
- கலைப்புலி எஸ்.தாணு
நன்றி மறப்பவனல்ல நான். அரசியல் கட்சித் தலைவராக, நண்பராக வைகோ எனக்குப் பல முக்கியமான உதவிகள் செய்திருக்கிறார். அவர் செய்த உதவிகளை நான் மறக்கவும் மாட்டேன், மறைக்கவும் மாட்டேன். அதற்குமுன் கடந்த வாரம் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன்...
ரஜினி சாரிடம் தன்னிலை விளக்கம் கொடுக்க வைகோ நேரம் கேட்கிறார். ரஜினி சாரிடம் விஷயத்தைச் சொல்கிறேன். கொஞ்ச நேரம் யோசித்தவர், ‘`ஓகே! கூட்டிட்டு வாங்க... ஆனா, ஒரு 10 நிமிஷத்துக்குள்ள முடிச்சிட்டா நல்லாருக்கும்’’ என்கிறார். ‘`10 நிமிடம் நேரம் கொடுத்திருக்கிறார் சார்’’ எனச் சொல்லி வைகோவை அழைத்துச்செல்கிறேன். ரஜினி சார் வைகோவை வரவேற்று வீட்டு மாடிக்கு அழைத்துப்போகிறார். ‘`நான் கீழேயே இருக்கிறேன், நீங்கள் பேசிவிட்டு வாருங்கள்’’ எனச் சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். இருவரும் கீழே வர மூன்றரை மணி நேரத்துக்கு மேல் ஆனது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது. ரஜினி சார் புன்னகைத்தபடியே வழியனுப்பி வைத்தார்.
கடிதம்

காரில் ஏறுகிறோம். வைகோ கார் கதவைக் கொஞ்சம் வேகமாக மூடினார். அந்தச் சத்தத்திலேயே, ‘ரஜினி சாரிடமிருந்து எதிர்பார்த்த பதில் வரவில்லை’ என்பதைப் புரிந்துகொண்டேன். கொஞ்ச தூரம் போனதும் வைகோ, ‘`என்னண்ணே... தி.மு.க-வுக்காக நான் கடுமையாக உழைத்தது, அந்தக் கட்சி இப்போது என்னை அவமானப்படுத்துவது என எல்லா விஷயங்களையும் கண்ணீரோடு சொல்கிறேன். ஆனால், அவர் ‘கலைஞருக்கு அரசியலில் இது மிக முக்கியமான காலம். அவருக்கு வயதாகிவிட்டது. இந்த நேரத்தில் நீங்கள் அவருக்குத் துணையாக இருக்கவேண்டும். அதுதான் என் விருப்பம்’ என்கிறாரே. எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறேன். எவ்வளவு அவமானப்பட்டிருக்கிறேன். இன்னும் அவமானப்படணும் எனச் சொல்வதுபோல் இருக்கிறதே’’ என்றார்.
“ரஜினி சார் கலைஞர் மேல் ரொம்பவும் பாசமா இருப்பார். அதனால்தான் பிரியக்கூடாது என்கிறார்’’ என்று சொல்லிவிட்டு, வைகோவிடம் ஒரு சம்பவத்தைச் சொன்னேன்.
கலைஞர் ஒருநாள் காலையில் திடீரென என்னை வீட்டுக்குக் கூப்பிட்டார். வீட்டுக்குள் போனதுமே, ‘`யோவ்... ரஜினியை நேத்து பாத்தேன்யா. வெள்ளை தாடியும் முடியுமா இருக்கார். ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிற ஒரு பெரிய நடிகர் அப்படில்லாம் பொது இடத்துக்கு வரக்கூடாதுய்யா. எம்.ஜி.ஆர் வெளிய வந்தா தலையை மறைக்க தொப்பி போட்டுக்குறது, கண்கிட்ட இருக்கிற சுருக்கத்தை மறைக்க கண்ணாடி போட்டுக்கிறதுன்னு எப்படி இருப்பார்! அப்படி ஒரு இமேஜ் வேணும்யா. எம்.ஜி.ஆரை பாலோ பண்ணச் சொல்லுய்யா. தாடியை எடுக்கச் சொல்லு’’ என்றார்.
அன்றைக்கே ரஜினி சாரைப் பார்க்க நேரமெல்லாம் கேட்காமல் நேராக போயஸ் கார்டனுக்குப் போய்விட்டேன். தோட்டத்தில் ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருந்தார் ரஜினி. டீ கொடுத்து உட்காரவைத்து, ‘என்ன விஷயம்?’ எனக் கேட்டார். கலைஞர் சொன்னதை அப்படியே சொன்னேன். ‘`அப்படியா சொன்னார், அப்படியா சொன்னார்?’’ என ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டார்.
அடுத்த நாள்... வள்ளுவர் கோட்டம் அருகே இருக்கும் குட்லக் ப்ரிவியூ தியேட்டருக்கு ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோருடன் படம் பார்க்க கலைஞர் போயிருக்கிறார். படம் முடிந்து அவர் லிப்ட்டில் இறங்க, ரஜினி சார் தன் குடும்பத்துடன் அதே படத்தைப் பார்க்க லிப்ட்டுக்கு வெளியே காத்திருந்திருக்கிறார். தனியே இருவரும் சில நிமிடங்கள் பேசியிருக்கிறார்கள்.
குழந்தை

அடுத்த நாள் கலைஞர் என்னை மீண்டும் வீட்டுக்குக் கூப்பிட்டார். ‘`ரஜினி குழந்தை மாதிரி இருக்கார்யா... ‘தாணு சார்கிட்ட சொன்னீங்களாமே, நான் வெள்ளை தாடியோட இருக்கக்கூடாதுன்னு! இப்ப பாருங்க... எடுத்துட்டேன். இந்தப் பக்கம் பாருங்க, இந்தப் பக்கம் பாருங்க’ன்னு ரெண்டு கன்னத்தையும் குழந்தை மாதிரி காட்றார்யா’’ என்று கலைஞர் சிரித்தார்.
இந்த விஷயத்தை வைகோவிடம் சொல்லிவிட்டு, ‘`கலைஞர் என்ன சொன்னாலும் ரஜினி சார் கேட்பாரு. அவர் மேல பெரிய மரியாதை வெச்சிருக்கார்’’ என்றேன்.
இதன்பிறகுதான் தேர்தலில் நிற்பது தொடர்பாக என் வீட்டினருடன் வைகோ பேசியது, சம்மதம் வாங்கியது எல்லாமே. அன்று மதியமே ரஜினி சாரின் வீட்டுக்குப் போனேன். கண்ணாடி அறைக்குள் ரஜினி சார் இருந்தார். நடந்த எல்லா விஷயங்களையும் அவரிடம் சொன்னேன். இரண்டு கண்களுக்கும் நடுவில் கை விரல்களை வைத்தபடியே கொஞ்ச நேரம் யோசித்தவர், ‘`நான் உங்களுக்கு என்ன பண்ணணும்?’’ என்றார். ‘`உங்க ஆசீர்வாதம் இருந்தா போதும் சார்’’ என்று கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வெளியே வந்தேன். அப்போது ரஜினி சாரின் உதவியாளர் கிருஷ்ணாராவ், ‘`என்ன சார், ரஜினி சார் கால்ஷீட் கிடைக்கிற நேரத்துல இப்படி வந்து சொல்றீங்களே... நீங்க இல்லைன்னா சத்யா மூவீஸ்க்கு இந்த கால்ஷீட் போகும் சார்’’ என்கிறார். சிரித்தபடியே என் நிலைமையைச் சொல்லிவிட்டு வந்தேன்.
அன்று மாலை 4.30 மணிக்கு ம.தி.மு.க செய்தியாளர் சந்திப்பு. என்னை மயிலாப்பூர்த் தொகுதி வேட்பாளராக அறிவிக்கிறார் வைகோ. அடுத்த நாள் பெரியார் சமாதி, அண்ணா சமாதியில் மாலை போட்டு வணங்கிவிட்டு பிரசாரத்தைத் தொடங்குகிறேன். மயிலாப்பூர் மாங்கொல்லையில் முதல் பிரசாரக் கூட்டம். எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்பதால் காயத்ரி மந்திரம், விநாயகர் ஸ்தோத்திரம் சொல்லிப் பேச்சைத் தொடங்கினேன். மேடையிலேயே சிலர் சிரித்தார்கள். அடுத்த நாள் முரசொலியில் இச்சம்பவத்தைப் பெரிய சர்ச்சையாக்கி எழுதியிருந்தார்கள். வைகோவிடமும் நிறைய பேர் ‘`என்ன, தாணு இப்படிச் செய்துவிட்டாரே’’ எனக் கேட்டிருக்கிறார்கள். ‘`திடீரென அப்படிச் சொல்லிவிட்டார். அந்த விஷயத்தை அப்படியே தவிர்த்துவிட்டுத் தேர்தல் வேலைகளைப் பாருங்கள்’’ எனச் சொல்லியிருக்கிறார்.
தேர்தல் நடந்தது. அப்போதெல்லாம் வாக்குச்சீட்டு முறை என்பதால் கள்ள ஓட்டு பிரதானமாக இருந்தது. அ.தி.மு.க., தி.மு.க என இருதரப்பிலும் கள்ள ஓட்டுகள் விழுந்தன. நான் வாக்குச்சாவடிகளைப் பார்வையிடப் போனபோது ‘`என் வாக்கை யாரோ போட்டுட்டாங்க, தாணு சின்னமான பஸ்ஸுக்குப் போடலாம்னு நினைச்சோமே’’ என்கிற குமுறல்களை என் காதாலேயே கேட்க முடிந்தது. ஆளும்கட்சியான அ.தி.மு.க வென்றது. தி.மு.க-வுக்கு அடுத்த இடமும், எனக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. இதுதான் என்னுடைய முதலும் கடைசியுமான தேர்தல் அனுபவம்.
கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ படத்தைத் தயாரித்துக்கொண்டிருந்த நேரம். ஒருநாள் காலை 6 மணிக்கு கமல் என்னை போனில் அழைத்தார். “சரிகா மேடம் மாடியில இருந்து கீழ விழுந்துட்டாங்க. டாக்டர்கள் செக் பண்ணிட்டு, உடனடியா அவங்களை மும்பை கூட்டிட்டுப்போகணும்னு சொல்றாங்க. மும்பைலதான் ஆபரேஷன் பண்ண வசதிகள் இருக்காம். ப்ளைட்ல மூணு டிக்கெட் எடுத்துட்டு படுக்க வெச்சுத்தான் கூட்டிட்டுப் போகணும். உங்க இன்ப்ளூயன்ஸைப் பயன்படுத்தி எனக்கு உதவி பண்ண முடியுமா?’’ எனக் கேட்கிறார்.
உடனே நான் வைகோவுக்கு போன் அடித்து விஷயத்தைச் சொல்கிறேன். ‘`ஏர் இந்தியால ட்ரை பண்ணுங்க சார். அப்படி இல்லைன்னா ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல்கிட்ட கொஞ்சம் பேசுங்க’’ என்கிறேன். நரேஷ் கோயலுக்கு போன் அடிக்கிறார் வைகோ. அப்போது கோயல் லண்டனில் இருக்கிறார். ‘`கார்ல போயிட்டு இருக்கேன். ரீச்சாக இன்னும் மூணு மணி நேரமாகும். போனதும் நான் ஏற்பாடு பண்றேன்’’ என்கிறார். ஆனால், மூன்று மணி நேரம் காத்திருக்கமுடியாத சூழலை வைகோவிடம் சொல்லி, விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அனந்தகுமாரிடம் பேசச் சொல்கிறேன். வைகோ அனந்தகுமாரிடம் பேசி, ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க உடனடியாக ஏற்பாடு செய்துகொடுத்தார்.
முதுகுத்தண்டில் அடிபட்டிருந்ததால், சென்னை தேவகி மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்துக்கு சரிகாவை எந்த அசைவும் இல்லாமல் அழைத்துக்கொண்டுபோக ஸ்பெஷல் ஆம்புலன்ஸ் வேண்டும் எனச் சொன்னார்கள். உடனடியாக ராமச்சந்திர உடையார் மகன் வெங்கட்டிடம் பேசி, போரூர் ராமச்சந்திராவிலிருந்து விசேஷ வசதிகள் கொண்ட புது ஆம்புலன்ஸை வரவழைத்து சரிகாவை விமானநிலையம் கூட்டிப்போனோம்.
அந்தக் காலகட்டத்தில் ம.தி.மு.க-வைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன்தான் நிதித்துறை இணையமைச்சர். அவரின் கட்டுப்பாட்டில்தான் கஸ்டம்ஸ் துறை வருகிறது. அவர் மூலமாக கஸ்டம்ஸில் பேசி, விமான நிலையத்திற்குள் எங்கேயும் காத்திருக்காமல், விமான நிலையத்தின் பின்பக்கமாகக் கூட்டிப் போய் நேரடியாக விமானத்துக்குள் சரிகா மேடத்தை ஏற்றினோம். டேக் ஆப், லேண்டிங் இரண்டையும் மிகப்பொறுமையாகச் செய்யவேண்டும் என அறிவுறுத்தியிருந்தோம். இதேபோல் மும்பை விமான நிலையத்திலும் வைகோ, செஞ்சி ராமச்சந்திரனின் உதவியால் கஸ்டம்ஸ் கேட் வழியாக வெளியேவந்து, சரியான நேரத்தில் லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தோம். அறுவை சிகிச்சை முடிந்து, ஒரு மாதம் மருத்துவமனையில் தங்கியிருந்து, முழுமையாக குணமாகி சரிகா மேடம் மீண்டும் சென்னை வந்தார். இது வைகோ அவர்கள் உதவியால்தான் சாத்தியமானது. எல்லா நன்றிகளும் அவருக்கே உரித்தானவை.

கமல் சார், அவரின் அண்ணன் சந்திரஹாசன் சார், சரிகா மேடம், நான் என நால்வரும் விமான நிலையத்திலிருந்து வேனில் திரும்புகிறோம். வாகனத்தில் ஏறிய சில நிமிடங்களில், ‘நேராக சிவாஜி இல்லத்துக்குப் போகவேண்டும்’ என்கிறார் சரிகா. அவர் மருத்துவமனையில் இருந்தபோதுதான் சிவாஜி சார் இறந்துவிட்டார். அதனால் கமலா அம்மாவை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டுத்தான் வீட்டுக்குப் போகவேண்டும் என்பது சரிகா மேடத்தின் விருப்பம். சிவாஜி சார் வீட்டுக்குள் நுழையும்போது சந்திரஹாசன் சார், ‘`சரிகா, நீ இப்படிப் படி ஏறுறன்னா அதுக்கு முக்கியமான காரணம் தாணு. அவருக்குத்தான் நன்றி சொல்லணும்’’ என்கிறார்.
அடுத்த நாள் காலை விலையுயர்ந்த பூங்கொத்தோடு ஒரு கடிதம் வீட்டுக்கு வந்தது. ‘அன்றொரு நாள் ஹைதராபாத்தில் நடந்த ஒரு விருது விழாவில், மக்கள் கூட்டம் என் குழந்தைகள் ஸ்ருதி, அக்ஷரா மீது விழுந்தபோது ஓடிப்போய் அவர்களை நெரிசலிலிருந்து மீட்டு, பத்திரமாக ஹோட்டலில் கொண்டுபோய்ச் சேர்த்தீர்கள். அடுத்த நாள் காலை அதேபோல் ஹோட்டலில் இருந்து பாதுகாப்பாக எங்களை அழைத்துப்போய் விமான நிலையத்தில் சேர்த்தீர்கள். இப்போது நான் மருத்துவமனையில் போராடிய நேரத்தில், உங்கள் தலைவர் வைகோ அவர்கள் மூலமாக நான் நல்லபடியாக குணமாகப் பல்வேறு உதவிகள் செய்திருக்கிறீர்கள். இந்த உதவியை நானும் என் குடும்பமும் எப்போதும் மறக்கமாட்டோம்’ என எழுதியிருந்தார் சரிகா மேடம்.
‘ஆளவந்தான்’ படத்தின் சில காட்சிகளை டெல்லியில் உள்ள ‘நேஷனல் செக்யூரிட்டி கார்டு’ கேம்ப்பில் நடத்தவேண்டும் என்றார் கமல். அங்கே ஷூட்டிங் நடத்த யாருக்கும் அனுமதி தரமாட்டார்கள். ஆனால், எனக்காக வைகோ அவர்கள் உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரிடம் பேசி அந்த கேம்புக்குள் படப்பிடிப்பு நடந்த அனுமதி வாங்கித் தந்தார். அதேபோல் காஷ்மீரில் ஷூட்டிங் நடக்கும்போது பரூக் அப்துல்லாவிடம் பேசி, அவர்களின் சொந்தத் துப்பாக்கிகளையெல்லாம் வாங்கிக் கொடுத்து ஷூட்டிங்கிற்கு உதவினார். வைகோ உதவி இல்லாமல் ‘ஆளவந்தான்’ படத்தின் சில முக்கியமான காட்சிகளை நாங்கள் படமாக்கியிருக்கவே முடியாது.
எம்.ஆர்.ராதா காலத்திலிருந்தே வருமான வரி கட்டுவதில் சில சிக்கல்கள் இருக்க, தேனாம்பேட்டையில் இருக்கும் ராதாரவியின் வீடு ஏலத்துக்கு வந்துவிட்டது. வீட்டை அளக்க வருமான வரித்துறையிலிருந்து ஆட்கள் வந்துவிட்டார்கள். பதற்றத்துடன் என் வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொன்னார் ராதாரவி.
வைகோ வீட்டுக்கு ராதாரவியை அழைத்துக்கொண்டு ஓடினேன். வைகோ உடனே நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு போன் செய்து, வீட்டை ஏலத்துக்கு அளக்கவிடாமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
ஒரு மரியாதைக்குரிய நடிகர் வீட்டிலும் இதேபோல் வருமான வரிப் பிரச்னை. அவரின் மகன் என் வீட்டுக்கு வந்து விவரத்தைச் சொன்னார். ஆனால், ‘`அப்பா தனக்கென உதவி கேட்டு யாரிடமும் போய் நின்றதில்லை. அதனால் அவருக்கு இது தெரியவேண்டாம்’’ என்கிறார். உடனே அவரை அழைத்துக்கொண்டு வைகோ வீட்டுக்குப் போனேன். அதேபோல் வைகோ உடனடியாக யஷ்வந்த் சின்ஹாவிடம் பேசினார். வருமானவரியாகச் செலுத்தவேண்டிய தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தள்ளுபடி செய்து, பணம் கட்ட வேண்டிய கால அவகாசத்தையும் நீட்டித்துக் கொடுத்தார். அந்த நடிகருக்கு இந்தச் சம்பவம் குறித்து எதுவும் கடைசிவரை தெரியாது. திருச்சியில் ‘ராஜாளி’ எனும் ஹோட்டல் வைத்திருந்த முன்னாள் எம்.பி அடைக்கலராஜ் இதேபோல் வரிமானவரித் துறை பிரச்னையில் சிக்கிக்கொண்டார். நான் சொன்னதால் அவருக்கும் வைகோ இதேபோல் உதவி செய்துகொடுத்தார்.
வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இளையராஜாவுக்கு மேஸ்ட்ரோ விருது வழங்கப்பட்டிருந்தது. அப்போது ‘`இளையராஜா சார் பற்றிப் பாராளுமன்றத்தில் நீங்க பேசுங்க சார்’’ என வைகோவிடம் கேட்டுக்கொண்டேன். உடனே இளையராஜா பற்றிய அத்தனை விவரங்களையும் கேட்டார். இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரிடம் தகவல்களை வாங்கி வைகோவுக்கு பேக்ஸில் அனுப்பினேன். இசைஞானியைப் பற்றிப் பாராளுமன்றத்தில் மிகப் பிரமாதமாகப் பேசினார் வைகோ. அதேபோல் மதுரையில் இசைஞானிக்கு நடந்த பாராட்டு விழாவுக்கும் வந்து, விழாவைச் சிறப்பாக நடத்திக்கொடுத்தார். சிவாஜி சாருக்குத் தபால் தலை வெளியிடவேண்டும் என வைகோவே முழு முயற்சி எடுத்து அதைச் செய்தார். அந்த விழாவுக்குத் தேவையான உதவிகளை மட்டும் நான் செய்தேன்.
ஜெயலலிதா மேடம் முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் வாஜ்பாய் சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் வைத்து அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் வைகோ. ‘`நான் தெருவில் தனியாக விடப்பட்டபோது தனது சொந்த வீட்டைக் கொடுத்து எனக்கு நிழல் தந்தவர். கிரேட் புரொட்யூசர், கிரேட் பொயட்’’ என்றார் வைகோ. ‘`ஓ... பொயட்... பொயட்’’ என்று சொல்லிச் சிரித்தார் வாஜ்பாய். அதேபோல் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் என்னைப் பெருமையாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
அண்ணா நகரில் வைகோ புது வீடு கட்டியபோது முதல் செங்கல்லை கே.பி.கந்தசாமி வைக்கிறார். இரண்டாவது செங்கல்லை வைகோவின் அக்கா கணவர் வைக்கிறார். மூன்றாவது செங்கல்லை வைக்கும் மரியாதையை எனக்குக் கொடுத்தார் வைகோ.
அதேபோல் அவரின் இரண்டு மகள்கள், மகன் என மூவரின் திருமணத்துக்கும் வாழ்த்துரை வழங்கிப் பேசும் வாய்ப்பை எனக்கு அளித்தார்.
வைகோவோடு நல்ல நட்புடனும், ம.தி.மு.க-வில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினராகவும் இருந்த நான் ஏன் கட்சியை விட்டு விலகினேன்?
அதைச் சில வாரங்கள் கழித்துச் சொல்கிறேன். அதற்கு முன் இளையராஜாவுக்கும் பாலுமகேந்திராவுக்கும் இருந்த சிறு மனக்கசப்பு எப்படி விலகியது, பாலுமகேந்திரா - இளையராஜா இணைந்த ‘வண்ண வண்ணப் பூக்கள்’ படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யங்கள் என்ன என்பதையெல்லாம் அடுத்த வாரம் சொல்கிறேன்.
- வெளியிடுவோம்...