மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கற்பிதங்கள் களையப்படும்! - 4 - பெண் குழந்தைகளுக்கு பியூட்டி பார்லர்.. ஆண் குழந்தைகளுக்கு ஸ்போர்ட்ஸா?

கற்பிதங்கள் களையப்படும்!
பிரீமியம் ஸ்டோரி
News
கற்பிதங்கள் களையப்படும்!

எதார்த்த தொடர் - கீதா இளங்கோவன்

கண்ணில் நீர் வழிய, குரல் கம்மப் பேசிய அந்தக் குட்டிப் பெண்ணின் முகம் இன்னும் நினைவிலிருக்கிறது. கடந்த ஆண்டு தனியார் பள்ளி ஒன்றில் ப்ளஸ் ஒன் மாணவ, மாணவி யரிடம் பாலின சமத்துவம் குறித்து கலந்துரை யாடிக் கொண்டிருந்தேன்.

பிறப்பில் ஆரம்பித்து பெண் குழந்தைகளிடம் எப்படி பாகுபாடு காட்டப்படுகிறது என்று விவரிக்கையில், எத்தனை பேர் வீட்டில், பெண் என்பதால் குறைவாக சாப்பாடு கொடுக்கிறார்கள் என்று கேட்டேன். அதுவரை வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவர்கள் அமைதி யானார்கள். `அதாவது அக்கா, தம்பின்னு ரெண்டு குழந்தைங்க இருப்பாங்க. தம்பி ஆம்பிளப்புள்ள, நல்லா சாப்பிடணும்னு சொல்லி ஒரு முட்டையோ கறித்துண்டோ அதிகமா வைக்கறது, பால் தயிர்னு அவனுக்கு மட்டும் தர்றது... இப்படி யார் வீட்டுலயாவது செய்யுறாங்களா?’ என்றேன்.

- கீதா இளங்கோவன்
- கீதா இளங்கோவன்

தயக்கமாக ஏழெட்டு கைகள் உயர்ந்தன. ஏற்கெனவே பல பள்ளிகளில் பார்த்திருக்கிறேன், என்றாலும் இங்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அந்தப் பள்ளி கணிசமான தொகையை கல்விக் கட்டணமாகக் கட்டி உயர்-நடுத்தர, மேல்தட்டு வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளி. அங்கேயுமா!?

`யாராவது பேசணுமா...’ மென்மையாகக் கேட்டேன். உணவு விஷயத்தில் பெற்றோரை குறை சொல்வது சங்கடமாக இருக்கும் என்ப தால், இதற்கு முன்பு அரசுப்பள்ளிகளில்கூட மாணவிகள் இந்த விஷயத்தை வெளிப்படையாகப் பேசியதில்லை. இங்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தபோது, ஒரு குட்டிப் பெண் கை உயர்த்தினாள். மைக்கை வாங்கி, `மேடம், எங்க வீட்டுல தம்பிக்கு ரெண்டு தோசைன்னா எனக்கு ஒரு தோசைதான் அம்மா தர்றாங்க. அவனுக்கு அடிக்கடி பிரெட் ஆம்லெட் தருவாங்க. எனக்கு வெறும் பிரெட்தான். எனக்கும் முட்டை குடும்மான்னு கேட்டா, ஏற்கெனவே குண்டா இருக்கே இன்னும் குண்டாயிடுவேன்னு, அப்பா தரக் கூடாதுன்னு சொல்லியிருக்காருங்கறாங்க....’ என்று குரல் கம்ம சொன்னவள், `ஸ்கூல்ல ஸ்நாக்ஸ் வாங்கிச் சாப்பிடக்கூட எனக்கு காசு தர்றதில்லை... எனக்கு பசிக்குது மேடம்’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள். என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. மனது கனமானது.

அந்தப் பெண்ணுக்கு மிஞ்சிப் போனால் பதினைந்து, பதினாறு வயதுதான் இருக்கும். இந்த வயதிலிருந்தே ஒல்லியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், அதற்காக உணவைக் குறைப்பதும் என்ன நியாயம்? பசியோடு இருக்கும் அந்தக் குழந்தையால் வகுப்பில் கவனம் செலுத்த முடியுமா, ஈடுபாட்டோடு படிக்கத்தான் முடியுமா?

பெண் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது வேறு, ஒல்லி யாக இருக்க வேண்டும் என்பது வேறு தோழி களே. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் தோழர் களே... பெண் குழந்தை குண்டாவதற்கு உணவு மட்டுமே காரணம் அல்ல. குறைவாகச் சாப் பிட்டும், மரபணு காரண மாக குண்டான உடல் வாகோடு பல பெண்கள் இருக்கிறார்கள். சீரற்ற ஹார்மோன்களும் காரண மாக இருக்கலாம். உணவை எவ்வளவு குறைத்தாலும் இவர்களால் ஒல்லியாக முடியாது.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஒரு வேளை அதிக உணவினால் அந்தக் குழந்தை குண்டான தாகவே இருக்கட்டுமே, அதிக சத்தும், போஷாக்கும் தேவைப்படும் குருத்துப் பருவத்தில் சாப்பாட்டைக் குறைத்தால், சத்துக் குறைபாடு ஏற்படும், நோய் எதிர்ப்புச் சக்திதான் குறையும். இரும்புச்சத்து குறை பாட்டால் அனீமியா வந்து அவதிப்படும். உடல் எடை குறைகிறதோ இல்லையோ, அவள் நோயாளியாகிவிடுவாள்.

அந்தக் குழந்தையின் அவலநிலைக்கு அவள் பெற்றோர் மட்டும் காரணமில்லை. பெண் குழந்தை என்றால் ஒல்லியாகத்தான் இருக்க வேண்டும் என்று மூளைச்சலவை செய்யும் ஆணாதிக்க பொதுப்புத்தியும், விளம்பரங்களும், மீடியாவும் முக்கிய காரணம். குண்டான பெண் குழந்தைகளையும், பெண் களையும் கிண்டலடித்து `பாடி ஷேமிங்’ (Body shaming) செய்யும் திரைப்படங்கள் மற்றொரு காரணம்.

அறுபதுகளில் எல்லாம், இந்த மண்ணின் இயல்பான, குண்டான உடல்வாகுடைய பெண்கள்தான் சினிமாவை ஆண்டார்கள். சாவித்திரியும், பத்மினியும், கே.ஆர்.விஜயாவும் வெற்றிகரமான நாயகிகளாக வலம் வந்தார்கள். அதற்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களால் - உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அழகு சாதனப் பொருள்களின் வர்த்தகச் சந்தையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியால் - ஒல்லி தான் அழகு, `ஜீரோ சைஸ்’ தான் பேரழகு என்ற மூளைச்சலவையை கார்ப்பரேட் நிறுவனங் களும், மீடியாவும் தீவிரமாக முன்னெடுத்தன.

இல்லையில்லை, பெண் குழந்தை ஆரோக் கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒல்லியாக இருக்கச் சொல் கிறோம் என்று யாரும் சப்பைக்கட்டு கட்டாதீர்கள். இங்கே ஒல்லி என்பது அழகு என்பதாகத்தான் பார்க்கப் படுகிறது. பெண் குழந்தை வயதுக்கு வந்தவுடன், புருவத்தைத் திருத்தவும், முகத்தைப் பொலிவாக்க ஃபேஷியல் செய்யவும் பியூட்டி பார்லர் தானே அழைத்துப் போகிறார்கள் தோழிகளே. அதுவே பருவ வயதில் இருக்கும் ஆண் குழந்தை என்றால் ஃபுட்பால் குழுவிலும், பாஸ்கெட்பால் குழுவிலும், ஜிம்மிலும்தானே சேர்க்கிறார்கள் தோழர்களே.

பெண் குழந்தையின் அழகிலும், ஆண் குழந்தையின் உடல்வலிமையிலும்தானே அக்கறை காட்டுகிறது குடும்பமும், சமு தாயமும். இரண்டும் மனித உடல்கள்தானே, வலிமையும், ஆரோக்கியமும் இருபாலருக்கும் தானே... ஏன் இந்தப் பாகுபாடு? ஏனென்றால், பெண் கல்யாணத்திற்காக வளர்க்கப்படுகிறாள், வார்க்கப்படுகிறாள். கல்யாணச் சந்தையில் ஒல்லியான பெண்களுக்குத்தானே கிராக்கி. அவள் அறிவும், படிப்பும், வேலையும் இரண்டாம்பட்சம்தானே.

மோசமான இந்த நிலையை மாற்ற வேண்டும். ஒல்லியோ, குண்டோ அவர்கள் நம் பெண் குழந்தைகள். அவர்களுக்கு உணவில் பாகுபாடு காட்டுவது நியாயமற்றது மட்டுமல்ல, மனித உரிமை மீறலும் கூட. பெண் குழந்தைகளுக்குப் போதுமான அளவில் சத்தான உணவு கொடுங்கள். சிறு வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டவும், ஓடி விளையாடவும் ஊக்கம் அளியுங்கள். அவர்கள் பருவமடைந்தவுடன், பியூட்டி பார்லர் கூட்டிப்போகாமல், விளையாட்டு மைதானத்துக்கும், ஜிம்முக்கும் அழைத்துப் போய் உடலை வலுவாக்க சொல்லிக் கொடுங்கள். வலிமையான உடல்தான் தன்னம்பிக்கை தரும், எந்தச் சவாலையும் எதிர்த்துப் போராட வைக்கும். ஒல்லிதான் அழகு என்ற கற்பிதத்தைத் தூக்கி குப்பையில் போடுவோம் தோழிகளே.

- களைவோம்...

கற்பிதங்கள் களையப்படும்! - 4 - பெண் குழந்தைகளுக்கு பியூட்டி பார்லர்.. ஆண் குழந்தைகளுக்கு ஸ்போர்ட்ஸா?
கற்பிதங்கள் களையப்படும்! - 4 - பெண் குழந்தைகளுக்கு பியூட்டி பார்லர்.. ஆண் குழந்தைகளுக்கு ஸ்போர்ட்ஸா?