
‘கனவு காணுங்கள்’ என்று அப்துல் கலாம் சொன்னார். தூங்கும்போது காணும் கனவு பற்றி அவர் சொல்லவில்லை. விழித்தநிலையில், சமுதாயச் சிந்தனையுடன் கனவுகளைக் காணுங்கள் என்றார்.
நம்மையறியாமல், நமக்குள் நடந்து கொண்டிருக்கும் விந்தை நிகழ்வொன்று பற்றித் தெரிந்துகொள்ளப்போகிறோம். அப்படியொன்று இருப்பதே நம்மில் பலருக்குத் தெரியாது. அது தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். அது, எதுவெனத் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்...
‘லியோனார்டோ டிகாப்ரியோ’ நடித்த ‘இன்செப்ஷன்’ (Inception) திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். இல்லையெனில், கட்டாயம் பாருங்கள். தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக் கிறது. கனவுகளைக் களவாடுவதே அப்படத்தின் மையக்கரு. ஒருவன் கனவுக்குள் இன்னொருவன் நுழைந்து, அவனது மனதின் திட்டங்களைத் திருடுவது. அல்லது தன் திட்டங்களை இன்னொருவன் மூளைக்குள் கனவின் மூலம் விதைப்பது. மிகச் சிக்கலான கதையமைப்பைக் கொண்ட திரைப்படம். தெளிவாகச் சொல்வதானால், ஒருவன் கனவை இன்னொருவன் கட்டுப் படுத்துவது. அதன் மூலம், கனவில் விதைக்கும் திட்டங்களை உண்மை யென்று நம்பவைப்பது. ‘இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன், காதுகளில் பூ சுற்றுகிறார்’ என்றே நினைப்போம். ஒருவன் கனவை இன்னொருவன் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? பொய் சொல்லலாம். அதற்காக, ‘பிக் பாஸ் வீட்டில் டொனால்டு ட்ரம்ப்’ என்றெல்லாம் அநியாயத்துக்கு அடித்துவிடக் கூடாதில்லையா... அப்படியானால், நோலன் இத்தனை பெரிய கயிற்றை ஏன் திரித்தார்... எந்த அடிப்படையில் ‘இன்செப்ஷன்’ திரைப்படத்தை எடுத்திருக்கிறார்? அந்த சுவாரஸ்யத்தைத்தான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.

‘கனவு காணுங்கள்’ என்று அப்துல் கலாம் சொன்னார். தூங்கும்போது காணும் கனவு பற்றி அவர் சொல்லவில்லை. விழித்தநிலையில், சமுதாயச் சிந்தனையுடன் கனவுகளைக் காணுங்கள் என்றார். கலாம் அவர்களின் கூற்றின் அடிப்படையைத் தாண்டி, விழித்திருக்கும்போது ஒருவரால் நிஜமாகவே கனவு காண முடியுமா? `நிச்சயம் முடியும்’ என்கிறார்கள் கனவுகளை ஆராய்பவர்கள். ‘விழிப்பின்போது கனவா... இது எப்படிச் சாத்தியம்?’ என்றுதானே நினைக்கிறீர்கள். அது சாத்தியம்தான். அதுமட்டுமல்லாமல், காணும் கனவுகளைக் கட்டுப்படுத்தவும் முடியுமென்று ஆச்சர்யப்படுத்துகிறார்கள். இதுவரை பல கனவுகளை நீங்கள் கட்டுப் படுத்தியிருப்பீர்கள். ஆனால், அவற்றை மறந்து போயிருப்பீர்கள். உங்களுக்குப் பிடித்த கனவுகளைக் காண்பீர்களல்லவா... அவற்றில் சில நீங்கள் கட்டுப்படுத்தியவையாக இருக்கலாம். ஒருசில பயிற்சிகளால், காணும் கனவுகளை விருப்பம்போல மாற்றிக்கொள்ளலாம். கெட்ட கனவொன்றை, நல்ல கனவாக மாற்ற முடியும். தங்கள் விருப்பத்துக்கேற்ப கனவுகளை மாற்ற முடிந்தவர்களை, ‘லூசிட் கனவாளிகள்’ (Lucid Dreamers) என்கிறார்கள். உங்களில் சிலர் இதை நம்பப்போவதில்லை. ஆனாலும், “அட! நானும் என்னோட கனவை கன்ட்ரோல் பண்ணியிருக்கேனே!” என்று சிலர் நினைப்பீர்கள். லூசிட் கனவாளிகள் நம்மிடையே அதிக அளவில் இருக்கிறார்கள். நீங்களும் லூசிட் கனவுகளைக் காண முடியும். லூசிட் கனவு என்றால் என்னவென்பதைச் சொல்கிறேன். அதற்கு முன்பாக கனவு சார்ந்த சில தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
கனவு எனும் அட்சய பாத்திரம்
ஒவ்வொரு மனிதனும் கனவு காண்கிறான். சிலர், ‘நான் கனவே காண்பதில்லை’ என்பார்கள். உண்மையில் அவர்களும் கனவு காண்பவர்களே! ஆனால், கண்ட கனவை மறந்துவிடுகிறார்கள். அதனால், கனவே காண்பதில்லை என நினைக்கிறார்கள். மனிதனொருவன், தினமும் நான்கிலிருந்து ஆறுவரை வெவ்வேறு கனவுகளைக் காண்கிறான். வாழ்நாளில் ஆறு ஆண்டுகளைக் கனவு காண்பதில் கழிக்கிறான். நித்திரையாகும் கணத்திலிருந்து கனவுகாண ஆரம்பிக்கிறோம். ஆனாலும், தெளிவான கனவுகள், ‘ரெம்’ (Rapid Eye Movement) உறக்க நிலையிலேயே வருகின்றன. ஓர் இரவின் முழுத் தூக்கம், ஐந்து படிநிலைகளைக் கொண்டது. முதல் இரண்டும் தூக்கத்தின் ஆரம்ப நிலைகள். அடுத்த இரண்டும், ஆழ்ந்த உறக்கநிலைகள். ஐந்தாவது நிலையே ‘ரெம்’ (REM). இதுவே கனவுகளை அள்ளித்தரும் அட்சய பாத்திரம். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து, விழிப்புக்குள் நுழையும் கணத்திலிருந்து ரெம் ஆரம்பமாகிறது. அப்போது, மூளை விழித்துக்கொள்ளத் தயாராகும். ஆனால், உடலோ அதற்குத் தயாராகாமல் இருக்கும். இதுவொரு குழப்பமான நிலை. இந்தச் சமயத்தில், உடல்தசைகளும், கைகால் போன்ற உறுப்புகளும், அசைக்க முடியாதபடி முடக்க (Paraiyse) நிலையில் காணப்படும். கால்களையோ, கைகளையோ அசைக்க முடியாது. சுவாசத்தின் வேகமும், இதயத்துடிப்பும் அதிகரிக்கும். இமைகள் மூடியிருக்க, கருவிழிகள் மேலும் கீழும், பக்கவாட்டிலும் அசைந்தபடி இருக்கும். இந்தச் சமயங்களில் சிலர் விழிப்பதுண்டு. அப்போது, உடலை அசைக்கவிடாமல் யாரோ அழுத்திக் கொண்டிருப்பதுபோலத் தோன்றும். அதைத் தவறாக, ‘பேய் அமுக்குகிறது’ என்று நினைப்பார்கள். அப்போது மிகவும் பயந்துவிடுவார்கள். அது பயப்பட வேண்டிய விஷயமேயல்ல. சிறிது நேரத்தில் தானாகவே சரியாகிவிடும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், பக்கவாட்டில் சரிந்து படுத்தால் ஓரளவுக்கு இதைத் தவிர்த்துவிடலாம். இந்த ‘ரெம்’ உறக்கமற்ற விழிப்புநிலையில்தான் லூசிட் கனவுகள் சாத்தியமாகின்றன.

நாம் ஏன் கெட்ட கனவையே காண வேண்டும்?
நாம் எதை வெறுக்கிறோமோ, எதைக் கண்டு பயப்படுகிறோமோ அவையே கனவாகி பயமுறுத்தும். இருட்டில் சுடுகாட்டில் விடப்படுவது, உயரத்திலிருந்து விழுவது, கூட்டங்களில் நிர்வாணமாக நிற்பது, பாம்புகள், பேய்களென்று கனவுகள் கலங்கடிக்கும். நீங்கள் எவற்றை அதிகம் விரும்புகிறீர்களோ, அவை கனவுகளாகப் பெரும்பாலும் வருவதில்லை. அப்படி வருமென்றால் எவ்வளவு அற்புதம் சொல்லுங்கள்... அந்த அற்புதத்தையே லூசிட் கனவுகள் நிகழ்த்திக் காட்டுகின்றன. லூசிட் கனவாளிகள், பிடிக்காத இடத்தைக் கனவில் கண்டால், பிடித்த இடத்துக்குக் கனவை மாற்றிவிடுவார்கள். பிடிக்காத சம்பவம் நடப்பதாகக் கண்டால், அதைப் பிடித்த சம்பவமாக மாற்றிக்கொள்கிறார்கள். விழிப்புநிலையில் இருக்கும் மூளை, காண்பது கனவென்பதைப் புரிந்துகொண்டு, இந்த இடம் தேவையில்லை, கோவாவில் சினேகிதியுடன் இருக்கலாம் எனத் தீர்மானித்து, கனவை கோவாவுக்குத் திசைதிருப்புகிறது. இதுதான் லூசிட் கனவின் அடிப்படை. நீங்கள் விரும்பிய நபரையும் கனவில் தேந்தெடுத்துக் கொள்ளலாம். விருப்பமான இடத்தையும் தெரிவுசெய்யலாம். “அட! இது நன்றாயிருக்கே! நான் தினமும் கெட்ட கனவையே ஏன் காண வேண்டும்? நானும் லூசிட் கனவாளியாக மாறிடலாமே!” என்று நினைப்பீர்கள். சிலர், `இது நம்புற மாதிரியா இருக்கு? ராஜ்சிவா சும்மா அடிச்சுவிடுறார்’ என்றும் யோசிப்பார்கள். நான் பொய் சொல்லவில்லை. எனக்கு மிகவும் நம்பிக்கையுடைய எழுத்தாளர் ஒருவர், லூசிட் கனவுகளைக் காண்பவர். என்னிடம் பலமுறை அது பற்றிச் சொல்லியிருக்கிறார். என்னிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியமே அவருக்குக் கிடையாது. அவரை நான் முழுமையாக நம்புகிறேன். அதனால், நீங்களும் நம்பலாம்.
‘லூசிட் கனவை நானும் முயற்சி செய்தாலென்ன?” என்று நினைப்பீர்கள். ஆனால், `லூசிட் கனவுகளை அடிக்கடி காண்பது நல்லதல்ல’ என்கிறார்கள். அடிக்கடி லூசிட் கனவுகளைக் காண்பதால், நடப்பது கனவா இல்லை நிஜமாவெனப் பிரித்தறிய முடியாத மயக்கத்தைத் தந்துவிடும் என்கிறார்கள். மனிதனின் மூளையைப் புத்துயிர்ப்பாக்க இயற்கையின் அற்புதச் செயல்முறைதான் கனவு. அது இயல்பாக நடப்பதுதான் நல்லது. அதை, லூசிட் கனவாக மாற்றுவது நல்லதல்ல என மனவியலாளர்கள் சொல்கிறார்கள். உங்களுக்கு ஒருவரை அதிகம் பிடிக்கலாம், ஆனாலும் அவருடன் நெருங்கிப் பழக முடியாமல் இருக்கும். லூசிட் கனவு மூலம், அவருடன் பழகுவதாகவும் பேசுவதாகவும் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். தினமும் அப்படியான கனவுகளைக் காண்பதால், ஒருகட்டத்தில் எது கனவு, எது நிஜம் என்பது தெரியாமல் தடுமாறுவீர்கள். நிஜத்தில் அவருடன் தொடர்புபட முயல்வீர்கள். அதனால் சிக்கல்கள் உருவாகலாம். தொடர்ச்சியான லூசிட் கனவுகளைத் தவிர்ப்பது நல்லதே!
காண்பது கனவா இல்லை நிஜமா வென்னும் தடுமாற்றத்தை லூசிட் கனவாளிகள் தவிர்ப்பதற்குப் பயிற்சி முறையொன்றைப் பரிந்துரைக்கிறார்கள். காண்பது கனவா, நிஜமா என்பதைத் தெரிந்துகொள்ள, வலது கையின் சுட்டுவிரலால், இடது கையின் நடுப்பகுதியில் (Palm) உள்நோக்கிக் குத்துவதுபோலச் செய்ய வேண்டும். அப்போது, விரல் குத்தப்படுவதை உணர்ந்தால், அது நிஜத்தில் நடப்பதாகும். அதுவே, கையினூடாகச் சுட்டுவிரல் புதைவதுபோல உள்நுழைந்தால், கனவு என்கிறார்கள். இதையெல்லாம் படிக்கும் போது, நம்புவதா இல்லை சிரிப்பதா என்று தோன்றும். லூசிட் கனவைப் பயிற்சிகள் மூலம் மேற்கொள்பவர்களுக்கு இதுபோலச் செய்து பார்ப்பதும் சாத்தியமானதுதான். நான் கூறியவை உண்மையா எனத் தெரிந்துகொள்ளவும், ‘என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?’ என்பதைப் புரிந்துகொள்ளவும், இணையத்தில் தேடிப் பாருங்கள். அசந்துபோய்விடுவீர்கள்.

வலக்கையில், இடக்கைச் சுட்டுவிரலால் அழுத்திக் கனவுதான் காண்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்கலாமென்று சொன்னேனல்லவா? இதையே, ‘இன்செப்ஷன்’ திரைப்படத்தில் வேறுவிதமாகக் காட்டியிருப்பார்கள். பம்பரம் போன்றதொரு பொருளைச் சுற்றவிட்டு, அது தொடர்ச்சியாகச் சுற்றினால் காண்பது கனவென்றும், சுற்றிய பின் தடுமாறி விழுந்துவிட்டால் நிஜமென்றும், கதையின் நாயகன் தீர்மானிப்பான். கிரிஸ்டோபர் நோலன் தன் படத்துக்கான அடிப்படைக் கருவை எங்கிருந்து எடுத்திருக்கிறாரென்று இப்போது புரிகிறதா? தன் கனவுக்குள் தானே புகுந்து அதை மாற்ற முடியுமென்றால், அடுத்தவனின் கனவுக்குள் நுழைய முடியும் எனப் புனைந்திருப்பது அசத்தல்தானே! லூசிட் கனவுகளின் நீட்சியே `இன்செப்ஷன்’ திரைப்படம்.
அட! ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேனே! எனக்குத் தெரிந்த எழுத்தாளர் ஒருவர் லூசிட் கனவுகளைக் காண்பவர் என்று சொல்லியிருந்தேனல்லவா? அந்த எழுத்தாளர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை, ராஜ்சிவாவேதான்!
(தேடுவோம்...)