மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 11

உண்மைகள் சொல்வேன்
பிரீமியம் ஸ்டோரி
News
உண்மைகள் சொல்வேன்

- கலைப்புலி எஸ்.தாணு

`வண்ண வண்ண பூக்கள்’ எனக்கு தேசிய விருதை மட்டுமல்ல, கலைஞரிடமிருந்து பாராட்டையும் பெற்றுத்தந்தது. இரண்டையுமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருதுகளாகக் கருதுகிறேன். ‘கிழக்குச் சீமையிலே’ கதை சொல்வதற்கு முன் கலைஞருடனான வண்ணமயமான அந்த நினைவைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தேசிய விருது கிடைத்திருப்பதாகச் செய்தி வந்ததும், கலைஞர் என்னை அவரின் ஆலிவர் ரோடு இல்லத்துக்கு அழைத்தார். ``வருக... வாழ்க... வாழ்த்துகள்’’ என வரவேற்ற கலைஞரின் பாதங்களைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினேன். ``படத்துக்கு தேசிய விருது கிடைச்சதைப் பத்தி ‘தமிழன்’ பத்திரிகைல எட்டுக் காலம் செய்தி போட்டிருக்கேன்யா...’’ என்றார். அப்போது ‘தமிழன்’ எனும் நாளிதழை கலைஞர் நடத்திக்கொண்டிருந்தார். அடுத்து அவர் ‘`ஏன்யா, அப்போ படம் பார்த்த கையோட உனக்கு ஒரு செய்தி எழுதிக் கொடுத்தேனய்யா... அதை ஏன் விளம்பரம் பண்ணல’’ என்றார்.

உண்மைகள் சொல்வேன்! - 11

‘வண்ண வண்ண பூக்கள்’ படம் வெளியானபோது சி.ஐ.டி காலனியில் அப்போதிருந்த மணீஸ் எனும் ப்ரிவியூ தியேட்டரில் கலைஞர் படம் பார்த்தார். படம் முடிந்து வெளியே வந்ததும் ஒரு வெள்ளைத்தாளில் ‘`இளமை எழுதிய ஓவியம்... கேமரா எழுதிய காவியம்... மு.க’’ என எழுதி என் கையில் கொடுத்தார். இதுபோல் எழுதிக்கொடுத்தால் அதை விளம்பரம் செய்யவேண்டும் என எனக்கு அப்போது தெரியாததால் அப்படியே விட்டுவிட்டேன். ஆனால், அதை மறக்காமல் கேட்ட கலைஞர், ‘`அப்பவே நீ விளம்பரப்படுத்தியிருந்தேன்னா, தேசிய விருதுக்கு முன்னாடியே நான் இந்தப் படத்தை வாழ்த்தின செய்தி வெளில வந்திருக்கும்லயா’’ என்றார். ‘`ஆமாங்கய்யா’’ என தலைகுனிந்து நின்றேன். ‘`சரி விடுய்யா...’’ என காபி கொடுத்து சந்தோஷமாகப் பேசி வாழ்த்தி அனுப்பினார்.

‘வண்ண வண்ண பூக்கள்’ படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வெற்றியும் கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் இளையராஜா பாடல்களுக்கான சென்னை மாவட்ட ஆடியோ கேசட் உரிமையை நான் வாங்கிவைத்திருந்தேன். இந்த ஆடியோ கேசட் விற்பனை விஷயத்தில் என் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஒருவர் 27 லட்சம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்துவிட்டார். அதுபற்றிப் புகார் கொடுப்பதற்காக சென்னைக் கடற்கரை துணை ஆணையாளராக இருந்தவரைச் சந்தித்தேன். அவர் ஒரு சினிமா ஆர்வலர் என்பது அங்கே போனபிறகுதான் தெரிந்தது. என் புகாரை வாங்கியபடியே பேசியவர், ‘`ரத்னகுமார் என்கிற கதாசிரியர் ஒருவர் இங்கே வருகிறார். அவர் கதையை நீங்கள் கேட்கமுடியுமா?’’ என்றார்.

படம் உதவி: ஞானம்
படம் உதவி: ஞானம்

ரத்னகுமார் வந்து கதை சொன்னார். ஸ்கிரிப்ட்டையும் கையில் வைத்திருந்தார். உண்மையான சம்பவங்கள்போல அவ்வளவு இயல்பாக, இயற்கையாக அந்தக் கதையின் போக்கு இருந்தது. ஸ்கிரிப்ட்டை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனேன். அதில் சில விஷயங்களை மட்டும் மாற்றி அடுத்த நாளே ரத்னகுமாருக்கு அனுப்பினேன். அவர் கதையை அந்த மாற்றங்களோடு மீண்டும் வந்து சொன்னார். எனக்குக் கதை மிகவும் பிடித்துவிட்டது. ``இந்தக் கதையை பாரதிராஜா சார் இயக்கினால் ஐந்து ‘மண்வாசனை’, மூன்று ‘முதல் மரியாதை’ படம்போலச் சிறப்பாக வரும். ஆனால், அவருக்கும் எனக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. நீங்கள் அவரைச் சந்தித்துக் கதையைச் சொல்லுங்கள். அவர் எந்தத் தயாரிப்பாளரைச் சொல்கிறாரோ, அவரோடு சேர்ந்து படம் பண்ணுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

காவல் துணை ஆணையாளருக்கு பாராதிராஜா ஒருவகையில் உறவுக்காரர். அவர் முயற்சியில் உடனே பாராதிராஜாவைச் சந்தித்துக் கதை சொல்கிறார்கள். ரத்னகுமார் கதை சொன்னதும் பிரமித்துப்போன பாரதிராஜா, ``நம்ம ஊர் பையன், அதுவும் முதல்முறையா கதை பண்ணியிருக்கேன்னு சொல்ற. யார்கிட்டயும் அசிஸ்டென்ட்டாவும் வேலை செய்யல. ஆனா, திரைக்கதை எல்லாம் பக்காவா இருக்கேயா... நீதான் முழுக்கக் கதையைத் தயார் பண்ணியா’’ எனக் கேட்டிருக்கிறார். அப்போதுதான் அவர்கள் என்னிடம் கதை சொன்ன விவரத்தையும், நான் சொன்ன மாற்றங்களையும் சொல்லியிருக்கிறார்கள். ‘`அவர்தான் உங்களிடம் கதை சொல்லச் சொன்னார். அவருக்கும் உங்களுக்கும் சில கருத்துவேறுபாடுகள் இருப்பதால் வேறு தயாரிப்பாளரை வைத்துப் படம் பண்ணச் சொன்னார்’’ எனச் சொல்லியிருக்கிறார்கள்.

உண்மைகள் சொல்வேன்! - 11

எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் கோபி இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்துக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணைந்து இசையமைப்பதாகப் பேசப்பட்டு எல்லா வேலைகளும் தொடங்கியது. ஆனால், படம் தொடங்குவதற்கு முன்பே தயாரிப்பாளர் மேல் பாரதிராஜா சாருக்கு சின்ன வருத்தம் ஏற்படக்கூடிய சம்பவம் நடந்துவிட்டது.

அப்போது பாரதிராஜா சாரை இன்னொரு பிரச்னை சுற்றிவந்தது. ‘என் உயிர்த் தோழன்’ படத்துக்காக பாரதிராஜா கொடுக் கவேண்டிய பணம் நிலுவையில் இருப்பதாகத் திருச்சி ஏரியா விநியோகஸ்தர் வந்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். அப்போதைய தலைவர் கேயார்ஜி தலைமையில் கவுன்சிலில் மீட்டிங் நடந்தது. அந்த மீட்டிங்கிற்கு நானும் சென்றேன். அந்த விவகாரத்தில் பாரதிராஜா சார் பக்கம் நியாயம் இருந்ததால், அவருக்கு ஆதரவாக நான் சண்டை போட்டேன். கூட்டத்தின் இடையே வெளியே வந்தபோது பாராதிராஜா சார் என்னிடம், ``என்னய்யா திடீர்னு எனக்கு நீ சப்போர்ட் பண்ணுன’’ என்று கேட்டார். ``தலைவரே, உன் பக்கம் நியாயம் இருந்தா உனக்கு சப்போர்ட் பண்ணுவேன். உன் பக்கம் தப்புன்னா தப்புன்னு சொல்லுவேன்’’ என்றேன். உடனே அவர் ``அந்த ரத்னம்கிட்ட கதை கேட்டேன்யா... நல்லாருக்கு. நாம பண்ணலாம்யா’’ என அந்த இடத்தில் வைத்தே சொன்னார்.

 கரீமா பேகம்
கரீமா பேகம்

அடுத்த நாள் சித்ரா லட்சுமணன் என் அலுவல கத்துக்கு வந்தார். ``பாரதிராஜா சாருக்கும், எனக்கும் சரி வருமான்னு தெரியலை’’ என்றேன். மேலும் படத்தில் நடிக்க ராதிகாவிடம் பேசி யிருப்பதாகக் கேள்விப்பட்டேன். ``ராதிகாவுக்கும், எனக்கும் ‘நல்லவன்’ படத்தின்போது கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு விட்டது’’ என்கிற விவரத்தையும் சொன்னேன். அப்போது அவர் ``ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் நாம பண்ணிக்கலாம் சார். நீங்க பணம் மட்டும் கொடுத்துடுங்க. நாங்க படம் எடுத்து உங்ககிட்ட கொடுத்துடுறோம்’’ என்றார்.

அடுத்த நாளே பாராதிராஜா சாரைச் சந்தித்தேன். அவர் கையில் 1.25 லட்சம் ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்து, படத்துக்கான வேலையைத் தொடங்கினேன். படத்துக்கு 40 லட்சம் ரூபாய் ஆகும் என்றார்கள். நான் 60 லட்சம் ரூபாய் கொடுத்துவிடுகிறேன் என்றேன். பிறகு 72 லட்சம் ரூபாயாக வைத்துக்கொள்ளலாம் என்று முழுப் பணமும் கொடுத்து, ஒரு நல்ல நாளில் பூஜை போட்டுப் படத்தை ஆரம்பித்தோம். ``சார், நீங்க கதையை அப்படியே எடுங்க. ஜனங்களை தியேட்டருக்கு வரவைக்கிறது என் வேலை. படம் மிகப்பெரிய வெற்றியாகும்’’ என பூஜையன்று பாரதிராஜா சாரிடம் சொன்னேன்.

பாரதிராஜாதான் ‘கிழக்குச் சீமையிலே’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக ஒப்பந்தம் போட்டார். விஜயகுமார் நடித்த கதாபாத்திரத்தில் ராஜ்கிரண்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் கேட்ட சம்பளம் அப்போது அதிகமாக இருந்தது. விஜயகுமாரின் பெயரைச் சொல்கிறோம். ஆனால், பாரதிராஜா சாருக்கு இதில் விருப்பம் இல்லை. அன்று மாலை வாஹிணி ஸ்டூடியோவில் ஒரு தெலுங்குப் பட இசை வெளியீட்டு விழா. நாகி ரெட்டி வெளியிட ரஜினி சார் பெற்றுக்கொள்கிறார். அந்த விழாவுக்கு விஜயகுமாரும் வந்திருந்தார். அங்கேயே நான் அவரிடம் ‘`ஒரு அருமையான கதையிருக்கு. அண்ணன் கேரெக்டருக்கு உன் பேரை சஜஸ்ட் பண்ணும்போது டைரக்டர் சார் ஸ்கிப் பண்றாரு. நீ எப்படியாவது போய் டைரக்டரைப் பார்த்து அந்த கேரெக்டரை வாங்கிடு. உன் கரியரே வேற மாதிரி மாறிடும்’’ எனச் சொன்னேன். அந்த விழாவிலிருந்து நேராக பூங்கொத்தோடு பாராதிராஜா சார் வீட்டுக்குப் போய்விட்டார் விஜயகுமார். வீடு தேடிவந்து விஜயகுமார் கேட்டதால், பாரதிராஜா சாரும் ஒப்புக்கொண்டார்.

அதேபோல் ‘ஒச்சி’ என்கிற கேரக்டரில் கவுண்டமணிதான் முதலில் நடிப்பதாக இருந்தது. அவரும் சம்பளம் அதிகம் கேட்டதால், வடிவேலுவைப் போடலாம் என எங்களுக்குள் ஒரு யோசனை. வடிவேலுவை பாரதிராஜா சாரிடம் அனுப்பினோம். வடிவேலுவும் போய் இயக்குநரைப் பார்த்து, சிறப்பாக நடித்துக் காட்டி ஒப்புதல் வாங்கிவிட்டார். ஆனால், ‘சம்பளமாக 25,000 கொடுங்கள்’ என அவர் கேட்டதால், இயக்குநருக்குக் கோபம் வந்து வடிவேலுவை வெளியே அனுப்பிவிட்டார்.

உடனே என்னிடம் வந்தார் வடிவேலு. ``வாய்ப்புதானே அவர்கிட்ட கேட்கணும். நீ ஏன் அவர்கிட்ட போய் சம்பளம் கேட்ட’’ என்று சொல்லி, பீரோவில் இருந்து 10,000 ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். ``இதை வெச்சிக்கோ... படம் முடியும் போது மீதியைக் கொடுக்கு றேன். திரும்ப டைரக்டர் சார்கிட்ட போய் கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது அந்த கேரக்டரை வாங்கிடு’’ என்றேன். வடிவேலுவும் அப்படியே செய்தார். படத்தில் அவருடைய கேரக்டருக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது. இந்த நன்றியை வடிவேலு மறக்க வேயில்லை. ‘என்ன சொல்லப் போகிறாய்’, ‘கந்தசாமி’ என என்னுடைய பல படங் களிலும் அவர் ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார்.

‘திருடா திருடா’, ‘கிழக்குச் சீமையிலே’ என இரண்டு தீபாவளி ரிலீஸ் படங் களுக்காக வேலை செய்து கொண்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். நான் இசையமைப்பாளராக இருந்த ‘புதுப்பாடகன்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பங்களிப்பும் உண்டு. அதனால் அப்போதிருந்தே ரஹ்மான் எனக்குப் பரிச்சயம். அவர் குடும்பத்தினரையும், குறிப்பாக அவரின் அம்மா கரீமா பேகம் அவர்களையும் எனக்கு நன்றாகத் தெரியும். சில நாள்களுக்கு முன்பு அவர் மறைந்துவிட்டார் என்பதால் அவரைப் பற்றிய நினைவுகளை இந்த இடத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.

பல கட்டப் பரிசோதனைகளுக்குப்பிறகு என் மனைவி கலாவதிக்குப் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். எந்த நேரத்திலும் அவருக்கு மரணம் சம்பவிக்கலாம் என்றார்கள். குடும்பமே கலங்கிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தச் செய்தி சென்று சேர்ந்திருக்கிறது. அவர் தன் தாயிடம் சொல்ல, அவர் பொன்னேரியில் இருந்து முஸ்லிம் மதகுருவை என் வீட்டுக்கு அழைத்துவந்தார். பல மணி நேரம் பிரார்த்தனை செய்தார்கள். மரணம் எப்போது வேண்டுமானாலும் சம்பவிக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தாலும், அந்த தெய்விக, மனிதநேயமுள்ள மாதரசி என் வீட்டுக்கு வந்து பிரார்த்தனை செய்துவிட்டுப் போனபிறகு என் மனைவியின் ஆயுள் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கூடியது. அவர் என் வீட்டுக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. மகன் இசையமைக்கும் படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் இப்படி ஒரு பிரச்னை என்றதும் வந்துநின்ற அந்த தெய்வத்தாயை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.

என் மகன் கலாபிரபு இயக்கிய ‘சக்கரக்கட்டி’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை. எந்த சினிமா இசை வெளியீட்டு விழாவுக்கும் அவர் அம்மா வந்ததில்லை. ஆனால், ‘சக்கரக்கட்டி’ விழாவுக்கு வந்து எங்களை ஆசீர்வதித்தார். ‘டாக்ஸி டாக்ஸி’ பாடல் உலகின் மிகச்சிறந்த பாடல்கள் வரிசையில் 20-வது இடத்தைப் பிடித்தது. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின் இசைப்பணிகள் முடியும்போது ரஹ்மான் மெக்கா சென்றுவிட்டார். அதனால், ஆடியோ கேசட்டை அந்தத் தாய்தான் தெய்வங்கள் முன்னிலையில் பிரார்த்தனை செய்து என்னிடம் கொடுத்தார். அந்தப் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. நான் மிகப்பெரிய விலைக்கு ஆடியோ கேசட் உரிமைகளை விற்றேன். விண்ணுலகுக்குப் போனாலும் அந்த தெய்வத்தாய் ரஹ்மானின் குடும்பத்தோடு எப்போதும் இருந்து அவர்களை வழிநடத்துவார்.

‘கிழக்குச் சீமையிலே’ தீபாவளி ரிலீஸ் என நாள் குறித்துவிட்டேன். ஆனால், பட வேலைகள் முடியவில்லை. பாரதிராஜா சாரின் தந்தை திடீரெனக் காலமாக, அவர் தேனிக்குச் சென்றுவிட்டார். ரிலீஸுக்கு முந்தைய நாள்வரை பிரின்ட் வேலைகள் தொடங்கவில்லை. `தாணு படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது’ என ‘ரெட் கார்டு’ போடப்படுகிறது... எல்லா சவால்களையும் முறியடித்து ரிலீஸ் ஆனது எப்படி, 200 பேருக்கும் மேல் ஷீல்டுகள் தயாரித்தும் ஏன் வெற்றி விழா நடக்கவில்லை... பாரதிராஜா - வைகோ - வெற்றி விழாக் கதையை அடுத்த வாரம் சொல்கிறேன்!

- வெளியிடுவோம்...