
கலைப்புலி எஸ்.தாணு
‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’ படம், ஆடியோ வியாபாரத்தில் என்னை நன்றாகவே கண்டுகொண்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, படத்தின் பாடல்களின் வெற்றிக்குக் காரணம். பாடல்களை மிகவும் அற்புதமாகப் படமாக்கினார் இயக்குநர் ராஜீவ் மேனன். ஒவ்வொரு பாடலுக்கும் இவ்வளவு பட்ஜெட் என்று பக்காவாக பிளான் போட்டுச்சொல்வார். பாடல் ஷூட்டிங்கிற்கு எவ்வளவு பணம் தேவையோ, அந்தத் தொகையை மட்டுமே வாங்குவார். பிரமாதமான லொகேஷன்களில் பாடல்களை எடுப்பார்.

ஒரு பாடல் ஷூட் செய்ய மட்டும் கொஞ்சம் கூடுதல் பட்ஜெட் தேவைப்படுவது போலத் தெரிந்தது. அதற்கான செட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்க மூன்றரை லட்சம் ரூபாய் கொட்டேஷன் போட்டிருந்தார் ஆர்ட் டைரக்டர். அவர் என்னென்ன பொருள்கள் வாங்கவேண்டும் என்றாரோ, அந்த லிஸ்ட்டை வாங்கிக்கொண்டு பாரிஸ் கார்னரில் கந்தசாமி கோயில் அருகிலிருக்கும் ஹோல்சேல் கடைக்குப் போனேன். அத்தனை பொருள்களையும் வாங்கினேன். மொத்த பில் 51,000 ரூபாய். கலை இயக்குநரிடம், ‘`மூன்று லட்சம் ரூபாய் அந்தக் கடைக்காரன் உங்ககிட்ட கொள்ளையடிக்கிறான் பாருங்க’’ என்று சொன்னேன். உடனே அவர் அதிர்ச்சியாகி ‘`பக்கத்துல இருக்கிற கடைன்னு வாங்கிட்டு இருந்தேன்... இப்பதான் சார் உண்மை தெரியுது’’ என, பழைய கடையில் பொருள்கள் வாங்குவதையே நிறுத்தினார். ஒரு தயாரிப்பாளர் படத்தில் எப்படியெல்லாம் செலவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து விழிப்போடு இருந்து கவனிக்கவேண்டும்.

‘என்ன சொல்லப் போகிறாய்’ பாடலை கெய்ரோவில் ஷூட் செய்யவேண்டும் என்று சொன்னார் ராஜீவ் மேனன். அந்த நேரத்தில் கெய்ரோவுக்குச் சுற்றுலா வந்த 40 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டார்கள். அதனால், ‘இந்த நேரத்தில் அங்கே போக வேண்டாமே’ என ராஜீவ் மேனனிடம் சொன்னேன். ஆனால் அவர், ‘`எனக்கு இந்தியத் தூதரகத்தில் ஆட்களைத் தெரியும். போலீஸ் பாதுகாப்போடு படப்பிடிப்பை நடத்தலாம்’’ என்றார். ‘`அஜித்தின் பாதுகாப்பு முக்கியம் சார்... இந்தச் சூழலில் அவர் வருவாரா?’’ என்று கேட்டேன். ‘`அஜித் வர ஒப்புக்கொண்டார். எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஷூட் செய்துவிட்டுத் திரும்புவோம்’’ என்று அவர் சொல்ல, கடவுளிடம் பிரார்த்தித்துவிட்டு அனுப்பிவைத்தேன். அஜித், தபு உள்ளிட்ட நடிகர்கள், நடனக் கலைஞர்கள் எனப் பலரையும் அழைத்துக்கொண்டு போய் பத்திரமாகப் படப்பிடிப்பை நடத்தி, பாடல் காட்சிகளைப் படமாக்கியிருந்தார் ராஜீவ் மேனன்.
அதேபோல் ‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்... காதல் முகம் கண்டுகொண்டேன்’ பாடலை ஸ்காட்லாந்தில் ‘பிரேவ் ஹார்ட்’ படப்பிடிப்பு நடந்த கோட்டையில் படமாக்கினார். அப்போது அங்கே ஷூட்டிங் நடத்திய ஒரே ஆசியப் படம் இதுதான். லண்டனிலிருந்து நான்கு மணி நேரம் காரிலேயே சென்று, சாதாரண லாட்ஜ்களில் தங்கி, பிரெட்- ஜாம் எனக் கிடைத்ததைச் சாப்பிட்டு, மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பாடலைப் படமாக்கினார்கள். பாடல் காட்சி அவ்வளவு சிறப்பாக வந்திருந்தது.

பாடல் வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்தினோம். கானாடுகாத்தான் அரண்மனை நுழைவாயில் போல் ஒரு கலைநயமிக்க வாசக்காலைக் கொண்டு வந்து நிகழ்ச்சி அரங்கின் முகப்பை செட் செய்திருந்தோம். கே.பாலசந்தர் சார், ஏவிஎம் சரவணன் சார், கமல் சார் எனப் பலரும் வந்திருந்தார்கள். அப்போது ஏவிஎம் சரவணன் சார், ‘`தாணு சார், தன்னோட வீட்டுக்கு இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்தாகூட ‘வருக வருக’ என பிரமாண்டமாக போஸ்டர் அடித்து ஒட்டுவார். அந்த அளவுக்கு விளம்பரங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர்’’ எனப் பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது.

தயாரிப்புக்கு ஏற்றவாறு படத்தை வியாபாரம் செய்யவேண்டும் என்பதுதான் சினிமாத் தொழிலின் அடிப்படை. ஆனால், நாங்கள் எதிர்பார்த்த வியாபாரம் இந்தப் படத்துக்கு நடக்கவில்லை. உடனே ராஜீவ் மேனன் என்னிடம், ‘`சார், சரியான வியாபாரம் நடக்கல. உங்களுக்குக் கஷ்டம். படத்தை ரிலீஸ் செய்ய நான் 50 லட்சம் ரூபாய் தர்றேன்’’ என்றார். ‘`அப்ப எதுக்கு என்னைத் தயாரிப்பாளர்னு தேடி வந்தீங்க? அதெல்லாம் வேண்டாம்’’ எனச் சொல்லி ரிலீஸுக்கான வேலைகளைப் பார்த்தேன். படத்துக்கு 15 பிரின்ட் எக்ஸ்ட்ராவாகவே போட்டேன்.
கடைசி நேரத்தில், ‘இந்தி ரைட்ஸ் வேண்டும், சிட்டி ரைட்ஸ் வேண்டும், கதை உரிமை வேண்டும்’ எனப் புது ஒப்பந்தத்தோடு வந்தார் ராஜீவ் மேனன். இந்த நேரத்தில் இப்படிக் கேட்கிறாரே என்று அதிர்ந்துபோனேன். படத்தை ரிலீஸ் செய்வதுதான் முக்கியம் என நினைத்ததால், ராஜீவ் மேனன் கேட்ட அத்தனை உரிமைகளுக்கும் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். ஏற்கெனவே ஒரு ஒப்பந்தம் இருக்கும்போது, கடைசி நேரத்தில் அவர் புதிதாக இன்னொரு ஒப்பந்தம் போட்டது எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.
படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்போதெல்லாம் திருட்டு விசிடி பிரச்னை உச்சத்தில் இருந்தது. படம் ரிலீஸானதும் திருட்டு விசிடியைப் பிடிக்க ஓடுவோம். அப்படி ஒருநாள் அதிகாலையில் வியாசர்பாடியில் ஒரு இடத்துக்குப் போய் திருட்டு விசிடிக்களைப் பிடித்தேன். காலை 5.45 மணி. ராஜீவ் மேனனின் தம்பி கருணாகரின் வீட்டுக்குப் போனேன். கருணாகர் ராணுவத்தில் பணியாற்றியவர். காவல்துறையிலும் அவருக்குப் பல முக்கியமான அதிகாரிகளைத் தெரியும் என்பதால், அவரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொன்னேன். அப்போது அவரின் தாயாரும் அங்கே இருந்தார்.
‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படம் தொடங்கியதில் இருந்தே ராஜீவ் மேனனின் தாயாரைப் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கும் அவர் வந்திருந்தார். அந்த அதிகாலையில் வீட்டுக்குப் போன என்னிடம் மிகுந்த சந்தோஷத்தோடு பேசினார் அவர். ‘`என் மகனோடு கூடப் பிறந்த சகோதரன்போல சிறப்பான முறையில் படத்தைத் தயாரித்து, ரிலீஸ் பண்ணிக் கொடுத்து எங்களை சந்தோஷப்படுத்தியிருக்கீங்க’’ என்று நெகிழ்ந்தார். நான் கொஞ்சம் தயங்கியபடியே இருக்க, ‘`என்னாச்சு... ஒருமாதிரி சங்கடமா இருக்கீங்களே’’ என்றார்.
நான் அவரிடம், ‘`உங்களுக்கு இருக்கிற சந்தோஷம் எனக்கு இல்லம்மா...’’ என்றேன். ‘`ஏன் இப்படிச் சொல்றீங்க’’ எனக் கேட்டார். ஒப்பந்த விஷயத்தைச் சொன்னேன். ‘`என் மகன் உங்க வருத்தத்தையெல்லாம் வாங்கவே கூடாது. உடனே அவனை உங்ககிட்ட வந்து எல்லாத்தையும் திருப்பிக் கொடுக்கச் சொல்றேன்’’ என்றார். ‘`வேண்டாம்மா... நடந்தது நடந்துருச்சு. என் வருத்தத்தைத்தான் சொன்னேன். திருப்பியெல்லாம் கொடுக்க வேண்டாம்’’ என்றேன்.
அங்கிருந்து என் வீட்டுக்குப் போய்விட்டு காலை 11 மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைகிறேன் ராஜீவ் மேனனும் அவர் மனைவியும் ஒரு அக்ரிமென்டோடு வருகிறார்கள். ராஜீவ் மேனன் கண்கலங்குகிறார். ‘`உன்னைச் சுமந்து பெற்றவளின் வயிறு குளுமையா இருக்கணும்னா அந்த மனுஷனோட வருத்தத்தைப் போக்கி அவரை சந்தோஷப்படுத்து’’ என்று அவரின் அம்மா சொன்னதைக் குறிப்பிட்டு, அழ ஆரம்பித்தார். ‘`எனக்கு அம்மாதான் சார் தெய்வம். அவங்க சொன்னதை நான் அப்படியே செய்றேன். அக்ரிமென்ட்டை மாத்திட்டேன்... இந்தாங்க’’ என்றார். அந்த அக்ரிமென்ட்டில் அப்படியே பேனாவால் மேலிருந்து கீழே ஒரு கோடு போட்டு, ‘`யோக்கியனுக்கு எழுத்து தேவையில்லை. அயோக்கி யனுக்கு அது இருந்தும் பிரயோஜன மில்லை. நீங்க இதெல்லாம் வேண்டும்னு கேட்டீங்க. நான் கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன். இனி அதிலிருந்து மாறமாட்டேன்’’ என்று சொல்லி, அவர் எவ்வளவு மறுத்தும் அவரிடமே அந்த ஒப்பந்தங்களைக் கொடுத்து அனுப்பிவிட்டேன்.
‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’ பாடல் வெளியீட்டு நேரத்தின்போதே கமல்ஹாசன் சாருடன் படம் எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்க ஆரம்பித்து விட்டன. இந்த நேரத்தில்தான் ராஜீவ் மேனன் கமல் சாரிடம் என்னைப் பற்றிக் குறைகள் சொல்லியிருக்கிறார். கமல் சார் என்னைக் கூப்பிட்டு ‘`ராஜீவ் மேனன் உங்களைப்பற்றி இப்படியெல்லாம் சொல்கிறாரே... என்ன விஷயம்’’ எனக் கேட்டார். நான் என் தரப்பு நியாயத்தைச் சொன்னேன். ‘`ஆரம்பத்தில் எல்லாம் நல்லபடியாகவே நடந்தது. மிகவும் நல்ல மனிதர் அவர். கடைசி நேரத்தில்தான் இப்படி நடந்துவிட்டது. படத்துக்கு என்ன செலவானது, என்ன வியாபாரம் நடந்தது என்பது எல்லாமே அவருக்குத் தெரியும். ஏன் இப்படிப் பேசுகிறார் எனத் தெரியவில்லை’’ என்றேன். ‘`அவர் ஆயிரம் சொல்லட்டும். நாம நம்ம வேலையைப் பார்ப்போம்’’ என்று சொல்லி கமல் சார் என்னை அனுப்பிவைத்தார்.
‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படம் லண்டனில் நடைபெற்ற உலக சினிமா விழாவில் விருது வாங்கியது. அந்த சந்தோஷத்தை என்னிடம் பகிர்ந்துகொண்ட ராஜீவ் மேனன், உருக்கமான கடிதத்தின் வழியாக ‘இந்தி ரைட்ஸ் உங்களிடம்தான் இருக்கவேண்டும்’ என்று எனக்கு எழுதிக்கொடுத்திருந்தார்.

ராஜீவ் மேனனோடு இப்போது எனக்கு நல்ல பழக்கம் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்தவர், பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களின் திறமைகளை வியந்து சொல்லி, ‘`அவர்களை வைத்து நாம் சின்ன சின்னதா படங்கள் செய்யலாம்’’ என்றார். ‘`நிச்சயம் செய்யலாம் சார்’’ எனச் சொல்லியிருக்கிறேன். ராஜீவ் மேனனின் தொழில் நேர்த்தி, தொழில்பக்தி எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் எனக்குச் சில முரண்பாடுகள் இருந்திருந்தாலும், அவரை மிகவும் நேசிக்கிறேன், எப்போதும் மதிக்கிறேன்.
‘ஆளவந்தான்’ ஷூட்டிங் தொடங்கிய நேரத்தில்தான் என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல்போனது. பலகட்டப் பரிசோதனைகளுக்குப் பிறகு புற்றுநோய் என மருத்துவர்கள் அறிவித்தார்கள். ஆனால், இந்த விஷயத்தை நானும் சரி, என் குடும்பத்தில் உள்ளவர்களும் சரி, என் மனைவியிடம் சொல்லவில்லை. இந்தத் தகவல் எப்படியோ நடிகர் திலகத்தின் காதுகளுக்குப் போயிருக்கிறது. ஒருநாள் அதிகாலையில் சிவாஜி சாரின் கார் என் வீட்டின் முன்னால் வந்து நிற்கிறது. சிவாஜி சாரும், கமலா அம்மாவும் இறங்கி வருகிறார்கள். ‘நடிகர் திலகம் என் வீடு தேடிவருகிறாரா’ என ஒரு கணம் திகைத்து அப்படியே நெகிழ்ந்துபோய் நின்றேன்.
சிவாஜி சார் என் வீட்டுக்கு வந்தது, அவரின் கடைசி மணித்துளிகள், என் மனைவியின் சிகிச்சைக்கு வைரமுத்து உதவியது, அஜித்தும் ஷாலினியும் மரியாதை செலுத்தக் காத்திருந்த அந்த நாள், ‘ஆளவந்தான்’ ஷூட்டிங்... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.
- வெளியிடுவோம்...