மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கற்பிதங்கள் களையப்படும்! - 7 - ‘ஆண்களின் உடல்வலிமை, பெண்களுக்கு இல்லவே இல்லை...’ என்ன உண்மை?

கற்பிதங்கள் களையப்படும்
பிரீமியம் ஸ்டோரி
News
கற்பிதங்கள் களையப்படும்

எதார்த்த தொடர் - கீதா இளங்கோவன் - படம்: மதன்சுந்தர்

`மல்லிகைப்பூ

விற்கும்

ரோஜாப்பூ!’


- பூ விற்கும் பெண்ணை சிலாகித்து ஒருவர் இப்படி எழுதியிருந்த கவிதை வரி முகநூலில் தென்பட்டது. பெண்ணை பூவாக வர்ணித்து இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் எழுதுவார்களோ? எத்தனையோ நவீன இலக்கிய வடிவங்கள் வந்தாலும், `பெண்... பூ... புஷ்பம்...’ என்ற சிந்தனை இன்றும் தொடர்வது நெருடுகிறது. உலக மகளிர் குத்துச்சண்டையில் சாதனை படைத்த மேரி கோம் பற்றி, டென்னிஸில் கலக்கிய சானியா மிர்சா குறித்து, பேட் மின்டனில் ஒலிம்பிக் பதக்கம் வாங்கிய பி.வி.சிந்துவை பற்றியெல்லாம் யாராவது கவிதை எழுதியிருக்கிறார்களா என்று தேடித் தேடிப் பார்த்தேன். ஒன்றும் தென் படவில்லை. ஏன் அவர்களைப் பற்றி யாரும் கவிதைகள் எழுதுவதில்லை? அவர்கள் உடல்வலிமையால் விளையாட்டில் சாதித் தார்கள் என்பதாலா? இல்லை, படைப்பாளி களின் `மலரைப் போன்றவள்’ என்ற வர்ண னையை உடைக்கிறார்களே, அதனாலா?

`நீங்கள் சொல்லும் பெண்கள் எல்லாம் விதிவிலக்கானவர்கள். பெரும்பாலான பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள். ஆண்களைவிட வலிமை குறைந்தவர்கள்’ என்று நண்பர் ஒருவர் வாதிட்டார். நான் அதிர்ச்சியுடன் பார்க்க, `நீங்கள் குறிப்பிட்ட விளையாட்டுத்துறையையே எடுத்துக் கொள்ளுங்கள். ஓட்டப்பந்தயத்தில் ஆண் களுக்கு அதிக தூரமும், பெண்ணுக்கு அதை விட குறைந்த தூரமும் ஏன் வைத்திருக் கிறார்கள்... ஒவ்வொரு விளையாட்டிலும் ஆணுக்கு அதிக வரையறையும், பெண்ணுக்கு அதைவிட குறைந்த வரையறையும் ஏன் நிர்ணயித்திருக்கிறார்கள்... சமமாக ஏன் வைக்கவில்லை... ஏனென்றால் பெண்கள் ஆண்களைவிட உடல்வலிமை குறைந்த வர்கள்’ என்றார். அவர் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லையே தோழிகளே... சரி வாருங்கள், `பெண்கள் உடல் பலவீன மானவர்களா’ என்ற கற்பிதத்தை ஆராய்ந்து பார்த்து விடுவோம்.

இந்த உலகின் ஆதித்தாய் மிக வலிமை கொண்டவளாக இருந்திருப்பாள். ஏகப்பட்ட குழந்தைகளைப் பெற்றுப் போட்டு, வேட்டை யாடி அவர்களுக்கு உணவளித்து, பராமரித்து, தனக்கு ஏவல் வேலை செய்யும் பெரிய ஆண் குழுவுக்கே தலைவியாக எல்லாவற்றையும் நிர்வகித்திருப்பாள். அவளின் வழித்தோன்றல் களாக வந்த பெண்களும், ஆண்களுக்கு வழி காட்டிகளாக, அவர்களைவிட அதிக உடல் வலிமையுடன்தான் இருந்திருப்பார்கள். ஆனால், அதன் பிறகு ஏற்பட்ட மாற்றங்களால், தாய்வழிச் சமூகமாக இருந்த நம் சமூகம் ஆணாதிக்க சமூகமாக ஆனது. தன் ரத்தம், தன் வாரிசை மட்டும் பெற்றுத் தர வேண்டும் என்று பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக் கிய ஆணாதிக்கம், அவர்கள் உடல்வலிமையைக் குலைத்தது.

`உண்டி சுருங்குதல் பெண்டிருக்கு அழகு’ என்றெல்லாம் இட்டுக்கட்டி, அவள் சாப் பாட்டில் கைவைத்தது. அவள் சக்திக்கு மீறி வேலை வாங்கிவிட்டு, குறைந்த அளவில் சத்தில்லா உணவை தொடர்ந்து அளித்தது. இதன் விளைவாக, ஆணைவிட வலிமை பெற்றிருந்த ஆதித்தாயின் வழித்தோன்றல்கள், படிப்படியாக ஒடுக்கப்பட்டு அவனைவிட வலிமை குறைந்தவர்களாக ஆகிவிட்டனர். இதைப் பிடித்துக்கொண்ட ஆணாதிக்க சமுதாயம், ஒருபடி மேலே போய் `பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள், அவர்களால் கடின வேலைகளைச் செய்ய முடியாது’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அப்படியா?

கற்பிதங்கள் களையப்படும்! - 7 - ‘ஆண்களின் உடல்வலிமை, பெண்களுக்கு இல்லவே இல்லை...’ என்ன உண்மை?

இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பெண் களும் காலமெல்லாம் உழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். மிக வசதியான மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு தரப்பைத் தவிர, எல்லா வர்க்கங்களிலும், எல்லா இனங் களிலும் பெண்கள் உடல் உழைப்பை அளித்த வாறு உள்ளனர். கிராமங்களில் குடிநீருக்காக ஐந்தாறு கிலோமீட்டர் நடந்து சென்று, தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடம் என்று சுமந்து வருவது, விவசாய வேலைகள், ஆடு மாடுகளைப் பராமரிப்பது, கூலி வேலைக்குப் போவது என்று பெண்கள் ஓயாமல் உழைக்கிறார்கள். செங்கல், மண் சுமந்து வருவது, சாரத்தில் ஏறிப் பூசுவது என்று பெரும்பாலான கட்டட வேலைகளை பெண்கள் செய்கிறார்கள். கல் உடைப்பது, செங்கற்சூளைகளில் வேலை செய்வது என்று உடல்வலிமை தேவைப்படும் அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

நகரத்து பெண்களும் சளைத்தவர்கள் அல்லர். தொலைதூரப் பகுதிகளுக்கு சைக்கிள் களில் வேலைக்குச் செல்வது, மொத்த மார்க்கெட்டுக்கு போய் காய்கறி மூட்டைகளை வாங்கி அவற்றை மூன்று சக்கர சைக்கிள்களில் வைத்து மிதித்துக் கொண்டுவருவது, வாகன வசதி இல்லாத பெண்கள், நடந்தே கடற் கரைக்குப் போய் மீன்களை மொத்தமாக வாங்கி, சுமந்துவந்து கடைகளில் விற்பது, தொழிற்சாலைகளில் பலமணி நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பது, நடந்து கொண்டே சாலையைப் பெருக்குவது, கீரைக் கூடைகளை தலையில் சுமந்து குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று விற்பது, நாள்முழுக்க வீட்டு வேலை, குழந்தைகள் கவனிப்பு என்று பெண்களின் உடல் உழைப்பையும், வலிமை யையும் சொல்லிக் கொண்டே போகலாம். பல வீடுகளில் தண்ணீர்கேனை தூக்கி வைப்ப தும் பெண்கள்தான். அன்றைய ஆட்டுக்கல் முதல் இன்றைய கிரைண்டர் கல் வரை மாவரைப்பதும், தூக்கிக் கழுவுவதும் பெண்கள் தான். ஆகவே, பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்ற பொதுப்புத்தியின் கூற்றில் உண்மை இல்லை தோழியரே. அப்புறம் ஏன் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள் ? இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல்தான் காரணம்.

- கீதா இளங்கோவன்
- கீதா இளங்கோவன்

பெண்ணை முடிந்த அளவுக்கு வீட்டுக் குள்ளேயே சுருக்க நினைக்கிறது இந்த ஆணா திக்க சமுதாயம். பெண் படிப்பதற்காகவும், வேலை பார்ப்பதற்காகவும் வெளியே வந்தால் ஆணுடன் போட்டியிட வேண்டிவரும். பொதுவெளியில் பல ஆண்களின் இடம் பறி போகும், அதனை பெண்கள் பறித்துக் கொள் வார்கள் என்று பயப்படுகிறது. அதைவிட முக்கியமாக கல்வி கற்று வேலைக்குப் போகும் பெண்கள், தம் உரிமைகளைப் பற்றி அறிந்து கொள்வார்கள். தனக்காக வாழ்வை, தன் விருப்பப்படி வாழ விரும்புவார்கள். அவர் களை அடிமைப்படுத்த முடியாதே என்று அஞ்சு கிறது. `உன் உடல் மென்மை யானது, பலவீனமானது. வெளியே போகாதே, கடினமான வேலைகளைச் செய்ய முடியாது’ என்று தேன் தடவிய சொற்களால் மூளைச்சலவை செய்கிறது. இந்த வாதம் எல்லாம் உடல் உழைப்பு செய்யும் பெண்களிடம் எடுபடாது என்று பொதுப்புத்திக்கு நன்றாகவே தெரியும். இன் னொன்று, அவர்களின் உழைப்பு இந்தச் சமுதாயத்துக்கும் தேவைப்படுகிறது. ஆனாலும் அவர்கள் உழைப்பை முழுமையாக அங்கீகரிக்காமல், ஆணுக்கு இணையான கூலி கொடுக்காமல், அவர்களை கண்டு கொள் ளாமல் விடுகிறது. ஆக, அடித்தட்டு பெண் களின் உழைப்பைச் சுரண்டும் சமூகம், கீழ் நடுத்தர, நடுத்தர, மேல்தட்டுப் பெண்களை நோக்கி ஏவும் ஆயுதம்தான் இந்தக் கற்பிதம்.

பெண்கள் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது என்பதற்கு இந்த ஆணாதிக்க சமுதாயம் இரண்டு முக்கிய காரணங்களைச் சொல்கிறது. ஒன்று, மாதவிடாய். இன் னொன்று குழந்தைப்பேறு. மாதாமாதம் வரும் ரத்தப்போக்கின்போது அவர்கள் களைப் படைந்துவிடுகிறார்கள்; அவர்களால் வேலை செய்ய முடியாது என்கிறது பொதுப்புத்தி. முதலில், வேலை செய்யும் இடத்தில் தண்ணீர் வசதியுடன் கூடிய சுத்தமான கழிப்பறை வசதி யும், மாதவிடாய் நேரத்தில் தரமான சானிட்டரி நாப்கினும், சத்தான உணவும், பணியிட ஓய்வறையும் அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும் தோழர்களே. `இந்த வசதிகள் இருந்தால் என்னால் வேலை செய்ய முடியும்’ என்று பெண் சொன்னால் அவளை வேலை செய்ய விடுங்கள், ஓய்வெடுத்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். `எனக்கு ஓய்வு வேண்டும்’ என்று பெண் சொன்னால், அந்த நாள்களில் சம்பளத்துடன் கூடிய ஓய்வு தர வேண்டும். மாதவிடாய் நேரத்தில் தனக்கு ஓய்வு வேண்டுமா, வேண்டாமா என்று அந்தப் பெண்தான் தீர்மானிக்க வேண்டும். அதை ஆண்களோ, ஆணாதிக்க சமுதாயமோ தீர்மானித்து பெண்கள் மீது திணிக்கக் கூடாது.

அடுத்து மகப்பேறு. பெண்கள் கருவுற்று இருக்கும் போதும், குழந்தை பிறந்த பிறகு பாலூட்டும் காலத் திலும் அவர்களுக்கு ஓய்வு தேவை என்று சமுதாயம் வலியுறுத்துகிறது. இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது. பல பெண்கள் ஓய்வெடுக்க விரும்பலாம். சில பெண்கள் வேலை பார்க்க விரும்பலாம். ஓய்வெடுக்க விரும்பும் பெண்களுக்கு, சம்பளத் துடன் கூடிய பேறுகால விடுப்பையும், குழந்தையைக் கவனிப்பதற்கான விடுப்பை யும் அளிக்க வேண்டும். அந்தக் காலத்தில், வேலைபார்க்க விரும்பும் பெண்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவர்களுக்கான வசதிகள் அனைத்துத் தளங் களிலும் இன்னும் செய்துதரப்படவில்லை. பணியிட ஓய்வறையையும், பாலூட்டும் அறையையும், குழந்தைகள் காப்பகங்களை யும் - அடித்தட்டுப் பெண்கள் பணிபுரியும் இடங்கள் உட்பட - எல்லா இடங்களிலும் உருவாக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பு களின் அலுவலகங்கள், சட்டமன்றம், நாடாளு மன்றங்களில் கூட இந்த வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பது கேள்விக்குறிதான்.

மாதத்தில் மூன்று நாள்கள் வரும் ரத்தப் போக்கையும், வாழ்நாளில் இரண்டு மூன்று முறை வரும் பிரசவத்தையும், பிரதானமாக முன்னிறுத்தி, பெண்கள் பலவீனமானவர்கள் என்ற கற்பிதத்தை இன்னும் எவ்வளவு காலத்துக்குச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்? இந்த இரண்டும் ஒட்டுமொத்த மனிதகுல இனப்பெருக்கத்துக்குப் பெண்கள் தரும் மகத்தான பங்களிப்பு. அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, அங்கீகரித்து, அதற்கான வசதிகளை, முதலில் பெண்களுக்குச் செய்து கொடுக்க வேண்டும். பலவீன கற்பிதத்தைக் களைந்து, நம் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவோம் தோழிகளே!

- களைவோம்...