மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 17

கலைப்புலி  எஸ்.தாணு
பிரீமியம் ஸ்டோரி
News
கலைப்புலி எஸ்.தாணு

கலைப்புலி எஸ்.தாணு

விநியோகஸ்தராக சினிமாவுக்குள் நுழைந்து, தயாரிப்பாளராகி, பின்னர் கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் எனப் படைப்புலகிலும் கொஞ்சம் பயணித்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து நிற்கும் என்னை கெளரவித்துத் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த விருதை முதலில் என் குடும்பத்தினருக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்களின் ஒத்துழைப்பின்றி இந்த நீண்ட நெடிய பயணம் சாத்தியப்பட்டிருக்காது.

பென்ஸ் கார் என் வீட்டின் வந்து முன்னால் நிற்க, அதிலிருந்து இறங்கிவந்த நடிகர் திலகம் சிவாஜி சாரையும், கமலா அம்மாவையும் பார்த்துத் திகைத்துப்போய், கைகூப்பியபடியே நின்றேன். ‘`புலி, உன் மனை விக்கு உடம்பு சரியில் லைன்னு என்கிட்ட ஏன் சொல்லவே இல்ல? இப்பதான் கேள்விப் பட்டேன் புலி. அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்’’ என்றார்.

‘`சார், புற்றுநோய்னு அவங்களுக்கு நாங்க சொல்லலை. வயித்துல கட்டின்னு மட்டும்தான் அவங்களுக்குத் தெரியும்’’ என்றேன்.

உண்மைகள் சொல்வேன்! - 17

‘`அப்படியா?’’ என்றபடி வரவேற்பறையில் வந்து உட்கார்ந்தார். அப்போது என் மனைவி அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். என் மூத்த மகன் பரந்தாமன் ஓடிப்போய் காபி எடுத்துக்கொண்டு வந்து, ‘`அய்யா, இதில் சர்க்கரை போடலை’’ என்றான். ‘`ஆனா, நான் சர்க்கரைப் போட்டுப்பேன்பா... அவதான் போடமாட்டா’’ எனக் கமலாம்மாவைப் பார்த்துச் சொல்லிவிட்டு ‘`சர்க்கரை இரண்டு ஸ்பூன் போட்டு எடுத்துட்டு வா’’ என்றார். அதேபோல் தண்ணீர் கேட்டபோது ‘`சுடுதண்ணி வேண்டும்’’ என்றார். என் மகனும் மிதமான சூட்டுடன் கொண்டுவந்து கொடுத்தான். ‘`சுடுதண்ணி கேட்டேன்பா’’ என சிவாஜி சார் சொல்ல, மீண்டும் ஓடிப்போய் கொஞ்சம் சூடாக எடுத்துவந்தான். சிரித்தபடியே ‘`சுடுதண்ணி கேட்டேன்பா... கொதிக்கக் கொதிக்க இருக்கணும்’’ என்றார். தயங்கியபடியே கொதிக்கக் கொதிக்க வெந்நீரும், பக்கத்திலேயே இன்னொரு டம்ளரில் விளாவிக்கொள்ள தண்ணீரும் கொண்டுவந்து கொடுத்தான். கொதிக்கக் கொதிக்க வெந்நீரைக் குடித்தவர், ‘`நான் எப்பவும் இப்படித்தான்’’ என்று சிரித்தார். அந்த தெய்விகச் சிரிப்பை என்றும் மறக்கமுடியாது.

என் மனைவி கலாவதி இருந்த அறைக்குள் அவர்களை அழைத்துச் சென்றேன். சிவாஜி சார் வீட்டுக்கு வருவார் என என் மனைவி துளியும் எதிர்பார்க்கவில்லை. என் மனைவி சிவாஜி சார், சரோஜா தேவி மேடத்தின் தீவிர ரசிகை. இளையதிலகம் பிரபுவையும் மிகவும் பிடிக்கும். அதனால்தான் என் இளைய மகனுக்கு பிரபு எனப் பெயர் வைத்தார்.

உண்மைகள் சொல்வேன்! - 17

‘`ஒண்ணும் இல்லம்மா... கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்தேன். வழியிலதானே புலி வீடு இருக்கு, ஒரு எட்டு உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்’’ என்று சொன்னவர், என் மனைவியின் தலையில் கைவைத்து வருடிக்கொடுத்தார். ‘`ஒண்ணும் இல்லம்மா... வயிற்றுவலில்லாம் சரியாப் போயிடும். நீ நல்லா இருப்பம்மா’’ என்று வாழ்த்தினார்.

சிவாஜி சார் வந்துபோன இரண்டு நாள்களில் விஜயகாந்தும், பிரேமலதாவும் வந்தார்கள். பிரமேலதாவுக்கு என் மனைவியை மிகவும் பிடிக்கும். அவர்களுக்குத் திருமணமானபோது என் மனைவி கொடுத்த விருந்தை எப்போதும் சிலாகித்துப் பேசுவார். ‘`எல்லோருக்கும் நல்லது செய்வாங்களே... அவங்களுக்கா இப்படி’’ என பிரேமலதா தேம்பித் தேம்பி அழுதது இன்னும் என் கண்களுக்குள் இருக்கிறது. அவர்கள் இருவரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

என் மனைவி கலாவதி என் சொந்த அக்கா மகள். வண்ணாரப்பேட்டையில் என் அப்பா ஆரம்பித்துக் கொடுத்த டின் ஃபேக்டரியை என் அக்கா கணவர் பாலசுந்தரம்தான் சிறப்பாக நிர்வகித்தார். நான் பியூசி படிக்கும்போது என் அப்பா திடீரென இறந்துவிட, படிப்பை விட்டுவிட்டு அப்படியே டின் ஃபேக்டரிக்கு வந்துவிட்டேன். என் மூத்த அண்ணன் பூபதியும் பஞ்சாப் நேஷனல் வங்கி வேலையை விட்டுவிட்டு டின் ஃபேக்டரிக்கு வந்தார். இரண்டாவது அண்ணன் செல்வம், நான் என எல்லோரும் சேர்ந்து டின் ஃபேக்டரிக்காக உழைக்க ஆரம்பித்தோம். நான் சினிமா மீதுகொண்ட பற்று காரணமாக அதன் வியாபாரத்துக்குள் வந்தேன். பூபதி அண்ணன் தான் 5,000 ரூபாய் முதல் போட்டு என் சினிமாப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

உண்மைகள் சொல்வேன்! - 17

இந்த நேரத்தில்தான் நான் என் அக்காள் மகளையே திருமணம் செய்துகொண்டேன். மூத்த மகன் பரந்தாமன். இளைய மகன் பிரபு. கடைசி மகள் கவிதா. எந்த நேரமும் சினிமா, சினிமா என்று இருந்த நான் குடும்பத்தைச் சரியாக கவனிக்கவேயில்லை. காலையில் 7 மணிக்கு வண்ணாரப்பேட்டையில் இருந்து கிளம்பினால் இரவு 11 மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்புவேன். மகள்மேல் பிரியம் அதிகம். காலையில் அவளுக்கு சாக்ஸ், ஷூ போட்டு ஸ்கூலுக்குக் கிளப்பி அனுப்புவேன். இரவு அவளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு போவேன். இதுமட்டும்தான் என்னுடைய கவனிப்பு. வீட்டையும் குழந்தைகளையும் மிகச்சிறப்பாக கவனித்து, பிள்ளைகளைப் படிக்கவைத்தவர் என் மனைவிதான். ஐந்தாம் வகுப்புவரைதான் படித்திருந்தார். ஆனால், கூட்டுக்குடும்பத்தில் இருந்த கஷ்டநஷ்டங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு, அவ்வளவு சகிப்புத்தன்மையோடு குடும்பத்தைக் கட்டிக் காத்தவர் அவர். இந்த நிலையில்தான் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

1999... டாக்டர் ரங்கபாஷ்யம் அவர்கள் ‘`உங்கள் மனைவி இன்னும் ஒருநாள் கூடுதலாக வாழ்ந்தால் அது உங்கள் அதிர்ஷ்டம். அதனால் அவர்கள் என்னவெல்லாம் விரும்புகிறார்களோ, அதையெல்லாம் செய்துகொடுங்கள்’’ என்று சொல்லி என் மனைவிக்குப் புற்றுநோய் இருப்பதைச் சொன்னார். அதிர்ந்து போய்விட்டேன். மனைவியை இழந்துவிடுவேனோ என்ற பயம் என்னைச் சூழ்ந்துகொண்டது. போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை. ஒருபக்கம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஷூட்டிங், இன்னொரு பக்கம் ‘ஆளவந்தான்’ படத்துக்கான வேலைகள் நடக்கின்றன. என்ன செய்வதென்றே புரியவில்லை. உடைந்துபோய்விட்டேன். இந்த நேரத்தில் வி.எஸ் ஹாஸ்பிடல் டாக்டர் சுப்ரமணியத்தைப் பார்த்தோம். அவர் மிகச்சிறப்பாக சிகிச்சை கொடுத்தார். அவர்தான் ‘`சிங்கப்பூரில் டாக்டர் டேன் என ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருக்கிறார். அவரைப் போய்ப் பாருங்கள்’’ என்றார். ‘`சிங்கப்பூரில் எனக்கு யாரையுமே தெரியாது டாக்டர். அதனால் நீங்களும் உடன் வாருங்கள்’’ என்றேன். அவரும் வர சம்மதித்தார். டாக்டர் சுப்ரமணியம் யாரையும் நோயாளியாகப் பார்க்காமல் அவரது குடும்பத்தில் ஒருவராகப் பார்ப்பவர். மருத்துவம் வியாபாரமான பிறகும், சேவையாகச் செய்துவரும் மிக உயர்ந்த மனிதர் அவர்.

இந்த நேரத்தில் கவிஞர் வைரமுத்து எனக்குச் செய்த உதவி மிக முக்கியமானது. அவர்தான் சிங்கப்பூரில் அவரின் நண்பர் முஸ்தபா என்பவரைச் சந்திக்கச் சொல்லிக் கடிதம் கொடுத்தார். அதேபோல் ராயப்பேட்டை பெனிஃபிட் ஃபண்டின் தலைவராக இருந்த சுப்ரமணியம் அவர்களும் அதே முஸ்தபாவைச் சந்திக்கக் கடிதம் கொடுத்தார். இருவருமே முஸ்தபாவுக்கு போனில் அழைத்து விவரங்களைச் சொல்லிவிட்டார்கள்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் கண்கள் கலங்கியபடியே இறங்குகிறோம். முஸ்தபா, அவரின் தம்பி தமீம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இரண்டு கார்களில் எங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். நாங்கள் இறங்கியதும் ஒரு பென்ஸ் காரில், எங்களுக்காக அவர்கள் ஏற்பாடு செய்துவைத்திருந்த கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துச் சென்றார்கள். எங்களுக்கு அங்கே தேவையான எல்லா உதவிகளையும் செய்து, அவ்வளவு சிறப்பாக கவனித்துக்கொண்டார்கள். சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. மனைவி குணமாகிவிடுவார் என டாக்டர்கள் அறிவித்தார்கள்.

அறுவை சிகிச்சையை நல்லபடியாக முடித்துக்கொடுத்துவிட்டு டாக்டர் சுப்ரமணியம் சென்னை திரும்பிவிட்டார். நாங்களும் சென்னைக்குத் திரும்ப 2001 ஏப்ரல் 19 விமானத்தில் டிக்கெட் போட்டுவிட்டோம். மருத்துவமனை வளாகத்துக்குள் மனைவியைத் தினமும் வாக்கிங் அழைத்துக்கொண்டு போவேன். அப்போது அவரிடம் ‘`குடும்பத்தை கவனிக்காமல் விட்டுவிட்டேன். இனி உன்னோடும், நம் குழந்தைகளோடும்தான் நேரத்தைச் செலவழிப்பேன்’’ என அழுதபடியே உறுதியளித்தேன். ஆனால், என் மனைவியை நோய் என்னிடமிருந்து பிரித்துவிட்டது.

சென்னை கிளம்புவதற்கு ஒருநாளுக்கு முன்பு திடீரென மனைவிக்கு நிமோனியா காய்ச்சல் வந்து மயக்கநிலைக்குப் போய்விட்டார். எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று நினைத்தபோது மருத்துவர்கள் ‘`இன்னும் 8 மணி நேரம்தான் உங்கள் மனைவி உயிரோடு இருப்பார்’’ என்று சொல்லிவிட்டார்கள். அப்போது சென்னையில் ‘ஆளவந்தான்’ ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அழுதுகொண்டே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த முக்கியமானவருக்கு போனில் தகவல் சொன்னேன். அவர் கமல்ஹாசன் சாரிடம் தகவல் சொல்லியிருக்கிறார். அப்போது கமல் சார் சொன்னதாக என்னிடம் சொல்லப்பட்ட வார்த்தைகள் எனக்கு மிகவும் மனவருத்தம் தந்தன. அதை நான் இங்கே சொல்ல விரும்பவில்லை.

என் மனைவி இறந்துவிட்டார். என் சென்னை அலுவலகத்துக்கு போன் அடிக்கிறேன். ‘`27 லட்சம்தான் கையில் இருக்கிறது. இன்னும் பணம் கட்டவேண்டும். வீட்டில் சொல்லி பணத்தை தாமஸ் குக்கில் போட்டுவிடச்சொல்லுங்கள்’’ என என் அலுவலகத்தில் இருந்த நண்பர் நாகராஜிடம் சொல்கிறேன். உறவினர்களிடம் கேட்கிறேன். ‘`90 லட்சம் செலவு செய்யணுமா?’’ என்பது அவர்களின் கேள்வியாக இருந்தது.

அப்போது அருகில் இருந்த முஸ்தபா போனைப் பிடுங்கி ‘`நீங்கள் பணம் அனுப்பவேண்டாம்... நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என ரிசீவரை எடுத்துக் கீழே வைத்துவிட்டார். மருத்துவமனைக்கு பிளாங்க் செக்கில் கையெழுத்து போட்டுக் கொடுத்து, ‘`இன்னும் எவ்வளவு கட்டணுமோ அதை ஃபில் பண்ணிக்கோங்க’’ என்று அவர் சொன்ன அந்தத் தருணம் உடலெல்லாம் எனக்குச் சிலிர்த்துவிட்டது. சொந்தம் இல்லை, பந்தம் இல்லை... எந்த உறவும் இல்லை. சில நாள்களுக்கு முன்புதான் என்னையும் என் குடும்பத்தினரையும் அவருக்குத் தெரியும். ஆனால், முஸ்தபா இறைவனின் மறு உருவமாக அங்கே நின்றார். கண்களில் நீர் தாரை தாரையாகக் கொட்ட ஆரம்பித்துவிட்டது. கையில் இருந்த டாலர் களையெல்லாம் அவரிடம் எடுத்துக் கொடுக் கிறேன். ‘`அப்படியே வீட்டுக்கு எடுத்துட்டுப் போங்க. அப்புறம் பார்த்துக்கலாம்’’ என என்னைக் கட்டியணைத்துத் தேற்றி, ஆறுதல்படுத்தினார்.

சந்தனப்பேழையைத் தயார்செய்து, அவரே எல்லா ஏற்பாடுகளையும் கவனித்து என் மனைவியின் உடலோடு சென்னை திரும்ப அத்தனை விஷயங்களையும் செய்துகொடுத்து அனுப்பிவைத்தார். அப்போது முஸ்தபா எனும் அந்த மாமனிதரை எனக்கு அறிமுகம் செய்துவைத்த கவிஞர் வைரமுத்து, சுப்ரமணியன் இருவரையும் நன்றியோடு நினைத்துப் பார்த்தேன். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு இஸ்லாமிய சமூகத்தில் இருந்து யார் உதவிகேட்டு என்னை வந்து பார்த்தாலும் அவர்களை முஸ்தபாவாகத்தான் பார்ப்பேன். முஸ்தபாவுக்கு நான் செய்யவேண்டிய நன்றிக்கடனாகத்தான் அதைச் செய்வேன்.

எங்கள் விமானம் சென்னை வரத் தாமதமாகிறது. இரண்டரை மணி நேரத்துக்கும் மேல், நள்ளிரவு வரை நடிகர் அஜித்தும், அவர் மனைவி ஷாலினியும் மோட்டார் பைக்கில் நின்றபடியே என் வீட்டு வாசலில் காத்திருந்த சம்பவம் என்னை நெகிழவைத்தது. ஒருவருக்குத் துன்பம் வரும் நேரத்தில் அவர்களோடு உடன் இருக்கவேண்டும் என்கிற அஜித்தின் மனசுக்கு நான் தலைவணங்குகிறேன்.

என் கலைப்பயணத்தில் மிக முக்கியமான படம் ‘ஆளவந்தான்.’ அந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்தும், சிவாஜி சார் குறித்தும், ‘புன்னகைப் பூவே’, ‘காக்க காக்க’ என அடுத்த படங்கள் பற்றியும் அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.

- வெளியிடுவோம்...