மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 3 - கொல்லுமா இசை?

மைல் வோல்கா கெரெகெஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மைல் வோல்கா கெரெகெஸ்

ஹங்கேரி முழுவதும் கிட்டத்தட்ட நூறு தற்கொலைகள் ஒரேயொரு காரணத்துக் காகவே நடந்தன.

இதை எழுதுவதில் பெரும் தயக்கம் இருந்தது. எதிர்மறைச் சம்பவங்களுக்கு வெளிச்சமிடுவதில் எனக்குச் சம்மதமில்லை. ஆனாலும், என்றோ முற்றுப்புள்ளியிடப்பட்ட தொடர் சோகமொன்றை உங்களிடம் பகிர்கிறேன். வரலாற்றில் தவறான நிறத்தைப் பெற்றுவிட்ட நிகழ்வு அது.

‘மைல் வோல்கா கெரெகெஸ்’ (Mile Olga Kerekes), ஹங்கேரியின் புதாபெஸ்ட் நகரில் வசிக்கும் ஒரு பாடகி. பிரபலமான நாடக நடிகையும்கூட. ஒருநாள், நிறைந்திருந்த அரங்கத்தில் பாடிக்கொண்டிருந்தார். பார்வையாளர்கள் அந்தப் பாடலில் ஒன்றிப்போயிருந்தார்கள். சோகம் வழியும் இசையும், பாடலின் வரிகளும் அனைவரையும் துக்கத்தின் உச்சத்தில் உட்காரவைத்திருந்தன. உணர்ச்சிவசப்பட்டுப் பாடிக்கொண்டிருந்த வோல்காவின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அப்படியானதொரு ஏக்கக் குரலை யாரும் கேட்டிருக்க முடியாது. பாடலின் இறுதியை முடிக்காமல், கதறியழுதார் வோல்கா. துக்கம் தாங்காமல் மேடைக்குப் பின்னிருந்த அறையை நோக்கி ஓடினார். கதவைச் சாத்திக் கொண்டார். பார்வையாளர்களும் சோகத்தில் இருந்ததால், வோல்காவைப் புரிந்துகொண்டார்கள். சமாதானமடைந்து வெளியே வரும்வரை காத்திருந்தார்கள். நிமிடங்கள் நகர்ந்தன. நேரம் அதிகமாகவே ஆகிற்று. வோல்கா வரவில்லை. மேனேஜர் அறைக் கதவைத் தட்டினார். கதவுகள் திறக்கப்படவில்லை. நிலைமை விபரீதமென்பதைப் புரிந்துகொண்டார். கதவை உடைக்க உத்தர விட்டார். கதவைத் திறந்தபோது, இறந்தநிலையில் விழுந்துகிடந்தார் வோல்கா. கையில் விஷக்குப்பியொன்று இருந்தது.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 3 - கொல்லுமா இசை?

இன்னொரு சம்பவம்.

பதினைந்தே வயதான அழகி ‘எலிசபெத் குயுலை’ (Elizabeth Guyulai). ஒருநாள் இரவு வேளை வீட்டிலிருந்து சைக்கிளில் வெளியே சென்றபோது, காவல்துறையால் மறிக்கப்பட்டாள். `எங்கே போகிறாய்?’ எனக் கேட்டபோது, `அம்மாவுக்கு மருந்து வாங்க பார்மசி செல்கிறேன்’ என்றிருக் கிறாள். காவல்துறையினரிடம் விடை பெற்றவள், நீர் பாயும் பாலமொன்றின் அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு, நிதானமாகச் சென்று நீரில் குதித்தாள். அடுத்த நாள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள். தாயாருக்கு அவள் எழுதிவைத்த காகிதத்தில், `உன்னைப் பார்த்து எவராவது ‘குளூமி சண்டே’ பாடலைப் பாடினால், என்னைப் புரிந்துகொள்வாய்’ என்னும் இரண்டே வரிகள் மட்டும் இருந்தன.

மேலுமொரு சம்பவம்.

புதாபெஸ்டில், ‘கிரீன் ஃப்ரொக்’ பிரபலமான உணவகம். மாலை வேளைகளில் அட்டகாசமாய் இயங்குவது. ஒருநாள், ‘ஜீன் போரொஸ்’ (Jean Boros) அங்கு நுழைந்தார். அங்கிருப்பவர்களுடன் இணைந்துகொண்டார். உணவகத்துக்கென இசைக்குழுவும் இருந்தது. அவர்கள் பாடல்களைப் பாடினார்கள். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடைபெற்றது. இசைக்குழுவின் பாடகி, பாடலொன்றைப் பாட ஆரம்பித்தார். உற்சாகத்தில் துடித்த உணவகம் சட்டென்று அமைதியானது. அந்தச் சோகப் பாடலைக் கேட்டு, அனைவரும் உணர்ச்சிவசப்பட்டார்கள். பாடல் முடிந்த போது, எவரும் கைதட்டவில்லை. சிலையாகி யிருந்தார்கள். ஆனால், கைதட்டலுக்கு பதில், துப்பாக்கி வெடியோசை கேட்டது. அங்கிருந்தவர்கள் மிரண்டுபோனார்கள். தலையில் சுட்டுத் தற்கொலை செய்த நிலையில் வீழ்ந்து கிடந்தார் ஜீன் போரொஸ். உணவக முதலாளி அலறினார், “அந்தப் பாடலை ஏன் பாடினீர்கள்..?”

புதாபெஸ்ட்டில் இன்னொரு சம்பவமும் நடந்தது. காலணிக் கடையின் சொந்தக்காரரான ‘ஜோசப் கெல்லர்’ தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த இடத்தில், பாடலொன்றின் வரிகளும், ஒரு வேண்டு கோளும் இருந்தது. `பாடலில் சொல்லப்பட்டது போல ரோஜாக்களை என் சவப்பெட்டியினுள் நிறைத்து அடக்கம் செய்யுங்கள்.’

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 3 - கொல்லுமா இசை?

இவை மட்டுமல்ல, அடுத்தடுத்து பதினெட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. ஹங்கேரி முழுவதும் கிட்டத்தட்ட நூறு தற்கொலைகள் ஒரேயொரு காரணத்துக் காகவே நடந்தன. அனைத்துத் தற்கொலை களுக்கும் காரணமாயிருந்தது ஒரு பாடல். ‘இருண்ட ஞாயிறு’ (Gloomy Sunday) எனும் பாடல்தான் அது. 1933-ம் ஆண்டு ஹங்கேரியில், பாடலொன்றால் தற்கொலை செய்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்திருக்கின்றன. இறந்த ஒவ்வொருவருக்கும் அருகில், அந்தப் பாடல் எழுதிய காகிதமோ, பாடலின் இசைத்தட்டோ இருந்தது. என்ன, ஏதுவென்று புரிந்துகொள்வதற்கு முன்னரே பலர் இறந்து போனார்கள். பாடகியான வோல்காவின் தற்கொலைக்குப் பின்னர்தான் காவல்துறை விழித்துக்கொண்டது. ‘குளூமி சண்டே பாடலை நாடு முழுவதும் தடை செய்கிறோம்’ என அறிவித்தார்கள். தற்கொலை காரணத்தால் ஒரு பாடல் தடைசெய்யப்பட்டது அதுவே முதன்முறை. அப்படி என்னதான் இருக்கிறது அந்தப் பாடலில்... அதை உருவாக்கியது யார்? ‘ஹங்கேரியன் தற்கொலைப் பாடல்’ எனும் பெயருடன் உலகமெங்கும் அறியப்பட்ட ‘குளூமி சண்டே’ உருவானவிதம் மிகச் சாதாரணமானது.

‘ரெஸ்சோ செரெஸ்’ (Rezso Seress) என்பவர் ஹங்கேரியில் வாழ்ந்த பியானோக் கலைஞர். ஓர் உணவு விடுதியில் பியானோ வாசிப்பவராகப் பணிபுரிந்தார். 1933-ம் ஆண்டு அவருக்கு 34 வயது பூர்த்தியாகியிருந்தது. காதலித்தவளும் ஏதோவொரு காரணத்தால் அவரைப் பிரிந்து விட்டாள். சோகம் அவரை வாட்டும் போதெல்லாம், பியானோ இசையால் அதை வெளிப்படுத்தினார். அந்த உணவு விடுதிக்கு ‘லாஷ்லோ யாவொர்’ (Laszlo Javor) என்னும் பாடலாசிரியர் வந்திருந்தார். தான் எழுதிய ஒரு பாடலுக்கு மெட்டமைத்துக் கொடுக்கும் ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார். பியானோவில் சோக கீதங்களைப் பொழிந்துகொண்டிருக்கும் ரெஸ்சோவே தனது பாடலுக்கு மெட்டமைக்க உகந்தவர் என்பதைப் புரிந்துகொண்டார். தன் கோரிக்கையை ரெஸ்சோவுக்குச் சொன்னார். அப்போதுதான் அற்புதமான ‘குளூமி சண்டே’ பாடல் உருவானது.

தான் பணிபுரியும் உணவுவிடுதியில் ‘குளூமி சண்டே’யை இசைக்கச் செய்தார். மெல்ல அது மக்களுக்குப் பிடிக்க ஆரம்பித்தது. பின்னர் இசைத்தட்டாகவும் வெளியிடப்பட்டது. அதுவே தற்கொலைகளுக்கும் காரணமானது. பாடல் பிரபலமாகும்போது, ரெஸ்சோவும் பிரபலமானார். கூடவே தற்கொலைகளும் சேர்ந்துகொண்டன. பாடலின் பிரபலத்துக்கு அதுவும் காரணமானது. அந்த அடையாளத்தை ரெஸ்சோ விரும்பவில்லை. அவர் பிரபலமானதும், அவரைப் பிரிந்த காதலியுடன் மீண்டும் இணைவதற்கான சந்தர்ப்பம் உருவானது. இசைத்தட்டை வெளியிட்டவரே இருவருக்குமான சமாதானத்தை உருவாக்கினார். குறித்த ஒருநாளில் இருவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சந்திப்பதற்கு முதல் நாள் ரெஸ்சோவின் காதலி, தனிமையிலிருந்தபடி ‘குளூமி சண்டே’யைக் கேட்டார். மறுநாள் அவரது அறையைப் பார்த்தபோது, அங்கே தற்கொலை செய்து இறந்துகிடந்தார். பாடலின் சோகமா, ரெஸ்சோவை இவ்வளவு நாளும் தவிக்கவைத்த குற்றவுணர்ச்சியா தெரியவில்லை. அவரருகேயிருந்த காகிதத்தில் இரண்டே சொற்கள் மட்டும் எழுதப்பட்டிருந்தன. ‘Gloomy Sunday.’ எல்லாமே முடிந்துபோனது. யாருக்காக அந்தச் சோககீதம் உருவாக்கப்பட்டதோ, அவரும் தற்கொலை செய்துகொண்டார்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 3 - கொல்லுமா இசை?

இப்படியானதொரு முடிவை ரெஸ்சோ எதிர்பார்க்கவில்லை. யாருக்கெல்லாமோ நடந்ததாகக் கேள்விப்பட்ட தற்கொலைகள், தன்னையே நெஞ்சில் குத்துமென்று அவர் நினைக்கவில்லை. பல வருடங்கள் கழித்து, அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்த தன் வீட்டின் ஜன்னல் வழியாகக் குதித்து, தற்கொலை செய்துகொண்டார். இத்துடன் அனைத்தும் முடிந்திருக்க வேண்டும். ஆனால், முடியவில்லை. எதிலும் பணம் பார்க்கும் வியாபாரிகள் உலகமாயிற்றே! அமெரிக்காவில் அப்படிப்பட்ட வியாபாரிகள் அதிகமே! ‘ஹங்கேரியன் தற்கொலைப் பாடல்’ என்று விளம்பரப்படுத்தி, ஆங்கிலத்திலும் ‘குளூமி சண்டே’ வெளியிடப்பட்டது. அமெரிக்காவிலும் தற்கொலைகள் விரட்ட ஆரம்பித்தன.

1936-ம் ஆண்டு, நியூயார்க்கைச் சேர்ந்த ‘பிலிப் குக்’ எனும் இளைஞன், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டநிலையில் வீழ்ந்துகிடந்தான். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். அவனது பாக்கெட்டிலிருந்த துண்டுக் காகிதத்தில் அதே ‘குளூமி சண்டே’யின் பாடல் வரிகள். அதைத் தொடர்ந்து, பதின்ம வயதுகொண்ட ‘ஃபிளாய்ட் ஹமில்டன்’, 19 வயதான ‘ஆல்ஃப்ரெட் ஃபோல்க்ஸ்மான்’ என்று தற்கொலைகள் அமெரிக்காவிலும் வரிசைகட்டின. 1984-ம் ஆண்டில்கூட இளைஞன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். தற்கொலை செய்யுமளவுக்கு அந்தப் பாடலில் அப்படி என்னதான் இருக்கிறது? அப்படி எதுவுமே இல்லையென்பதுதான் நிஜம். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் இயக்கத்தில் வெளிவந்த, ‘ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட்’ படத்தில் மனதைக் கீறும் சோக இசையொன்று வருகிறதல்லவா... அது குளூமி சண்டேயின் வயலின் வடிவம்தான்.

இப்போது, நம் முன்னால் இருக்கும் கேள்வி, ‘என்ன ஒளிந்திருக்கிறது அந்தப் பாடலில்?.’

இசையால் அல்லது பாடலால் தற்கொலைகள் நடைபெற முடியுமா? ஒருநாளும் முடியாது. இசை அற்புதமானது. மனிதனை ஆற்றுப்படுத்தும் அபூர்வக் கலைவடிவம். இசை யாரையும் கொல்லாது. இசை மனதுக்கானது என்பது உண்மைதான். ஆனால், ஒருவரைத் தற்கொலை நோக்கிக் கொண்டு செல்ல இசை மட்டுமே காரணமாகாது. உலகில் எத்தனையோ சோக இசைகள் இருக்கின்றன. தமிழிலும் இருக்கின்றன. அவை எவரையும் தற்கொலைக்குத் தள்ளியதில்லை. ‘அப்படியென்றால், குளூமி சண்டே பாடலால் தற்கொலைகள் நடந்தன என்பது பொய்தானா?.’ இல்லை, அவையும் நிஜமானவைதான். ஏதோவொன்றைத் தொலைத்த நிலையில், மன உளைச்சலுக்கு உள்ளாகும் மனிதர் களுக்குச் சோக இசைகள் துணையாக இருக்கின்றன. ‘நான் தனியானவன், எனக்கென்று யாருமில்லை’ என்னும் நினைப்புத் தோன்றியதுமே, அவர்கள் பெரும்பாலும் சோகப் பாடல்களை நாடுகிறார்கள். ‘அவை தன் நிலையைச் சரியாகப் பிரதிபலிக்கின்றன’ எனும் முடிவுடன் திருப்தியடைகிறார்கள். மெல்ல மெல்ல அதிலிருந்து வெளியேயும் வந்துவிடுகிறார்கள். ஏதோவொரு தற்செயல் கணத்தில் வெகு சிலர் தற்கொலைக்குத் தள்ளப்படு கிறார்கள். தற்கொலை முடிவுக்கு ஏற்கெனவே தள்ளப்பட்டவர்கள், இறுதிக் கணத்தில் கேட்க விரும்புவதும் சோகப் பாடலாக இருக்கலாம். அப்படியான சூழ்நிலைகளிலேயே ‘குளூமி சண்டே’ பாடலைக் கேட்டுத் தற்கொலைகள் நடந்திருக்கலாம். இசை ஒருவனைக் கொல்லவே கொல்லாது. தற்கொலைகளுக்கான ஆரம்பப்புள்ளி, அவர்கள் எதை இழந்தார்கள் என்பதில் தொடங்குகிறது. எனவே, தற்கொலைகளுக்கு ‘குளூமி சண்டே’யைக் காரணம் சொல்வது சரியானதல்ல.

எது எப்படியானாலும், பலரின் இறப்பின் இறுதிக் கணங்களுடன், ‘குளூமி சண்டே’ தவிர்க்க முடியாமல் ஒட்டிக்கொண்டது என்பது மட்டும் உண்மைதான்!

(தேடுவோம்...)