மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 15

உண்மைகள் சொல்வேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
உண்மைகள் சொல்வேன்!

கலைப்புலி எஸ்.தாணு

னமாச்சர்யங்களை மறந்து என் மகள் திருமணத்துக்கு, மந்திரிகள் புடைசூழ முதலமைச்சர் கலைஞர் வந்து நின்ற கணம் கலங்கிப்போனேன். கலைஞர் என்மேல் கொண்டிருந்த பிரியம் என்னை அசைத்துப்போட்டது. ஆனால், முன்னின்று அவரை வாழ்த்தி வரவேற்க வேண்டிய வைகோ, கச்சேரி நடந்த இடத்துக்குப் போனது என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.

வாஜ்பாய் வந்தபோது கலைஞரோடு நன்றாகப் பேசிப்பழகிய வைகோ, திருமணத்தில் இப்படிச் செய்தது ஏன் என்கிற கேள்வி என்னைக் குடைந்தது. மேடையில் வருத்தத்தோடு நின்றேன். ‘‘அதான் வந்துட்டனேய்யா... சந்தோஷம்தானே... சிரிய்யா’’ என்றார் கலைஞர். அவர் கையால் பரிசுப்பொருள் கொடுத்து என் மகளை வாழ்த்தினார். என் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் இது.

‘மின்சாரக்கனவு’ ஷூட்டிங் நாள்களில் பிரபுதேவாவைச் சந்திக்கப் போகும்போது இயக்குநர் ராஜீவ் மேனன் பழக்கமானார். மலையாளியாக இருந்தாலும் அவருடைய தமிழ் ஆர்வம் என்னை மிகவும் ஈர்த்தது. மாபெரும் கலைஞன். தேவாரம், திருவாசகம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என அனைத்தையும் படித்து மனப்பாடமாக வைத்திருப்பார். ‘‘கவிஞர்களிடம் இப்படியெல்லாம் பாடல் வரிகள் வேண்டும் எனக் கேட்கும்போது, எனக்குக் கொஞ்சமாவது தமிழ் தெரிந்திருக்க வேண்டாமா சார்?’’ என்பார்.

உண்மைகள் சொல்வேன்! - 15

‘மன்னவரு சின்னவரு’ படம் முடிந்த நேரம்... ஒருநாள் ராஜீவ் மேனன் என்னை வந்து பார்த்தார். சின்னச் சின்னக் குறிப்புகளாகக் கதையைச் சொல்லி, ஸ்கிரிப்ட் புக்கைக் கையில் கொடுத்தார். ‘‘என் முதல் படம் ஏவிஎம்-க்கு பண்ணினேன். ரெண்டாவது படத்தை அவர்களுக்கு இணையான ஒரு தயாரிப்பாளரை வச்சி பண்ணணும்னு விரும்புறேன் சார். அதான் உங்களைச் சந்திக்கிறேன்’’ என்றார். ஸ்கிரிப்ட் புக்கை அவர் கையிலேயே கொடுத்து, ‘‘நீங்கள் சொன்ன ஹின்ட்ஸே சூப்பரா இருந்தது. நாம நிச்சயம் படம் பண்ணலாம்’’ என்றேன். இப்படி ஆரம்பித்ததுதான் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.’

மீனா, செளந்தர்யா என இரண்டு ஹீரோயின்களை முடிவு செய்துவைத்திருந்தார். செளந்தர்யா அப்போதுதான் எங்கள் தயாரிப்பில் ‘மன்னவரு சின்னவரு’ படத்தில் நடித்திருந்ததால், உடனே ஓகே சொல்லிவிட்டார். பிரபுதேவா, அப்பாஸ் என இரண்டு ஹீரோக்கள். மம்மூட்டி கேரக்டர் பற்றி முதலில் நாங்கள் டிஸ்கஸ் செய்யவில்லை. ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏற்கெனவே ‘மின்சாரக் கனவு’ படத்தில் நடித்திருந்ததால் பிரபுதேவாவும் கதைக்கு ஓகே சொல்லிவிட்டார். அப்பாஸும் ஓகே.

உண்மைகள் சொல்வேன்! - 15

இந்தப் படத்தின் தயாரிப்பைப் பொறுத்தவரை நான் நேரடியாக சம்பளப் பேச்சுவார்த்தை, நடிகர் தேர்வு என எதிலும் இறங்கவில்லை. ராஜீவ் மேனன் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் செய்தேன். நான்கூட அள்ளிக் கொடுத்துவிடுவேன். ராஜீவ் மேனன் கிள்ளித்தான் கொடுப்பார். பண விஷயத்தில் கட்டுக்கோப்பாக இருந்தார். பிரபுதேவாவிடம் ராஜீவ் மேனன் சம்பளம் பேசும்போது அவர்களுக்குள் ஒரு சின்ன நெருடல். பிரபுதேவா எனக்கு போன் அடித்தார். ‘‘சம்பளம் கம்மியா சொல்றார். இது எனக்கு சரியா இல்லை சார்... நான் பண்ணல... நீங்க வருத்தப்படாதீங்க’’ என்றார்.

ராஜீவ் மேனன் அடுத்து விஜய்யிடம் கதை சொன்னார். அவருக்கும் கதை பிடித்துவிட்டது. ஆனால், ராஜீவ் மேனன் கேட்ட தேதிகள் அவரிடம் இல்லை. ‘‘இரண்டு படங்கள் முடிச்சுட்டுப் பண்றேன்’’ என்றார் விஜய். ராஜீவ் அடுத்து பிரசாந்திடம் கதை சொல்ல, அவர் ஓகே சொல்லிவிட்டார். பிரசாந்த் என்னை வந்து சந்தித்து ‘‘இந்தப்படம் பண்றதுல ரொம்ப சந்தோஷம் சார்’’ எனச் சொல்லிவிட்டுப் போனார். பிரசாந்த், அப்பாஸ், மீனா, செளந்தர்யா என, கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டோம்.

உண்மைகள் சொல்வேன்! - 15

இந்த நேரத்தில் ராஜீவ் மேனன் ஒரு விளம்பரப்படம் எடுப்பதற்காக மும்பை சென்றிருந்தார். விளம்பரத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய். ஷூட்டிங் இடைவேளையில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தைப் பற்றிச் சொல்ல, அவருக்குக் கதை மிகவும் பிடித்து, படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். சந்தோஷத்தின் மிகுதியில் ராஜீவ் மேனன் எனக்கு போன் அடித்தார். ‘‘செளந்தர்யா கேரக்டரில் ஐஸ்வர்யா ராயை ஃபிக்ஸ் பண்ணிடலாம் சார். சம்பளம் 50 லட்சம் பேசியிருக்கிறேன்’’ என்றார். ‘‘சந்தோஷம் தம்பி... பண்ணிடலாம்’’ என்றேன்.

அடுத்து மீனா கேரக்டருக்கும் இதேபோல் தபுவை ஃபிக்ஸ் செய்துவிட்டார். தபுவின் சம்பளம் 10 லட்சம். நடிகைகள் மாறிய விஷயம் பிரசாந்தின் காதுகளுக்குப் போனது. அவர் ராஜீவ் மேனனிடம் ‘‘எனக்கு ‘ஜீன்ஸ்’ படத்தில் ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராய். இப்போது இந்தப் படத்தில் தபு எனக்கு ஜோடியாக நடித்து, ஐஸ்வர்யா ராய் இன்னொருவருக்கு ஜோடியாக நடித்தால் என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் தவறாக நினைக்காமல் ஐஸ்வர்யா ராயை எனக்கு ஜோடியாக மாற்றுங்கள்’’ என்று சொல்லியிருக்கிறார்.

ராஜீவ் மேனன் என்னிடம், ‘‘அவர் கதையையே மாற்றச் சொல்வது எனக்கு சங்கடமாக இருக்கிறது சார்... வேறு யாராவது பார்க்கலாம்’’ என்றார். அடுத்து அஜித்தை சந்தித்து கதையைச் சொல்லி அவரிடம் சம்மதம் வாங்கிவிட்டார். அப்போது முதுகில் ஆபரேஷனுக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அஜித். அவரின் மேனேஜர் சுதாகர் என்னை வந்து சந்தித்தார். ‘‘சம்பளமாகப் பேசப்பட்டதில் மூன்றில் ஒரு பங்கு பணத்தை முதலில் கொடுக்கவேண்டும்’’ என்றார். ஓகே சொல்லி அவருக்குப் பணத்தை அனுப்பினேன். ‘‘நான் ஆஸ்பிட்டல்ல படுத்துட்டிருக்கேன். சிகிச்சை முடிஞ்சு திரும்பவும் எப்படி நடமாடுவேன்னு தெரியாது. ஆனால், என்னை நம்பி தாணு சார் பணம் கொடுத்தார். இதை எப்பவும் மறக்கமாட்டேன்’’ என்று ராஜீவ் மேனனிடம் உருகியிருக்கிறார் அஜித். சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனதும் நேராக வீட்டுக்குப் போகாமல் என் அலுவலகம் வந்தார். என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசிய அந்த நாள் இன்னும் என் கண்முன் இருக்கிறது.

உண்மைகள் சொல்வேன்! - 15

மம்மூட்டி கதாபாத்திரத்தில் நடிக்க பார்த்திபனை ஒப்பந்தம் செய்கிறார் ராஜீவ் மேனன். என்னிடம் ‘‘20 லட்சம் சம்பளம் பேசிட்டேன் சார். நாளைக்கு 5 லட்சம் அட்வான்ஸா அவருக்கு அனுப்பிடுங்க’’ என்கிறார். ‘‘அப்படியா... யாரு சார் தயாரிப்பாளர்’’ என ராஜீவ் மேனனிடம் கேட்டேன். ‘‘என்ன சார்... இப்படிக் கேட்குறீங்க... நீங்கதான்’’ என்றார். ‘‘சார்... பார்த்திபனோடு ‘தையல்காரன்’ படத்தில் எனக்குச் சின்ன நெருடல் இருக்கு. அவர்தான் நடிக்கணும்னா என்னை மாத்திடுங்க. நான் வேணும்னா அவரைத் தவிர்த்துடுங்க’’ என்றேன். ‘‘என்ன சார் இப்படிச் சொல்றீங்க. நீங்கதான் சார் வேணும். நான் வேற நடிகர் பார்த்துக்குறேன்’’ என்றார் ராஜீவ்.

இந்த விஷயம் பார்த்திபனுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. பார்த்திபன் எனக்கு போன் அடித்தார். ‘‘உங்களைச் சந்திக்கணும் சார்... நேரம் கொடுங்க’’ என்றார். ‘‘பார்த்தி, இப்ப நான் உன் கே.கே.நகர் ஃப்ளாட்டைத் தாண்டித்தான் கார்ல போயிட்டிருக்கேன். ரெண்டு நிமிஷத்துல வர்றேன்’’ எனச் சொல்லிட்டு அவர் அலுவலகத்துக்குள் போனேன்.

‘‘சார், பிரபுதேவா என்னைவெச்சு ‘விசில்’னு ஒரு படம் பண்ணணும்னு சொல்லும்போது நீங்க வேணாம்னு சொல்லியிருக்கீங்க. இப்ப ராஜீவ் மேனன் வந்து எல்லாம் பேசிட்டுப் போனபிறகு இப்படிச் சொல்லியிருக்கீங்க. நான் என்ன சார் தப்பு பண்ணினேன்?’’ எனக் கேட்டார். ‘‘நீ டப்பிங் கலைஞனா இருந்த காலத்தில் இருந்தே உன்னைப் பார்த்திருக்கேன் பார்த்திபன். ‘புதிய பாதை’ படத்தை விஜயகாந்தோடு வந்து நான்தான் தொடங்கிவெச்சேன். ஆனா, ‘தையல்காரன்’ படத்துல உன்னோட எனக்கு ஒரு நெருடல் இருக்கு. அதை விளக்க வேண்டாம். விட்டுடு’’ என்றேன்.

‘‘இல்ல சார்... உங்களோட மத்த படங்களுக்குப் பண்ணுன மாதிரி நீங்க ‘தையல்காரன்’ படத்துக்கு பப்ளிசிட்டி பண்ணல’’ என்றார். ‘‘படம் நல்லபடியா போகும்போதுதான் பப்ளிசிட்டி பெருசா பண்ணமுடியும். நான் அந்தப் படத்துக்கு என்ன செய்யணுமோ அதையெல்லாம் செஞ்சேன். இந்தப் படம் வேணாம் விட்டுரு. இன்னொரு படம் நாம பண்ணுவோம்’’ என்று சொல்லிவிட்டு வந்தேன். இப்போது எனக்கு பார்த்திபனோடு நல்ல பழக்கம் இருக்கிறது. நிச்சயம் அவரோடு ஒரு படம் செய்வேன்.

இறுதியாக அந்த கேரக்டரில் மம்மூட்டி நடிக்க ஒப்பந்தமானது. படத்தின் ஷூட்டிங்கிற்குக் காரைக்குடி கானாடுகாத்தான் அரண்மனை வேண்டும் எனக் கேட்டார் ராஜீவ் மேனன். அப்போது அரண்மனையை ஷூட்டிங்கிற்கு விடுவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தார்கள். வைகோவிடம் போய், ‘எப்படியாவது எம்.ஏ.எம்.ராமசாமியிடம் பேசி அனுமதி வாங்கிக்கொடுங்கள்’ என்றேன். வைகோ எம்.ஏ.எம்.ராமசாமியை நேரில் சந்தித்தார். ‘‘என் கட்சிக்காக வீடு கொடுத்து எல்லா உதவிகளையும் செய்தவர் அவர். அரசியலில் எதைக்கேட்டாலும் வேண்டாம் என்பவர், என்னிடம் கேட்பது ஷூட்டிங் நடத்துவதற்கான உதவிதான். நீங்கள் இதை எனக்காகச் செய்யவேண்டும்’’ என எம்.ஏ.எம்.ராமசாமியின் கைகளைப் பிடித்து வைகோ கேட்டதும் அவர் மனம் இறங்கிவிட்டது. ‘‘கலைஞர் கேட்டும் கொடுக்கல. முரசொலி மாறன் கேட்டும் கொடுக்கல. நீங்க கேட்டுக் கொடுத்தா தப்பா நினைச்சிப்பாங்களே’’ என்றவர் ‘‘இறப்பதுபோல எந்தக் காட்சியும் எடுக்கக்கூடாது’’ என்று சொல்லி அனுமதி தந்தார். படத்தின் கதைப்படி இறப்புக் காட்சி ஒன்று உண்டு. ஆனால், அதை நாங்கள் வேறு வீட்டில் ஷூட் செய்தோம்.

ஷூட்டிங்கிற்கு எப்படி அந்த வீட்டைக் கொடுத்தார்களோ, அப்படியே திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதில் ராஜீவ் மேனன் மிகவும் கவனமாக இருந்தார். ட்ராலி, லைட்ஸ் நகர்த்துவதற்கெல்லாம், அதன் வீல்களில் ஸ்பாஞ்சுகளை வைத்து பளிங்குக் கற்களில் சிறு கீறல்கூட விழாமல் ‌ஷூட்டிங்கை நடத்தினார்.

ஷூட்டிங்கில் இருந்த ஐஸ்வர்யா ராயிடம், இந்த அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த எப்படி அனுமதி கிடைத்தது என்பதை ராஜீவ் மேனன் சொல்லியிருக்கிறார். உடனே ஐஸ்வர்யா ராய், ``தாணு சாரை நான் பார்க்கணும். இவ்ளோ நாள் நடிக்கிறேன். தயாரிப்பாளரையே பார்க்காமல் போனால் எப்படி? அவரை இங்கே வரச்சொல்லுங்கள். அவரோடு ஒரு லன்ச் சாப்பிடலாம்’’ என்று சொன்னார்.

முன்னர் ஒரு படத்தில் இயக்குநருக்கும் எனக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால், நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே போவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தேன். அதனால், நான் வரமாட்டேன் என ராஜீவ் மேனனிடம் சொன்னேன். ‘‘சார், நீங்க அவசியம் வந்தே ஆகணும்’’ என்றார் உரிமையோடு. அடுத்த நாள் கானாடுகாத்தான் போனேன். அஜித், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ், ராஜீவ் மேனன் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டோம். எல்லோருக்குமே சந்தோஷம்.

‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். அவர்மேல் எப்போதுமே எனக்குத் தனிப்பிரியம் உண்டு. ரஹ்மானோடு இருந்த நட்பின் காரணமாக இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களையுமே வைரமுத்து எழுதினார். ‘‘ரஜினி, கமல், மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் படங்களுக்கு மட்டும் நான் எல்லாப் பாடல்களையும் எழுத 3 லட்சம் சம்பளம் வாங்குகிறேன்’’ என்றார். ‘‘தாராளமா வாங்கிக்கங்க சார்’’ எனச் சொல்ல, எல்லாப் பாடல்களையும் எழுதிக்கொடுத்தார்.

அதேநேரத்தில்தான் ‘அலைபாயுதே’ படமும் தயாரானது. இரவில் எல்லோரும் ரஹ்மான் ஸ்டூடியோவில் உட்கார்ந்திருப்போம். அப்போது ‘லகான்’ படத்தின் இயக்குநர் அஷுதோஷ் கோவரிக்கரும் காத்திருப்பார். அங்குதான் அவரோடு நல்ல பழக்கம் ஏற்பட்டது. இந்தநேரத்தில் ஒருநாள் ரஹ்மான் என்னிடம், ‘‘பரத்பாலா எனக்கு நெருக்கமான நண்பர். அவர் ஒரு படம் இயக்க விரும்புகிறார். என்னிடம் தயாரிப்பாளர் வேண்டும் எனக் கேட்டார். எனக்கு இரண்டு தயாரிப்பாளர்கள்தான் தெரியும். ஒன்று தாணு சார். அடுத்து ‘எஸ் பிக்சர்ஸ்’ ஷங்கர். நீங்க எனக்காக இந்தப்படம் பண்ணணும்’’ எனக் கேட்டார். உடனே ஒப்புக்கொண்டேன். விக்ரம் ஹீரோ என முடிவுசெய்தோம். இந்தப்படம் பற்றிப் பிறகு சொல்கிறேன்.

‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘அலைபாயுதே’ என இரண்டு படங்களின் ஆடியோவுக்கும் வியாபாரம் நடக்கிறது. இதில் HMV எனும் ஆடியோ கேசட் நிறுவனம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பட ஆடியோ உரிமையை ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. ‘அலைபாயுதே’ படத்தைவிடவும் அதிகம். அந்தக் காலத்தில் ஆடியோ ரைட்ஸ் மிக அதிக தொகைக்கு விற்பனையான படம் இதுதான். அதற்குக் காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் இந்தப் படத்துக்கு நாங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த பரபரப்பு மற்றும் பப்ளிசிட்டி.

‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பாடல் படப்பிடிப்பு, இசை வெளியீட்டு விழா, அஜித்துடனான எனது பழக்கம், சிவாஜி சாரின் கடைசி நிமிடங்கள், கமல் சாருடன் ‘ஆளவந்தான்’ ஆரம்பம்... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.

- வெளியிடுவோம்...