
பூமியில் நடந்த போட்டி, பனிப்போராக உருமாறி, வானிலும் நடக்க ஆரம்பித்தது. விண்வெளிக்குச் செல்வது, சந்திரனுக்குப் போவது என்று போட்டிகள் தொடர்ந்தன.
ஹாய்! மீண்டும் எழுத்தின்வழி உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் தயாரெனில், மர்மப் பிரதேசமொன்றினுள் உங்களை அழைத்துச் செல்லலாமென இருக்கிறேன். பிரதேசமென்றவுடன், பூமியில் எங்கோ ஓர் இடத்தில் என்று எண்ணிவிடாதீர்கள். நாம் செல்லப்போவது, பூமிக்கும் மேலேயுள்ள விண்வெளிக்கு. அந்த விண்வெளியில்தான் சில நிமிடங்களைக் கழிக்கப்போகிறோம். நாட்டில், காட்டில், வீட்டிலெல்லாம் பேய்கள் இருப்பதாகப் பல கதைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். விண்வெளியில் பேய்கள் இருப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா... இல்லையல்லவா? சரி, வாருங்கள் காட்டுகிறேன். இனிவரும் சில நிமிடங்கள் உங்களுக்கும், எனக்குமானவை. கூடவே பேய்க்கும்...
அதை முதலில் அவதானித்தவர், ஒலெக் அட்கோவ்தான் (Oleg Atkov). அவர் இருந்த இடம் பிரகாசமான மஞ்சள் நிற ஒளியால் மெல்ல நிரம்ப ஆரம்பித்தது. கண்ணாடிப் பாத்திரமொன்றை நிரப்பும் நீர்போல, அந்த மஞ்சள் ஒளி அறையைப் படிப்படியாக நிரப்பிக்கொண்டிருந்தது. அவருடன் இருந்த ‘விளாடிமிர் சோலோவ்யோவ்’ (Vladmir Solovyov), ‘லியோனிட் கிஸிம்’ (Leonid Kizim) இருவரும்கூட அதைக் கண்டுகொண்டார்கள். இப்போது, எல்லாமே ஒளிரும் மஞ்சள் நிறமாக மாறிப்போயிருந்தன. அப்படியான ஒன்றை அவர்கள் அதுவரை அனுபவித்திருக்கவில்லை. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ‘வாயு ஏதும் கசிந்திருக்குமோ...’ என்றே முதலில் நினைத்தார்கள். ஆனால், ஒளி வெளியேயிருந்து வந்துகொண்டிருந்தது. ஒளியின் திசை நோக்கி ஜன்னலால் எட்டிப்பார்த்தார்கள். மிரண்டே போனார்கள். முதலில், முகில்போன்ற மஞ்சள் புகை சூழ்ந்ததுபோலத்தான் இருந்தது. அடுத்த நொடிகளில் அந்தப் புகை ஒடுங்கி உருவங்களாக மாறத் தொடங்கியது. அங்கே அவர்கள் கண்ட காட்சி வாழ்நாளில் மறக்க முடியாதது. பிரமாண்டமான ஏழு உருவங்கள் விண்வெளியில் மிதந்துகொண்டிருந்தன. முதுகில் மிகப்பெரிய இறக்கைகளுடன், தேவதைகள்போலச் சிறகடித்தபடி மிதந்தார்கள். ஒவ்வொருவரும் போயிங் விமானம் அளவுக்குப் பெரிதாக இருந்தனர். அவர்களிலிருந்தே அந்தப் பிரகாசமான ஒளி வந்துகொண்டிருந்தது. ‘ஜன்னலூடாகப் பார்த்தார்கள்’ என்றல்லவா சொன்னேன். அது எந்த ஜன்னல் தெரியுமா... அவர்கள் இருந்த இடம் எதுவென்று தெரியுமா? பூமியிலிருந்து 250 கிலோமீட்டருக்கு மேலே, ரஷ்யாவால் அனுப்பப்பட்ட ‘சல்யூட் 7’ (Salyut 7) என்னும் விண்வெளி ஆராய்ச்சி நிலையம்தான் அது. அங்கிருந்த ஜன்னலூடாகவே பறக்கும் தேவதைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இன்றைய காலத்தில், பல நாடுகள் ஒன்றிணைந்து ‘சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station- ISS) ஒன்றை 410 கிலோமீட்டர் உயரத்தில் மிதக்கவிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் தங்களில் யார் பெரியவரென்று காட்டுவதற்கு, அனைத்து விதங்களிலும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. பூமியில் நடந்த போட்டி, பனிப்போராக உருமாறி, வானிலும் நடக்க ஆரம்பித்தது. விண்வெளிக்குச் செல்வது, சந்திரனுக்குப் போவது என்று போட்டிகள் தொடர்ந்தன. அதன் அங்கமாக, விண்வெளியில் தங்கியிருந்து ஆராய, விண்கலங்களை அமைத்து விண்வெளியில் விட ஆரம்பித்தார்கள். அப்படி, சோவியத் ரஷ்யாவால் அனுப்பப்பட்ட விண்வெளி நிலையம்தான் ‘சல்யூட் 7.’ 1971-ம் ஆண்டு ரஷ்யாதான் ‘சல்யூட் 1’ என்னும் விண்வெளி நிலையத்தை முதலில் நிறுவியது. அதன் பின்னர், 1973-ல், ‘ஸ்கைலாப்’ (Skylab) என்பதை அமெரிக்கா அனுப்பிவைத்தது. மேலே சொல்லப்பட்ட சம்பவம், ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு ‘சல்யூட் 7’-ல் நடந்தது. ஒலெக் அட்கோவ், விளாடிமிர் சோலோவ்யோவ், லியோனிட் கிஸிம் மூவரும் மொத்தமாக 237 நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனை படைத்தவர்கள். அந்தச் சமயத்தில், அதாவது 1984-ம் ஆண்டு, ஜூலை 12-ம் தேதிதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
மூவரும் திகைத்து நின்றார்கள். என்ன செய்வதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. தாங்கள் காண்பது கனவல்ல, நிஜம் என்பது மட்டும் தெரிந்தது. கற்பனையில்கூட அவ்வளவு பிரமாண்டமான தேவதைகளை அவர்களால் கண்டிருக்க முடியாது. இப்போது கண்ணுக்கு எதிரிலேயே காட்சியளிக்கிறார்கள். தேவதைகளுக்கு இருப்பதுபோல அவர்களுக்கும் இறக்கைகள் இருந்தன. உருவத்தில் மனிதர் களாகவே காட்சியளித்தார்கள். அவர்களின் முகம் சாந்தமான பரிவுடன் இருந்ததை மூவரும் அவதானித்தார்கள். பாசமான பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள். மொத்தமாகப் பத்து நிமிடங்களே நின்றிருப்பார்கள். அடுத்த நொடி, திடீரென வேகமெடுத்து, பறந்து மறைந்தார்கள். அவர்கள் மறைந்த பின்னர் சுயநிலை வந்தும், நடந்ததை மூவராலும் நம்ப முடியவில்லை. `அவர்கள் யார்... வேற்றுக்கோள்வாசிகளா... தேவதைகளா... ஆவிகளா... இல்லை, கடவுளேதானா... அவர்கள் ஏன் எதுவும் செய்யவில்லை... எதற்காக எங்களைக் கனிவுடன் பார்க்க வேண்டும்?’ ஒன்றும் புரியவில்லை. கம்யூனிச ஆட்சி நடக்கும் சோவியத்துக்கு இதை அறிவிப்பதிலுள்ள சிக்கல்களைப் புரிந்து கொண்டார்கள். யாரிடமும் எதுவும் தெரிவிப்பதில்லை எனத் தீர்மானித்தார்கள். அப்படியே மௌனமாகி விட்டார்கள். நாள்கள் கடந்தன. அதன் பிறகு ‘அவர்கள்’ வரவேயில்லை. ஆனால், புதிய விருந்தாளிகள் வந்தார்கள்.

சம்பவம் நடந்து ஐந்தாவது நாளில், ‘ஸ்வெட்லனா சவிட்ஸ்காயா (Svetlana Savitskaya), ‘இகோர் போல்க்’ (Igor Volk), ‘விளாடிமிர் ஷானிபெகோவ்’ (Vladimir Dzhanibekov) ஆகிய மூவரும் புதிய விண்வெளி வீரர்களாக இவர்களுடன் இணைந்துகொண்டார்கள். இப்போது, விண்கலத்தில் மொத்தம் ஆறு பேர். அவர்களில் ஒருவர் பெண். புதிதாக வந்தவர்களுக்கு எதையும் இவர்கள் கூறவில்லை. ஆனால், அவர்கள் எதை நினைத்து பயந்தார்களோ, அதுவும் நடந்தது. புதிய வீரர்கள் வந்திறங்கிய ஆறாவது நாள், மீண்டும் மஞ்சள் நிற ஒளியில் குளித்தது ‘சல்யூட் 7.’ முன்னர் கண்ட அதே காட்சி. ஆனால், இப்போது விண்கலத்தில் இருக்கும் ஆறு பேர் அதைக் காண்கிறார்கள். இப்போதும், சில நிமிடங்கள் இவர்களையே கனிவாகப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, வேகமாக மறைந்துபோனார்கள். ஆனால், முன்னர் நடக்காத ஒரு சம்பவம் இப்போது நடந்தது. அது என்னவென்பதை இறுதியில் சொல்கிறேன்.
இரண்டு தடவை ஆறு நபர்களுக்கு, ஒரே சம்பவம் நடைபெற்றதால் மூடி மறைப்பதில் பயனில்லை என்று முடிவெடுத்து, அனைத்தையும் ரஷ்ய விண்வெளி மையத்துக்கு அறிவித்தார்கள். அவ்வளவுதான், `மூச்சுவிடக் கூடாது’ என்று பணிக்கப்பட்டது. அதன்பின்னர், அடுத்தடுத்து நடந்தவை எல்லாமே எதிர்பாராதவை. ‘சல்யூட் 7’-ல் பலவிதமான இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டன. அதிலிருந்து தப்பவே முடியாத நிலையில், விண்வெளி வீரர்கள் நூலிழையில் காப்பாற்றப்பட்டார்கள். ‘சல்யூட் 7’-ஐ மொத்தமாகக் கைவிட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே பூமிக்கு வந்து சேர்ந்த அந்த ஆறு விண்வெளி வீரர்களிடமும், நடந்தவற்றைத் தெளிவாகக் கேட்டறிந்தது சோவியத் அரசு. ‘ஆறு பேரும் ஒன்று சேர்ந்து கதையொன்றை இட்டுக்கட்டிச் சொல்கிறார்களோ?’ எனும் அடிப்படையில், சோதனைகள் நடத்தப்பட்டன. அவர்கள் உண்மை பேசுவதும், எந்த மனக்குழப்பமும் இல்லாமல் இருப்பதும் சோதனைகளில் தெரிந்தது. யாரும் எதையும் வெளியே சொல்லக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளைகளுடன் அனுப்பப்பட்டார்கள். விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட ஆக்சிஜன் குறைபாட்டாலோ, அமுக்க மாற்றங்களாலோ ஏற்பட்ட, குழு மாயத் தோற்றங்கள்தான் (Group Hallucination) இதற்குக் காரணம் என்று சிம்பிளாக முடித்துவைத்தார்கள். அந்த உண்மை திரைபோட்டு மறைக்கப்பட்டது.

வந்தவர்கள் யார்... ஏலியன்களா இல்லை தேவதைகளா... அல்லது கடவுளா? அதுசரி, சம்பந்தமேயில்லாமல் நான் ஏன் பேய்கள் பற்றி ஆரம்பத்தில் பேசினேன்... ‘விண்வெளியில் பேய்களா?’ என்று ஏன் சொன்னேன்... அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இரண்டாவது முறை அவர்கள் தோன்றியபோது, வித்தியாசமான ஒன்று நடைபெற்றதென்று சொன்னேனல்லவா... அது இதுதான். அந்த தேவதைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அறுவரில் இருவருக்குத் திடீரென மண்டைக்குள் குரலொன்று ஒலிப்பதாகத் தோன்றியது. டெலிபதி மூலமாகத் தங்களுடன் அவர்கள் உரையாடுவது போன்ற குரலாக அது இருந்தது. “உடனடியாக இந்த விண்கலத்திலிருந்து விலகி பூமிக்குச் சென்று விடுங்கள்!” என்று அந்தக் குரல்கள் எச்சரித்தன. அவர்கள் இருவரும் கேட்ட அந்தக் குரல்கள், அவரவரின் இறந்துபோன தாத்தாக்களின் குரல்போல ஒலித்தன. இருவருக்கும் வெவ்வேறான குரல்கள். இரண்டுமே அவர்களின் மூதாதையரின் குரல்கள். அப்படியென்றால் வந்தவர்கள் இறந்துபோன மூதாதையர்களா... இப்போது புரிகிறதா, நான் எதற்குப் பேய்களை இங்கே இழுத்தேன் என்பது?
சோவியத் ஒன்றியம் உடைந்த பின்னர் மெல்ல மெல்ல அனைத்தும் வெளியே கசிந்தன. இந்தக் கதையைப் படிக்கும் உங்களுக்குச் சிரிப்பு வரலாம். இந்தச் சம்பவம் உண்மையா, இல்லையா என்பதை நீங்களே தேடிச் சரிபார்த்துக் கொள்ளலாம். சாதாரணமான மக்கள் இட்டுக்கட்டிச் சொன்ன கதையல்ல இது. இதில் சம்பந்தப்பட்ட அனைவருமே படித்தவர்கள். புத்திசாலி மனிதர்கள். வானியல் அறிஞர்கள், மதிக்கப்படுபவர்கள். அவர்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கப் போவதில்லை. அதுவும் ஆறு பேர் சேர்ந்து ஒரு பொய்யைச் சொல்லியிருப்பார்களா?
‘என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?’ என்பதை கூகுளில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
(தேடுவோம்...)