மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கற்பிதங்கள் களையப்படும்! - எதார்த்த தொடர் - புதிய பகுதி 1

கீதா இளங்கோவன்
பிரீமியம் ஸ்டோரி
News
கீதா இளங்கோவன்

- கீதா இளங்கோவன்

கற்பிதங்களை ஏன் களைய வேண்டும்? முதலில் எவையெல்லாம் கற்பிதம் என்று கருதப்படுகின்றனவோ அவற்றை கேள்வி கேட்க முடியாது. அங்கு ஒடுக்குமுறை இருக்கலாம், உரிமைமீறல் இருக்கலாம், என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கற்பிதம் ஆயிற்றே, அவற்றை அப்படியே நம்ப வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படித்தான் இந்த ஆணாதிக்க சமுதாயமும், மதங்களும் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக, பெண்கள் தொடர்பான விஷயங்களில் பல கற்பிதங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கற்பிதங்கள்தான் பெண்களை அடிமைப்படுத்தப் பயன்படுகின்றன. ஒன்றை கற்பிதம் என்று உயர்த்தும் போது இன்னொன்று தாழ்த்தப் படுகிறது. எதனையும் உயர்த்தவும் வேண்டாம், எதனையும் தாழ்த்தவும் வேண்டாம். காலங்காலமாக கடைப் பிடிக்கப்படும் கற்பிதங்களை கேள்விகேட்டு, அதற்குப் பின்னால் இருக்கும் உரிமை மறுப்பை கண்டறிவோம்... உடைப்போம்.

நான் நல்ல அம்மாவா?

`நான் நல்ல அம்மா இல்லையா?’ கேட்ட என் தோழியின் கண்கள் நிரம்பியிருந்தன. `என்னாச்சுப்பா?’ என்று அவர் தோளைத் தட்டியதுதான் மாயம், பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. `ஆபீசுக்கும் போயிட்டு, வீட்டிலயும் எல்லா வேலைகளையும் செய்யு றேன். எம் பொண்ணுக்கும் பையனுக்கும் தேவையான எல்லாத்தையும் பாத்துப் பாத்து செஞ்சு கொடுக்கிறேன். என்ன பிரயோஜனம்? உடல் அசதி, தூங்கிட்டேன். இன்னிக்கு காலையில எந்திரிக்க லேட்டாயிருச்சு. டிபன் செய்யமுடியல, பிரெட் ஜாம் சாப்பிடுங்கன்னு சொன்னதுக்கு, `பையன் நீயெல்லாம் ஒரு அம்மாவா'ன்னு கேக்குறான்.’

கற்பிதங்கள் களையப்படும்! - எதார்த்த தொடர் - புதிய பகுதி 1

`விடும்மா இதெல்லாம் ஒரு மேட்டரா?’

`போனவாரம் ஆபீஸ்ல ஆடிட்டிங், பொண்ணு பர்த்டேக்கு லீவ் போட முடியல. அவ கோவிச்சுகிட்டு `உன்னை மாதிரி ஒரு அம்மாவை நான் பார்த்ததே இல்லை’ன்னு திட்டறா... என்ன செய்யறதுன்னே தெரியல. எல்லாத்தையும் விட்டுட்டு எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு தோணுது’ என்று அழுத தோழியின் முகத்தில் உலகத்தின் மொத்த விரக்தியும், களைப்பும் குடி கொண்டிருந்தன.

தான் ஒரு நல்ல அம்மா என்ற பெயரை வாங்க குழந்தை பெற்ற அத்தனை பெண்களும் ஆசைப்படுகிறார்கள். `அம்மா’ என்ற பட்டம் `புனிதமானது’... அதை தான் கெடுத்துவிடக் கூடாது என்று வெகுவாக பிரயத்தனப் படுகிறார்கள். இந்த `புனிதமான’ பட்டத்தால் பெண்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது. வெளியே போய் வேலை செய்யும் பெண்கள், வீட்டில் மட்டுமே வேலை பார்க்கும் இல்லத்தரசிகள் என்று இரு தரப்பினருமே சிரமப்படுகின்றனர். என்றாலும், வெளியே வேலைக்குப் போகும் பெண்களுக்கு சவால்கள் அதிகம்.

ஒரு பெண் நல்ல அம்மாவா என்று தினம் தினம் ஆசிட் டெஸ்ட் வைத்துக் கொண்டே இருக்கிறது அவள் குடும்பமும், இந்த ஆணா திக்க சமுதாயமும். குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பியவற்றை சமைத்துக் கொடுக்க முடிய வில்லையா? `நீ நல்ல அம்மா இல்ல'. குழந்தைகளுடன் உட்கார்ந்து பிராஜக்ட், ஹோம்வொர்க் செய்யவில்லையா? `நீயெல் லாம் ஒரு அம்மாவா?' மனதுக்குப் பிடித்தவாறு மார்டனாக உடை உடுத்தும் பெண்ணா? `குழந்தைங்க தோளுக்கு மேல வளர்ந்துட்டாங்க, எப்படியெல்லாம் டிரஸ் பண்றா பாரு'... `குழந் தைகளுக்கு பரீட்சை இருக்கு, கூட உட்காராம அப்படி என்ன வெளியூர் பயணம் வேண்டியிருக்கு?'

இப்படியெல்லாம் கரித்துக் கொட்டுபவர்கள் அப்பாவை கண்டு கொள்ளாமல் விடுவார்கள். ஓர் ஆண் சம்பாதித்து, குழந்தைகளின் செலவுகளை கவனித்துக் கொண் டாலே போதும், நல்ல அப்பா என்ற பட்டம் கிடைத்துவிடும். ஆனால், அம்மா அந்தக் குழந்தைகளுக்கு அன்றாடம் சமைத்து, சோறூட்டி, அவர்களின் துணிமணிகளைத் துவைத்து, அவர்களுக்குத் தேவை யானதை எடுத்து வைத்து, நேரத்துக்கு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி, அவர்கள் திரும்பி வரும்போது, எல்லாவற்றையும் தயாராக வைத்து, பாடம் சொல்லிக் கொடுத்து, தேர்வின்போது கூடவே உட்கார்ந்து படித்து, உடம்புக்கு முடியாத போது உடனிருந்து கவனித்து என்று அந்தக் குழந்தைகளுக்கான முழுப்பொறுப் பையும் ஏற்க வேண்டியிருக்கிறது. பெண் குழந்தை என்றால் அம்மா வுக்கு இன்னும் சவால்கள் அதிகம். அவள் உடுத்துவது, பேசுவது, சிரிப்பது, வெளியே போவது என்று எல்லாவற்றுக்கும் தாயைத் திட்டு வார்கள். அந்தப் பெண் குழந்தை, தன் விருப்பப்படி இணையைத் தேர்ந்தெடுத்து விட்டாலோ, `குடும்ப மானமே போச்சு, எப்படி வளர்த்திருக்கா பாரு’ என்று தாயை வறுத்தெடுப்பார்கள்.

குழந்தைகள் பெரியவர்களாகி கல்யாணம் செய்துகொண்டு போய்விட்ட பிறகாவது அம்மாவுக்கு சுதந்திரம் கிடைக்குமா என்று பார்த்தால்... வாய்ப்பே இல்லை தோழி! மகளென்றால் அவளுக்குப் பிரசவம் பார்த்து, பேரக் குழந்தையையும் கவனிக்க வேண்டும். வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள், பெரும்பாலும் பிரசவத்துக்காக மட்டும் அம்மாவை வரவழைப்பதும், இவர்கள் போய் உதவுவதும் இங்கே இயல்பாகிவிட்டது. மகனுடன் வசித்தால், அவன் பிள்ளைகளையும் அம்மா வளர்த்தே ஆக வேண்டும்.

செய்ய விருப்பமில்லை என்று இதில் ஒன்றையாவது மறுக்க அம்மா என்ற அந்தப் பெண்ணுக்கு உரிமை உண்டா? மறுப்பதாவது, மாற்றி ஒரு வார்த்தை சொல்லத் துணிந்தால், `நீயெல்லாம் ஒரு தாயா?’ என்ற வசவு பாய்ந்து வரும். அதற்கு பயந்து கொண்டு, தன்னுடைய `புனிதப்பட்டத்தை’ காப்பாற்றிக் கொள்ள பெண்கள் காலமெல்லாம் மாங்குமாங்கென்று உழைக்கிறார்கள்.

உழைப்பு ஒரு புறம் இருக்கட்டும், அம்மா என்ற `புனிதப்பட்டத்தைக்’ காரணம் காட்டி பெண்களுக்கு மிகப்பெரிய மனத்தடையை உருவாக்கி வைத்திருக்கிறது இந்த ஆணாதிக்க சமுதாயம். குழந்தை உள்ள ஒரு பெண், கணவரை இழந் தாலோ, பிரிந்தாலோ, தனித்து வாழ்ந்தாலோ திரும்ப ஓர் இணை யைத் தேர்ந்தெடுத்து மண வாழ்க்கையில் இணைய பெரும் தடையாக இருப்பது அம்மா என்கிற நிலைதான். தனக்கு விருப்பம் இருந்தாலும், குழந் தைகள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயத் தினாலும், தன்னைப் பற்றி கேவல மாக எண்ணிவிடுவார்களோ என்ற தவிப்பினாலும் தன் ஆசைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொள்ளும் பெண்கள்தான் இங்கே அதிகம். தாய் தன் விருப்பத்தை மறுதலித்துவிட்டு வாழ்கிறார் என்று குழந்தைகளுக்குத் தெரிய வந்தாலும், அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், அவள் உணர்வுக்கு மதிப்பளிக் காமல், `ஆமாம், அம்மா என்றால் அப்படித் தான் இருப்பார்’ என்று சாதாரணமாகக் கடந்து போவதைப் பார்க்க முடிகிறது. அதாவது அம்மா `தியாகத் திருவுரு’வாக இருக்க வேண்டும் என்ற பொதுபுத்தியின் எதிர்பார்ப்பைத்தான் குழந்தைகளும் பிரதிபலிக்கிறார்கள்.

தன் நியாயமான ஆசைகளையும், உணர்வு களையும் புறந்தள்ளி, காலமெல்லாம் உழைத்த பின்னும், பிள்ளைகளும், குடும்பத்தினரும் அம்மாக்களை குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். தெரியாமல் தான் கேட்கிறேன், வாழ்நாள் முழுக்க `நல்ல அம்மா’ பட்டத்துக் காக உழைக்கும் நம் பெண்கள் என்றைக்குத்தான் தன் வாழ்க்கையை வாழ்வார்கள்? `தன் வாழ்க்கையா, அப்படி ஒன்று பெண்களுக்கு இருக்கிறதா என்ன, அம்மா என்ற பட்டம் எவ்வளவு புனிதமானது தெரியுமா? குழந்தைகள்தானே அவள் உலகம்’ இப்படித் தான் ஆணாதிக்க பொதுப்புத்தி நம் பெண் களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது.

எளிமையாகச் சொன்னால்... ஓர் ஆண், அப்பா என்ற பட்டத்துக்காக தன் மொத்த வாழ்க்கையையும் தியாகம் செய்வதில்லை. அப்பாவாவது என்பது அவன் வாழ்வின் ஒரு பகுதி, அவ்வளவுதான். ஆனால், ஒரு பெண் தாயானால் அதற்குப் பிறகு அவள் வாழ்க் கையே அதனைச் சுற்றிதான் உழல்கிறது. பெண்ணுக்கு கருப்பை இருக்கிறது; அதன் வழியாக குழந்தை பிறக்கிறது என்பதற்காக குழந்தையை வளர்க்கும் முழுப்பொறுப்பையும் தாயிடம் மட்டும் திணிப்பது நியாயமில்லை. குழந்தையை, தந்தையும், குடும்பமும், ஒட்டு மொத்த சமுதாயமும் சேர்ந்து வளர்க்க வேண்டும்.

தோழியரே, தாயாவது பெண் வாழ்க்கையில் ஒரு ரோல் மட்டுமே. அதற்காக உங்கள் மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணிக்க வேண்டியதில்லை. குழந்தைகளுக்கு கால மெல்லாம் தேவைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், ஒரு புள்ளியில் அவர்களுக்கு சேவகம் செய்வதை நிறுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். இப்படிச் சொல்வதால் அவர்களை வெறுக்க வேண்டும் என்று பொருளல்ல, அவர்கள் தேவைகளை, வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்ளட் டும், அவர்களும் உழைக்கட்டும். நீங்கள் செய்யும் ஓவர் பேரன்டிங்கும் (Over parenting), பேம்பரிங்கும் (Pampering) அவர்கள் தற் சார்புடன், ஆளுமையுடன் வளர்வதைத் தடுக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

அன்பை செலுத்துங்கள், அதே சமயத்தில் உங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழும் உரிமையை அவர்களுக்குப் புரிய வையுங்கள். அதுதான் இயல்பு. உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். பிடித்த இடங்களுக்குப் போங்கள். உங்கள் தோழமை வட்டத்தைப் பெருக்குங்கள். அம்மா என்பது புனிதமும் இல்லை, அடிமை சாசனமும் இல்லை, பொறுப்பு மட்டுமே.

- களைவோம்...

கீதா இளங்கோவன்

பெண்களின் இன்றளவிலும் சந்தித்துவரும் இன்னல்களை வெளிக்கொணரும் வகையில் 'மாதவிடாய்', 'ஜாதிகள் இருக்கேடி பாப்பா' போன்ற ஆவணப்படங்களை இயக்கியவர். சமூகச் செயற்பாட்டாளர். பெண்ணியச் சிந்தனை யாளர். எழுத்தாளர். மத்திய அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்றவர். சமூக வலைதளங்களிலும் ஆக்கபூர்வமான எழுத்துகளாலும் கருத்துகளாலும் சீர்திருத்தச் சிந்தனைகளைத் தொடர்ந்து விதைத்து வருபவர்.