மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 12

கிழக்கு சீமையிலே
பிரீமியம் ஸ்டோரி
News
கிழக்கு சீமையிலே

- கலைப்புலி எஸ்.தாணு

ரு தயாரிப்பாளராக ‘கிழக்குச் சீமையிலே’ பொருளாதார ரீதியில் எனக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த படம். ஆனால், அந்தப்பட ரிலீஸின்போதுதான் நான் மிக அதிக சவால்களையும் எதிர்கொண்டேன்.

கதைப்படி ராதிகா இறுதியில் இறப்பதுபோலத்தான் படம் முடியும். ஆரம்பத்தில் பாரதிராஜா சாரின் திரைக்கதையும் அதுவாகவே இருந்தது. ஆனால், கடைசியில் விஜயகுமார் இறப்பதுபோல பாரதிராஜா சார் எடுக்கவிருப்பதாக எனக்குத் தகவல் வந்தது. ‘தங்கைக்காக வீட்டை விற்று, நிலத்தை விற்று, அனைத்தையும் இழந்த அண்ணனுக்காகத் தங்கை உயிரையே கொடுத்துவிட்டாள்’ என்று முடித்தால்தான் சென்டிமென்ட்டாக படம் சரியாக இருக்கும் என்பதுதான் எங்கள் அனைவரின் எண்ணமாக இருந்தது. ஆனால், திடீரென இப்படி ஒரு மாற்றம்.

`கிழக்கு சீமையிலே’ படத்தில்
`கிழக்கு சீமையிலே’ படத்தில்

பாரதிராஜா சாரிடம் நேரடியாக இதைச் சொல்லமுடியாது என்பதால் சித்ரா லட்சுமணன், ரத்னகுமாரை அழைத்து, ‘‘க்ளைமாக்ஸை மாத்த வேண்டாம்னு டைரக்டர் சார்கிட்ட சொல்லுங்க’’ என்றேன். இதனால் பாரதிராஜா சார் இரண்டு க்ளைமாக்ஸையும் படமாக்கினார். இரண்டையும் அவரது நண்பர்கள், சினிமா முக்கியஸ்தர்கள் சிலருக்குப் போட்டுக் காட்டினார். பெரும்பாலானவர்கள், ‘‘தங்கை இறப்பதுதான் கதைக்குச் சரியாக வரும்’’ என்று சொல்ல, அந்த க்ளைமாக்ஸே இறுதியானது.

விஜயகுமார், நெப்போலியன், ராதிகா என்று படத்தின் நடிகர்களைவிடவும், பாரதிராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து ஆகிய மூவரையும் முன்னிலைப்படுத்தியே விளம்பரங்கள் செய்தேன். முதல்முறையாக ஆட்டோக்களின் பின்னால் எல்லாம் விளம்பரம் செய்து, பப்ளிசிட்டி மூலம் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக்கொண்டே இருந்தேன்.

படங்கள் உதவி: ஞானம்
படங்கள் உதவி: ஞானம்

ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது, பாரதிராஜா சாரின் அப்பா தவறிவிட்டார். ஆனால், தீபாவளி வெளியீடு என அறிவித்து இருந்தேன். என்னைப் பொறுத்தவரை ‘இந்தப்படம் இந்த தேதிக்கு ரிலீஸ்’ என அறிவித்துவிட்டால், பின்வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன். பாரதிராஜா சார் தேனிக்குச் சென்றுவிட்டதால் பட வேலைகளில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. படத்தின் காப்பி தயாராகவில்லை, சென்சார் செய்யவில்லை எனப் பல வேலைகள் முடியாமல் இருந்தன. சித்ரா லட்சுமணனை அழைத்து, ‘‘எப்படியாவது படத்தை முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்துவிடவேண்டும்’’ என்றேன். அவர் பாரதிராஜா சாரின் அனுமதி பெற்று, முழுமூச்சோடு இறங்கி அத்தனை வேலைகளையும் முடித்து டபுள் பாசிட்டிவை கையில் கொடுத்தார். சென்சாருக்குப் போனேன்.

அப்போது ஏ.வி.எம்.பாலசுப்ரணியம்தான் சென்சார் போர்டு எக்ஸிக்யூட்டிவ் உறுப்பினர். திருமதி ஒய்ஜிபி, பேரறிஞர் அண்ணாவின் மருமகள் துளசி கெளதமன் எல்லாம் போர்டில் உறுப்பினர்களாக இருந்ததால் படம் பார்க்க வந்தார்கள். படத்தில் சில கெட்ட வார்த்தைகள் வரும். அதற்கு ஆட்சேபனை வந்தபோது, ‘‘இவை கிராமத்துப் பேச்சுவழக்கு. அப்படியே வந்தால்தான் படம் இயல்பாக இருக்கும்’’ என்று சொல்லி சென்சார் வாங்கிவிட்டேன்.

உண்மைகள் சொல்வேன்! - 12

ரீ-ரெகார்டிங்கின்போது பாரதிராஜா சார் சென்னை வந்துவிட்டார். ஆனால், ரீ-ரெகார்டிங் இன்னும் இரண்டு ரீல்கள் பாக்கி இருக்கும்போது ஏ.ஆர்.ரஹ்மான் மெக்காவுக்குச் செல்லவேண்டிய சூழல். இதனால் அதுவரை அவர் இசையமைத்துத் தந்திருந்த ட்ராக்குகளை வைத்தே பாரதிராஜா சார் படத்தை முடித்துக்கொடுத்தார்.

அடுத்து, பிரின்ட் போடவேண்டும். ரிலீஸுக்கு இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கிறது. அதுவும் தீபாவளிக்கு முந்தைய நாள். ஒருநாளில் 18 பிரின்ட்தான் போட முடியும். 60 பிரின்ட் சாத்தியம் இல்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் பிரசாத் லேப் உரிமையாளர் ரமேஷ் பிரசாத்திடம் ஓடினேன். ‘‘தாணு, எனக்கு நீ செய்த உதவிக்கு நான் கைம்மாறு செய்யவேண்டிய தருணத்தைக் கடவுள் தந்திருக்கிறார்’’ என்று சொல்லி, ஒரே நாளில் நான்கு ஷிஃப்ட்டுகளுக்கு ஆட்களை வரவழைத்து, பிரின்ட் போட்டுக்கொடுத்தார். ரமேஷ் பிரசாத் எனக்குச் செய்த இந்த உதவிக்குக் காரணம் கலைஞர். அவருக்குத்தான் நன்றியைச் சொல்லவேண்டும்.

ரமேஷ் பிரசாத்
ரமேஷ் பிரசாத்

கலைஞர் முதலமைச்சராக இருந்த 1989-91 காலகட்டத்தில், ஃபிலிம் சேம்பரை கேயார், ஜி.வி, கேயார்ஜி தலைமையிலான அணி தவறான முறையில் ஆக்கிரமித்துக்கொண்டது. புகார் கொடுத்தும் போலீஸ் கண்டு கொள்ளவில்லை. இந்த நேரத்தில்தான் டி.வி.எஸ்.ராஜு, ரமேஷ் பிரசாத், ஈகா தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன், தெலுங்கு தயாரிப்பாளர் புன்டரிச்செயா ஆகிய நான்கு பேரும், திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவரும், சேம்பர் தலைவராக இருந்தவருமான டி.ஆர் என்று அழைக்கப்படும் டி.ராமானுஜம் அலுவலகத்துக்கு இந்தப் பிரச்னை தொடர்பாக பேச வந்திருக்கிறார்கள். அப்போது, டி.ஆர் என்னை அழைக்கிறார். ‘‘கலைஞரிடம் பேசி இதற்கு ஒரு நல்ல முடிவைத் தரச்சொல்லு தாணு’’ என்கிறார். அங்கிருந்தபடியே கலைஞரின் தனிச்செயலாளர் சண்முகநாதனுக்கு போன் அடித்து கலைஞரை சந்திக்க நேரம் கேட்கிறேன். விவரங்களைக் கேட்ட கலைஞர், மாலை வீட்டுக்கு வருமாறு சொல்கிறார்.

அங்கே போனால் கேயார், கேயார்ஜி, ஜி.வி, ஏ.எஸ்.பிரகாசம் என எதிர்த்தரப்பிலிருந்தும் வந்திருக்கிறார்கள். கலைஞர் இருதரப்பு கருத்தையும் கேட்டுப் பிரச்னையைப் புரிந்துகொண்டார். ‘‘கடைசியா என்ன சொல்ற தாணு?’’ எனக் கேட்டவரிடம், ‘‘அவங்களை எலெக்‌ஷன்ல ஜெயிச்சு வரச் சொல்லுங்கய்யா’’ என்றேன். உடனே ‘‘சேம்பர் சாவியைக் கொடுங்க’’ என எதிர்த்தரப்பிடம் இருந்து வாங்கி எங்களிடம் கொடுத்து, ‘‘எலெக்‌ஷன் வெச்சி பிரச்னையை முடிங்க. அதுவரை இப்ப யார் நிர்வாகிகளோ அவங்கதான் இருக்கணும்’’ என்று சொன்னார். எல்லோரும் கீழே இறங்கியதும், ‘‘உன் மூலமா நல்லது நடக்கட்டும்’’ என என் தோளைத் தட்டிக்கொடுத்தார் கலைஞர். அதில் ஒரு தாயன்பு இருந்தது. நியாயத்தை உணர்ந்ததால்தான் கலைஞர் அன்று எங்கள் பக்கம் நின்றார். கீழே வந்ததும், ‘‘சேம்பரின் மானம் காப்பாற்றப்பட்டது.’’ என்று என் கையைப் பிடித்து ரமேஷ் பிரசாத்தும், டி.வி.எஸ்.ராஜுவும் கண்கலங்கினார்கள்.

‘கிழக்குச் சீமையிலே’ படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் சிந்தாமணி முருகேசன் எனக்கு ரெட் கார்டு போட்டார். காரணம், ரஜினி சார் நடித்த ‘உழைப்பாளி’ பட ரிலீஸின்போது நேர்ந்த பிரச்னை. இந்தப் படத்துக்கு முன்பாக அவர் நடித்த இன்னொரு பட பிரச்னை தொடர்பாக நடந்த கூட்டத்தில் ரஜினி சார் பாதியிலேயே வருத்தப்பட்டு வெளியேறினார். இதை மனதில் வைத்து ‘உழைப்பாளி’ படத்துக்கும் ரெட் கார்டு போட்டார்கள்.

இதை எதிர்த்து ராகவேந்திரா மண்டபத்தில் ஒரு கூட்டம். பாலசந்தர் சார், பஞ்சு அருணாசலம் அண்ணன், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, ராதிகா, ரேவதி, அம்பிகா, ராதா என 50-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். ‘‘எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இதை முறியடிக்க வேண்டும்’’ எனப் பேசுகிறார்கள். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு நான் அங்கே போனேன். ‘‘விநியோகஸ்தர்கள் சொல்வதைத்தான் தியேட்டர்காரர்கள் கேட்பார்கள். அவர்களுக்குள் 50 ஆண்டுகளாக நல்ல பழக்கம் இருக்கிறது. அதனால், அவர்களோடு ஒற்றுமையாகப் போவதுதான் நல்லது’’ என்று நான் பேசினேன். ‘‘தாணு சொல்றது நியாயம்தான்’’ என பாலசந்தர் சார் சொல்ல, என்னை சிந்தாமணி முருகேசனிடம் சமாதானம் பேசச் சொல்கிறார்கள்.

அந்த நேரத்தில் ரஜினி சாரின் அருகில் இருந்த கமல் சார், ‘‘ரஜினி, ‘மகளிர் மட்டும்’ படத்துல ஒரு கேரக்டர்ல நடிக்கிறதுக்கு தாணுகிட்ட மூணு மாசமா கேட்குறேன். ஆனா, கால்ஷீட்டே தரமாட்றார்’’ எனச் சொன்னார். நான் தூய தமிழில் பேசும்விதம் கமலுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், தமிழவன் என்ற கேரக்டரில் நடிக்க என்னைக் கேட்டிருந்தார். ‘‘சார், நான் கேமராவுக்குப் பின்னாடிதான். முன்னாடி வர விருப்பம் இல்லை’’ எனச் சொல்லி அதை மறுத்தபடி இருந்தேன். இந்த நேரத்தில்தான் ரஜினி சாரிடம் அவர் சொல்ல, ‘‘தாணு சார், யூ மஸ்ட் டு இட்’’ என அவர் சொன்னார். அந்த நிமிடத்திலேயே நான் ஓகே சொன்னேன். ‘நான் மூணு மாசமா கால்ஷீட் கேட்டு ஓகே சொல்லாதவர், ரஜினி சொன்னதும் ஓகே சொல்லிவிட்டாரே’ என்பதுபோல் அப்போது கமல் சாரின் பார்வை இருந்தது. அந்தப் பார்வையின் முழுமையான அர்த்தம் எனக்கு ‘ஆளவந்தான்’ படத்தின் போதுதான் தெரிந்தது.

ரஜினி சார் பக்கம் போய் நின்று நான் ராகவேந்திரா மண்டபக் கூட்டத்தில் பேசியதால் ‘கிழக்குச் சீமையிலே’ படத்துக்கும் ரெட் கார்டு போட்டார்கள். ஆனால், விநியோகஸ்தர்கள் - தியேட்டர் உரிமையாளர்களிடம் எனக்கிருந்த தனிப்பட்ட நட்பை வைத்து தடையை உடைத்து படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்தேன். வெளியூர்களுக்கு முதல் ஷோவுக்குள் கொண்டு போகமுடியாவிட்டாலும், அன்று மாலைக்குள் எல்லா ஊர்களுக்கும் பிரின்ட் போய்ச் சேர்ந்தது. படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

படத்தின் நூறாவது நாள் விழாவுக்குத் திட்டமிட்டோம். நான் அந்த நேரத்தில் வைகோ அவர்களுடன் இருக்கிறேன். ‘வைகோவை வைத்து விழா நடத்தலாம்’ என பாரதிராஜா சாரே சொல்ல, நான் ஏற்பாடுகள் செய்தேன். படத்தில் பங்காற்றிய 250 கலைஞர்களுக்கு ஷீல்டு எல்லாம் தயாரித்து, விழா ஏற்பாடுகளைச் செய்த நேரத்தில் ஒரு சிக்கல். சசிகலாவின் கணவர் எம்.நடராசன் பாரதிராஜா சாருக்கு நெருக்கம். அவர், ‘‘இப்ப அம்மாவோட உங்களுக்கு டேர்ம்ஸ் நல்லபடியாதானே போயிட்டிருக்கு. இந்த நேரத்துல வைகோவை வெச்சி விழா நடத்தி அம்மா, கலைஞர்னு ரெண்டு பேர் பகையையும் ஏன் சம்பாதிக்கணும்?’’ என பாரதிராஜா சாரிடம் போனில் கேட்க, அவர் என்னை அழைத்து விவரத்தைச் சொன்னார். ‘‘இந்த நேரத்தில் வைகோவை விழாவுக்கு வரவேண்டாம் என்று சொல்லி, வேறு யாரையாவது வைத்து நடத்தினால் அது தவறாகிவிடும்’’ என்று சொல்லி, விழா ஏற்பாடுகளை அப்படியே நிறுத்திவிட்டேன்.

நடிகர் மோகன்லாலுடனான நட்பு, பிரபுதேவா நடிக்க சிம்ரன் அறிமுகமான ‘விஐபி’ பட சுவாரஸ்யங்கள், பிரபுதேவாவுக்குத் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சிக்கல், வைரமுத்து விவகாரம்... அடுத்த வாரம் சொல்கிறேன்.

- வெளியிடுவோம்...