கற்பிதங்கள் களையப்படும்! - எதார்த்த தொடர் - 3 - `இவள் இப்படித்தான்’ என்று தீர்ப்பெழுதாதீர்கள்!

- கீதா இளங்கோவன்
டி.வியில் ஒரு திரைப்படத்தின் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. சில ஆண்டு களுக்கு முன் வெளிவந்து, ஓரளவு வெற்றிகரமாகவே ஓடிய படம். கதாநாயகன் நண்பனிடம், தான் விரும்பும் பெண் பற்றி சொல்கிறான்.
`மச்சி, அவ ரொம்ப நல்ல பொண்ணுடா’
`நீ அவகிட்ட இன்னும் பேசவே இல்லையே, அப்புறம் எப்டிடா சொல்றே’ - இது நண்பன்.
`அரைமணி நேரமா அவளை கவனிச்சுக்கிட்டே இருந்தேன்டா, அவளுக்கு ஒரு போன்கூட வரலை’ என்று சிலாகிக்கிறான் நாயகன்.
எனக்கு சிரிப்பு வந்தது. ஒரு பெண்ணுக்கு செல்போனில் கால் வரவில்லை என்றால் அவள் நல்ல பெண்ணா? ஆணாதிக்க கருத்து, படைப்பாளர்களின் சிந்தனைகளில் எப்படியெல்லாம் ஊடுருவியிருக்கிறது.
செல்போன் இல்லாத காலகட்டத்தில் பெண்கள் யாருடன் பேசுகிறார்கள்... அவனா, அவளா, உறவினரா, நண்பரா என்றெல்லாம் குடும்பத்தாரும், அக்கம் பக்கத்தினரும், பொதுவெளியில் சமுதாயமும் கண்காணித்துக்கொண்டே இருந்தார்கள். `இவள்’ என்றால் பிரச்னையில்லை, `அவனா... சரி யில்லையே’ என்றெல்லாம் அவளது `ஒழுக்கத்தை’ சீர்தூக்கிப் பார்த்து பெண்ணை `கண்டிக்கும்’ வாய்ப்பு எல்லோருக்கும் இருந்தது. ஆனால், பாழாப்போன இந்தத் தொழில்நுட்பம் வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டதாம். பழைமை வாதிகள் புலம்புகிறார்கள்.

செல்போன் அதிகம் புழக்கத்தில் இல்லாத கிராமப் புறங்களிலும், வாங்கும் வசதியில்லாத அடித்தட்டு வர்க்கத்திலும்தான், ஆணாதிக்க பொதுப்புத்தியானது எல்லாப் பெண்களையும், முன்புபோலவே, ஆசுவாசமாக கண்காணித்து வருகிறது. ஆனால், சிறுநகரங்களிலும், நகரங்களிலும், வசதியான குடும்பங்களிலும் பெரும்பாலும் எல்லாப் பெண்களும், தமக்கென்று செல்போன் வைத்திருக் கிறார்கள். கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக் காக, பள்ளி மாணவிகளுக்குக் கூட பெற்றோர் செல்போன் தரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இவையெல்லாம் சேர்ந்து குடும்பத்தினரையும், சமுதாயத்தையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன. `எப்பப் பாரு போனை நோண்டிட்டு இருக்கா...’, `எந்நேரமும் போன்ல யார் கூடவோ பேசிட்டே இருக்கா, கேட்டா ஹோம்வொர்க், நோட்ஸ், செமினார்னு ஏதேதோ காரணம் சொல்றா...’ என்று பள்ளி, கல்லூரி மாணவி களின் பெற்றோர் புலம்புகிறார்கள். வெளிப்படையாகச் சொன்னால் இவை யெல்லாவற்றுக்கும் பின்னால் இருக்கும் பயம், `யாரையாவது லவ் பண்ணிரு வாளோ...’ என்பதுதான்.
`எப்ப போன் வந்தாலும், யாரு போன் பண்ணாங்க... எதுக்கு இந்த நேரத்தில பண்றாங்க... ஏன் இவ்வளவு நேரம் பேசுறே... இப்படி நொய்யி நொய்யின்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேக்குறாங்க... பரீட்சைக்குப் படிப்பேனா, எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருப்பேனா... டென்ஷனாகுது’ என்று பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளம்பெண்கள் புலம்புவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை.
`வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தாச்சில்ல அப்புறம் எதுக்கு ஆபீஸ் கால் எல்லாம் அட்டெண்ட் பண்றே’ போன்ற விமர்சனங்களும், `வொர்க் ஃப்ரம் ஹோம் வந்தாலும் வந்தது, இவ ஆபீஸ் கால்தான் பேசுறாளா, இல்ல வேற யார்கூடவாவது பேசுறாளான்னே தெரிய மாட்டேங்குது’ என்ற புலம்பல்களும் வேலைக்குப் போகும் பெண்களையும் விட்டுவைப்பது இல்லை.
கல்யாணமான பெண் என்றால் கணவனு டன், மாமியார், மாமனாருக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது. ஒவ்வொரு போன் பேசி முடித்தவுடன், `மேனேஜர் பேசினார், நாளைக்கு மீட்டிங் இருக்குதாம்’, `தம்பி பேசினான், நாளைக்கு இங்க வர்றானாம்’, `என் ஃபிரெண்ட் பேசினா, தங்கச்சி கல்யாணத் துக்கு வரச்சொன்னா’, `பக்கத்து தெரு அக்கா பேசினாங்க, பையனுக்கு காய்ச்சலாம்’ என் றெல்லாம் போன்-விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
வீடாக மட்டுமே இருந்த பெண்களின் வெளி இப்போது விரிவடைந்திருக்கிறது. பெண்கள் படிக்கப் போகிறார்கள். பல இடங்களுக்கும் சென்று வேலை பார்க் கிறார்கள். பலருடன் பழகுகிறார்கள். பேசு கிறார்கள். மிகத் திறமையாக செயல்படு கிறார்கள். வெளியுலகத் தொடர்புக்கு செல்போன் இன்றியமையாத சாதனமாகி விட்டது. செல்போனை ஆண்கள் பயன் படுத்தும்போது அக்கறை காட்டாத சமுதாயம், பெண்கள் பயன்படுத்தும்போது மட்டும் பயப் படுகிறது. `யாராக இருக்குமோ?’ என்று பரிதவிக்கிறது. இதற்குப் பின்னால் இருப்பது அவளது `ஒழுக்கம்’ பற்றிய சந்தேகம்தான். எல்லாம் `கற்பு’ என்ற கருத்தாக்கம் படுத்தும் பாடுதான்.
செல்போனில் பேசும் எல்லாப் பெண்களும் காதலர்களுடன்தான் பேசுகிறார்கள் என்பது அதீத கற்பனை தோழர்களே, தோழியரே... முதலில் நம் வீட்டுப் பெண்களுடன் வெளிப் படையாக, நேர்மையாக உரையாடுகிறோமா? கல்யாணமாகாத பெண்களை எடுத்துக் கொள்வோம். நம் வீட்டுப் பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களாக இருந்தால் அவர்களது உலகம் எப்படியிருக்கிறது, அவர்களது பிரச்னைகள், சந்தோஷங்கள் என்ன, வெளியில் சொல்ல முடியாத அழுத் தங்கள் ஏதேனும் இருக்கின்றனவா... என்றெல் லாம் தெரிந்து கொள்ளவேண்டாமா? உங்கள் வீட்டுப் பெண்ணை பற்றி முழுதாக அறிந்து கொள்ள, அவர்களுக்கான நேரத்தை ஒதுக்கி, எந்த முன்முடிவும் இல்லாமல் பேசுகிறீர்களா? இல்லையென்றால் முதலில் அதைச் செய்யுங் கள். உள்ளார்ந்த அன்புடன் அவர்களுடன் உரையாடுங்கள். அனைத்தையும் கொட்டித் தீர்ப்பார்கள். செல்போனால், சமூக ஊடகங் களால் அவளுக்கு ஆபத்து ஏற்படும் என்று நீங்கள் பயந்தால், உங்கள் பயத்தை அவளுக்கு உணர வையுங்கள். உங்கள் மீது நம்பகத்தன்மை ஏற்படுத்துவது மிக முக்கியம். `ஒருவேளை நீ தப்பே செய்தாக்கூட பயப்படாதே, நாங்க உங்கூட இருப்போம்மா, கவலைப்படாம சொல்லு’ என்ற உறுதியை பெண் குழந்தை களுக்குத் தந்தால் போதும். உங்களிடம் எதை யும் மறைக்க மாட்டார்கள். அதை விட்டுவிட்டு செல்போனை கண்காணிக்கிறேன் என்று கிளம்பினால், உறவில் விரிசல்தான் விழும்.
கிட்டத்தட்ட இதேதான் கல்யாணமாகாத, கல்யாணமான, வேலைக்குப் போகும், வேலைக்குப் போகாத பெண்களுக்கும் பொருந்தும். உறவுமுறைகள் மாறலாம். ஆனால், பெண்களின் செல்போன் பேச்சை கண்காணிப்பதற்கான அடிப்படை, முன்பே சொன்னவாறு `அவள் `ஒழுக்கமாக’ இருக் கிறாளா ?’ என்ற பொதுப்புத்தியின் சந்தேகம் தான். இதற்குப் பின்னணியில் இருப்பது, தன் ஜாதியில், மதத்தில் பெண்ணுக்கு ஏற்பாட்டுத் திருமணம் செய்ய வேண்டும் என்பதும், கல் யாணமான பெண், கணவனுக்கு `உண்மையாக’ இருக்க வேண்டும் என்பதும்தான்.
தோழியரே, தோழர்களே... நம் பெண்கள் அறிவானவர்கள். தான் எப்படி வாழ வேண் டும் என்று அவர்களுக்குத் தெரியும். தன் உரிமைகளைப் பயன்படுத்தும் பெண்ணை வெறுக்காமல், முன்முடிவுடன் அணுகாமல், அவள் மீது அன்பு செலுத்துவோம். முதல் கட்டமாக, செல்போனில் பேசுவதை வைத்து `இவள் இப்படித்தான்’ என்று தீர்ப்பெழுதாமல் இருப்போம்.
- களைவோம்...