மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 1

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?

புதிய தொடர்

படிப்பதற்கு முன் எனக்காக ஒரு நிமிடம்.

ஜூனியர் விகடன் வாசகர்களான உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அடிப்படையில் நானோர் அறிவியல் எழுத்தாளன். உங்களில் சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கலாம். பலர் அறியாமல் இருக்கலாம். தற்சமயம் ஜெர்மனியில் வசிக்கிறேன். அறிவியலைத் தொடர்ச்சியாக எழுதிவந்த நிலையில், ஒரு மாற்றம் எனக்குத் தேவைப்பட்டது. ஏன் வித்தியாசமான விஷயங்களை எழுதக் கூடாது...’ என்று தோன்றியது. அந்த நேரத்தில்தான், ஜூ.வி-யில் இந்தத் தொடரை எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. இந்தத் தொடரில், உலகில் நடந்த விந்தைகள் மற்றும் மர்மச் சம்பவங்களைப் பற்றி எழுதவிருக்கிறேன். குறிப்பாக, அப்படியான சம்பவங்களில், ‘என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?’ என்பதைத் தெளிவாக உங்களுக்குத் தருகிறேன். படித்த பிறகு அவற்றின் உண்மைத் தன்மையைப் பற்றி நீங்களே முடிவெடுக்கலாம். வாருங்கள்... அந்தச் சம்பவங்களுக்குள் சேர்ந்தே பயணிக்கலாம்!

அந்தத் திருடன் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே பிடிபட்டான். பாரிஸ் நகரில் திருடியதை, இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகரில் விற்பனை செய்ய முயன்றபோது அவன் பிடிபட்டான். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த திருட்டுச் சம்பவம் அது. இப்போதுபோல கண்காணிப்புக் கேமராக்களோ, அதிநவீன பாதுகாப்பு முறைகளோ இல்லாத காலம். ஆனாலும், அந்தக் காலத்துக்கேற்ப பலத்த பாதுகாப்புடன்தான் அந்தப் பொருள் வைக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் மிகத்திறமையான முறையில் அதைத் திருடியிருந்தான். யார் அந்தத் திருடன்... அப்படி எந்தப் பொருளைத்தான் அவன் திருடினான்? சொல்கிறேன்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 1

1911-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பாரிஸ் நகரின் ‘லூவ்ரெ’ (Louvre) அருங்காட்சியகத்திலிருந்து மிகவும் பெருமதிப்பு வாய்ந்த ஓவியமொன்று களவாடப்பட்டது. வெறும் 77 செ.மீ உயரமும், 53 செ.மீ அகலமும்கொண்ட சிறிய ஓவியம்தான் என்றாலும், உலகின் விலையுயர்ந்த ஓவியங்களில் முன்னணியில் இருந்தது அது. எந்த ஓவியம் என்பதை இப்போது உங்களில் சிலர் புரிந்துகொண்டிருக்கலாம். ஆம்! ‘லியோனார்டோ டா வின்சி’ என்னும் அற்புதக் கலைஞன் உருவாக்கிய, ‘மோனலிசா’ ஓவியம்தான் அது. 1962-ம் ஆண்டிலேயே, 100 மில்லியன் டாலருக்குக் காப்புறுதி செய்யப்பட்டிருந்தது அந்த ஓவியம். இன்றுள்ள பணமாற்று மதிப்புக்கு அதன் காப்புறுதித் தொகை மட்டுமே 850 மில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.

சரியாகக் கவனியுங்கள்... அதன் விலை 850 மில்லியன் டாலர் அல்ல; காப்புறுதித் தொகையே 850 மில்லியன் டாலர். அந்த ஓவியம் பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமானதால், விற்பனைக்குரியதல்ல. அதனால், அதன் விலை மதிப்பிட முடியாதது. ஒருவேளை அந்த ஓவியம் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஒரு பில்லியன் டாலருக்கு அதிகமாகவே விலைபோகும். அந்த அளவுக்கு மதிப்பு வாய்ந்த ஓவியத்தைத்தான், ஒரு சாதாரண மனிதன் களவாடியிருந்தான்.

லூவ்ரெ அருங்காட்சியகத்துக்குச் செப்பனிடும் பணிக்காக, ‘வின்சென்ஸோ பெரூட்ஜா’ (Vincenzo Peruggia) என்பவன் வந்திருந்தான். பணிக்காகத்தான் வந்தானென்றே அங்குள்ளவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவன், ‘மோனலிசா’ ஓவியத்தைத் திருடவே வந்தான் என்பது பின்னர்தான் தெரிந்தது. ஒருநாள் மாலை, அருங்காட்சியகப் பணிகள் முடிந்து அனைவரும் வெளியேறியபோது, வின்சென்ஸோ மட்டும் வெளியே செல்லாமல், டாய்லெட்டுக்குள் ஒளிந்துகொண்டான். அனைவரும் வெளியே சென்றதும், அருங்காட்சியகம் பூட்டப்பட்டு, தேவையற்ற விளக்குகள் அணைக்கப்பட்டன. நள்ளிரவில் நிதானமாக வெளியே வந்து, சுவரில் மாட்டப்பட்டிருந்த ‘மோனலிசா’ ஓவியத்தை அதன் சட்டகத்திலிருந்து பிரித்தெடுத்து, ஒரு துணியால் சுற்றியெடுத்து மறுபடியும் டாய்லெட்டுக்குள் ஒளிந்துகொண்டான்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 1

எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் விடியும்வரை காத்திருந்தான். காலையில் வழமைபோலப் பார்வையாளர்கள் வருகை ஆரம்பித்ததும், மெள்ள வெளியேறினான். கூடவே, உலகின் விலைமதிப்பற்ற ஓவியமும் வெளியேறியது. இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், அன்று மாலைவரை ‘மோனலிசா’ திருடப்பட்டாள் என்பதை யாரும் கவனிக்கவில்லை. அடுத்த நாள் பாரிஸே கலவரப்பட்டது. திருட்டுப்போன செய்தி, உலகெங்கும் கொரோனா வைரஸ்போலப் பரவியது. மோனலிசாவைத் தெரியாதவர்க ளெல்லாம் அவளைப் பற்றியே பேசினார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தத் தடயமுமில்லாமல் மறைந்துபோனாள் லிசா.

மேலே தொடர்வதற்கு முன்னர், ‘மோனலிசா’ பற்றிய சில தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பழைய இத்தாலி மொழிப் பயன்பாட்டில், ‘மோனா’ (Mona) என்றால் ‘அம்மணி’ (Lady) என்று அர்த்தம். ‘லிசா’ என்னும் பெயருடைய உயர்தரக் குடும்பப் பெண், ‘மோனலிசா.’ 1503-ம் ஆண்டில் ‘ஃபிரான்செஸ்கோ டெல் ஜொகொண்டோ’ (Francesco del Geocondo) என்னும் பட்டு வியாபாரி ஒருவர், லியோனார்டோ டா வின்சியைச் சந்தித்தார். கர்ப்பமாக இருந்த தன் மனைவி லிசாவை, ஓவியமாக வரைந்து தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டார். சாதாரணமாக அரச குடும்பத்தவர்களுடனும், கிறிஸ்தவ மத உயர் பீடங்களுடனும் மட்டுமே தொடர்புடையவராக இருந்த லியோனார்டோ, அந்த வியாபாரியின் மனைவி லிசாவின் ஓவியத்தை வரைந்து கொடுப்பதற்குச் சம்மதித்தார். அதன்படி, வரைந்தும் முடித்தார். அப்போது லிசாவுக்கு வயது 24.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 1

லியோனார்டோவின் நண்பரும், அவரின் பல செயல்களுக்குச் சாட்சியுமாயிருந்த ஒருவரின் மகனான ‘ஜோர்ஜியோ வசாரி’ என்பவர் இவை அனைத்தையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். எனவே, ‘மோனலிசா’ ஓவியத்துக்குச் சொந்தமான பெண்மணி, ‘லிசா டெல் ஜொகொண்டோ’

(Lisa del geocondo) என்பவர்தான் என்பது உறுதியாகிறது. அந்த லிசாதான் இன்று லூவ்ரெ அருங்காட்சியகத்தில், குண்டு துளைக்க முடியாத கண்ணாடிகளுக்குப் பின்னால், கள்ளச் சிரிப்புச் சிரித்துக்கொண்டிருக்கிறாள்.

களவுபோன லிசா, எப்படித் திருப்பிக் கிடைத்தாள்? சொல்கிறேன். ஆனால், நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பியது, மோனலிசா திருட்டுப்போனது பற்றியோ, அவள் யாரென்று சொல்வது பற்றியோ அல்ல. இவையெல்லாம் தாண்டி நடந்த வேறொரு விந்தையைச் சொல்வதே என் நோக்கம்!

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 1

லூவ்ரெ அருங்காட்சியகத்திலிருந்து களவுபோன ‘மோனலிசா’ ஓவியம் என்ன ஆனதென்றே அடுத்த இரண்டு ஆண்டுகள் யாருக்கும் தெரியவில்லை. உலக ஊடகங்களெல்லாம் பேசிப் பேசிக் களைத்து ஓய்ந்தன. ஆனால், அந்தக் காலகட்டங்களில் ஒரு சிலர் மட்டும் ஏதோ ஒரு வரவுக்காகக் காத்திருந்தார்கள். களவாடப்பட்ட சிலைகள், ஓவியங்கள், நுண்கலைப் பொருள்களை ரகசியச் சந்தையில் வாங்கும் நபர்கள்தான் அவர்கள். இங்கிலாந்தில் வசிக்கும் ‘ஹியூ பிளாக்கர்’ (Hugh Blacker) என்பவருக்கு, அந்தச் சமயத்தில் புதிரான அழைப்பொன்று வந்தது. அவரைத் தொடர்புகொண்டவர், ‘மோனலிசா’ ஓவியம் தன்னிடம் இருப்பதாகவும், அதை விற்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

உடனடியாக அவர்கள் கூறிய இடத்துக்கு ஹியூ விரைந்தார். லூவ்ரெ அருங்காட்சியகத்தில் களவாடப்பட்ட ஓவியம்தான் அதுவென்று புரிந்துகொண்டார். அவ்வளவு சுலபத்தில் ஜாக்பாட் அடிக்குமென்று அவர் நினைக்கவில்லை. ரகசிய இடமொன்றில் வைத்து ஹியூவின் கையில் ‘மோனலிசா’ ஓவியம் கொடுக்கப்பட்டது. அதைப் பார்த்ததும் மிகவும் குழம்பிப்போனார். மோனலிசா ஓவியம்தான். அச்சு அசலாக அப்படியேதான் இருந்தது. ஆனாலும், அந்த ஓவியத்தில் இருக்கும் லிசாவின் முகம் சற்று இளமையாக இருப்பதுபோல அவருக்குத் தோன்றியது. உடலமைப்பு, கைகள், அளவுப் பரிமாணங்கள் எல்லாமே ஒத்திருந்தாலும், முகம் மட்டும் இளமையாகக் காணப்பட்டது. அந்த இளமையான முகமும் மோனலிசாவுடையது என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை. இன்னுமொரு வித்தியாசத்தையும் அவர் கண்டார். அந்த ஓவியத்தின் பின்னணிகள் முழுமையாக்கப்படாமல் விடப்பட்டிருந்தன. அதனால், இது லூவ்ரெ மோனலிசா ஓவியமல்ல என்பதை உறுதிசெய்துகொண்டார். ஓவியக் கலையிலும், பழம்பொருள்கள் வியாபாரத்திலும் அனுபவமுள்ள ஹியூவால், அனைத்தையும் சில நொடிகளிலேயே மதிப்பிட முடிந்தது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 1

நிஜ மோனலிசா ஓவியத்தைப் பார்த்து, எவராவது வரைந்த ஓவியமாக இது இருக்கலாமோ என்றும் சிந்தித்தார். ‘அப்படி இருக்காது’ என்று அவரின் உள்மனம் சொல்லியது. இதையும் லியோனார்டோவே வரைந்திருக்க வேண்டுமென்று முழுமையாக நம்பினார். அதனால், எந்தவிதத் தயக்கமுமின்றி அதை வாங்கிக் கொண்டார். ‘ஐஸல்வேர்த் மோன லிசா’ (Isleworth Mona Lisa) என்ற பெயரில் அழைக்கப்படப் போகும் அந்த ஓவியத்தைப் பொக்கிஷமாகப் பூட்டி வைத்துக் கொண்டார். அதன் பின்னர், திருடப்பட்ட லூவ்ரெ மோனலிசா வும் கண்டுபிடிக்கப்பட்டாள்.

திருடப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இத்தாலியிலுள்ள ஃபுளோரன்ஸ் நகரில் ‘மோனலிசா’ ஓவியத்தை விற்க முயன்றபோது ‘வின்சென்ஸோ பெரூட்ஜா’ பிடிபட்டான். “ஏன் விலைமதிப்பற்ற அந்தப் பொக்கிஷத்தைத் திருடினாய்?” என்று கேட்டபோது, “இத்தாலிக்குச் சொந்தமான பொருள், பிரான்ஸில் இருப்பதை நான் விரும்பவில்லை. அதனால், அதைத் திருடி இத்தாலிக்கே கொண்டு வந்தேன்” என்று பதிலளித்தான். மீட்கப்பட்ட ஓவியம் லூவ்ரெ அருங்காட்சியகத் துக்குக் கொண்டுவரப்பட்டது. அந்த நேரத்தில்தான் இரட்டை மோனலிசாவின் பிரச்னையைக் கொண்டுவந்தார் ‘ஹியூ பிளாக்கர்.’ தன்னிடமிருக்கும் ‘மோனலிசா’ ஓவியத்தை வரைந்ததும் லியோனார்டோ டா வின்சியேதான் என்று அறிவித்தார். அதைப் பரிசோதனையிடவும் அனுமதியளித்தார்.

அப்போது பல கேள்விகள் எழுந்தன. ஒரே ஓவியத்தை எதற்காக லியோனார்டோ இரு முறை வரைய வேண்டும்? இரு முறை வரைந்தாலும் ஒன்றின் முகம் எப்படி இளமையாக இருக்க முடியும்... லிசாவுக்கு இளமையான இரட்டைச் சகோதரி இருந்தாளா... இரண்டையும் ஒருவரே வரைந்திருந்தால், ஓவியத்தின் பின்னணி ஏன் முழுமையாக்கப்படவில்லை... இப்படியான கேள்விகள் குழப்பத்தை உருவாக்கின. இந்த ஓவியமும் லியோனார்டோவால்தான் வரையப்பட்டது என்பதைப் பலராலும் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில், உலகின் அதிக மதிப்புவாய்ந்த ஓவியங்களில் இதுவும் ஒன்றாகிவிடும். லியோனார்டோ டா வின்சி வரைந்த ஓவியங்கள் அனைத்தும் விலைமதிப்பற்றவை. இந்த இரட்டை மோனலிசாவையும் அவரே வரைந்தாரென்றால், அதன் மதிப்பும் உச்சத்தில்தான் இருக்கும். அதனால், சுலபத்தில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது வேறு யாரோ வரைந்த நகல்தான் என்றே கருதினார்கள்.

அதனால், கார்பன் தேதிப் பரிசோதனை முதல் பலவிதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்தும் ஐஸெல்வேர்த் மோனலிசா காலத்தாலும், கருவிகளாலும், பயன்படுத்தப்பட்ட மைகளாலும், லியோனார்டோ டாவின்சியின் சித்திரக் கூடத்திலேயே உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தின. அப்போதும், ‘அவரின் மாணவர்களில் யாராவது ஒருவர் வரைந்திருக்கலாமல்லவா?’ என்னும் கருத்தும் சொல்லப்பட்டது.

இறுதியாக, நவீன இயற்பியலின் உதவி நாடப்பட்டது. இரண்டு ஓவியங்களும் கணினிப் படங்களாக உள்ளீடு செய்யப்பட்டன. பின்னர் ஒவ்வொரு பிக்ஸலாக ஒப்பீடு செய்யப்பட்டது. ஒன்றுடன் ஒன்று பொருத்தப்பட்டும் சரிபார்க்கப்பட்டன. முடிவு ஆச்சர்யமானதாக இருந்தது. இரண்டு ஓவியங்களுமே ஒரே நபரால்தான் வரையப்பட்டிருக்கின்றன என்று முடிவு தெரிவித்தது. அளவீடுகள், வரையும் முறை, வரைவதற்கான பரிமாண இடைவெளிகள், நிறங்களின் சேர்க்கை என அனைத்தும் ஒரே மாதிரியாகவே அமைந்திருந்தன. இரண்டையும் வரைந்தவர் ஒருவரே என முடிவானது. அந்த ஒருவர் லியோனார்டோ டா வின்சியேதான்.

‘மோனலிசா’ அவரது 24 வயதில் கர்ப்பமாக இருந்தபோது வரையப்பட்ட ஓவியத்தை முழுமையாக வரைய முடியாத நிலையில், ஏதோவொரு காரணத்தால் வேறெங்கோ செல்ல வேண்டிய சூழ்நிலை லியோனார்டோவுக்கு ஏற்பட்டிருக்கலாம்; அப்போது அந்த ஓவியத்தைத் தன்னுடனேயே கொண்டு சென்றிருக்கலாம்; அவருக்குக் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ஒருநாளில் மோனலிசாவை அவர் புதிதாக வரைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஆனாலும், `என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?’ என்னும் உண்மையை டா வின்சி ஒருவரே விடுவிக்க முடியும். இப்போது, ஒன்றல்ல, இரண்டு இடங்களில், மர்மச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்கிறாள் லிசா.

(தேடுவோம்...)