மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 35

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

தந்தை வழி ( 1952 – 54 இள மழைக்காலம் )

``பயணத்தில் எதிர் எதிரே வரும் ஓர் ஆணின் காலும் ஒரு பெண்ணின் காலும் சேர்ந்து பயணிக்க வாய்ப்புண்டு.’’ ~ பராரிகள்

ஏழு கடல்... ஏழு மலை... - 35

ஜெய்சால்மர் சந்தைக்குக் கரியன் வந்த போது ஊரைச் சுற்றி எல்லா திசைகளிலும் பழைய அரண்மனைக் கட்டடங்கள். கிட்டத்தட்ட 14-க்கும் மேற்பட்ட அரண்மனைகள் சிறியதும் பெரியதுமாக. எந்தத் திக்குக்கு நடந்தாலும் ஏதாவது ஒரு அரண்மனையின் வாசலுக்குத்தான் கொண்டு வந்து விட்டது. ஊரின் மையத்தில் பாட்டியா திடலில் பெரிய கால்நடைச் சந்தை கூடியிருந்தது. லட்சக்கணக்கில் ஒட்டகங்களும், ஆயிரக்கணக்கில் குதிரைகளும், ஆயிரக்கணக்கில் மாடுகளும் நின்றுகொண்டிருந்தன. பெரும்பாலும் தெற்கிலிருக்கும் காங்கேயம் மாடுகளைப் போலவே தோற்றம் கொண்ட நன்கு விரிந்த கொம்புகள் கொண்ட காங்ரேஜ் மாடுகளும், குட்டைக் கொம்புகள் கொண்டு ஓங்குதாங்காய் ஓங்கோல் மாட்டின் சாயலிலிருக்கும் தார்பார்கர் வகை மாடுகளும்தான். கரியனுக்கு இந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் எல்லாச் சந்தை நடப்புகளும் அத்துப்படியாகிவிட்டது. சந்தை மனிதர்கள் எந்த மொழி பேசினாலும் அவனால் சமாளித்து பதில் சொல்லவும், அந்த மனிதர்களோடு நட்பாகவும் முடிந்தது. எல்லாச் சந்தைகளிலும் அவனை மாதிரியே நாடோடி முகச் சாயல் கொண்ட மனிதர்கள் நிறைய இருந்தார்கள். ஜெய்சால்மர் சந்தையில் இரவு கவியத் துவங்கிய போது எல்லோரும் நெருப்பிட்டு, அதைச் சுற்றிப் பெரிய வட்டமாய் அமர்ந்து அங்கங்கு பேசிக்கொண்டும் புகைத்துக்கொண்டும், உணவு எடுத்துக்கொண்டுமிருந்தனர்.

ஏழு கடல்... ஏழு மலை... - 35

கரியன் போய் அமர்ந்த பெரிய வட்டத்தில் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட திசையைப் பார்த்து கெக்களிப்போடு சிரித்துக்கொண்டிருந்தார்கள். கரியன் அவர்கள் சிரிக்கும் திசையைப் பார்க்கையில் கிழிந்து, அழுக்கடைந்த பழைய பட்டாடைகள் அணிந்திருந்த ஒருவர், அவரைச் சுற்றிலும் ஏழு குதிரைகள். குதிரைகளின் நடுவே தலையை மண்ணை நோக்கிக் கவிழ்த்தியவாறு நின்றுகொண்டிருந்தார். கரியன் வட்டத்திலிருந்து எழுந்து அவரை நோக்கி நடந்து வந்தான். கரியன் அவர் அருகில் வந்து நின்றபோதும் அவர் அப்படியே தலைகுனிந்தவாறு, அவனின் புழுதி படிந்த நாடோடிக் கால்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார். நிமிர முடியவில்லை. அவரை நெருங்கி நாலடி வைக்கப் போகையில் குதிரைகள் சிறு கனைப்போடு மிரண்டன. அவன் மீண்டும் இரண்டடி பின்னால் வந்தான். அவர் அப்போதும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

நேற்றிலிருந்தே அதே இடத்தில் நிற்பாராயிருக்கும். அந்த இடத்தில் மனிதன் நின்று நின்று மணல் விலகி இறுக்கமான மண்தரை தெரிந்தது. அவரின் நெஞ்சு வரை நரையும் கருமையும் கலந்த தாடி கிடந்தது. தாடியில் அங்கங்கு எச்சிலும் சளியும் வழிந்து கிடந்தது. அவர் அணிந்திருக்கும் அழுக்குப் பட்டாடை பல நாள்கள் துவைக்கப்படாமல் இருக்கும் போல. ஒருவித நாற்றமடித்தது. அவரின் முகத்திலிருந்து மலிவான சாராய நெடி. கரியன் தயங்கித் தயங்கி அவரை அழைத்தான். அவர் எந்த பதிலுமில்லாமல், சலனமுமில்லாமல் அதேபோலவே நின்றுகொண்டிருந்தார்.

வட்டத்திலிருந்து ''டேய், மகாராஜாவ ஏன் தொந்தரவு பண்ற. இங்க வா'' என்று கிண்டல் தொனியோடு ஒரு குரல். கூடவே எல்லோருடைய கிண்டலான சிரிப்புச் சத்தங்களும். கரியன் அவர் எதிரிலேயே நகராமல் நின்று கொண்டிருந்தான். மீண்டும் அவரை அழைத்தான். எந்த பதிலுமில்லை. கரியன் குனிந்து மண் பார்த்து நிற்கும் அவரின் முகத்தைப் பார்க்க முயன்றான். பாதி முகம் தெரிந்தது. கரியன் தரையில் அமர்வதுபோலக் குத்தவைத்துக் கொண்டு அவரின் முகத்தைப் பார்க்க முயன்றான். மஞ்சளும் சிவப்பும் கலந்த சிறிய சுள்ளிகளின் நெருப்பு வெளிச்சத்திலிருந்து அந்த முகம் தெரிந்தது.

தோல்வியும் அவமானமும் படிந்த ஒரு பழைய ராஜமுகம். கரியன் மீண்டும் அவரை அழைத்தான். அவர் முகத்தில் சிறிய உக்கிரம் தெரிந்தது. கரியன் வட்டத்தினர் சொன்னதுபோலவே ‘‘மஹராஜ்'' என்று அழைத்தான். அவ்வளவுதான், அப்படி ஒரு கோபத்தோடு எட்டி உதைத்தார். ‘‘ஏய், ஆமாண்டா. நான் மஹராஜ்தான். இந்தா சுத்தி இருக்குறதுலாம் எங்களோட அரண்மனைங்கதான். இன்னிக்கி சோத்துக்கு இல்லாம வீதிக்கு வந்துட்டோம். சிரிக்கிறீங்களா? ஏய் போடா...'' மஹராஜ் அவனை விரட்டினார். நல்ல கம்பீரமான குரல் அவருக்கு. கரியன் இப்போதும் அங்கிருந்து நகரவில்லை. ‘‘போடான்னு சொல்றேன்ல...'' கத்தினார். கரியன் அந்த இடத்திலேயே குத்தவைத்து அமர்ந்திருந்தான். எரிச்சலாகி மஹராஜ் அவனைத் தோளில் எட்டி உதைத்தார். கரியன் நாலடி தள்ளிப் போய் விழுந்தான். பயந்து இன்னும் நாலடி தள்ளிப் போனான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 35

வட்டத்திலிருந்து எல்லோரும் கரியனை அழைத்தார்கள். ‘‘அந்த ஆளு ரெம்ப கோபக்காரன். நீ இங்க வா. கொன்னுடுவான். இடுப்புல பெரிய ராஜவாள் செருகி வச்சிருக்கான். ஒரே வீச்சுல உன் கழுத்த சீவிடுவான். இங்க வந்திடு.'' பின்னாலேயே அதேபோல் கிண்டலான சிரிப்புகள். கரியன் தன் மேல் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டபடி எழுந்து வட்டத்தில் போய் அமர்ந்தான். அமர்ந்ததும் தலையைத் திருப்பி மஹாராஜாவைப் பார்த்தபடியே இருந்தான். அவரிடம் இப்போதும் சலனமில்லை. எல்லோரும் எழுந்து உறங்கப் போனார்கள். சிலர் அப்படி அப்படியே நெருப்பைச் சுற்றிப் படுத்துக்கொண்டார்கள். ஒரு சிலர் மட்டும் அமர்ந்திருந்தார்கள். கரியன் எழுந்து போய் குடைபோல் விரிந்திருந்த ஒரு மரத்தின் அடியில் துண்டை விரித்துப் படுத்துக்கொண்டான். படுத்ததும் சிறிது நேரத்திலேயே உறங்கிவிட்டான்.

நடு இரவுக்கு மேலிருக்கும். கரியனின் மேல் குளுமையாய் நீர்ச் சொட்டு விழுந்தது. சட்டென எழுந்து சுற்றிலும் பார்த்தான். அவனைச் சுற்றிலும் ஆட்கள் மழைக்கு ஒதுங்கி நின்றுகொண்டிருந்தார்கள். நெருப்பு அணைந்து எல்லா இடமும் இருட்டாயிருந்தது. சந்தையில் அங்கங்கு கல்விளக்குத் தூண்களில் மட்டும் நீர் படாமல் மேலே சிறிய தாழ்வாரம் இருந்ததால் விளக்குகள் அணையாமல் எரிந்துகொண்டிருந்தன. அந்தச் சிறிய வெளிச்சத்தின் நடுவே சந்தையைச் சுற்றிப் பார்த்தான். சந்தைக் கால்நடைகள் முழுக்க நனைந்தபடி நின்றுகொண்டிருந்தன. மனிதர்கள் சுற்றிலும் மரங்களிலும், சிறிய கல்மண்டபங்களிலும் தஞ்சமடைந்திருந்தார்கள்.

கரியன் விறுவிறுவென மழைக்குள் இறங்கி மஹராஜ் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு ஓடினான். அவர் முன்பு நின்றுகொண்டிருந்தது போலவே மழைக்குள் தலைகுனிந்தபடி நின்றுகொண்டிருந்தார். கரியன் அவரை ‘‘மஹராஜ்'' என்று அழைத்து ஓரமாய் வந்து நனையாமல் நிற்குமாறு அழைத்தான். மஹராஜ் என்று அழைத்ததுமே அவர் திரும்பவும் கோபத்தோடு கால்களை உயர்த்திக்கொண்டு அவனை எத்துவதுபோல் வந்தார். கரியனுக்குப் புரிந்துவிட்டது. அவரை மஹராஜ் என்று அழைப்பது வெறும் கேலிச் சொல் மாத்திரமே என்று. ‘‘சரி... சரி... நான் அப்படிக் கூப்பிடல. வந்து ஓரமா நில்லுங்க. மழை பெய்யுதுல்ல. அப்படி மண்டபத்துல வந்து நனையாம இருங்க. இந்தாங்க இந்தத் துண்ட வச்சி உடம்பத் துவட்டுங்க'' என்று நீட்டினான். அவர் வாங்க மறுத்து அப்படியே நின்றுகொண்டிருந்தார். ‘‘இங்க இருந்து போ’’ அவர் திரும்பவும் கத்தினார்.

மீண்டும் நனைந்தபடியே மரத்தடிக்கு வந்தான். எல்லோரும் அவனைக் கடிந்துகொண்டார்கள். ‘‘அந்த ஆள் ஒரு முரடன். பைத்தியக்காரன். திரும்பத் திரும்ப ஏன் அவன்கிட்டயே போயி நிக்கிற? பேசாம இப்படி ஓரமா நில்லு. இன்னும் அந்த ஆளுக்கு தான்தான் ஜெய்சால்மர் பரம்பரை ராஜான்னு நினைப்பு.''

கரியன் கேட்டான். ‘‘அப்போ உண்மையிலேயே அவர் மகாராஜாதானா?''

‘‘அதெல்லாம் பழைய கத. இப்போதும் சுதந்திரம் வந்ததுமே அரசாங்கம் எல்லா அரண்மன சாவியையும் அவங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வெளிய அனுப்பிட்டாங்களே. சில பேரு அரசாங்கத்துட்ட மானியம் வாங்கிக் குடும்பம் நடத்துறாங்க. ஒரு சில பேரு இன்னும் ‘நான்தான் ராஜா, யார்கிட்டயும் மானியம் வாங்கித் திங்க மாட்டேன்’னு வீம்பு பேசிக்கிட்டு இப்படி நடுச் சந்தைல நிக்கிறாங்க.''

‘‘அப்போ இவர்தான் இந்த ஊரோட மகாராஜாவா?''

‘‘இவரும் ராஜா. அரச குடும்பத்துக்கு இங்க நிறைய அரண்மனைகள் இருக்கு. இவர் அதுல ஒரு அரண்மனை வீட்டுப் பிள்ள. அரசாங்கத்துக்கிட்ட மொத்தச் சொத்தும் போனதுமே நிறைய பேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. ஒரு சிலர் நொந்து நொடிச்சி இறந்துட்டாங்க. இன்னும் கொஞ்ச பேர், இருக்குற அரண்மனைப் பொருளெல்லாம் வித்து வித்துக் குடிச்சே அழிஞ்சாங்க. இன்னும் மிஞ்சியிருக்கிறது இவனப் போல ஒன்னு ரெண்டு பேர்தான்.’’

‘‘ம்... ஏன் எல்லோரும் அவர இப்படிச் சீண்டுறாங்க?''

‘‘பண்ணமாட்டாங்களா பின்ன? எத்தன வருஷம் எங்க தல மேல உக்காந்துகிட்டு அதிகாரம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இன்னிக்கி தெருவுக்கு வந்துட்டாங்க.எங்களைவிட கஷ்டப்படுறாங்க. கஷ்டப்படட்டும். எத்தனை வருஷமா அரண்மனைக்குள்ளார உக்காந்துகிட்டு உடம்பு நோகாம தின்னுக்கிட்டு, விதவிதமா பட்டும் பகட்டுமாத் திரிஞ்சாங்க. இப்போ எல்லாம் பிடுங்கிட்டுப் போயிடுச்சி. ஆனாலும் இன்னும் அந்தத் திமிர் குறையல. இன்னும் படணும். அவங்க பண்ணுன பழைய பாவத்துக்குத்தான் மக்கள் இவங்கள இவ்வளவு வெறுக்குறாங்க.''

‘‘ம்...''

மழை ஓய்ந்து எல்லோரும் மீண்டும் உறங்கச் சென்றார்கள். கரியனும் ஒரு மண்டபத்தை நோக்கி நடந்தான். செல்லும் வழியில் மஹராஜ் இருந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தான். அதேநேரம் அவரும் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார். கரியனுக்கு ஆச்சரியமாய்ப் போய்விட்டது. திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு நடந்தான். கரியன் கவனிப்பதைப் பார்த்த மஹராஜ் மீண்டும் தலையை மண் பார்த்து வைத்துக்கொண்டார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 35

காலையில் கரியன் விழித்தபோது சந்தை முழுக்க கயகயவெனக் கூட்டமும் கும்பலுமாய் இருந்தது. எல்லாப் பக்கமும் கால்நடைகளை விலைபேசிக்கொண்டிருந்தார்கள். கரியனின் பார்வை மஹராஜ் நின்றுகொண்டிருந்த இடத்தைத் தேடியது. அங்கு அவரின் குதிரைகள் நின்றுகொண்டிருந்தன. அவரைக் காணவில்லை.கரியன் எழுந்து அங்கே சென்றான். அருகில் செல்லும்போதுதான் பார்த்தான். குதிரைகளின் கால்களிடையே ஓர் உருவம் படுத்திருப்பதை. கரியன், மஹராஜ் அருகில் போனதுமே காட்டமான சாராய நெடி அடித்தது. பொழுது விடிவதற்கு முன்னமே குடித்திருக்க வேண்டும். கரியன் அந்தக் குதிரைகளைப் பார்த்தான். நல்ல ராஜ அம்சம்.

ஏழு குதிரைகளின் சேணக் கயிறுகளையும் அவரின் கைப்பிடியில் வைத்திருந்தார். குதிரைகள் களைப்பாயிருந்தன. தண்ணீரும் தீனியும் வைத்தால் தெளிச்சியாகிவிடும். ஓரிரு நாளாய் சாப்பிடாமல் சரியான நீரில்லாமல் இருப்பது போலிருந்தது. நீர் வைக்கும் மரத்தொட்டியைப் பார்த்தான். முந்தைய நாள் இரவில் பெய்த மழை நீர் கிடந்தது. அதில் நிறைய செடி செத்தைகளும், வைக்கோல் போரும் கிடந்தன. பெரும்பாலும் அழுக்கான நீரைக் குதிரைகள் குடிப்பதில்லை. கரியன் அந்த மரத்தொட்டியிலிருக்கும் நீரைக் கழுவிக் கீழே ஊற்றினான். புதியதாக நீர் எடுத்து வந்து ஊற்றினான். நல்ல பசும்புற்கள் நாலைந்து கட்டுகள் வாங்கி வந்து குதிரைகளுக்குப் போட்டான். குதிரைகள் ‘சாப்பிடலாமா, வேண்டாமா’ என்பதுபோல் பார்த்தன. பின் ஒரு குதிரை புல்லில் வாய் வைக்கவும், எல்லாக் குதிரைகளும் உணவு எடுக்கத் துவங்கின. கரியன் வேறு ஏதாவது நல்ல தீவனம் கிடைக்கிறதாவென சந்தையின் உள்ளே பார்க்கப் போனான். காசு கொடுத்து கொஞ்சம் கொள்ளு வாங்கி எடுத்துக்கொண்டு மீண்டும் மரத்தடிக்கு வந்தபோது மஹராஜ் எழுந்து அமர்ந்திருந்தார். புற்களை வாரித் தூக்கி எறிந்திருப்பார்போல. குதிரையிடமிருந்து தூரமாய்ச் சிதறிக் கிடந்தது. நீர்த் தொட்டி சாய்த்து விடப்பட்டு சந்தை மண்ணில் வலிந்து கிடந்தது.

கரியன் புல்லை எல்லாம் மீண்டும் அள்ளி வந்து குதிரையின் அருகில் போட்டான். மரத்தொட்டியை நிமிர்த்தி வைத்து அருகிலிருப்பவர்களிடம் நீர் வாங்கி வந்து ஊற்றினான். மஹராஜ் மீண்டும் நீர்த்தொட்டியை எட்டி உதைக்கப் போனார். கரியன் அவரின் காலைப் பிடித்துக்கொண்டான். ``உங்களுக்குச் சாராயம் இருந்தாப் போதும். அதுங்களுக்குப் புல்லும் தண்ணியும் வேணும். பேசாமப் போங்க.’’

கரியன் சற்றுக் கடுமையாவும் சத்தமாகவும் பேசினான். மஹராஜ் அப்படியே விட்டுவிட்டு தனியே போய் அமர்ந்துகொண்டார். குதிரைகள் நன்கு சாப்பிடத் துவங்கின. கரியன் சிறிது நேரம் எங்கேயோ போய்விட்டு உணவு எடுத்து வந்தான். மஹராஜை சாப்பிட அழைத்தான். அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டு எங்கேயோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘‘விடுங்க, இந்தக் குதிரைய நான் வித்துத் தாறேன். சாப்பிடுங்க.’’ அவர் அப்போதும் முகத்தைத் திருப்பவில்லை. ``சரி விடுங்க, நானே வாங்கிக்கிறேன். எவ்வளவு... வில சொல்லுங்க'' அவரின் கையைப் பிடித்து இழுத்தான்.

மஹராஜ் கோபமாய் அவன் பக்கம் திரும்பினார். ‘‘இதுல ஒரு குதிரைக்கு உன்னால வில குடுக்க முடியுமா? பிச்சைக்காரப் பயலே, போடா அங்கிட்டு.''

‘‘வில என்னன்னு சொன்னாத்தான தெரியும்.சொல்லுங்க குடுக்க முடியுதான்னு பாக்கலாம்.''

‘‘இதெல்லாம் அரச குடும்பம் மட்டுமே வெச்சிருக்குற ஒண்ணாம் தரமான மார்வாரிங்க. உன்னால இதெல்லாம் வாங்க முடியாது, போ.''

‘‘வில சொல்லுங்க.''

‘‘ஒரு குதிரையோட வில 1,200 ரூபா.''

கரியன் அதிர்ச்சியடைந்தான். இந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சந்தை சந்தையாய்ச் சுற்றி சிறு சிறு வேலைகள் பார்த்து அவனிடம் இருநூறு ரூபாய்க்கு மேல் இருந்தது. ‘‘அவ்வளவு வில போட்டு என்னால வாங்க முடியாது. எனக்கு குதிரைலாம் வேண்டாம். இந்தாங்க, இதுல கொஞ்சம் பணம் இருக்கு. வாங்கிக்கோங்க.''

கரியன் கொஞ்சம் பணத்தை எடுத்து அவரின் கைகளில் திணித்தான். ‘‘திருப்பிலாம் தரவேண்டாம், வெச்சுக்கோங்க. உங்க வீட்ல ஏதாவது முக்கியமான செலவு இருக்கும். அதுக்குத்தான இதெல்லாம் விக்க வந்திருக்கீங்க.''

மஹராஜுக்கு ஒரு நிமிடம் தன் மகளின் உருவம் நினைவில் வந்து போனது. விம்மி அழத் துவங்கிவிட்டார். அதே நேரம் தன் அப்பாவின் வருகைக்காக மஹாராஜின் மகள், கதிசார் ஆற்றின் கரையிலிருக்கும் ஒரு பெரிய மண்டபத்தில் தனியே உணவு சமைக்கக் காத்திருந்தாள். உணவு தயாரிக்கும் மகளின் பிம்பம் அவர் நினைவில் வந்துபோனது. மஹராஜ் கலங்கிய குரலில் பேசத் துவங்கினார். ``ரெண்டு நாளா இந்தக் குதிரைங்கள விக்க நான் காத்துக்கிட்டு நிக்கிறேன். வர்ற யாவாரிங்க எல்லாத்தையும் துரத்தி விடுறாங்க. என் வீட்ல என் மக மட்டும்தான் இருக்கா. இந்த ஏழு குதிரைங்களையும் வித்து அவளுக்குக் கைல பணத்தக் குடுத்திட்டு கதிசார் ஆத்துல விழுந்து இறந்திடலாம்னு இருக்கேன். பாவம் அவ வாய் பேசமுடியாத பொண்ணு. விதி இந்த அரச குடும்பமெல்லாம் அழியும் நேரத்துலதான் அவள இந்தப் பூமில பிறக்க வெச்சிருக்கு.’’ அவர் குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார்.

மகன் வழி ( 1978 - முதுவேனிற்காலம் )

``மலையிலிருந்து கிளம்பி சமவெளியில் நகர்ந்து கடலில் கலக்கும் நீரைப்போல்தான் பயணி.’’ ~ பராரிகள்

சூரன் தான் இந்த நாட்டின் கடைசி ஊரிலிருந்து கிளம்பி வந்தவன் என்பதைச் சொன்னபோது மருத்துவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சூரன் அந்தப் பெண்ணைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு கேட்டான்.

``அந்தப் பெண்ணின் பெயர் `லேயா.' இந்திய நிலப்பரப்பின் முதல் ஊரான மாணாவில் பிறந்து வளர்ந்த பெண். லேயா ஒரு மலைப் பழங்குடி. பலகாலமாக அவர்களின் மூதாதையர்கள் அந்த ஊரில் தங்கியிருக்கிறார்கள். பனிமலைகளின் உச்சியின் கீழ் ஒரு சிறு பள்ளத்தாக்கில் இருக்கும் மிகச் சிறிய ஊர் அது. அவர்களின் மூதாதையர்கள் அந்த ஊரில் காலங்காலமாக இருக்கிறார்கள். பெரும்பாலும் கால்நடைகள் வளர்ப்பதும், மேய்ப்பதும்தான் அவர்களின் தொழில். அந்த ஊரின் இறுதியிலிருக்கும் வீடுதான் லேயாவின் வீடு. அவள்தான் இந்த நாட்டின் முதல் பெண். கிட்டத்தட்ட உச்சியில் குடியிருப்பவள். அவளுக்கு அந்த விஷயம் தாமதமாகவே தெரிந்திருக்கிறது. அது தெரிந்தபோது அவள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவளின் தந்தை ஒரு கால்நடை வளர்ப்பாளர். அவர்கள் வீட்டில் நூற்றுக்கும் மேல் மாடுகளும், பதினோரு நாய்களும், இரண்டு கழுதைகளும் இருந்திருக்கின்றன. லேயா பிறந்ததிலிருந்தே தன் அப்பாவோடு மேய்ச்சலுக்குச் செல்லும் சிறுமியாயிருந்தாள். அவர் கால்நடைகள் சார்ந்த அத்தனை நுணுக்கங்களையும் தன் மகளுக்குக் கற்றுத் தந்திருக்கிறார். கால்நடைகளுக்கான பூர்வீகமான வைத்திய முறைகளையும், கைவைத்தியத்திற்கான மருந்துப் பொருள்களையும் அவளுக்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறார். அவருக்கு தமிழ்நாட்டு முறைப்படியான மாட்டு வாகடம்கூடத் தெரிந்திருந்தது. பெரும்பாலும் அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வைத்திய முறைகளை அவர் தமிழ்நாட்டி லிருந்துதான் கற்றுக் கொண்டதாய் அந்தப் பெண்ணிற்குச் சொல்லி யிருக்கிறார். நிறைய மருந்துப் பொருள்களையும்கூட அவர் பல காலம் தமிழ்நாட்டிலிருந்துதான் வரவழைத்து அங்கிருக்கும் மாடுகளுக்குப் பயன்படுத்தி யிருக்கிறார்.

ஏழு கடல்... ஏழு மலை... - 35

ஒருமுறை லேயாவின் அப்பா ‘இந்த நாட்டின் கடைசி வீடு கடற்கரை யோரத்தில் இருக்கிறது’ என்று சொன்னதைக் கேட்டு அவளுக்கு அவ்வளவு ஆச்சரியம். அதுவரை கடலையே பார்த்திராத அந்தப் பெண்ணுக்கு முதல் முறையாகக் கடலையும், அந்தக் கடைசி வீட்டையும் பார்க்க அவ்வளவு ஆசையாயிருந்தது. அவள் தந்தையின் இறப்பிற்குப் பிறகு அது பெரிய ஏக்கமாகவே மாறி, பலமுறை இந்த நாட்டின் கடைசி வீட்டை நோக்கிக் கிளம்பியிருக்கிறாள். பொருளாதாரமோ, அல்லது வேறு சில பிரச்னைகளோ தலை தூக்கும்போது மீண்டும் தன் வீட்டிற்குத் திரும்பிவிடுவாள். பின் சிறிது காலம் கழித்து மீண்டும் கிளம்புவாள்.

இப்போதுகூட நிச்சயம் தனது வீட்டிற்குத்தான் திரும்பியிருப்பாள். அங்கு அவளின் முதிய வயது அம்மா மட்டும் இருக்கிறார். சிறிதுகாலம் அங்கு தங்கிவிட்டு மீண்டும் செல்லும் இடங்களிளெல்லாம் ஏதாவது வேலைகள் செய்து பணம் திரட்டிக்கொண்டு கடைசி வீட்டை நோக்கிக் கிளம்பிவிடுவாள். நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். பயணத்திற்கு அவ்வளவு ஒன்றும் பணம் செலவு ஆகாது. ரயில் பயணத்திற்கான முழுச் செலவையும் நானே தருகிறேன் எனச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அந்தப் பெண் மறுத்துவிட்டாள். எத்தனை வருடங்கள் ஆனாலும் வழியெல்லாம் இருக்கும் எல்லா ஊர்களுக்கும் பயணம் செய்துவிட்டு இறுதியாக அந்தக் கடைசி வீட்டை அடைவேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்’’ என்றார் மருத்துவர்.

சூரனுக்கு உடனே லேயாவைத் தேடி மாணாவிற்குக் கிளம்ப வேண்டும் போலிருந்தது. ஓயாது பயணம் செய்து நகர்ந்துகொண்டே இருப்பவளை இப்போது தவற விட்டால் இனிக் கண்டுபிடிக்க வேறு வாய்ப்பு நிச்சயம் இருக்காது என்றும் தோன்றியது. மாணாவிற்கு உடனே கிளம்ப ஆயத்தமானான்.

அதே நேரம் லேயா தனது வீட்டை நோக்கி மலைப்பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியெல்லாம் அவளின் அம்மா குறித்தே சிந்தனை ஓடியது. அம்மாவிற்கு மிகவும் வயதாகிவிட்டது. ஒவ்வொரு முறை ஊருக்கு வந்துவிட்டுக் கிளம்பும்போதும் அம்மா சொல்வாள். `நான் சாகும்போது நீ என் பக்கத்துல இருக்கணும்.’ பலமுறை லேயா அம்மாவின் அந்த வார்த்தைக்காகத்தான் திரும்ப வீடடைவாள். ஒவ்வொரு முறை அவள் வீட்டை அடைந்து மூடிய கதவின் பின்புறம் நின்று “அம்மா” என்று அழைக்கும்போதும், எதிர்க்குரல் வராமலிருந்தால் பதறுவாள். வீட்டிற்கு வரும் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொள்வாள், ‘இனிமேல் அந்தக் கடைசி வீட்டை மறந்துவிட வேணுமென. ஆனால் அவளுக்கு அவளின் அப்பா சொன்ன வார்த்தைகள் காதுக்குள்ளாக ஓடும். `இந்தியாவின் கடைசி வீட்டிற்குச் செல்லும் வழியில் நீலமும் பச்சையும் கலந்த மயில்கள் அதிகமாக இருக்கின்றன. அதன் தோகைகளில் ஆயிரமாயிரம் கண்கள் இருக்கும். ஓயாங்...ஓயாங் என்று அதன் சத்தம் அந்தப் பகுதி முழுக்க ஒலிக்கும்.’ லேயாவின் காதுகளில் மயில்களின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அவள் தன் வீட்டின் வாசலுக்கு வந்துவிட்டாள்.

~ ஓடும்