மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 10

உண்மைகள் சொல்வேன்
பிரீமியம் ஸ்டோரி
News
உண்மைகள் சொல்வேன்

- கலைப்புலி எஸ்.தாணு

ன் சினிமா வாழ்க்கையின் முதல் உச்சம், எனக்குக் கிடைத்த தேசிய விருது. பாலுமகேந்திரா இயக்கி, இளையராஜா இசையமைத்த ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்குக் காரணமான பாலுமகேந்திரா - இளையராஜாவோடு நான் எப்படி இணைந்தேன்?

1991... கங்கை அமரனும் நானும் ஒருநாள் எதேச்சையாக சந்தித்துக்கொண்டோம். முன்பு இளையராஜா சாருடன் எனக்கு நிகழ்ந்த ஓர் அனுபவத்தை அமரனிடம் சொன்னேன்.

`நல்லவன்’ நேரத்தில் இளையராஜா சாரிடம் இசையமைக்கச் சொல்லிக் கேட்டேன். பத்து லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டார். ‘`இரண்டு லட்சம்தானே சார் இப்போ வாங்கிட்டு இருக்கீங்க?’’ என்றேன். அதற்கு அவர் ‘`பொட்டி போடத் தெரியாதவருக்கெல்லாம் பத்து லட்சம் கொடுக்குற... நான் கேட்கக்கூடாதா’’ என்றார்.

``பாலுமகேந்திராவா... நான் அவருக்கு இனிமே பண்றதில்லைன்ற முடிவுல இருக்குறேனே’’ என்றார்.
``பாலுமகேந்திராவா... நான் அவருக்கு இனிமே பண்றதில்லைன்ற முடிவுல இருக்குறேனே’’ என்றார்.

‘`சார், அப்படி எதுவும் நடக்கல. அவர் ரொம்ப நல்ல மனுஷன். அவர் பத்து லட்சம் சம்பளம் கேட்கல. நான் அவருக்குச் செஞ்ச உதவிகளால அவரே முன்வந்து என் படத்துக்கு மியூசிக் பண்றேன்னார். அவர் அப்பாவுக்கு மட்டும் 50,000 ரூபாய் கொடுக்கச் சொன்னார். ஆனா, அவர் வீட்ல இருந்தவங்க, ‘அவருக்கு வியாபாரம் பெருசு, அதனால பத்து லட்சம் கொடுக்கணும்’னு கேட்டாங்க. ஏற்கெனவே பெயரையெல்லாம் போட்டு, எல்லா வேலைகளையும் ஆரம்பிச்சிட்ட பிறகு சம்பள விஷயத்தால் இசையமைப்பாளரை மாத்துறது சரியா இருக்காதுன்னு நினைச்சேன்.

உண்மைகள் சொல்வேன்! - 10

எனக்கும், அந்த இசையமைப்பாளருக்கும் இடையில் நல்ல நட்போடு இருந்த பி.எல்.சுப்ரமணியம் மத்தியஸ்தம் பேசினார். கடைசியா, ‘விஜயகாந்துக்கு என்ன சம்பளமோ அதைக் கொடுத்துடுங்க’ன்னு சொன்னாங்க. ஏழு லட்சம்தான் கொடுத்தேன்’’ என இளையராஜாவிடம் சொல்லிவிட்டு வந்தேன்.

இந்தச் சம்பவத்தை கங்கை அமரனிடம் சொன்னதும், ``அதை மறந்துடுங்க சார். நான் அண்ணன்கிட்ட பேசறேன். நீங்க அண்ணன் கூட சேர்ந்து படம் பண்ணுங்க’’ என இளையராஜா சாரை சந்திக்க நேரம் வாங்கிக்கொடுத்தார்.

உண்மைகள் சொல்வேன்! - 10

இசைஞானி இளையராஜா அவர்களைச் சந்தித்தேன். ``யார் இயக்குநர்?’’ எனக் கேட்டார். ``பாலுமகேந்திரா சார்’’ என்றேன். ``பாலுமகேந்திராவா... நான் அவருக்கு இனிமே பண்றதில்லைன்ற முடிவுல இருக்குறேனே’’ என்றார். ``ஏன் சார் இப்படிச் சொல்றீங்க?’’ என்றேன். ``அவர் கிருஷ்ணா ரெட்டின்னு ஒரு தெலுங்குத் தயாரிப்பாளருக்குப் படம் பண்ணி முடிச்சு வெச்சிருக்கார். அதுக்கு நான்தான் இசையமைப்பாளர். ஆனா, அவர் அந்தப் படத்தை இன்னும் ரீ-ரெகார்டிங்குக்கு அனுப்பாம தினமும் ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு போயிட்டு வந்துட்டிருக்கார். தயாரிப்பாளர் என்கிட்ட வந்து கண்கலங்குறார். அதனால எனக்கு அவர்மேல வருத்தம். நான் அவரோட பண்ணமாட்டேன்’’ என்றார்.

``இல்ல சார்... கடவுள் ஒரு சாபம் கொடுத்தார்னா அதுக்கு விமோசனமும் கொடுப்பார். அதனால நீங்க எப்ப அவருக்கு படம் பண்றேன்னு சொல்றீங்களோ, அப்ப நான் பண்றேன் சார்’’ என்றேன். ``என்ன இப்படிச் சொல்ற... ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘சின்னத்தம்பி’ மாதிரி ஒரு படம் உனக்கு மியூஸிக் பண்ணித்தரலாம்னு பார்க்குறேன். நீ அவரைத்தான் வெச்சு படம் பண்ணுவேன்னு சொல்றியே?’’ என்றார்.

 ``இல்ல தாணு... சின்ன தப்பு நடந்துபோச்சு. நான் கேசட்டை மாத்திக்கொடுத்துட்டேன். காரணம், அன்னைக்கு வந்த கடிதம்.
``இல்ல தாணு... சின்ன தப்பு நடந்துபோச்சு. நான் கேசட்டை மாத்திக்கொடுத்துட்டேன். காரணம், அன்னைக்கு வந்த கடிதம்.

``சார், அவர் ஒரு இக்கட்டான சூழல்ல என்னை வந்து சந்திச்சார். `உங்களை மாதிரி கமர்ஷியல் தயாரிப்பாளரோட படம் பண்ணாம நான் வேற வழில போனது தவறுன்னு நினைக்கிறேன். இந்த நேரத்துல நீங்க எனக்கு ஒரு படம் கொடுத்தீங்கன்னா இங்க சுவர்ல மாட்டியிருக்கிற தெய்வங்கள் மாதிரி நீங்க எனக்கு ஒரு தெய்வம் தாணு’ன்னு சொன்னார். அந்த வார்த்தையைக் கேட்டதுமே நான் பீரோவில் இருந்து பணத்தை எடுத்து அவர் கையில கொடுத்துட்டேன் சார். அதனால் அவர்தான் இயக்குநர். அதை மாத்த முடியாது. இசையமைக்கிறதும், அமைக்காததும் உங்க விருப்பம். நீங்க எப்ப அவரோட படம் பண்ணுவீங்களோ, அப்ப சொல்லுங்க, நான் அவரைக் கூட்டிட்டு வந்து பண்றேன்’’ என்றேன். ``நீ திருந்த மாட்ட... பின்னாடி நீதான் கஷ்டப்படப் போற... சரி, நாளைக்கே கம்போஸிங் வெச்சிக்கலாம்’’ என்று சட்டென மனம் மாறி ஒப்புதல் கொடுத்துவிட்டார்.

பாலுமகேந்திரா சாரைச் சந்தித்து ``இளையராஜா ஓகே சொல்லிட்டார். உங்க மேல சின்ன மன வருத்தம் இருக்கு. அதை மட்டும் கொஞ்சம் சரி பண்ணிடுங்க சார்’’ என்றேன். ``இல்ல தாணு... ஃபிலிம் ஃபெஸ்டிவல் வருஷத்துக்கு ஒருமுறைதான் வரும். அதுலதான் நல்ல நல்ல படங்கள்லாம் பார்க்க முடியும். இப்ப விட்டுட்டோம்னா அடுத்து ஒரு வருஷம் காத்திருக்கணும். அதனாலதான் போனேன். அடுத்த வாரமே இளையராஜா சார்கிட்ட படத்தைக் கொடுத்துடுறேன்’’ என்றார். ``நாளைக்கு ஃபிஷர்மேன் கோவ்ல ரூம் போட்டிருக்கேன். அங்கதான் சார் கம்போஸிங். வந்துடுங்க சார்’’ என்று பாலுமகேந்திராவிடம் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

அடுத்த நாள் காலை... ஃபிஷர்மேன் கோவ் ரிசார்ட்டில் பாலுமகேந்திராவும் இளையராஜாவும் சந்தித்து, கைகுலுக்கி, கட்டியணைத்து மகிழ்ச்சியோடு பேசத்தொடங்கினார்கள். அன்று மீண்டும் மலர்ந்த அவர்களின் நட்பு, பாலுமகேந்திரா சாரின் இறப்பு வரை தொடர்ந்தது.

‘வண்ண வண்ண பூக்கள்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது எனக்கு ஆச்சர்யமாவும், ஆனந்தமாவும் இருக்கு’’என்று சொல்லிவிட்டேன்.
‘வண்ண வண்ண பூக்கள்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது எனக்கு ஆச்சர்யமாவும், ஆனந்தமாவும் இருக்கு’’என்று சொல்லிவிட்டேன்.

இளையராஜா சார் ஊதுபத்தியை ஏற்றி, வாழைப்பழத்தில் செருகி வைத்துவிட்டு ஹார்மோனியத்தை வணங்கி, கைவைத்தார். சரசரவென ஆறு பாடல்கள். அதாவது அந்த ஊதுபத்தி உதிர்வதற்குள் 6 பாடல்கள் கிடைத்துவிட்டன. இதற்கு முன் அப்படி ஒரு கம்போஸிங்கை, இப்படி ஒரு திறமைசாலியை நான் பார்த்ததில்லை. பிரமித்துப்போய் நின்றேன். அன்று இளையராஜா சார் கம்போஸ் செய்யும்போது பாலுமகேந்திரா சார் அவரை ஒரு புகைப்படம் எடுத்தார். அந்தப் படத்தைத்தான் நான் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினேன். அந்தப் படத்தை எடுத்து, அதில் இளையராஜா சாரின் அம்மாவையும் சேர்த்து ஓர் ஓவியமாக வரைந்து அவருக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தேன். அந்த ஓவியம், இப்போதும் இளையராஜா சாரிடம் இருக்கிறது.

ஓடிக்கொண்டே பாடக்கூடிய வேக வேகமான பீட்டில் ஒரு பாடலையும் ஸ்லோ பீட்டில் இன்னொரு பாடலையும் கொடுத்திருந்தார். நாங்கள் வேகமான பீட் பாடலைத்தான் தேர்ந்தெடுத்திருந்தோம். ஒரு வேலையாக கோயம்புத்தூர் போக வேண்டியிருந்ததால், பாடல் ரெக்கார்டிங்கின்போது நான் சென்னையில் இல்லை. வந்து பார்த்தால், ஸ்லோ பீட் பாடல் ஒலிப்பதிவாகியிருக்கிறது. ``என்ன சார், ஓடிட்டு இருக்கிற மாதிரி ட்யூன்தானே ஓகே பண்ணினோம். இது நடந்துட்டே பாடுற மாதிரி இருக்கே’’ என பாலுமகேந்திரா சாரிடம் கேட்டேன். ``இல்ல தாணு... சின்னத் தப்பு நடந்து போச்சு. நான் கேசட்டை மாத்திக் கொடுத்துட்டேன். காரணம், அன்னைக்கு வந்த கடிதம். இலங்கைல எங்க அப்பா செத்து பத்து நாளுக்கு அப்புறம்தான் எனக்குத் தகவலே வந்தது. அந்த நேரத்துலதான் ராஜா சார் அசிஸ்டென்ட் வந்து `எந்த ட்யூன் ஓகேன்னு சார் கேட்குறார்’னு கேட்டதும், இந்த கேசட்டை எடுத்துக்கொடுத்துட்டேன்’’ எனச் சொன்னார். ``இல்ல சார்... இதுவும் நல்லாருக்கு. இதுதான் அப்பாவின் விருப்பம். அப்பா கொடுத்த ஆசின்னு நினைச்சிக்கோங்க சார்” எனச் சொன்னேன். அந்தப் பாடல்தான் எல்லோராலும் இன்றும் விரும்பப்படும் `இளநெஞ்சே வா’ பாடல்.

படத்தின் ஹீரோவாக விக்னேஷும், துணை ஹீரோவாக ஆதித்யாவும்தான் முதலில் நடித்தார்கள். சில காரணங்களால் விக்னேஷால் தொடர்ந்து நடிக்கமுடியவில்லை. அடுத்து ‘’பிரசாந்தை நடிக்கவைக்கலாம்’’ என்றார் பாலுமகேந்திரா. அப்போதுதான் ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் வெளியாகி நல்ல ஓட்டம் ஓடியிருந்தது. மெளனிகாவும், வினோதினியும் கதாநாயகிகளாக நடித்தார்கள்.

சொன்னபடியே மிகக்குறைந்த நாள்களில் படப்பிடிப்பை நடத்திக் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். இந்தப் படத்தில்தான் உதவி இயக்குநராக பாலா பணியாற்றினார். படம் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டு பிரமாதமாக செய்வார் பாலா. படம் முடிந்தபிறகு அவரின் உழைப்புக்கு அங்கீகார மாக கைநிறையப் பணம் கொடுத்தேன். பின்னாள்களில் அவர் வளர்ந்து மிகச்சிறந்த படைப்பாளியாக உயர்ந்த பிறகும், அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து தனது புத்தகத்தில் எழுதியிருந்தது அவரின் நல் மனதுக்கான சான்று.

‘வண்ண வண்ண பூக்கள்’ 1992-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த ஆண்டுக்கான தேசிய விருது தேர்வுக்கு ‘தளபதி’, ‘குணா’ ஆகிய படங்களுடன் ‘வண்ண வண்ண பூக்க’ளும் தேர்வாகி டெல்லிக்கு அனுப்பப்பட்டது. அதில் ‘வண்ண வண்ண பூக்கள்’ தமிழின் சிறந்த படமாக தேசிய விருது வென்றது. டெல்லிக்குப்போய் விருது வாங்கி வந்தேன். அப்போது செய்தியாளர்கள் மற்ற இரண்டு படங்களையும் ஒப்பிட்டுக் கேள்வி கேட்டார்கள். சந்தோஷத்தின் மிகுதியில் `` `தளபதி’, `குணா’ படங்களோடு போட்டி போட்டு ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது எனக்கு ஆச்சர்யமாவும் ஆனந்தமாவும் இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டேன். அது அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளிவந்துவிட்டது.

இதைச் செய்தித்தாள்களில் பார்த்த பாலுமகேந்திரா சாருக்கு சின்ன வருத்தம். ``என்ன தாணு... மற்ற இரண்டு படங்களையும் ஒப்பிட்டு, ‘நம்ம படத்துக்குக் கொடுத்தது ஆச்சர்யமா இருக்கு’ன்னு சொல்லிட்டீங்களே... நம்ம படத்தின் கன்டென்ட்டுக்கான மரியாதைதானே இந்த தேசிய விருது’’ என்று சொன்னார்.

‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் பாலுமகேந்திரா - இளையராஜாவோடு பயணித்தவன், அடுத்து பாரதிராஜா - ஏ.ஆர்.ரஹ்மானோடு சேர்ந்தேன். ‘கிழக்கு சீமையிலே’ பாரதிராஜாவும் - ஏ.ஆர்.ரஹ்மானும் முதன்முதலாக இணைந்து பணியாற்றிய படம். பாரதிராஜா சாருக்கும் எனக்குமான நட்பு, ஏ.ஆர்.ரஹ்மானுடனான நினைவுகள், சமீபத்தில் மறைந்த ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் என் வீட்டுக்கு வந்து செய்த பிரார்த்தனை... அடுத்த வாரம் சொல்கிறேன்.

- வெளியிடுவோம்...