
- கலைப்புலி எஸ்.தாணு
‘தையல்காரன்’, `வண்ண வண்ண பூக்கள்’ என இரண்டு படங்களிலும் எனக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சீர்செய்தது `கிழக்குச் சீமையிலே’ வெற்றி. படத்துக்கான மதுரை ஏரியா ரைட்ஸை பாரதிராஜா சாரே வாங்கியிருந்தார். அதனால், அவருக்கும் பெரிய லாபம் கிடைத்தது. படத்தின் தெலுங்கு உரிமையை எடிட்டர் மோகனிடம் நல்ல தொகைக்கு விற்றேன். இந்த நேரத்தில் பாரதிராஜா சார் ஸ்டெர்லிங் ரோட்டில் ஒரு வீடு வாங்கிக் குடியேறினார். ஒரு லட்சம் ரூபாய்க்கு பாலு ஜுவல்லர்ஸில் இருந்து நகை, தெலுங்கு உரிமையை விற்றதில் கிடைத்த பெரிய தொகை என இரண்டையும் எடுத்துக்கொண்டு போய், அவரது புது வீட்டின் பூஜை அறையில் மிகவும் பணிவோடு வைத்தேன். கண்கள் பனித்து என்னை இறுகத் தழுவி ‘‘உன்னைப் பணத்தால விலைக்கு வாங்கமுடியாதுயா’’ என உருகினார் அவர்.
அடுத்து வைரமுத்து வீட்டுக்குச் சென்றேன். 50,000 ரூபாய் பணத்தை அவர் கையில் கொடுத்தேன். ‘‘இதுவரை பாரதிராஜா படங்களுக்குப் பாடல்கள் எழுதி நான் பணம் பெற்றுக்கொண்டதே இல்லை. முதல்முறையாக இவ்வளவு பணம் தந்திருக்கிறீர்கள். இதற்கு முந்தைய எல்லாப் படங்களுக்கும் சேர்த்துக் கொடுத்ததுபோல இருக்கிறது’’ என உணர்ச்சிவசப்பட்டு என் கைகளைப் பிடித்துக்கொண்டார். அப்படிப்பட்ட வைரமுத்துதான் ‘கபாலி’ வெற்றி குறித்துத் தவறாகப் பேசினார். அவருடனான என்னுடைய பழக்கத்தைப் பின்னர் சொல்கிறேன்.

எனக்கு பிரமாண்டமான வரலாற்றுப் படங்கள் தயாரிக்கவேண்டும் என்பதில் பெரிய ஆர்வம் உண்டு. எஸ்.எஸ்.வாசன் எடுத்த `சந்திரலேகா’, `ஒளவையார்’ எல்லாம் ஜெமினி பிக்சர்ஸின் மைல்கல் படங்கள். அதுபோன்ற ஒரு வரலாற்றுப் படத்தைத் தயாரிக்க விரும்பினேன். இந்த நேரத்தில்தான் பிரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால் `காலாபாணி’ எனும் வரலாற்றுப் படத்தைத் தயாரித்து, நடிக்க இருப்பதாகக் கேள்விப்பட்டேன். `பிரிட்டிஷ் காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் அந்தமான் சிறையில் பட்ட பாடுகள், போராட்டம்தான் கதை’ என்பதைக் கேள்விப்பட்டதும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளிலும் படம் தயாராகிறது என்று அறிந்தேன். உடனடியாக மோகன்லாலின் மாமனாரும், சுஜாதா பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பாளருமான கே.பாலாஜியைப் போய்ப் பார்த்தேன். `பில்லா’, `வாழ்வே மாயம்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் மூத்த தயாரிப்பாளர், நடிகர் அவர். ``நான் `காலாபாணி’ படத்தின் தமிழ் உரிமையை வாங்கிக்கொள்கிறேன். தமிழுக்கு எவ்வளவு செலவாகிறதோ அந்தத் தொகையைக் கொடுத்துவிடுகிறேன்’’ எனப் பேசினேன். விலையில் எங்களுக்குள் மூன்று லட்சம் ரூபாய் தொக்கி நிற்கிறது. ``இந்தப்படத்தை கமர்ஷியல் வெற்றியை எதிர்பார்க்காமல் வாங்குகிறேன். அதனால் படம் வெற்றிபெற்றால் அதில் கிடைக்கும் பணத்தில் உங்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் தந்துவிடுகிறேன்’’ என்று சொல்லி டீலை முடித்தேன்.
`காலாபாணி’தான் எல்லா மொழிகளிலும் படத்தின் டைட்டில் என்றார்கள். ஆனால், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். ``அந்த டைட்டில் தெலுங்கு, இந்தி, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தெரியும். தமிழ் மக்களுக்கு அந்த வார்த்தை அந்நியமாக இருக்கும். சிறைச்சாலைதானே படத்தின் மையம். அதனால் படத்துக்கு `சிறைச்சாலை’ என வைத்துக்கொள்கிறேன்’’ என்று சொல்லி, தமிழுக்கு மட்டும் டைட்டிலை மாற்றிக்கொண்டேன்.
கவிஞர் அறிவுமதியை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு தாய் தன் குழந்தைகளை அடைகாப்பதுபோல அவர் இளம் கவிஞர்கள் பலரைப் பாதுகாத்து, வளர்த்தெடுத்தார். அவரிடமிருந்து உருவானவர்கள்தான் பழனிபாரதி, நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி எல்லோருமே. அவருடைய தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்தப் படத்தின் வசனங்கள், பாடல்களை அவரை எழுதவைத்தேன். இந்தப் படத்தில்வரும் `செம்பூவே பூவே’ இன்றுவரை சாகாவரம் பெற்ற பாடலாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் படத்துக்கான பப்ளிசிட்டியை என் விருப்பத்துக்குத்தான் செய்வேன் எனச் சொல்லி, மோகன்லால் - பிரபு இருவரையும் மையப்படுத்தி விளம்பரங்கள் செய்தேன். படத்தின் ஒரிஜினல் வெர்ஷனில் அந்தமான் சிறைக்குள் இருக்கும் அத்தனை பேரும் ஒரே மொழி பேசுவார்கள். ஆனால், நான் டப்பிங் கலைஞர்களைக்கொண்டு மலையாளம், மராத்தி, இந்தி எனப் பல்வேறு மொழிகள் உள்ளே பேசப்படுவதுபோல மாற்றினேன்.
போட்டோ கார்டை வீடியோவில் ஷூட் செய்து ட்ரெய்லர் வெளியிட்டேன். இப்போதைய டிரெண்டான மோஷன் போஸ்டரை அப்போதே முயற்சி செய்துபார்த்தேன். 24 ஷீட் போஸ்டர் எல்லாம் அடித்து தமிழகமெங்கும் ஒட்டி, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவிட்டேன். இதனால் தியேட்டர்களில் நல்ல கூட்டம். பிரபல டிவி சேனல் இந்தப்படத்தை நான்கு வாரங்களுக்கு நம்பர் 1 இடத்தில் வைத்திருந்தது.

மற்ற மொழிகளைவிடவும் தமிழில் இந்தப்படம் நல்ல வெற்றியடைந்தது. எனக்கு லாபம் கிடைத்தது. மோகன்லால், பிரியதர்ஷன் இருவரும் என்னை நேரில் அழைத்துப் பாராட்டினார்கள். அப்போதிலிருந்து பிரியதர்ஷன் என்னோடு மிகுந்த நட்பாகிவிட்டார். `சிறைச்சாலை’ போன்ற ஒரு வரலாற்றுப்படத்தை எனக்குக் கொடுத்தார் என்பதால் எனக்கும் அவர்மீது மிகுந்த மரியாதை உண்டு.
இந்த நேரத்தில் குட்லக் ப்ரிவியூ தியேட்டர் வருமானவரித் துறை மூலம் ஏலத்துக்கு வந்தது. இதை வாங்க ஏலத்துக்கு பிரியதர்ஷன் மனைவி லிஸியும் போயிருக்கிறார். என் சார்பில் என் மகன் பரந்தாமனும் போயிருக்கிறார். என் மகன் நல்ல தொகைக்கு ஏலத்தைக் கேட்டுக்கொண்டுபோக, பிரியதர்ஷனிடமிருந்து எனக்கு போன் வந்தது. ``என் மனைவி அந்த தியேட்டரை வாங்குவதற்காகப் போயிருக்கிறார். உங்கள் மகனும் ஏலம் கேட்டுக்கொண்டிருக்கிறார். நாங்கள் வாங்கணும்னு விருப்பப்படுறோம்’’ என்றார் பிரியதர்ஷன். குட்லக் ப்ரிவியூ தியேட்டர் பூமி பூஜை போட்ட நாளில் இருந்தே எனக்குத் தெரியும். ஒரு சினிமாக்காரனாக அந்த தியேட்டரை ஏலத்தில் எடுக்க மிகவும் விரும்பினேன். ஆனால், பிரியதர்ஷன் கேட்டதால், உடனடியாக என் மகனுக்குத் தகவல் அனுப்பி அங்கிருந்து வெளியே வரச்சொல்லிவிட்டேன்.
கே.பாலாஜி அவர்களிடம் வாக்கு கொடுத்தபடி `சிறைச்சாலை’ படத்தின் வெற்றியில் கிடைத்த மூன்று லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு அவரிடம் போனேன். ``சொன்ன வார்த்தைப்படி நடந்த நல்ல வியாபாரிய்யா நீ’’ எனப் பாரட்டினார். பாலாஜி மறைந்தாலும் அவரது குடும்பம் என்னுடன் நல்ல நட்போடு இருக்கிறது. அந்த நட்பின் அடையாளமாக இப்போது அதே பிரியதர்ஷன் இயக்கத்தில் `மரக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தின் தமிழ் உரிமையை என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளராக எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த படம் `சிறைச்சாலை’. அதனால் கே.பாலாஜி, மோகன்லால், பிரியதர்ஷன் என மூவருக்கும் நான் எப்போதும் நன்றி மறக்கமாட்டேன்.
இந்தப் படத்துக்கு அடுத்து ஒருநாள் என் அலுவலகத்துக்கு சுந்தரம் மாஸ்டர் காவிச் சட்டை, காவி வேட்டி அணிந்தபடி வந்தார். ``வணக்கம், நான் சுந்தரம் மாஸ்டர்... பிரபுதேவாவின் அப்பா’’ எனச் சொன்னவரை ``உங்களைத் தெரியாதா’’ என ஓடிப்போய் கட்டிப் பிடித்துக்கொண்டேன். ``என் மகனை வைத்து நீங்கள் ஒரு படம் தயாரிக்கவேண்டும். உங்களுடைய பப்ளிசிட்டியில் அவன் வரவேண்டும்’’ என்றார். ``நிச்சயமா பண்ணலாம் சார்’’ எனச் சொல்லி பிரபுதேவாவைச் சந்தித்தேன்.
பிரபுதேவாவுக்கு என் நண்பர் கலைப்புலி சேகர் ஒரு கதை சொன்னார். அது செட் ஆகாததால், ‘`இயக்குநர் வசந்த்தோடு படம் பண்ணலாம்’’ என்றார் பிரபுதேவா. கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டோம். அட்வான்ஸ் வாங்க வசந்த் வந்தார். பேச்சுவாக்கில் அப்போது, ``எப்ப தம்பி ரிலீஸ் வெச்சிக்கலாம்’’ எனக் கேட்டுவிட்டேன். ``சார்! ரிலீஸ், படம் முடிப்பதைப் பற்றியெல்லாம் என்னிடம் நீங்க பேசக்கூடாது’’ என்ற வசந்த், ``இரண்டு நாள் கழிச்சு வந்து சொல்றேன்’’ என்று போய்விட்டார். இரண்டு நாள் கழித்து வந்தார். ``ஒரு தேதி ஃபிக்ஸ் பண்ணிட்டேன்னா மனசு படபடக்கும். முடிக்கணும், முடிக்கணும்னு அவசர அவசரமாப் போகும். படத்துல குவாலிட்டி மிஸ் ஆகும் சார்’’ என்றார். ``சரி தம்பி, 6 மாசத்துல ஷூட்டிங் முடிச்சிடுவீங்களா’’ எனக் கேட்டேன். ``ஒரு நாள் டைம் கொடுங்க’’ என்று சொல்லிவிட்டுப் போனவர் மீண்டும் வந்தார். ``சரி தம்பி, 9 மாசம்’’ என்கிறேன். கடைசியாக, ``படம் ஸ்டார்ட் பண்ணுன நாள்ல இருந்து ஒரு வருஷத்துக்குள்ள முடிச்சிக் கொடுங்க’’ என்கிறேன். அப்போதும் அவர் ``நான் படத்தை அதுக்குள்ள முடிச்சிடுவேன் சார். ஆனா, எனக்குக் கால அவகாசம் ஃபிக்ஸ் பண்ணாதீங்க’’ என்றார். ``சரி தம்பி, இரண்டு நாள்ல நான் உங்களுக்குச் சொல்றேன்’’ என அவரை அனுப்பிவிட்டு பிரபுதேவாவிடம் பேசினேன்.

``நாம முதல் போட்டு வியாபாரம் பண்றோம். உங்க மத்த படம்லாம் 6 மாசத்துல ஷூட்டிங் முடியுது. அதேமாதிரிதான் நானும் கேட்டேன். ஆனா, அவர் டைம் குறிச்சிக் கொடுக்காதீங்கன்னு சொல்றார். ஒரு வருஷத்துக்குள்ளகூட முடிக்கமுடியும்னு சொல்லமுடியாத வசந்த்தை வெச்சுப் படம் பண்ண முடியுமா தம்பி?’’ என்று கேட்டேன். ``நான் மட்டும் எப்படி சார், ஒரு வருஷம் ஒரே படத்துல இருக்கமுடியும்? வேற இயக்குநர் பார்க்கலாம்’’ எனச் சொல்லிவிட்டார்.
அப்போதுதான் அறிமுக இயக்குநர் சசியைச் சந்தித்துக் கதை கேட்கிறோம். `சொல்லாமலே’ படத்தின் கதையைச் சொல்கிறார். கதை எங்கள் இருவருக்குமே பிடித்துவிட்டது. ஹீரோயினாக ஐஸ்வர்யா ராயை ஃபிக்ஸ் பண்ணலாம் என முடிவெடுத்து வேலைகளைத் தொடங்கிவிட்டேன். அப்போது படத்துக்கு சசி வைத்த டைட்டில் `கவிதை.’ பூஜைக்கு முன்பாக படத்தின் டைட்டில் போஸ்டரை டிசைன் செய்துகொண்டுவந்தார் இயக்குநர். சசி அருண்டேல் இயக்கும் `கவிதை’ என அவர் பெயர் முதலில், மேலே இருந்தது. தயாரிப்பாளரான என் பெயர், நடிகர் பெயர் எல்லாம் கீழே இருந்தது. சினிமாவில் யார் பெயர் முதலில் வருகிறது, யார் பெயர் அடுத்து வருகிறது என்பதெல்லாம் மிகவும் மரியாதைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படும். டிசைனைப் பார்த்ததும் ‘முதல் படம், ஆர்வத்தில் செய்கிறார்’ என்பதைப் புரிந்துகொண்டு ``ஓகேப்பா நல்லாருக்கு’’ எனச் சொல்லி அனுப்பிவிட்டேன். இதே போஸ்டரை பிரபுதேவாவிடம் போய்க் காட்டியிருக்கிறார் சசி. பிரபுதேவாவிடம் இருந்து எனக்கு போன் வந்தது. ``சார், முதல் படம்தான் பண்றார். ஆனால், அவர் பெயர் முதலில் இருக்கு. உங்க பெயர் எல்லாம் கீழே இருக்கு. இப்பவே இப்படின்னா பின்னாடி தப்பாகிடும். இந்த இயக்குநர் வேண்டாம்’’ என்கிறார்.
இதற்கிடையில் மீண்டும் சுந்தரம் மாஸ்டர் என் அலுவலகத்துக்கு வருகிறார். ``தாணு சார், ஏவிஎம் நிறுவனத்துக்கு இது சினிமாவில் 60-வது ஆண்டாம். அவர்கள் பிரபுதேவாவை வைத்து ஒரு படம் பண்ணலாம் என்கிறார்கள். உங்களுக்குக் கொடுத்திருக்கும் டேட்டைத்தான் கேட்கிறார்கள். நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்’’ என்கிறார். ``ஏவிஎம் எவ்வளவு பெரிய நிறுவனம். அவர்கள் மேல் எனக்குப் பெரிய மரியாதை உண்டு. என்னுடைய முதல் படமான `யார்’ படத்தின் தொடக்க விழாவுக்கு ஏவி.எம்.சரவணன் சார் வந்து குத்துவிளக்கேற்றினார். நீங்கள் என் டேட்ஸை அவர்களுக்குக் கொடுங்கள் சார்’’ என்று சொன்னேன். அந்தப் படம்தான் `மின்சாரக்கனவு’.
படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அடிக்கடி போய் பிரபுதேவாவைச் சந்திப்பேன். அப்போதுதான் எனக்கு ராஜீவ் மேனன் பழக்கம் ஆனார். அவர் இயக்கும் பாணி, அவரின் தமிழ் ஆர்வம் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அப்படித்தான் அவரோடு `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் இணைந்தேன்.
`மின்சாரக்கனவு’ ஷூட்டிங் முடிந்து எங்கள் படம் தொடங்கவேண்டும். சபாபதி என்பவரை அறிமுகப்படுத்துகிறார் பிரபுதேவா. விஜயகாந்தை வைத்து `பரதன்’ படத்தை இயக்கியிருந்த அவர், அப்போதுதான் லிவிங்ஸ்டன், ரம்பா நடித்த `சுந்தர புருஷன்’ படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸுக்காக இயக்கி முடித்திருந்தார். படமும் நல்ல ஹிட். `விஐபி’ படத்தின் கதை சொன்னார். எங்கள் இருவருக்குமே பிடித்துவிட்டது. படத்தின் வேலைகளைத் தொடங்கிவிட்டோம்.
இந்த நேரத்தில்தான் ‘பிரபுதேவா ரகசியத் திருமணம் செய்துகொண்டார்’ என பிரபல செய்தித்தாளில் செய்தி வர, விவகாரம் பற்றிக்கொண்டது. ``கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. இந்த நேரத்தில் திருமணம் வேண்டாம். பிரபுவைக் கூப்பிட்டுப் பேசுங்கள்’’ என்கிறார்கள் சுந்தரம் மாஸ்டரும், அவரது மனைவியும். நானும், பி.வாசுவும் பிரபுதேவாவை அழைத்துப் பேசுகிறோம். ‘அப்படி ஒரு திருமணம் நடக்கவில்லை’ என செய்தியாளர் சந்திப்பை எனது அலுவலகத்திலேயே நடத்தி பிரபுதேவாவையும் சொல்ல வைத்துவிட்டோம். அடுத்து அங்கிருந்து ஏவி.எம்.சரவணன் வீட்டுக்குப் போகிறோம். அங்கே சுந்தரம் மாஸ்டருக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே நடந்த உரையாடல் எங்கள் கண்களைக் கலங்கவைத்துவிட்டது.
கண்ணீரோடு மகனிடம் ‘இந்தத் திருமணம் வேண்டாம்’ எனக் கெஞ்சி காலில் விழப்போகிறார் அப்பா. பிரபுதேவா தடுத்து அப்பா காலில் விழுகிறார் எனப் பாசப் போராட்டம் நடக்கிறது. பிரபுதேவாவிடம் சுந்தரம் மாஸ்டர் பல விஷயங்கள் பேசினார். ஆனால், பிரபுதேவா திருமணம் குறித்து எதுவும் சொல்லாமல் மெளனமாகவே நின்றார்.
இந்த விவகாரத்துக்குப் பின் அண்ணா நகரில் தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக்கொடுத்து பிரபுதேவாவையும் அவர் மனைவியையும் அவர்களது பெற்றோரின் அனுமதியோடு தங்கவைத்தேன். இரண்டு குழந்தைகள் பிறக்கும்வரை அவர்கள் அந்த வீட்டில்தான் இருந்தார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சார் நடிக்க `மன்னவரு சின்னவரு’ படத்தைத் தயாரித்த அனுபவம், சிவாஜி சாருடனான பழக்கம், அவரது இறுதி நாள்களில் அவருடன் இருந்தது, ஆறரை ஆண்டுகள் கழித்து மீண்டும் கலைஞரைப் போய் சந்தித்த தருணம்... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.
- வெளியிடுவோம்...