மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 18

சிவாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
சிவாஜி

கலைப்புலி எஸ்.தாணு

டிகர் திலகம் செவாலியே சிவாஜி சார்... என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத மனிதர்.

என் மனைவி இறந்த சில வாரங்கள் கழித்து ஒருநாள் தேவர் சிலை அருகே காரில் போய்க்கொண்டிருந்தேன். அப்போது சிவாஜி சாரின் காரோட்டி முருகன் என்னை போனில் அழைத்தார். ‘`அண்ணே, அய்யா உங்களை சாப்பிடக் கூப்பிடுறாரு’’ என்றார். ‘`நந்தனத்துலதான் இருக்கேன். உடனே வந்துடறேன்’’ என்று காரைத் திருப்பச் சொல்லி அன்னை இல்லத்துக்குப் போனேன்.

நான் அன்னை இல்லத்துக்குள் நுழையும்போதே முருகன் ஓடிவந்து ‘`அய்யாவுக்குப் பசி தாங்கல. சாப்பாட்ல உட்கார்ந்துட்டார்’’ என்று என்னை அவசரமாக அழைத்துக்கொண்டு போனார். வீட்டில் சிவாஜி சார், டாக்டர் துரை, நான், முருகன் என நால்வர் மட்டுமே இருக்கிறோம். ‘குமுதம்’ இதழின் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்தான் சிவாஜி சாருக்கு இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தினார். அப்போது அவருடன் இருந்தவர்தான் டாக்டர் துரை. இவர் சிங்கப்பூரில் இருந்தவர். அந்த நேரத்தில் சென்னை வந்திருந்தவர் சிவாஜி சாரைப் பார்க்க வந்திருக்கிறார்.

உண்மைகள் சொல்வேன்! - 18

‘`உட்காரு புலி. இன்னும் ரெண்டு நிமிஷம் லேட் ஆகியிருந்தா நான் சாப்பிட ஆரம்பிச்சிருப்பேன்’’ என்று சிரித்துக்கொண்டே வரவேற்றார். சாப்பிட்டு முடித்ததும் டாக்டர் துரை விடைபெற்றுக் கிளம்பினார். சிவாஜி சாரும் நானும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே இருந்தோம். ‘`அப்புறம் நான் கிளம்பட்டு மாங்கய்யா’’ என எழுந்தேன். சிவாஜி சாரும் எழுந்து நின்றார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர் திடீரென, ‘`என்னவோ புலி, மனசே சரியில்ல. நான் எங்க போய் நிக்கிறது, என்ன சொல்றதுன்னு தெரியல. என் பேத்தியைப் (ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் மனைவி) பார்த்தா அழுகையா வருது. அது முகத்தையே என்னால பார்க்கமுடியல. புருஷன்காரன் ஜெயில்ல இருக்கான். யார்கிட்டயும் போய் நின்னு நான் எனக்கா எதுவும் கேட்டது கிடையாது. பேத்தியைப் பார்க்கும்போதெல்லாம் என் மனசு உடையுது. என் அண்ணன் பேரு, புகழ், செல்வம், செல்வாக்கோடு பஸ் ஏறி மேல நல்லபடியா போயிட்டான். (எம்ஜிஆரைச் சொல்கிறார்). ஆனா, நான்தான் அந்த பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன்’’ என்று சொன்னபடி, வேட்டியைத் தளர்த்தி, மீண்டும் இழுத்துக் கட்டினார். அவரின் குரல் கம்மியது.

என் கண்கள் கலங்கிவிட்டன. ‘`எல்லாத்துக்கும் ஒரு விடிவு இருக்குங்கய்யா... நீங்க மனசு உடையுறது எங்களுக்குக் கஷ்டமா இருக்கு. எல்லாம் சரியாகுங்கய்யா’’ என்று நான் சொல்ல, தலையசைத்து புன்னகையோடு என்னை வழியனுப்பிவைத்தார்.

உண்மைகள் சொல்வேன்! - 18

15 நாள்கள் கழித்து சிவாஜி சாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அப்போலோ மருத்துவமனையில் அவரை அனுமதிக்கிறார்கள். பக்கத்திலேயே இரண்டு அறைகளில் உறவினர்கள் அனைவரும் தங்கியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் பிரபு சார் ஊரில் இல்லை. ராம்குமார் சார்தான் இருந்தார். சிவாஜி சாரின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள்.

நான் மருத்துவமனைக்குப் போய் ராம் குமாருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போது மருத்துவர் வந்தார். ‘`மூச்சு நிற்கப்போகுது. கடைசியா வந்து பார்த்துடுங்க’’ என்கிறார். அழுதபடியே ராம்குமார் உள்ளே போகிறார். நானும் அவர் பின்னாடியே போகிறேன். நாங்கள் இருவரும்தான் அறைக்குள் நிற்கிறோம். சிவாஜி சாரின் இறுதி மூச்சு அடங்குவதைப் பார்க்கமுடியாமல் ராம்குமார் அழுதுகொண்டே வெளியே போகிறார். நான் உறைந்து அந்த இடத்திலேயே நின்றுவிட்டேன்.

உண்மைகள் சொல்வேன்! - 18

‘ராஜாமணி அம்மா ஈன்றெடுத்த குழந்தை பிறக்கும்போது எந்த மூச்சை விட்டது, அந்த மூச்சு அணையும்போது அந்த வேதனையை நான் பார்க்கணுமா’ எனக் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. ஆக்ஸிஜன் மாஸ்க்கை டாக்டர் கழற்றுகிறார். சிவாஜி சாரின் மூச்சு அப்படியே அடங்கியது. அவரின் காலைத்தொட்டு வணங்கிவிட்டு வெளியேவந்தேன்.

சிவாஜி சாரோடு பேசிய பேச்சுகள், கலைஞர் - எம்ஜிஆருடனான அவர் நட்பு, அவர் வாழ்வின் இறுதிக்கால மனவருத்தங்கள் என எல்லாம் என் கண்முன் வந்துபோகின்றன. இன்றும் சிவாஜி சார் குடும்பத்தின்மேல் அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறேன். பிரபு சாரின் மகன் விக்ரம் பிரபுவை வைத்து ‘அரிமா நம்பி’, ‘60 வயது மாநிறம்’, ‘துப்பாக்கி முனை’ என மூன்று படங்கள் தயாரித்திருக்கிறேன். பிரபு சாரை என் முதல் படத்தின் ஹீரோவாக்க முடியவில்லை என்றாலும், நான் தயாரித்த ‘சிறைச்சாலை’ படத்தில் நடித்தார். அதேபோல் ‘கந்தசாமி’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொடுத்தார்.

பிரபு சாரிடம் எப்போதுமே ‘`சிவாஜி புரொடக்‌ஷனை விட்ராதீங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்’’ எனச் சொல்லியிருக்கிறேன். பிரபு மாதிரி தங்கமான மனிதரைப் பார்க்கமுடியாது. குடும்பத்துக்காக வாழக்கூடிய உன்னத மனிதர். அவருடைய தியாகம், பாசம் அளவிட முடியாதது.

‘ஆளவந்தான்’ ஆரம்பம்... நான் கமல் சாரின் ரசிகன். ஒரு பத்திரிகையில் பிடித்த விஷயங்களை எல்லாம் சொல்லவேண்டும் என்று கேட்டார்கள்.அதில் எனக்குப் பிடித்த நடிகர் கமல்ஹாசன், பிடித்த மனிதர் ரஜினிகாந்த், பிடித்த நண்பர் விஜயகாந்த், பிடித்த தலைவர் கலைஞர், சந்திக்க விரும்பும் நபர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் எனச் சொல்லியிருந்தேன்.

உண்மைகள் சொல்வேன்! - 18

அந்த நேரத்தில் ஒரு சினிமாப் பட விழாவுக்கு நான் போகிறேன். எதிரில் கமல்ஹாசன் சாரும், அவரின் அண்ணன் சந்திரஹாசன் சாரும் வருகிறார்கள். அப்போது கமல் சார், அவரின் அண்ணனிடம் ‘`இவர் யார் தெரியுதா? இவர்தான் புலி... கலைப்புலி... ஆனா, நம்மளைத்தான் கண்டுக்கமாட்டார்’’ என்றார். ‘`சார், நான் உங்கள் ரசிகன் சார். ஒரு வார்த்தை சொல்லுங்க... உடனே உங்க ஆபீஸுக்கு வரேன்’’ என்றேன். ‘`உங்களை நான் வரவேண்டாம்னா சொல்லியிருக்கேன். இன்னைக்கு ஈவ்னிங்கூட வாங்க’’ என்றார். சாயங்காலமே கமல் சாரைப் பார்க்கப் போய்விட்டேன். ‘`நாம ஒரு படம் பண்ணலாம். கதை ரெடி பண்ணுங்க’’ என்றார்.

என் நண்பர் கலைப்புலி சேகரனை அழைத்துக்கொண்டு கமல் சாரைப் போய்ப் பார்த்தேன். சேகரன் அவரிடம் இருந்த ஒரு பீரியட் படக் கதையைச் சொன்னார். 1947, ஆகஸ்ட் 14-ம் தேதி நள்ளிரவு, சுதந்திரம் கிடைக்க ஒரு நிமிடம் இருக்கும்போது ஆரம்பிக்கும் கதை அது. கதையைக் கேட்டுவிட்டு கமல் சார், ‘`நன்றாக இருக்கிறது. ஆனால், இப்போது ‘மருதநாயகம்’ என ஒரு பீரியட் படம் எடுக்கிறேன். இதுவும் பீரியட் படம். இந்தப் படம் எடுத்தால் தாணு சாரின் முட்டியெல்லாம் தேய்ஞ்சிடும். செலவு எக்கச்சக்கமாப் போயிடும். அதனால வேற கதை சொல்லுங்க’’ என்றார்.

அதன்பிறகு கமல் சார் அடிக்கடி கூப்பிடுவார். போய்ச் சந்திப்பேன். ‘நளதமயந்தி’ கதையை எனக்குச் சொன்னார். பிறகு ஒரு ஸ்டன்ட் கலைஞனைப் பற்றிய கதையைச் சொன்னார். அதுதான் ‘பம்மல் கே.சம்பந்தம்.’ இந்தக் கதையைத்தான் இறுதி செய்தோம். சுரேஷ் கிருஷ்ணாவை இயக்குநராகப் போடலாம் என்றார். இரண்டு ஹீரோயின்கள். ரவீணா டான்டனுக்கு ரூ.35 லட்சம் சம்பளம். மனிஷா கொய்ராலாவுக்கு ரூ.25 லட்சம் சம்பளம். கமல் சாருக்கு 5 கோடி சம்பளம் பேசினோம்.

ஷூட்டிங்கிற்கு நாள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. திடீரென கமல் சார் கூப்பிட்டு ‘`இந்தியிலும் இந்தப் படத்தைப் பண்ணலாம். எக்ஸ்ட்ரா 90 லட்சம்தான் செலவாகும்’’ என்றார். அப்போது கமல் சாருக்கு ‘தெனாலி’ படம் நல்ல ஹிட்டாகி 13 கோடி ரூபாய் வியாபாரம் ஆகியிருந்தது. ‘`இந்தியில் ‘சாக்‌ஷி 420’ நாலரைக் கோடி வியாபாரம் ஆச்சு. ‘ஹேராம்’ ஐந்தரைக் கோடி வியாபாரம் ஆச்சு. அதேபோல் இந்தப்படமும் ஏழு கோடி வியாபாரம் ஆகும்’’ என்றார். எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ‘கமல் சாரை வெச்சு ஒரு படம் பண்றோம். அதை இந்திலயும் பண்றோம். எக்ஸ்ட்ராவா ஒரு கோடிதான் செலவு’ என உடனடியாக ‘`பண்ணிடலாம் சார்’’ என்றேன்.

படத்தின் பூஜை, அதற்கான போட்டோஷூட்டின்போதுதான் ‘இது ஸ்டன்ட் கலைஞனின் கதையில்லை. வேறு கதை’ என்று தெரிந்துகொண்டேன். அதுதான் `ஆளவந்தான்.’ தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் தொடக்க விழாவுக்கு 53 லட்சம் ரூபாய் செலவு செய்தது இந்தப் படத்துக்காகத்தான். மும்பை யிலிருந்து பத்திரிகையாளர்களையெல்லாம் வரவழைத்து பிரமாண்டமான முறையில் நேரு ஸ்டேடியத்தில் தொடக்க விழாவை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்தோம்.

‘ஆளவந்தான்’ தொடக்க விழா அழைப்பிதழை எடுத்துக்கொண்டு கலைஞரிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக ஆலிவர் ரோடு இல்லத்துக்குப் போனேன். மாடிப்படியில் இறங்கிக்கொண்டே பத்திரிகையை இரண்டு முறை திருப்பிப் பார்த்தவர், ‘`என்னய்யா, வில்லனா நடிக்கிறாராய்யா?’’ என்றார். ‘`ஒரு கேரக்டர் அண்ணன்; நல்லவன், இன்னொரு கேரக்டர் தம்பி; கெட்டவன் தலைவரே’’ எனச் சொன்னேன். ‘`படம் ஓடாதுய்யா’’ என்றார். ‘`என்ன தலைவரே இப்படிச் சொல்றீங்க?’’ என்றேன். பக்கத்தில் இருந்த ராஜாத்தி அம்மாவும், ‘`தம்பி முதன்முதல்ல வந்து பத்திரிகையைக் கொடுக்குது. வாழ்த்து சொல்லாம இப்படிச் சொல்றீங்களே... இது என்ன நியாயம்’’ என்றார். ‘`அட, நான் உண்மையைச் சொல்றேன்மா. ‘நீரும் நெருப்பும்’னு ஒரு படம். எம்.ஜி.ஆர் வில்லனா நடிச்சாரு. படம் ஓடுச்சா... எப்பவுமே ஒரு ஹீரோவா இருக்கிறவன் வில்லனா நடிக்கக்கூடாதும்மா’’ என்று ராஜாத்தி அம்மாளைப் பார்த்துச் சொன்னவர், ‘`நான் எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்யா... ஆனா, அதை மீறி படம் நல்லா வரட்டும்யா’’ என்று வாழ்த்தி அனுப்பினார்.

உண்மைகள் சொல்வேன்! - 18

‘ஆளவந்தான்’ படம் சம்பந்தமாக கமல் சாருக்கும் எனக்கும் இடையே சில கசப்பான சம்பவங்கள் நடந்தன. நான் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டேன். ஆனால், இப்போது அரசியல் கட்சித் தலைவராகத் தேர்தலை எதிர்நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் கமல் சாரைப் பற்றி இந்த நேரத்தில் நான் என் சங்கடங்களைச் சொல்வது சரியாக இருக்காது. ‘ஆளவந்தான்’ படத்தில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டதால் அவருடைய சம்பளத்தில் முதலில் வாங்கிய மூன்றரைக் கோடிக்குப் பிறகு அவர் மீதி ஒன்றரைக் கோடி ரூபாய் சம்பளமே வாங்கவில்லை என்பதையும் நான் இங்கே குறிப்பிடவேண்டும். 2021 தேர்தலில் களமிறங்கி, போட்டியிடும் கமல் சாருக்கு என் வாழ்த்துகள்.

‘ஆளவந்தான்’ படத்தில் கமல் சாருடன் ஏற்பட்ட மனக்கசப்புக்கு அடுத்து அவரின் முன்னாள் மனைவி சரிகா என் படத்தில் நடிக்கும் சூழல் உருவானது. 17 ஆண்டுகளுக்குப்பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடித்தார். ஆனால், அவரை நடிக்கவைக்க நான் காரணம் இல்லை. எப்பேர்ப்பட்ட சூழலில் அவர் வந்து என்னைச் சந்தித்தார், அவரை என்னிடம் அறிமுகப்படுத்தி நடிக்க வைக்கச் சொன்னது யார், அவர் நடித்த ‘புன்னகைப்பூவே’ படம், சூர்யாவின் ‘காக்க காக்க’ சுவாரஸ்யங்கள் பற்றி அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்!

- வெளியிடுவோம்