கற்பிதங்கள் களையப்படும்! - 6 - ‘அப்பாவி’ என்ற அடையாளத்தில் பெருமை வேண்டாம் பெண்களே..!

எதார்த்த தொடர் - கீதா இளங்கோவன் - படம்: மதன்சுந்தர்
`ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ... உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ!’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் நெருடத் தவறுவதில்லை. உலகம் என்றால் என்ன என்று அறிந்திடாத பெண்ணை எப்படியெல்லாம் புகழ்ந்து பாடல் எழுதி யிருக்கிறார்கள் பாருங்கள். உலகத்தை அறிந்திடாதவள் என்பது நல்ல பெண்ணா வதற்கு ஒரு தகுதியா? அன்றிலிருந்து இன்று வரை, திரைப்படங்களிலும் வெகுளியான பெண்தான், நல்ல பெண் என்ற கற்பிதத்தை தொடர்ந்து தூக்கிப்பிடிக்கிறார்கள்.
`அவங்க ரொம்ப நல்ல பொண்ணுங்க, வெளியுலகமே தெரியாத வெகுளி’, ‘அருமையான பொண்ணுபா வீட்டைத் தவிர ஒண்ணும் தெரியாது’, `ஆளுதான் வளர்ந்திருக்காங்களே தவிர அவங்க ஒண் ணுமே தெரியாத குழந்தைங்க’- இப்படி யெல்லாம் சிலர் சிலாகிப்பதைக் கேட்டிருப் போம். ஒரு பெண்ணுக்கு வீட்டைத் தவிர தன்னைச் சுற்றி இருக்கும் ஊரும் உலகமும் எப்படி இருக்கிறது, எப்படி இயங்குகிறது என்று தெரிந்திருக்க வேண்டாமா? அது மிகவும் அவசியமான அறிவு அல்லவா! உலகத்தை பற்றி, இங்கு வாழும் மனிதர் களை பற்றி ஒன்றும் அறியாத பெண்ணால் தன்னம்பிக்கையுடனும் துணிவுடனும் எல்லோரையும் எதிர்கொண்டு எப்படி வாழ முடியும்?
ஒன்றும் தெரியாத பெண்ணைப் பாராட் டுவதும், அவள் நல்லவள் என்று புகழ்வதும் பெண்ணுக்கு ஆபத்தான கற்பிதம். அப்புறம் ஏன் சிலாகிக்கிறது இந்தப் பொது புத்தி? ஏனென்றால் அப்படி ஒரு பெண்ணைத் தான் இந்த ஆணாதிக்க சமுதாயம் எதிர்பார்க்கிறது. பெண்ணுக்கு வீட்டையும், தன் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளத் தெரிந்தால் போதுமானது. வெளியுலகம் தெரிந்திருக்க வேண்டியதில்லை, கல்வி கற்று, வேலைக்குச் சென்று பொருளீட்ட வேண்டிய தில்லை. அதனால்தான் பெரும்பான்மை பெண்களுக்கு வேலைக்குச் செல்லவே அனுமதியில்லை.

வேலைக்குப் போய், பொருளாதார தற்சார்பு பெற்று விட்டால், பெண்ணுக்கு தன் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வும், வெளி யுலக அறிவும் வந்துவிடுமே... தன்னை அடிமைப்படுத்தும் மதங்களைப் பற்றியும், கொடுமையான சாதியக் கட்டமைப்பு குறித் தும் அறிந்துகொண்டு எதிர்க்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது, அவற்றை எப்படி கட்டிக்காப்பது என்று இந்த ஆணாதிக்க சமுதாயம் அஞ்சுகிறது. முடிந்தவரை பெண் வேலைக்குப் போகாதவாறு பார்த்துக் கொள் கிறது. `நீ குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும்மா, வெளியே போய் கஷ்டப்படாதே’ என்று அவளை வீட்டுக்குள் பொத்திப் பாதுகாக்கிறது. இந்தக் கட்டுப்பாடு களால்தான், நமது நாட்டில் கிட்டத்தட்ட முப்பது மூன்று சதவிகிதப் பெண்கள் மட்டுமே வெளிவேலைகளுக்குச் செல்ல முடிகிறது. மீதி பேர் வீட்டில்தான் முடங்கியுள்ளனர்.
`வீட்டில்தானே இருக்கே’ என்று, சமையல் வேலை, கணவர், குழந்தைகள், வயதான மாமியார், மாமனாரைப் பார்த்துக்கொள்வது, வீட்டைச் சுத்தப்படுத்துவது என்று பெண்கள் தன் உழைப்பையும், நேரத்தையும் முழுவதுமாக குடும்பத்திற்கே அளிக்குமாறு பார்த்துக் கொள் கிறது இந்தச் சமூகம். தினசரி உழைப்புக்கிடையே, நாளிதழ்கள், நூல்கள் படிப்பதற்கும், சமூக ஊடகங்களில் எழுதுவதற்கும், தொலைக்காட்சி பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்குவது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சாமர்த்தியம். அப்படிச்செய்து தன் அறிவை விரிவுபடுத்தும் பெண்களை, குடும்பத்தினர் பெரிதாக ஊக்கப் படுத்துவதில்லை. மாறாக, `இதெல்லாம் தெரிஞ்சு என்ன செய்யப்போற’ `சட்டி பானை கழுவறதுக் கும், சட்னி அரைக்கறதுக்கும் இதெல்லாம் தேவையா?’ என்றெல்லாம் விமர்சிப்பார்கள். செய்யும் வீட்டு வேலைகளில் ஏதேனும் குறை கண்டுபிடித்து, `மத்ததெல்லாம் கவனம் இருந்தா இப்படித்தான். ஒழுங்கா வீட்டு வேலை பாப்பியா, எழுதறேன், படிக்கிறேன்னு வேண்டாத விஷயங்களை செஞ்சுட்டு இருக்கே’ என்று கோபப்படுவார்கள்.

வேலைக்குப் போகும் பெண்கள் இதே விஷயங்களில் கவனம் செலுத்தினாலும், பெரும் பாலானவர்களுக்கும் அதே கதிதான். `வேலைக்குப் போனமா, வீட்டை கவனிச் சோமான்னு இருக்கணும். மத்ததெல்லாம் வீண் வேலை’ என்ற அறிவுறுத்தல்களைத்தான் கேட்க வேண்டியுள்ளது. இதையும் தாண்டி வேலைக்குப் போகும் பெண்கள், பொதுத்தளத்தை குறித்தும், பணி தொடர்பாகவும் தாமாக அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
வேலைக்குப் போகும், போகாத பெண்கள், சமகால அரசியல், இயக்கம், இலக்கியம், தொழிற் சங்கம் சார்ந்த கூட்டங்களுக்குப் போக ஆசைப் பட்டால், தீயை மிதித்தது போல குடும்பமும், உறவுகளும் பதற்றப்படும். `இங்க ஆயிரம் வேலை இருக்கு, அத விட்டுட்டு, கூட்டம், மேடைன்னு போனா, குடும்பம் எப்படி உருப் படும்?’ என்ற கேள்விக்கணைகள் பாய்ந்து வரும்.
எல்லாவற்றையும் எதிர்கொண்டு, ஓரளவு உலக விஷயங்களையும், சமூக அறிவையும், அரசியல் ஞானத் தையும் வளர்த்துக்கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண், குடும்பத்திலும் பொதுத் தளத்திலும் எதிர்கொள்ளும் விமர் சனங்கள் ஏராளம். `அவ ரொம்ப விவரம்’ என்று காழ்ப்புணர்வுடன் கமென்ட் அடிப்பார்கள். அவள் `ஒழுக்கத்தை’ வன்மத்துடன் கிசுகிசுப் பார்கள். இவற்றையும் புறந்தள்ளும் துணிச்சலான பெண்ணை `திமிர் பிடிச்சவ’ என்று தூற்றுவார்கள்.
இந்தத் தொந்தரவுக்கு, ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் நல்லவள் என்று பெயர் எடுத்துவிடலாமே என்றுகூடத் தோன்றலாம் தோழி யரே. ஆனால், முக்கியமான ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. தனிப் பட்ட, சமுதாயப் போராட்டங் களுக்கிடையே படித்து, ஒவ்வொரு துறையிலும் கால் பதித்து, நாம் எளிதாக நடக்க பாதை வகுத்துக் கொடுத்த நம் முன்னோடிப் பெண்களால்தான் நமது இன்றைய முன்னேற்றம் சாத்தியப்பட்டுள்ளது.
எல்லா சவால்களையும் கடந்து, இன்றைக்கு பெண்கள் மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக, விஞ்ஞானிகளாக, பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களாக, வங்கிகளின் இயக்குநர்களாக, விளையாட்டு வீராங்கனைகளாக கோலோச்சி வருகிறார்கள். ஆனால், இந்த ரோல் மாடல்களை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதில் பல ஊடகங்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை. விளம்பரங்களில் வரும் பெண்கள் எல்லாம் பெரும் பாலும் மருத்துவர்களாக, `என் குடும்பத்தின் ஆரோக் கியம் எனக்கு முக்கியம்’ என்று சோப்பையும், சுத்தம் செய்யும் திரவத்தையும், ஊட்டச்சத்து பானங்களையும் பரிந்துரைப்பவர்களாகவே இருக்கிறார்கள். வீட்டை இப்படிக் கட்ட வேண்டும், பாலத்தை இப்படி அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் கட்டடப் பொறியாள ரான பெண்களை விளம்பரங்கள் காட்டுவதில்லை. ஆனால், உண்மையில் ஏகப்பட்ட கட்டடப் பொறி யாளர் பெண்கள் இத்துறையில் சாதித்துக் கொண்டுள்ள னர். தொலைக்காட்சி விவாதங்களில் வரும் துறைசார் நிபுணர்கள் ஆண்களாகவே இருப்பதன் மர்மம் என்ன? நிதி ஆலோசகராகவும், ராக்கெட் விஞ்ஞானியாகவும் இருக்கும் பெண்கள் ஏன் அழைக்கப்படுவதில்லை?
ஏனென்றால், யதார்த்தத்தில் பெண்கள் நிலைக்கும், ஊடகங்கள் சித்தரிக்கும் பொதுபிம்பத்திற்கும் நிறைய இடைவெளி இருக்கிறது. இதற்குப் பின்னால் இருப்பது ஏற்கெனவே நான் குறிப்பிட்ட ஆணாதிக்க சமுதாயத் தின் அரசியல்தான்.
தோழிகளே, `ஒண்ணுமே தெரியாத அப்பாவி, நல்ல பொண்ணு’ என்ற கற்பிதத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அதனை முதலில் தூக்கியெறிவோம். உலக நிலவரம், சமுதாய அமைப்பு, சமூகநீதி, சமத்துவம், அரசியல், மதங்கள்-சாதியக் கட்டமைப்பின் ஆதிக்கம், அறிவியல்-தொழில் நுட்பம், நிதி நிர்வாகம், உளவியல் என்று அனைத்தையும் படிப்போம். தெரிந்து கொள்வோம். விஷயம் தெரிந்த பெண்ணை `அவங்களா, உலகம் தெரிந்த அறிவான பெண்ணாச்சே’ என்று பாராட்டு வோம் தோழர்களே. ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்த மனிதவளத்தில் பாதி பெண்களின் கையில் இருக்கிறது. அவர்களின் அறிவாற்றலை மதித்து அங்கீகரித்தால் சமுதாயத்தில் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழ்வது நிச்சயம்.
- களைவோம்...