மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 8

உண்மைகள் சொல்வேன்
பிரீமியம் ஸ்டோரி
News
உண்மைகள் சொல்வேன்

- கலைப்புலி எஸ்.தாணு

தி.மு.க உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை நெருங்கியிருந்த நேரத்தில் பாரதிராஜா, வைரமுத்துவோடு எடிட்டிங் ஸ்டூடியோவில் இருந்தபடியே, தலைமறைவாக இருக்கும் வைகோவுக்கு போன் அடித்து விஷயத்தைச் சொன்னேன். ‘`வில்லிவாக்கத்திலிருந்து நைட்டு வீட்டுக்குப் போயிடுவேன். பத்தரை மணிக்கு என்னோட அண்ணா நகர் வீட்டுக்கே அவங்களைக் கூட்டிட்டு வந்துடுங்க’’ என்கிறார் வைகோ.

நாங்கள் மூவரும் சென்றபோது 27 வருடங்களாக கலைஞர் அவரை வளர்த்த கதையைச் சொல்லிச் சொல்லிக் கண்ணீர் மல்குகிறார் வைகோ. அதன்பிறகு கடந்த ஆறு மாதங்களாக கட்சிக்காரர்கள் தரும் குடைச்சலையும் சொல்கிறார். உடனே பாரதிராஜா உணர்ச்சிவசப்பட்டு இரண்டு கரங்களையும் நீட்டி, ‘`வைகோ... உனக்காக நான் என்ன செய்ய வேண்டும் சொல்’’ எனக் கண்ணீர் சிந்துகிறார். உடனே நான், ‘`சார், அவரைக் கூட்டிட்டுப் போய் கலைஞர்கிட்ட சேர்க்குறதுக்காக வந்திருக்கோம். நீங்களே உணர்ச்சிவசப்பட்டு எதுவும் பேசாதீங்க’’ என்றேன். ‘`காலைல நாங்க இங்க வருவோம். நீங்க எங்களோட வரணும். கலைஞரைப் போய் நேர்ல சந்திச்சு எல்லா விஷயங்களையும் வெளிப்படையா பேசிடுவோம்’’ என்று சொல்லிவிட்டு வைகோ வீட்டிலிருந்து வெளியே வந்தோம்.

உண்மைகள் சொல்வேன்! - 8

காரின் மேல் கைவைத்து ஊன்றியபடியே வைரமுத்து எங்கள் இருவரிடமும் ‘`இந்த மனிதனிடம் சத்தியத்தைப் பார்த்தேன்; தர்மத்தைப் பார்த்தேன்; நியாயத்தைப் பார்த்தேன். நூற்றுக்கு நூற்றைம்பது சதவிகிதம் உண்மை தெரிகிறது’’ என்றார். அப்போது நான், ‘`கலைஞர் மீண்டும் முதலமைச்சரா வரணும் சார். வைகோவை வெளில விட்டா இளைஞர்கள் கூட்டம் அவர் பின்னால போயிடும். அதனால அவரை பத்திரமா கலைஞர்கிட்ட கொண்டு போய்ச் சேர்த்திடணும். கலைஞர்தான் நமக்கு முக்கியம்’’ என்கிறேன்.

பாரதிராஜாவை பார்சன் காம்ப்ளக்ஸில் இறக்கிவிட்டு, வைரமுத்துவை அவர் வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன். அப்போது வைரமுத்து, ‘`தாணு, நூற்றுக்கு நூறு சதவிகிதம் நீ கலைஞருக்கு வேண்டியவனாதான் இருக்க. உன்னோட ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு செயலும் அதைச் சொல்லுது. ஆனா, கலைஞரிடம் நிறைய பேர் உன்னைப்பத்தித் தப்புத் தப்பா சொல்லியிருக்காங்க. அதனால நாளைக்குக் காலைல நீ எங்க மூணு பேரை மட்டும் கலைஞர் வீட்ல கொண்டு போய் விட்டுடு. நாங்க அவர்கிட்ட எல்லா விஷயங்களையும் சொல்றோம்’’ என்கிறார்.

அடுத்த நாள் காலை 6 மணிக்கு வைரமுத்துவிடமிருந்து எனக்கு போன். ‘`தாணு, நிலைமை தலைகீழா மாறிடுச்சு. ‘அரசியலை விட்டே விலகுறேன்’னு கலைஞர் அறிக்கை கொடுத்துட்டார். இப்ப தொண்டர்களெல்லாம் தீக்குளிக்கிறேன், அது இதுன்னு கலைஞர் வீட்டு முன்னாடி ஒரே போராட்டமா இருக்கு. இந்த நேரத்தில் வைகோவைக் கூட்டிட்டுப் போனா பெரிய பிரச்னை ஆகிடும். அதனால நாம முதல்ல போய் தலைவர்கிட்ட பேசிட்டு அதுக்கு அப்புறம் முடிவு பண்ணுவோம். நீயும் வந்துடு’’ என்கிறார். நேற்று ‘வைகோவும் நாங்களும் போய் கலைஞரைச் சந்திக்கிறோம்’ என்றவர், இன்று ‘நீயும் வா’ என்கிறாரே என யோசித்தபடியே கலைஞரின் கோபாலபுரம் வீட்டுக்கு இருவருடனும் போனேன்.

வீட்டுக்கு வெளியே கட்சிக்காரர்கள் பெருமளவில் கூடியிருந்தார்கள். ‘கலைஞர் தன் முடிவை வாபஸ் வாங்க வேண்டும், வாபஸ் வாங்கவேண்டும்’ என சைதை மா.சுப்ரமணியன், சம்பத் ஆகியோர் வாசலில் நின்று கோஷமிடுகிறார்கள். வீட்டுக்குள் ஸ்டாலின், அழகிரி, ஆற்காட்டார், துரைமுருகன், பொன்முடி, கிட்டு என எல்லோரும் இருக்கிறார்கள். கலைஞர் மாடியில் இருக்கிறார். நாங்கள் அவரைச் சந்திக்கப் படி ஏறுகிறோம். கலைஞர் ஒரு பத்திரிகையை எடுத்து எங்கள் முன்னால் போடுகிறார். ‘`இந்தப் பத்திரிகையை எப்படிப்பட்ட சூழல்ல இருந்து நான் பாதுகாத்து, திரும்ப அவர் கையில பத்திரமா கொடுத்தேன். அவரை மந்திரியாக்கி அழகு பார்த்தேன். இன்னைக்கு எனக்குப் போட்டியா வைகோவை வளர்க்குற மாதிரி 8 காலம் செய்தியா போட்டுட்டிருக்காரே’’ என அந்தப் பத்திரிகையின் முதலாளி பற்றி வருத்தத்துடன் பேசினார்.

பாரதிராஜா, வைரமுத்து இருவரும் வைகோ வீட்டில் பேசிய விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள். நான் கொஞ்சம் விலகியிருந்தேன். அப்போது வீரபாண்டியார் கலைஞர் வீட்டுக்குள் வருகிறார். உடனே ‘`வீரபாண்டியார் ஒழிக, ஒழிக’’ எனக் குரல்கள் கேட்கின்றன. அப்போது வீரபாண்டியார் வைகோவுக்கு ஆதரவாக இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். நான் கீழே ஓடிப்போய் ‘`ஒழிக ஒழிகன்னு கத்தாதீங்க’’ எனச் சத்தம் போடுகிறேன். அப்போதுதான் அழகிரி என்னை நெருங்கி வருகிறார். ‘`அவரை (வைகோ) சப்போர்ட் பண்றதா இருந்தா நீ வெளில போயிடு’’ என்கிறார். ‘`அதை உள்ளே உட்கார்ந்திருக்காரே, அவர் சொல்லட்டும். நான் வெளியே போறேன்... நீங்க சொல்லாதீங்க’’ என்கிறேன். இருவரும் பேசப் பேச, வாக்குவாதம் முற்றுகிறது. எல்.பலராமன், கிட்டு, துரைமுருகன் ஆகியோர் என்னைத் தள்ளிக்கொண்டு போனார்கள். அந்தப்பக்கம் ஆற்காட்டார், பொன்முடி ஆகியோர் அழகிரியை விலக்கிக் கூட்டிப் போனார்கள். அன்றைக்குப் பார்த்த கலைஞரை அடுத்து நான் நேரில் சந்திக்க ஆறரை ஆண்டுக்காலம் ஆனது.

உண்மைகள் சொல்வேன்! - 8

பாரதிராஜாவும் வைரமுத்துவும் கலைஞருடன் பேசி முடித்ததும், ஆற்காட்டார் என்னை போனில் அழைத்து அறிவாலயத்துக்கு வரச் சொன்னார். பேராசிரியர், ஆற்காட்டார் இருவரும் என்னைக் காரில் அழைத்துக்கொண்டு போனார்கள். ‘`வைகோ எங்கய்யா இருக்காரு, சொல்லுய்யா’’ என ஆற்காட்டார் கேட்டார். நான் இரண்டு இடங்களைக் குறிப்பிட்டு, ‘இங்குதான் அவர் இருக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு, ‘`அவரை எப்படியாவது சமாதானம் பண்ணி திரும்பக் கூட்டிட்டு வந்துடணும்’’ என்கிறேன். உடனே பேராசிரியர், ‘`என்னய்யா தாணு இப்படியெல்லாம் பேசுது... ஆனா, வெளில வேற மாதிரி பேசுறாங்களே’’ என்கிறார். அப்போது ஆற்காட்டார், ‘`அண்ணே! தாணு கலைஞருக்கு பக்தன், வைகோவுக்கு நண்பன்’’ என்கிறார். அப்போது பேராசிரியர் ‘`யோவ், அண்ணாவுக்குப் பிறகு அந்த இடத்துக்கு வர எத்தனையோ பேர் இருந்தாங்கய்யா. கலைஞர் வந்து கட்சிக்காக எப்படியெல்லாம் உழைச்சு, கஷ்டப்பட்டு கட்சியை நிறுத்துனாரு. வைகோ இப்பவே தலைவன் ஆகணும்னு ஆசைப்படுறார்’’ என்கிறார். காரில் பேசிக்கொண்டே பேராசிரியரை அவரது அண்ணா நகர் வீட்டில் கொண்டுபோய் விட்டோம்.

அதன்பின் வைகோ தனிக்கட்சி தொடங்குகிறார். வண்ணாரப்பேட்டையில், சுழல் மெத்தை எனும் இடத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடாகிறது. வைகோ என்னைக் கூட்டத்துக்குக் கூப்பிடுகிறார். நான் வரவே மாட்டேன் என்கிறேன். கட்டாயப்படுத்தி எல்லோரும் வந்து என்னை அழைத்துக்கொண்டு போனார்கள். விருப்பமில்லாத உறவில் ஒரு பெண் இணைய நேர்வது போல அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கலைஞரையே நினைத்து, அவரையே சுவாசித்து, என் நாடி நரம்பில், ஓடும் குருதியில் நீக்கமற நிறைந்திருந்த கலைஞரை விட்டுப் பிரிந்த பெரும்துயர நாள் அது.

எனக்கும் கலைஞருக்கும் நேரடியாக எந்த ஒரு நெருடலும் இல்லாத ஒரு சூழலில் நான் கலைஞரிடமிருந்து பிரிக்கப்பட்டேன். சில ஆண்டுகள் கழித்து கலைஞரின் மருத்துவர் கலைஞர் சொன்னதாக என்னிடம் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டபோது என் கண்கள் கலங்கிவிட்டன. ‘`மானாவாரியா செலவு பண்ணான்யா... கட்சிக்காகவே இருந்தான்... நம்ம வீட்ல இருக்கிறவங்க வருத்தப்பட வெச்சிட்டாங்கய்யா. தாணு என்னை விட்டுப் பிரிவான்னு நான் நினைக்கவேயில்லை’’ எனச் சொல்லியிருக்கிறார்.

உண்மைகள் சொல்வேன்! - 8

சுழல் மெத்தை கூட்டத்துக்குப் பிறகு எழுச்சிப்பேரணி நடந்தது. அந்தப் பேரணிக்கு நான் பத்து, பத்தரை லட்சம் செலவு செய்தேன். அந்தக் கூட்டத்துக்குப்பிறகு வைகோ என்னிடம் ‘`அண்ணே, ஏழுமலை அண்ணணுக்குக் கடனா ஒரு பத்து லட்சம் கொடுங்க. நான் பொறுப்பு. அவர் கொடுத்துடுவார்’’ என்றார். பணம் கொடுத்துவிட்டேன். ஏழுமலை, ம.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளராக இருந்தவர். ஆனால், இந்தச் சம்பவம் நடந்த மூன்றாவது நாளில், வேறு ஒரு பிரச்னையில் ஏழுமலையை சிலர் கொன்றுவிட்டார்கள். உடனே வைகோ, ‘`அண்ணே, நீங்க நிறைய உதவி பண்ணிட்டீங்க. அந்தக் கடனை நான் கொடுத்துடுறேன்’’ என்றார். ஆனால், இன்றைய தேதிவரை நான் அந்தப் பணத்தை அவரிடம் திரும்பக் கேட்கவில்லை.

அந்த நேரத்தில் வண்ணாரப் பேட்டையில் இருந்த நான், மெரினா கடற்கரைக்கு அருகில், எம்.ஆர்.சி நகருக்கு எதிரில் ஒரு வீடு வாங்கியிருந்தேன். 1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது, நாங்கள் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வண்ணாரப் பேட்டை வீட்டை காங்கிரஸ்காரர்கள் சிலர் தாக்கினார்கள். வீட்டுக் கண்ணாடிகளை உடைத்தார்கள். அப்போது வீட்டில் இருந்த பெண்கள் பயந்துபோய் ‘`வேற எங்கயாவது போயிடலாம்’’ என அழுதார்கள். அந்த நேரத்தில்தான் கொஞ்சம் தள்ளியிருக்கலாம் என நினைத்து நான் அந்தப் புது வீட்டை வாங்கியிருந்தேன்.

என் அண்ணன் வண்ணாரப்பேட்டையை விட்டு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். ‘`நீ வரமாட்டன்னா நானும் போகமாட்டேன்’’ எனப் புது வீட்டை அப்படியே பூட்டி வைத்துவிட்டேன். இந்தச் சூழலில் ஒருநாள் வைகோ எனக்கு போன் செய்தார். ‘`அண்ணே, உங்க புது வீட்டை ரெண்டு மாசம் எனக்குக் கொடுக்க முடியுமா? கட்சியின் ஆரம்பக்கட்ட வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு உங்களுக்குக் கொடுத்துடறேன்’’ என்றார். ‘`எடுத்துக்கங்க’’ எனச் சொல்லிவிட்டேன். இரண்டு மாதங்களுக்குக் கேட்டவர், ஐந்து ஆண்டுகள் அங்குதான் இருந்தார்.

1994... மயிலாப்பூர் எம்.எல்.ஏ இறந்துவிட்டதால் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தது. ம.தி.மு.க-வின் முதல் வேட்பாளராக அங்கே என்னை நிற்கச் சொல்கிறார் வைகோ. ‘`இல்ல சார்... இப்பதான் ரஜினி சார் ‘பாட்ஷா’ படத்தை எனக்குக் கொடுக்குறதுக்கு இருக்கார். இந்த நேரத்தில் நான் தேர்தலில் நின்றால் சரியாக இருக்காது. அதனால் வேண்டாம்’’ என்கிறேன். ‘`அண்ணே... வேற யாரு இருக்காங்க’’ என்கிறார் வைகோ. அப்போது நான் துளசி கெளதமன் பெயரைச் சொன்னேன்.

உண்மைகள் சொல்வேன்! - 8

அண்ணாவின் மருமகள்தான் துளசி கெளதமன். அவரைப் போய்ப் பார்த்து, ‘`நீங்கள் வைகோவைப் பற்றித் தொடர்ந்து பெருமையாகப் பேசிவருகிறீர்கள். ம.தி.மு.க-வின் முதல் வேட்பாளராக நீங்கள் போட்டியிடவேண்டும்’’ என்று சொல்லி வைகோவை சந்திக்கவைத்தேன். அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். ஆனால், வைகோவின் நெருங்கிய நண்பரான அரங்கண்ணல் ‘`அண்ணாவின் மருமகளை தேர்தலில் நிற்கவைப்பது சரியாக இருக்காதய்யா’’ என்று வைகோவிடம் சொல்லியிருக்கிறார். அண்ணாவுக்கும் கலைஞருக்கும் நெருக்கமானவர், குடிசை மாற்று வாரியத்தின் முதல் தலைவர்தான் இந்த அரங்கண்ணல். கே.பாலசந்தர் இயக்கி, கமல்ஹாசன் நடித்த ‘மரோ சரித்ரா’ படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்.

‘`அண்ணே, அரங்கண்ணல் இப்படிச் சொல்றார். அதனால் அவங்களை நிற்கவைக்கவேண்டாம். உங்களை விட்டா எனக்கு வேற யார்ணே இருக்கா?’’ என மறுபடியும் என்னிடம் சொல்கிறார் வைகோ. ‘`இல்ல சார்... நான் ரஜினி சார் படம் பண்ணிட்டுத்தான் எதுவா இருந்தாலும் பண்ணுவேன்’’ என்கிறேன். ‘`நாம சந்திக்கிற முதல் தேர்தல். அதுவும் இடைத்தேர்தல். மக்கள் ஆதரவு நம்ம பக்கம் இருக்குண்ணே... நிச்சயம் நாம ஜெயிச்சிடுவோம்’’ என்கிறார் வைகோ. ‘`இல்ல சார்... வீட்ல ஏத்துக்க மாட்டாங்க’’ என்கிறேன். ‘`நான் உங்க வீட்டுக்கு வந்து பேசுறேன்’’ என்று சொல்லி என்னை அனுப்பிவைத்தார். நான் வீட்டுக்குப்போனதும் வீட்டில் இருப்பவர்களிடம் ‘`வைகோ நாளைக்கு வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்கார். என்னைத் தேர்தல்ல நிற்கச் சொல்றார். நான் நிற்க மாட்டேன். அவர் என்ன சொன்னாலும் நீங்களும் சம்மதிக்காதீங்க’’ என்று சொல்கிறேன்.

அடுத்த நாள் மு.கண்ணப்பனை அழைத்துக்கொண்டு காலை 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டார் வைகோ. என் மாமனார், என் அண்ணன், என் அண்ணி, என் மனைவி எனப் பெரியவர்கள் அனைவரையும் உட்காரவைத்து, கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் கண்ணீர்விட்டுப் பேசுகிறார். ‘`எம்ஜிஆருக்கு ஒரு ஆர்.எம்.வீரப்பன் மாதிரி, அண்ணன் எனக்குத் துணையாக இருக்கவேண்டும். இடைத்தேர்தல்ல அண்ணன் நின்னா, என் பெரும்பேறு’’ என என்னவெல்லாமோ பேசிப் பேசியே வீட்டில் இருந்தவர்களின் மனங்களையெல்லாம் கரைத்துவிட்டார். ‘`தோத்தாலும் பரவாயில்ல... நீ எலெக்‌ஷன்ல நில்லு மாமா’’ என என் மனைவி என்னைப் பார்த்துச் சொல்கிறார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்படியே உறைந்துபோய் உட்கார்ந்துவிட்டேன்.

உண்மைகள் சொல்வேன்! - 8

வைகோ போனதும், அன்று மதியமே ரஜினி சாரின் வீட்டுக்குப் போனேன். அவர் வீட்டின் ஓர் அறையில் எல்லாப் பக்கமும் முழுக்க முழுக்க கண்ணாடிகள் நிறைந்திருக்கும். அந்த அறைக்குள் போய் ரஜினி சாரின் முன் உட்கார்ந்தேன்.

இந்தச் சம்பவத்துக்கு முன்பாகவே வைகோ தனிக்கட்சி தொடங்கத் தயாரான நேரத்தில் நிறைய விஐபிகளைச் சந்தித்துத் தன்னிலை விளக்கம் அளித்துவந்தார். அந்த நேரத்தில் ரஜினியையும் சந்திக்க விரும்பி, என்னிடம் சொன்னார். நான் ரஜினியிடம் நேரம் வாங்கிக் கொடுத்திருந்தேன்.

தனிக்கட்சி ஆரம்பிக்கத் தயாரான வைகோவிடம் ரஜினி சொன்னது என்ன, ‘பாட்ஷா’ படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை எனக்குத் தர இருந்த ரஜினி சாரிடம் நான் சொன்னது என்ன, மயிலாப்பூர் இடைத்தேர்தலில் என்னவெல்லாம் நடந்தது, வைகோ எனக்குச் செய்த உதவிகள் என்ன... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்!

- வெளியிடுவோம்...