கேள்வி கேட்டால், கைப்பட எழுதிக் கொடுத்திருக்கும் அந்தரங்கங்கள் வெளியே வருமென்று அச்சுறுத்தப் படுவார்கள். எப்படி எதிர்க்க முடியும்? வாழ்நாள் முழுவதும் அங்கேயே தொலைந்து விடும். பலர் காணாமலும் போனார்கள். என்ன நடந்தது எனும் உண்மையும் தெரிய வராது. பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களும், பெற்றோரைப் பறிகொடுத்த பிள்ளைகளும், கணவனைப் பிரிந்த மனைவியுமாகப் பலர் இன்றும் கதறிக்கொண்டிருக்கிறார்கள். “அமெரிக்காவிலா இப்படியெல்லாம் நடக்கிறது?” என்று ஆச்சர்யப்படுவீர்கள். 1986-ல் ஹப்பார்டு இறந்தார். அதன் பிறகு, ‘டேவிட் மிஸ்காவிஜ்’ (David Miscavige) தலைமைப் பொறுப் பேற்றார். நிலைமை மேலும் மோசமானது.

வருமானத்துக்கான வரித்தொகை மட்டும், ஒரு பில்லியன் டாலருக்கு அதிகமாகக் கட்ட வேண்டும் என்று அரசு தொடுத்த வழக்கில், மத ஸ்தாபனமென்று நிரூபித்து, வரிக்கான விலக்கைப் பெற்றுக் கொண்டது சயன்டாலஜி. வரியே ஒரு பில்லியனுக்கு அதிகமென்றால், மொத்தச் சொத்தின் மதிப்பை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள். இன்றையநிலையில், பல பில்லியன்கள் ரியல் எஸ்டேட்டைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக சயன்டாலஜி இருக்கிறது. டேவிட் மிஸ்காவிஜ் பொறுப்பேற்ற பின்னர், சயன்டாலஜிக்கு மாபெரும் அதிர்ஷ்டம் அடித்தது. அந்த அதிர்ஷ்டம் வேறொன்றுமில்லை. ‘டாம் குரூஸ்’ (Tom Gruise) எனும் பட்டையைக் கிளப்பும் ஹாலிவுட் நடிகர்தான். மிகப்பெரிய மனிதாபிமானமுடைய மனிதராகத் திகழும் டாம் குரூஸ், சயன்டாலஜியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதற்கு முன்னர் சேர்ந்த, ஜான் ட்ரவோல்டா உட்பட பல ஹாலிவுட் நடிகர்கள் விலகிக்கொண்ட நிலையில், டாம் குரூஸ் இணைந்தது பலரை முகம் சுளிக்க வைத்தது. படிப்படியாகச் சயன்டாலஜியின் இறங்குமுகம் ஆரம்பமான நேரமது. எதிர்ப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதுடன், மர்மமாகக் காணாமல் போகிறார்களென்று உலகம் பூராவும் சந்தேகப்பட ஆரம்பித்தது. எது நடந்தாலும் பரவாயில்லை என்று பலர் பிரிந்து செல்லவும் ஆரம்பித்தார்கள். பிரிந்து சென்றவர்களில் ‘ஹனா விட்ஃபீல்டு’ (Hana Whitfield) என்பவரும், பிரபல நடிகை ‘லியா ரெமினி’யும் (Leah Remini) முக்கியமானவர்கள். அங்கு நடந்தவற்றைப் புட்டுப் புட்டு வைத்தார்கள். அவர்களையும் சயன்டாலஜி விட்டுவைக்கவில்லை. பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தது. ஆனாலும், இருவரும் சளைக்கவில்லை. இவர்களுடன் பல பிரபலங்களும் இணைந்தார்கள். மெல்ல சயன்டாலஜியின் முக்கியத்துவம் குறைந்துபோனது. டாம் குரூஸ் மட்டும் இன்றுவரை அங்கு பிடிவாதமாக இருக்கிறார்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 9 - எங்கே ஷெல்லி?

நம்பவே முடியாத மர்மங்களின் இருப்பிடமாகச் சயன்டாலஜி இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கட்டுரைக்கு, `எங்கே ஷெல்லி?’ எனத் தலைப் பிட்டிருந்தும், இதுவரை யாரந்த ஷெல்லியென்று நீங்கள் அறியவில்லை. ஷெல்லி வேறு யாருமில்லை. இன்று சயன்டாலஜியின் தலைமைப் பொறுப்பி லிருக்கும், டேவிட் மிஸ்காவிஜ்ஜின் மனைவிதான்!

டேவிட்கூடவே இருந்து, சயன்டாலஜிக்குப் பணியாற்றிய, ‘ஷெல்லி மிஸ்காவிஜ்’ (Shelly Miscavige), திடீரென ஒருநாள் காணாமல்போனார். 2005-ம் ஆண்டுக்குப் பிறகு எங்கும் ஷெல்லியைக் காணவில்லை. 2006-ம் ஆண்டு சயன்டாலஜியில் நடைபெற்ற டாம் குரூஸின் திருமணத்தில், ஷெல்லியை எங்கும் காணாதது, பலருக்கு ஆச்சர்யமளித்தது. இன்றுவரை அவர் எங்கேயென்று யாருக்கும் தெரியாது. என்ன ஒளிந்திருக்கிறது அங்கே என்பதும் தெரியவில்லை.

“என் மருமகளைக் கண்டுபிடித்துத் தாருங்கள்” என்று கேட்பவர் வேறு யாருமில்லை, டேவிட் மிஸ்காவிஜ்ஜின் தந்தையான, ரொனால்டு மிஸ்காவிஜ்ஜேதான். சிறையிலிருந்து தப்பிச் செல்லும் கைதிபோல, திட்டமிட்டுத் தந்திரமாகச் சயன்டாலஜி யிலிருந்து தப்பியவர்தான் ரொனால்டு மிஸ்காவிஜ்!

(தேடுவோம்)