மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கற்பிதங்கள் களையப்படும்! - 5 - பிரச்னைகளை மற்றவரிடம் பகிர்வது தவறா?

கற்பிதங்கள் களையப்படும்
பிரீமியம் ஸ்டோரி
News
கற்பிதங்கள் களையப்படும்

எதார்த்த தொடர் - கீதா இளங்கோவன்

- கீதா இளங்கோவன்
- கீதா இளங்கோவன்

நாற்பதுகளில் இருக்கும் எதிர்வீட்டுப் பெண் திடீரென மயங்கி விழ, மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். இசிஜி உட்பட எல்லா டெஸ்ட்டுகளும் எடுத்தனர். உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகவும், தினமும் பிபி மாத்திரை போட வேண்டும் என்றும், கை நிறைய மருந்துகளுடன் வீடு திரும்பினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்தப் பெண் தினமும் வாக்கிங் போவார். உணவிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்வார். `அப்படியும் இப்படி நடக்குமா?' என்று தெரிந்த மருத்துவரிடம் கேட்டேன். `ஸ்ட்ரெஸ்தான் காரணம்' என்றார் அவர்.

`பெண்கள் தங்கள் பிரச்னைகளை வெளியே பேசாமல், உள்ளுக்குள் வைத்துக் கொண்டு மன அழுத்தத்தால் அவதிப் படுகின்றனர், இதனால் உடற்பயிற்சி, உணவு சரியாக இருந்தாலும்கூட பிபி வரு கிறது, சில பெண்களுக்கு பிபி இருப்பது தெரியாமலே திடீரென மாரடைப்பு வந்து இறந்துகூடப் போய் விடு கின்றனர்' என்று அவர் விளக்கியபோது அதிர்ச்சி யாக இருந்தது.

பெண்கள் தங்கள் பிரச்னைகளை ஏன் பிறரிடம் பகிர்ந்து கொள்வதில்லை? இதற்குப் பின்னால் இருப்பது, வீட்டு விஷயத்தை பெண்கள் வெளியே சொல்லக்கூடாது என்றொரு கற்பிதம்தான். கணவனாலோ, குடும்பத்தினராலோ, உறவினர்களாலோ, ஏன் குழந்தைகளாலோகூட ஒரு பிரச்னை ஏற் பட்டால், அந்தப் பெண்ணால் நெருங்கிய தோழியிடம்கூட சொல்லி, ஆற்றிக் கொள்ளவோ, தீர்வு காணவோ முடியாது.

`வீட்டு விஷயத்தை ஏன் வெளியே சொல்றே? நீயெல்லாம் ஒரு குடும்பப் பெண்ணா?’ என ஏசுவார்களோ என்ற பயத்தினால் பெரும்பான்மை பெண்கள், குறிப்பாக நடுத்தர, மேல்தட்டுப் பெண்கள், தமக்குள்ளே போட்டு புதைத்துக் கொள் கிறார்கள். அடித்தட்டுப் பெண்களோ, குடும்பப்பெண் கற்பிதங்களுக்குள் எல்லாம் சிக்கிக்கொள்வதில்லை. ஒரு பிரச்னை என்றால் வெளிப்படையாக அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி, யார் பிரச்னை செய்கிறார்களோ அவர்களிடம் நேரடியாகப் பேசி, சண்டையிட்டு தீர்த்துக் கொள்கிறார்கள் அல்லது விலகிப் போகிறார்கள். மனதுக்குள் வைத்துக்கொண்டு குமைவதில்லை.

நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தில், படித்து விட்டு வேலை பார்க்கும் பெண்ணோ, இல்லத் தரசியாக வீட்டில் இருக்கும் பெண்ணோ தன் அழுத்தங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவித்து, அது உயர் ரத்த அழுத்தத்தில் போய் முடிகிறது. வெளியில் பிரச்னை என்றால் குடும்பத்தில் பகிர்ந்துகொள்ளலாம். குடும்பமே பிரச்னை என்றால் என்ன செய்வது? தோழிகளே, தேவையற்ற கற்பிதங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, உங்கள் பிரச்னைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ளத் தான் வேண்டும்.

கற்பிதங்கள் களையப்படும்! - 5 - பிரச்னைகளை மற்றவரிடம் பகிர்வது தவறா?

யாரிடம் பகிர்வது ? நல்ல கேள்வி. உங்களுக்கு நம்பிக்கையான நெருங்கிய தோழியிடம் சொல்லலாம். `அவள் என்னை பற்றி என்ன நினைப்பாள்... என் குடும்பத்தை பற்றி என்ன நினைப்பாள்?’ என்றெல்லாம் எண்ணி குழப்பிக்கொள்ளாதீர்கள். வீட்டுக்கு வீடு வாசல்படிதான். இங்கு எல்லாருக்கும் ஏதோ ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் தனியாள் இல்லை. உங்கள் தோழி ஓரளவு நம்பிக்கைக்கு உகந்தவராக, நீங்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கக் கூடியவராக இருந்தாலே போதுமானது. (தோழி நான் சொல்வதை வெளியே சொல்லிவிட்டால் அவமானமாகிவிடுமே, மற்றவர்கள் என்னை பற்றி என்ன நினைப் பார்கள் என்றெல்லாம் தேவையில்லாமல் குழப்பிக்கொள்ளாதீர்கள்; அவரவருக்கு அவர் பிரச்னை, உங்கள் பிரச்னையை பெரும் பாலும் வெளியே சொல்லமாட்டார்கள்; ஒரு வேளை அப்படியே சொல்லிவிட்டால்தான் என்ன மோசம் போயிற்று? மன அழுத்தம் கூடி உயிர் போவதைவிட, இது பரவாயில்லை.)

சில விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டாலே, மனது லேசாகிவிடும். நீங்களே தீர்வை கண்டுபிடித்துவிடுவீர்கள். அப்படி இல்லாவிட்டால் தோழியிடம் ஆலோசனை கேட்கலாம். அவர் சொன்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லை. உங்களுக்கு சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது சிந்திக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். சிறிது காலத்தில் நீங்களாகவே தீர்வினைக் கண்டு பிடிப்பீர்கள்.

தோழியிடம்தான் பேச வேண்டும் என்பதில்லை. நம்பிக்கையான ஆண் நண்பர் இருந்தால் அவரிடமும் சொல்லலாம். கல்யாணத்துக்குப் பிறகு பெரும்பான்மை பெண்களுக்கு தோழிகளின் வட்டம் சுருங்கி விடுகிறது அல்லது இல்லாமல் போய்விடுகிறது. தோழிகளுக்கே இந்த நிலை என்றால் ஆண் நண்பர்களை பற்றி கேட்கவே வேண்டாம். புரிந்துணர்வு இல்லாத சராசரி குடும்பங் களுக்குப் போகும் பெண்கள், `எதுக்குடா வம்பு’ என்று, தன்னுடைய நல்ல ஆண் நண்பர்களைக் கூட தவிர்த்து விடுகிறார்கள். இதில் தப்பிப் பிழைப்பவர்கள் சொற்பமே. அது ஒருபுறம் இருக்கட்டும்.

பெண்களிடம் ரகசியம் தங்காது, தோழிகள் என்றாலே வம்பு பேசுவார்கள் என்றெல்லாம் காலங்காலமாக இந்த ஆணாதிக்க பொதுப் புத்தி கூறி வந்திருப்பது வெறும் கற்பிதமே. பெண்கள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாதே என்ற பயத்தின் வெளிப்பாடுதான் அவை. அதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, நம்பிக்கையான தோழமை வட்டத்தை உருவாக்குங்கள் தோழியரே. குறைந்தபட்சம், உங்கள் மனநலத்தை முன்னிட்டாவது. நட்பு வட்டத்தை உருவாக்க, உழைக்க வேண்டும். ஒத்த கருத்துடைய தோழிகளைக் கண்டறிந்து, அவர்களுடன் பழகி, பொதுவான விஷயங் களைப் பேச ஆரம்பியுங்கள். காலப்போக்கில் நம்பிக்கையானவர்களை நீங்களே தேர்ந் தெடுத்து தனிப்பட்ட விஷயங்களை பகிர ஆரம்பித்துவிடுவீர்கள். என் அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்.

`எனக்கு தோழிகளே இல்லை, என்ன செய்வது?’ என்ற குரல்களும் கேட்கின்றன. பரவாயில்லை, மனநல ஆலோசகரைப் பாருங்கள். இப்படிச் சொன்னபோது `எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?’ என்று ஒரு தோழி என்னிடம் சண்டைக்கு வந்தார். `செல்லம், நம் உடம்புக்கு காய்ச்சல் வந்தா டாக்டர்கிட்ட போறதில்லையா, அது மாதிரி மனசுக்கு ஒரு பிரச்னை வர்றப்ப ஏன் தயங்கணும்? அவர் உங்க பிரச்னைகளைப் பொறுமையா காது கொடுத்துக் கேட்பார், சரியான ஆலோசனைகள் சொல்வார்’ என்று அவருக்கு விளக்கினேன்.

கற்பிதங்கள் களையப்படும்! - 5 - பிரச்னைகளை மற்றவரிடம் பகிர்வது தவறா?

மனநல மருத்துவரிடமோ, மனநல ஆலோசனை குறித்து முறையான கல்வி பயின்ற தெரபிஸ்ட் எனப்படும் ஆலோச கரிடமோ செல்வதில் தவறொன்றும் இல்லை தோழியரே. வெளிநாடுகளில், உணவகத்துக்குப் போய் டீ குடிப்பதைப் போல, தெரபிஸ்டிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிப் போய் பார்ப்பது மிக இயல்பானது. அது நமது மனநலனுக்கு உகந்தது. யாரும் அதை தவறாகப் பார்ப்பதில்லை. நம் நாட்டில்தான் பலர் இன்னும் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த பல தோழிகள் தெரபிஸ்ட்டி டம் போய், முறையான கவுன்சிலிங்குக்கு பிறகு மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வரு கிறார்கள்.

தோழிகளே, தேவையில்லாத அழுத்தங்களை வெளியே சொல்லாமல் சுமந்து கொண்டு நோயாளியாக அலைய வேண்டாமே.

நம் பிரச்னைகளை வெளியே பேசுவோம், நம்பிக்கையான வெளியில் பகிர்ந்து கொள்வோம். மண்ணில் நல்லவண்ணம் வாழலாம், மகிழ்ச்சியாகவே.

- களைவோம்...