
குழந்தை பொரிஸ்கா வளர ஆரம்பித்தான். ‘சாதாரணக் குழந்தைகளிடம் இல்லாதவை இவனிடம் இருக்கின்றன’ என்று பெற்றோருக்குத் தோன்றும்படியாக அவன் நடவடிக்கைகள் இருந்தன.
ரஷ்யாவின் ‘வொல்கோகிராட்’ (Volgograd) என்னும் ஊரில் வசிக்கும், ‘கிப்ரியானோவிச்’ (Kipriyanovich) தம்பதியருக்கு, 1996-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி, ‘பொரிஸ்கா’ (Boriska) பிறந்தான். பெற்றோர் இருவரும் படித்த, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பொரிஸ்காவின் தாய் ‘நடேஷ்டா’ (Nadezhda) ஒரு மருத்துவர். குழந்தை பிறந்ததில் மகிழ்ச்சியாக உணர்ந்தனர். பிறந்து மிகச்சரியாகப் பதினைந்தாம் நாள், ஆச்சர்யமொன்று நடந்தது. மேலே பார்த்தபடி நிமிர்ந்து படுத்திருந்த குழந்தை, திடீரென வயிற்றுப்புறமாக உடம்பைப் புரட்டி, தலையை உயர்த்தித் தாயைப் பார்த்தது. மிரண்டே போனார் நடேஷ்டா. பதினைந்து நாள் குழந்தையால் அப்படித் திரும்பவோ, தலையை நிமிர்த்தவோ முடியாது. அதைப் போட்டோவாக எடுத்துக்கொண்டார். பின்னர், ‘இது தற்செயலாக நடந்திருக்கிறது’ என்றே நினைத்தார். ஆனால், ‘செவ்வாயிலிருந்து வந்த சிறுவன்’ என்று உலகம் முழுவதும் தன் குழந்தை அறியப்படப் போகிறானென்பது அன்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
குழந்தை பொரிஸ்கா வளர ஆரம்பித்தான். ‘சாதாரணக் குழந்தைகளிடம் இல்லாதவை இவனிடம் இருக்கின்றன’ என்று பெற்றோருக்குத் தோன்றும்படியாக அவன் நடவடிக்கைகள் இருந்தன. நான்காவது மாதத்தில் அடுத்த பிரமிப்பை ஏற்படுத்தினான் பொரிஸ்கா. `அப்பா’ என்று ரஷ்ய மொழியில் அர்த்தம் தரும் ‘பாபா’ (Baba) எனத் தந்தையைப் பார்த்து அழைத்தான். அவரால் அதை நம்பவே முடியவில்லை. நான்கு மாதக் குழந்தை சொற்களை உச்சரிக்குமென்று அவர் கேள்விப்பட்டதே இல்லை. பொரிஸ்காவின் நடவடிக்கைகள் இதுபோலவே தொடர்ந்தன. விதவிதமாக ஆச்சர்யப்படுத்தினான். வொல்கோகிராட் நகரெங்கும் பொரிஸ்கா பற்றிய பேச்சுகள் பரவின. அடுத்ததாகத் தன் எட்டாவது மாதத்தில் முழு வசனமொன்றைப் பேசினான். சுவரில் அறையப்பட்டிருந்த ஆணியைப் பார்த்தபடி, “எனக்கு அந்த ஆணி வேண்டும்” என்று கூறினான். எட்டு மாதக் குழந்தையால் இப்படிப் பேச முடியாது. ஆணி எனும் சொல் அவன் கேட்டே அறியாதது. இவன் சாதாரணமான குழந்தையே கிடையாது. ‘இவன் வேற மாதிரி’ என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். அன்றிலிருந்து பொரிஸ்காவின் ஆட்டங்கள் அட்டகாசமாக ஆரம்பமாகின. ஒரு வயதில் செய்தித்தாள்களைப் படித்தான். இரண்டு வயதில் ரஷ்ய மொழியைப் பேசவும், எழுதவும் முடிந்தது. சித்திரங்களையும் வரைந்தான். மூன்று வயதில் சூரியக் குடும்பக் கோள்களையும், அவற்றின் விவரங்களையும் சொல்ல ஆரம்பித்தான். இந்த இடத்தில் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். சூரியக் குடும்பக் கோள்களின் விவரங்களை, பொரிஸ்காவுடன் யாரும் பேசியதுமில்லை, எங்கும் அவன் படித்ததுமில்லை. அந்த விவரங்களைப் பெற்றுக்கொள்ளும் வயதும் அவனுக்கு இருக்கவில்லை. புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தோ இப்படிப் பேசுவதாகவுமில்லை. எப்படியோ அந்த விவரங்களை அறிந்துவைத்திருந்தான். அது எப்படி? பொரிஸ்காவின் பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. தங்கள் மகன் ஒரு விசேஷக் குழந்தை என்பதைத் திடமாக நம்பினார்கள். பொரிஸ்காவின் புகழ் சுற்றுப்புறமெங்கும் பரவியது. உச்சிக் கோபுரத்தில் கலசம் வைத்தாற்போல் அந்தச் சம்பவமும் நடந்தது.

2003-ம் ஆண்டு பொரிஸ்காவின் குடும்பமும், உறவினர்களும் காட்டுவெளியொன்றில் கூடாரம் அமைத்துத் தங்குவதற்குச் சென்றார்கள். அப்போது பொரிஸ்காவுக்கு வயது ஏழு. கூடாரங்களுக்கு நடுவே, கதகதப்புக்காக எரியவிடப்பட்ட நெருப்பைச் சுற்றி அனைவரும் அமர்ந்திருந்தார்கள். அப்போது திடீரென எழுந்த பொரிஸ்கா, எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி கூறினான். முகத்தில் இறுக்கமும் கடுமையும் காணப்பட்டன. அனைவரும் அமைதியானார்கள். பொரிஸ்கா பேச ஆரம்பித்தான். ‘‘போன பிறப்பில் நான் செவ்வாய்க் கோளில் வாழ்ந்தேன். அங்கு நடந்த அணுவாயுதப் போரால் செவ்வாய்க்கோள் முழுவதும் அழிந்துபோனது. உயிர்கள் வாழ முடியாதவாறு மாறியது. இப்போதும் செவ்வாயில் அவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கதிர்வீச்சால் செவ்வாயின் மேற்பரப்பில் யாரும் வாழ முடியாத நிலை ஏற்பட்டதால், தரையின் கீழே நகரங்களை அமைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பூமியில் பிறப்பதற்காக நான் அனுப்பிவைக்கப்பட்டேன். நான் மட்டுமல்ல, என் போன்ற பலர் பூமியில் பிறந்திருக்கிறார்கள்’’ என்று பேச்சை நிறுத்திக் கொண்டான். அங்கிருந்தவர்கள் எவருக்கும் பேச்சு வரவில்லை. இந்த ஏழு வயதுச் சிறுவன் சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது... எந்த அடிப்படையில் இவன் இப்படிப் பேசுகிறான்... செவ்வாய்க் கோளை எப்படி அறிந்துகொண்டான்... இத்தனை விவரங்களை எப்படிச் சொல்கிறான்... கனவு கண்டானா... யாரும் இவனுக்குச் சொன்னார்களா.. பாலர் வகுப்பின் ஆசிரியர்கள் பேசியதைக் கேட்டானா... எதுவும் புரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயமாகத் தெரியும். ‘செவ்வாய் சம்பந்தமான எந்த விவரத்தையும், எந்த வழியிலும் பொரிஸ்கா தெரிந்திருக்கச் சாத்தியமே இல்லை’ என்பதுதான் அது.
உயிரினமே வாழ முடியாத செவ்வாய்க் கோளின் சூழலை இந்தச் சிறுவன் எப்படி அறிந்திருக்க முடியும்? அழுத்தம் திருத்தமாக இவ்வளவையும் சொல்கிறானே! இவன் சொல்வதில் உண்மை இருக்கலாமோ? அனைவரின் மனத்திலும் பலவித சந்தேகங்கள் தோன்றின. பொரிஸ்கா சிறப்பம்சம் கொண்ட சிறுவனாக உருவெடுத்தான். ரஷ்யாவெங்கும் அவனைப் பற்றிய பேச்சு பரவத் தொடங்கியது. பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் என அனைத்து ஊடகங்களும் பொரிஸ்கா வீடு நோக்கி வரிசைகட்டின. பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் கேள்விகளால் அவனைத் துளைத்தெடுத்தனர். ஒவ்வொருவருக்கும் தலைகுனிந்து வெட்கச் சிரிப்புடன் பதில் சொன்னான் பொரிஸ்கா.

செவ்வாய்க் கோளில் வசித்தவர்கள் 35 வரை வயதாகி, பின்னர் வயதேயாகாமல் நின்றுவிடுகிறார்கள். அப்புறம் என்றும் 35 வயதுதான். பூமியின் மனிதர்போல உருவ அமைப்பு இருந்தாலும், நிறையவே வேற்றுமைகள் இருந்தன. ஏழடிக்கு மேல் உயரமானவர்கள். ஆக்ஸிஜனை சுவாசிப்பதில்லை. பதிலாக, கார்பன் டையாக்ஸைடைச் சுவாசிப்பார்கள். அறிவு, தொழில்நுட்பம், ஆற்றல் அனைத்திலும் சிறந்தவர்கள். பயணம் செய்வதற்கு மூன்றுவித விண்கலங்களைப் பயன்படுத்தினார்கள். விமானங்கள்போலவும், முக்கோண வடிவிலும், கோள வடிவிலும் அவை இருந்தன. பிற கோள்களுக்கும், காலக்ஸிகளுக்கும் விண்கலங்கள் மூலம் பயணம் செய்வார்கள். பிளாஸ்மா சக்தியால் அவை இயங்கின. நானும் விண்கலம் செலுத்தும் விமானியாகவே இருந்தேன். இவையெல்லாம் பொரிஸ்கா ஊடகங்களுக்குக் கொடுத்த தகவல்கள். “செவ்வாய்க் கோளில் வசித்தவர்கள் அறிவாளிகளாக இருந்தும் போரால் அழிந்தார்கள். செவ்வாய்க் கோளையும் அழிவுக்குள்ளாக்கினார்கள். அதுபோல பூமியையும் அழியாமல் காப்பாற்றவே எங்களை இங்கு அனுப்பினார்கள்” என்கிறான் பொரிஸ்கா.
“பூமியின் மனிதர்களும், செவ்வாய்வாசிகள்போலத் தப்புப் பண்ணுகிறார்களா?” என்று கேட்டபோது, “யாரையும் தப்பாகப் பேசக் கூடாது” என்று தலை குனிந்தபடி சொல்கிறான். “அப்படியென்றால் பூமியில் நாங்கள் என்னதான் செய்ய வேண்டும்?” என்று கேட்டபோது, “எகிப்திலிருக்கும் பிரமாண்டமான ஸ்பிங்க்ஸ் (Sphinx) சிலையின் காதின் பின்னால் திறக்கக்கூடிய பொறிமுறை ஒன்று உள்ளது. அதைத் திறந்து பார்த்தால், மனித இனத்துக்கான விடிவு கிடைத்துவிடும்” என்கிறான். இந்தச் சிறுவனுக்கு எப்படி ஸ்பிங்க்ஸ் சிலையைத் தெரியும் என்று பிரமித்தபடி உறைந்துபோயின ஊடகங்கள். “இவையெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?”
என்று கேட்கவும் செய்தார்கள். அதற்கு அவன் கூறிய பதில் அதிர்ச்சிகரமானது.
செவ்வாயிலிருந்து பல தடவை பூமிக்குத் தான் வந்ததாகவும், அப்படி வரும்போது எகிப்தின் பிரமிடுகள் கட்டப்பட்டதாகவும் சொன்னான். பூமியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் லெமூரியா எனும் நிலப்பரப்பு இருந்ததாகவும், அது நீரில் மூழ்கிவிட்டதாகவும், லெமூரியாவில் தனக்கொரு நண்பன் இருந்தானென்றும், தன் கண்முன்னே அவன் கொல்லப்பட்டதாகவும் சொல்லித் திகைக்கவைக்கிறான் பொரிஸ்கா. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான லெமூரியாவுக்கும், சில ஆயிரம் ஆண்டுகள் வயதுடைய பிரமிடுகளுக்கும் அவன் பயணம் செய்திருப்பது பெரும் குழப்பத்தைத் தரும். அவ்வளவு ஆண்டுகள் அவன் செவ்வாயில் வாழ்ந்திருக்கிறானா அல்லது காலத்துக்கான அவர்கள் கணிப்பே வேறானதா? இப்போது உங்களுக்கு, ‘இது உளறலின் உச்சம்’ என்பதாகத்தான் தோன்றும். ‘ஒரு சிறுவன் மூலம் சிலர் ஆடும் மலின நாடகத்தை, எப்படி நம்புவது?’ என்று கேட்பீர்கள். ஆனால், பொரிஸ்காவை உலகம் முழுவதும் அறியும். பலர் பலவிதங்களில் அவனைப் பரிசோதித்திருக்கிறார்கள். ‘லை டிடெக்டர்’கூடப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், பொரிஸ்கா உண்மையைப் பேசுவதாகவே முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. இதைக் கேட்டுக் கேலி செய்பவர்களும் இல்லாமலில்லை. ‘என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?’ என்பது மட்டும் சரியாகத் தெரியவில்லை.

இந்த இடத்தில் பொரிஸ்காவின் கதை முடிவடைகிறது. உண்மையா இல்லையா என்று முடிவெடுக்க முடியாத பொரிஸ்காவின் கதையைப் பலர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்கள். அதனால், பொரிஸ்காவைச் சொல்வது எனக்கு அத்தனை முக்கியமல்ல. இன்னொரு விந்தையைச் சொல்வதே என் நோக்கம். அதன் ஆரம்பப்புள்ளிதான் பொரிஸ்கா. “என்னைப் போன்ற பல சிறுவர்கள் பூமியில் பிறந்திருக்கிறார்கள்” என்று பொரிஸ்கா ஒரு தடவை சொல்லியிருக்கிறான். அந்தச் சிறுவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே என் விருப்பம். யார் அந்தச் சிறுவர்கள்... அவர்களும் செவ்வாய்க் கோள் சிறுவர்கள்தானா... இல்லை, அவர்கள் வேறா? இந்தக் கேள்விகளுக்கான விடையுடன் உங்களை அடுத்த இதழில் சந்திக்கிறேன்.
(தேடுவோம்...)