மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 14

உண்மைகள் சொல்வேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
உண்மைகள் சொல்வேன்!

- கலைப்புலி எஸ்.தாணு

மிழ்த் திரையுலகில் மிக முக்கியக் கதாநாயகியாக உயர்ந்த சிம்ரன் ‘விஐபி’ படத்தில்தான் அறிமுகமானார். ஆனால், அவர் எங்களுடைய முதல் தேர்வு இல்லை.

‘விஐபி’ படத்தில் இரண்டு கதாநாயகிகள். முதல் கதாநாயகி யார் என்பதில்தான் சிக்கல். `விஸ்வரூபம்’ படத்தில் கமல் சாரோடு நடித்திருக்கும் பூஜா குமாரையே முதலில் ஹீரோயினாக ஓகே செய்தோம். சில காட்சிகளை ஷூட் செய்த இயக்குநருக்கு அவர் நடிப்பில் கொஞ்சம் திருப்தி ஏற்படவில்லை. ஆனால், பூஜா குமார் கோபம் கொள்ளாமல் ``நிச்சயம் நாம வேற படத்துல சேர்ந்து பண்ணலாம் சார்’’ என்று சொல்லி விடை பெற்றார். பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் அவர் `விஸ்வரூபம்’ படத்தில் கமல் சாருடன் நடித்ததைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

உண்மைகள் சொல்வேன்! - 14

பிறகு லைலா வந்தார். பிரபுதேவா, அப்பாஸ், லைலா, ரம்பா என எல்லோரையும் முடிவு செய்து படத் தொடக்க விழாவுக்கு அழைப்பிதழ் எல்லாம் அடித்துவிட்டேன். விழா அரங்கில் எனக்குப் பல வேலைகள் இருந்ததால், அன்று மாலை லைலா தங்கியிருந்த ஹோட்டலின் கீழே காரில் இருந்தபடியே புரொடக்‌ஷன் மேனேஜரை வரவைத்து லைலாவுக்கான அட்வான்ஸ் செக்கைக் கொடுத்தேன். ஆனால், லைலா புரொடக்‌ஷன் மேனேஜரிடம், ``ஏன், அவர் நேரில் வந்து தரமாட்டாரா, தயாரிப்பாளர் இப்படித்தான் நடந்துகொள்வாரா?’’ என்று கோபமாகப் பேசியிருக்கிறார். மேலும், படத்தின் பூஜைக்கும் மிகவும் தாமதமாக வந்தார். இது எனக்குக் கொஞ்சம் சரியில்லாதது போலத் தோன்ற, ‘லைலா வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன்.

அப்போதுதான் அமிதாப் பச்சன் நடத்திவந்த ஏபிசிஎல் நிறுவனம் மூலமாக சிம்ரன் வந்தார். ‘இரண்டு படங்களில் நடிக்க 3 லட்சம் ரூபாய் சம்பளம்’ என ஒப்பந்தம் போட்டு வேலைகளைத் தொடங்கினோம்.

உண்மைகள் சொல்வேன்! - 14

`விஐபி’ படத்துக்கு எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதுவதாக இருந்தது. முதல் இரண்டு பாடல்களை அவர்தான் எழுதினார். ஆனால், அந்த இரண்டு பாடல்களிலுமே இயக்குநர் சபாபதி சில வரிகளை மாற்றிவிட்டார். `நேற்று நோ நோ... இன்று நோ நோ... லைஃபில் டென்ஷன் என்றும் நோ நோ’ எனத் தொடங்கும் பாடலின் இந்த வரிகளை எழுதியவர் சபாபதி. அதன்பிறகு வரும் வரிகள் எல்லாம் வைரமுத்து எழுதியது. அதேபோல் `மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே... லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே... உன் வார்த்தை தேன் வார்த்ததே’ எனத்தொடங்கும் பாடலிலும் சரணங்கள் வைரமுத்து எழுதியவை. ஆனால், தொடக்க வரிகளான ‘மின்னல் ஒரு கோடி’ தொடங்கி ‘தேன் வார்த்ததே’ வரை அறிவுமதி எழுதியது. ‘`இந்தக் காட்சிக்கு இந்த வரிகள் எனக்கு வேண்டும் சார்’’ என்று என்னிடம் சொன்னார் இயக்குநர். ரெகார்டிங் போகும் நேரத்தில் என்னாலும் எதுவும் சொல்லமுடியவில்லை. ஆனால், வைரமுத்து கோபித்துக்கொண்டார். அதனால் பழனிபாரதி, அறிவுமதி என மற்ற பாடல்களை வெவ்வேறு பாடலாசிரியர்களுக்குப் பிரித்துக் கொடுத்தோம்.

அதேபோல் இந்தப் படத்தில் `சிக்கிமுக்கி செல்லம்மா... சிக்கிக்கொள்ளலாமா’ என ஒரு பாடல் வரும். அந்தப்பாடல் ரெகார்டிங் தொடங்கும்போதுதான் நான் ஸ்டூடியோவுக்குள் நுழைந்தேன். எனக்கு அந்த ஆரம்ப வரிகள் கொஞ்சம் அந்நியமாகப் பட்டன. அப்போது `மயிலு மயிலு மயிலம்மா... மல்லுக்கட்டலாமா... குயிலு குயிலு குயிலம்மா... கொஞ்சிட நீ வாம்மா’ என முதல் வரிகளை மட்டும் மாற்றலாமா என்றேன். இயக்குநருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

இந்தப் படத்தில் ‘வந்ததே லக்கு வந்ததே’ என ஒரு பாடல் வரும். இந்தப் பாடலின் படப்பிடிப்புக்காக 40 லட்சம் ரூபாய் செலவில் செட் போட்டோம். 5,000 சதுர அடியில் வீடு செட். உள்ளே ஒரு தளம் முழுக்க பொம்மைகள் இருப்பதுபோல பாடல் காட்சியைப் படம் பிடிக்கவேண்டும் என்றார் இயக்குநர். பொம்மைகளை வாங்க யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் என் நெருங்கிய நண்பரான எம்.ஜி.எம் முத்து நினைவுக்கு வந்தார். அவர் எம்.ஜி.எம் டிஸ்ஸி வேர்ல்டுக்கு வரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக லட்சக்கணக்கில் பொம்மைகள் வாங்கி குடோனில் வைத்திருந்தார். ``உனக்கு எவ்ளோ பொம்மை வேணுமோ எடுத்துக்கோ’’ என அவர் சொல்ல, ஒரு பைசா செலவில்லாமல் பொம்மைகளை எடுத்துவந்து ஷூட் செய்தோம். அந்தப் பாடல் அவ்வளவு பிரமாதமாக வந்தது.

உண்மைகள் சொல்வேன்! - 14

இந்த வீடு செட் பலருக்கும் பிடித்துவிட்டது. பல தெலுங்கு, இந்தித் தயாரிப்பாளர்கள் ‘இந்த செட்டில் படப்பிடிப்பு நடத்திக்கொள்கிறோம்’ என வாடகைக்குக் கேட்டார்கள். அப்போதெல்லாம் ஒரு படத்துக்குப் போட்ட செட்டை வாடகைக்கு விட்டே அதற்கு ஆன செலவைத் திரும்ப எடுத்துவிடுவார்கள். ஆனால், நான் எஸ்.எஸ்.வாசன் அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டவன் என்பதால், அந்த செட்டை அப்படியே இடிக்கச் சொல்லிவிட்டேன். ஒரு படத்தில் வந்த செட் இன்னொரு படத்தில் வரக்கூடாது என்பதுதான் என் கொள்கை. `சந்திரலேகா’ படத்துக்காக எஸ்.எஸ்.வாசன் அப்போதே பெரிய பொருட்செலவில் செட் போட்டு, படம் முடிந்ததும் அதை இடித்துவிட்டார். அதையேதான் நானும் பின்பற்றினேன்.

`விஐபி’ படம் முடிந்ததும் நடிகர் அர்ஜுன் ஒருநாள் என் வீட்டுக்கு வந்தார். அவரின் அப்பா மற்றும் குடும்பத்தினர் என்மேல் மிகுந்த மரியாதையோடு இருப்பார்கள். என் முதல் படத்தின் ஹீரோ என்பதால் நானும் அவர்மேல் மிகுந்த அன்பு காட்டுகிறேன். வீட்டுக்கு வந்தவர் தெலுங்கில் அவரும், செளந்தர்யாவும் நடித்த `சுபவார்த்தா’ படத்தைப் போட்டுக் காட்டினார். ``இந்தப் படத்தைத் தமிழில் பண்ணுனா நல்லாருக்கும் சார். நானும், செளந்தர்யாவும் அப்படியே தமிழிலும் நடிக்கிறோம்’’ என்றார். அப்படித்தான் `மன்னவரு சின்னவரு’ படத்தின் வேலைகள் தொடங்கின. தெலுங்கில் இயக்கிய அதே ராமசந்திர ராவ்தான் தமிழிலும் இயக்குநர்.

அர்ஜுனின் அப்பா கேரக்டரில் சிவாஜி சார் நடித்தால் நன்றாக இருக்கும் எனப் பேசினோம். சிவாஜி சாரின் மூத்த மகன் ராம்குமாரைப் பார்த்தோம். பெரிய தொகையை சம்பளமாகச் சொன்னார். ‘சிவாஜி சாரோடு வேலை செய்வது பெரும் பாக்கியம், வாழ்நாளில் கிடைத்தற்கரிய வாய்ப்பு’ என்பதால் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

சம்பளம் எல்லாம் பேசி முடித்து சிவாஜி சாரிடம் கதை சொல்வதற்காக இயக்குநரோடு, முதல்முறையாக அன்னை இல்லத்துக்குள் நுழைகிறேன். முதல் மாடியில் இருக்கிறார் சிவாஜி சார். சிம்மக்குரலில் ``வா புலி’’ என்று வரவேற்றார். காலில் விழுந்து வணங்கினேன். வைகோ எப்படி இருக்கிறார் என விசாரித்தவர், அரசியல் குறித்தும் கலைஞர் குறித்தும் நிறைய பேசினார். கலைஞரை ‘மூனாகானா’ என்றுதான் அவர் சொல்வார். காமராஜர் அரங்கத்தில் பூஜை. அந்த அரங்க உயரத்துக்கே சிவாஜி சாருக்கு கட் அவுட் வைத்து வெகு விமர்சையாக பூஜையை நடத்தினோம். படத்தின் ஷூட்டிங் பெங்களூரு, மைசூரு, சென்னை எனப்பல இடங்களில் இருந்தது.

அவருக்கு அப்போது உடல்நிலை சரியில்லை என்பது எங்களுக்குத் தெரியாது. அது தெரியாமலேயே ஏகப்பட்ட ஸ்மோக் போடுவது, லைட்ஸ் வைப்பது என ஷூட்டிங் நடத்தினோம். அவருக்கு அலர்ஜி இருப்பதைக்கூடத் தெரியப்படுத்தாமல் பெரும் ஒத்துழைப்பு தந்து நடித்துக்கொடுத்தார். அதன்பின் சிவாஜி சாரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவருடனான அனுபவங்களைப் பின்னர் பகிர்ந்துகொள்கிறேன்.

`மன்னவரு சின்னவரு’ பட நேரத்தில், அதாவது 1998-ல் என் மகள் கவிதாவுக்குத் திருமணம் முடிவானது. நெல்சன் மாணிக்கம் முதலியார் குடும்பத்தைச் சேர்ந்த நடராஜன்தான் மாப்பிள்ளை. நவம்பர் 22-ம் தேதி திருமணம். என் வீட்டில் நடக்கும் முதல் திருமணம் என்பதால் மிகச்சிறப்பாக நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்கிறேன். ரஜினி சார் வீட்டுக்குக் குடும்பத்தோடு சென்று பத்திரிகை வைத்தேன். அதேபோல் சிவாஜி சாருக்கும் அழைப்பிதழ் கொடுத்தேன்.

அரசியல் வட்டாரத்தில் எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டேன். ஆனால், நான் உயிருக்கு உயிராக நேசித்த கலைஞருக்கு மட்டும் அழைப்பிதழ் இன்னும் கொடுக்கவேண்டியிருந்தது. கலைஞர்தான் அப்போது முதலமைச்சர்.

என் மகள் திருமணத்துக்கு ஒரு மாதத்திற்கு முன்பு அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் சென்னை வந்தார். அவரை வரவேற்க வைகோ என்னையும் விமான நிலையம் வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் நான், ``கலைஞரை நேர்ல பார்த்தா அவர் பக்கத்துல போய் நின்னுடுவேன் சார்...’’ என மறுத்தேன். கட்சிக்காரர்கள் மூலமாகக் கட்டாயப்படுத்தியும், நான் போகவில்லை. ஆனால், விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் கலைஞரோடு நீண்டநேரம் நட்பாகப் பேசி, கண்ணீர் மல்கியிருக்கிறார் வைகோ. இது கட்சிக்காரர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ``உங்களால்தான் நாங்கள் கலைஞரை விட்டுப் பிரிந்தோம். உங்களுக்காக அவ்வளவு பேர் தீக்குளித்தார்கள், திமுக-வை விட்டு வந்தார்கள். ஆனால், நீங்கள் மீண்டும் போய் அவர்களுடன் இணைகிறீர்களே’’ என்று அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். இந்தச் சந்திப்புக்குப்பிறகு சிலர் மதிமுகவிலிருந்து திமுகவில் போய்ச் சேர்ந்தனர்.

இந்தச் சூழலில், என் மகள் திருமணத்துக்குச் சில நாள்களே இருந்த நிலையில் ஆற்காட்டாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ``என்னய்யா... தலைவருக்கு இன்னும் அழைப்பிதழ் கொடுக்கலையா? செய்தித்தாள்ல எல்லாம் விளம்பரம் கொடுத்துட்டு இருக்க... தலைவர் ‘அழைப்பிதழ் வந்துச்சா’ன்னு கேட்டாருய்யா’’ என்றார். வைகோவின் செயலாளர் பாலனுக்கு போன் அடித்து ``என் மகள் திருமணத்துக்காக கலைஞரை அழைக்க அவர் வீட்டுக்குப் போகிறேன். வைகோவிடம் சொல்லிவிடுங்கள்’’ எனச் சொல்லிவிட்டு எப்போதும்போல நேரம் எதுவும் வாங்காமல் கலைஞரின் வீட்டுக்குப் போய்விட்டேன். 22-ம் தேதி திருமணத்துக்கு, முதலமைச்சருக்கு அழைப்பிதழ் கொடுக்க 20-ம் தேதி போகிறேன்.

ஆறரை ஆண்டுகள் கழித்து கலைஞரின் ஆலிவர் ரோடு இல்லத்துக்குள் நுழைகிறேன். மதியம் 3.30 மணி. நான் வருவதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சண்முகநாதன் மேலே போய் கலைஞரிடம் தகவல் சொல்ல, ‘கிர்... கிர்...’ என போனை டயல் செய்யும் சத்தம் கேட்கிறது. கீழே காத்திருக்கிறேன். அரைமணி நேரத்துக்குள் கலைஞர் வீட்டுக்கு ஆற்காட்டார், துரைமுருகன், பொன்முடி என அமைச்சர்கள் பலரும் வந்துவிட்டார்கள். கலைஞர் வெள்ளை வேட்டி, சட்டை, மஞ்சள் துண்டோடு கீழே கம்பீரமாக இறங்கிவந்தார். மந்திரிகள் வரிசையாக நிற்கிறார்கள். அப்படியே கலைஞரின் காலில் போய் விழுந்தேன்.

ஆறரை வருடப் பிரிவை நினைத்து என்னையறியாமல் அழ ஆரம்பித்துவிட்டேன். ``என்னய்யா, நல்ல விசேஷத்துக்குப் பத்திரிகை கொடுக்க வந்துட்டு கண்ணீர் சிந்துற... அழாதய்யா...’’ என என்னை ஆறுதல்படுத்தியவர், பத்திரிகையை வாங்கிப் பார்த்தார். ``யோவ்... எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட குடும்பம்யா உன் மாப்பிள்ளை குடும்பம். அன்னைக்குக் காலைல காஞ்சிபுரத்துல சி.வி.எம்.அண்ணாமலை பையன் கல்யாணம் இருக்குய்யா. சாயங்காலம் ரிசப்ஷனுக்கு வந்துடறேன்’’ என்றவர், என் தோள்மேல் கைபோட்டு நடந்து காருக்குள் ஏறினார்.

திருமணம் நடக்கும்போது ரஜினி சாரும், சிவாஜி சாரும் `படையப்பா’ ஷூட்டிங்கிற்காக மைசூரில் இருந்தார்கள். திருமணத்துக்கு முந்தைய நாள் மைசூரிலிருந்து கார் மூலம் பெங்களூரு வந்து, விமானம் மூலம் சென்னை வந்து திருமணத்தில் கலந்துகொண்டார்கள். ‘ஹேராம்’ கெட்அப்பில் கமல் சார் திருமணத்துக்கு வந்தார். திரையுலகைச் சேர்ந்த பலரும் வந்து சிறப்பிக்க, திருமணம் காலையில் வெகுசிறப்பாக நடந்துமுடிந்தது.

மாலை ரிசப்ஷன். கட்சியை உடைத்துக்கொண்டு போன வைகோவின் புதிய கட்சிக்காக வீடு கொடுத்து, நிதி கொடுத்து அந்த எதிர்க்கட்சியின் முக்கிய ஆளாக இருந்தவர் என்றெல்லாம் என்னைப் பற்றி கலைஞர் நினைக்கவில்லை. முதலமைச்சர் கலைஞர் என் மகளை வாழ்த்த, 13 மந்திரிகளோடு வந்தார். கலைஞரை வரவேற்க நான் ஓடுகிறேன். ஆனால், திருமண மண்டபத்துக்குள் இருந்த வைகோ, கலைஞரை வரவேற்காமல் கச்சேரியை ரசிக்க முதல் வரிசையில் போய் உட்கார்ந்துவிட்டார்.

அதன்பிறகு என்ன நடந்தது, சிவாஜி சாருடனான நினைவுகள், அஜித் நடித்த `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படம் தொடங்கிய கதை... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்!

- வெளியிடுவோம்...

உண்மைகள் சொல்வேன்! - 14

ள்ளங்கை ரேகை மறையகருவிழியின் வெளிச்சத்தில் வனப்பச்சையத்தின் மணம் சுவாசத்தில் மேலெழ

நம் இதழ்கள் பருகும்முத்தத்தின் நீளம்

இரண்டாயிரம் ஆண்டுகள்.

உண்மைகள் சொல்வேன்! - 14

யானையின் முகப்படாமாய்அந்திக்கு மட்டுமே தன்னை அலங்கரித்துக்கொள்ளத் தெரிகிறது

சிணுங்கும் கொலுசொலியைசிவக்கும் இதழ் சிவப்பைபுலன் நுகரும் காட்டுப்பூவைக்காத்திருப்பின் தித்திப்பைஅந்தி அணியும் அன்பைப்போல்

ஆடம்பர அலங்காரம் வேறெந்தப் பொழுதுக்கு உண்டு.

உண்மைகள் சொல்வேன்! - 14

ரு பொழுதுகள் கலக்கும் கருஞ்சாம்பல் அந்தியில்செவ்வானமும் ஆழ்கடலும்போல்ஒருவருக்குள் ஒருவர் மூழ்குகிறோம்

மொட்டுகள் இதழ் விரிக்கும்மலர்களின் மணங்களையெல்லாம்நம் நினைவுகள் துழாவிடகலவியின் கிறக்கத்தைச் சூழும்அந்தியின் கடும் மணத்தில்புத்தம்புது நறுஞ்சாந்தாய்நம் உடல்கள் குழைகின்றன

கலவியில் பெருகும் காமத்தின் மணமும் சாம்பல் அந்தியும் குழைந்து மலர்ந்த அதியற்புத மலரொன்றைச் சூடிக் கொள்கிறதுபிரபஞ்சத்தின் இவ்விரவு.