மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 36

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

தந்தை வழி ( 1954 மழைக்காலம் )

‘`இந்தச் சிறிய பாதங்கள் எவ்வளவு பெரிய உலகத்தை முத்தமிட வேண்டும்...

பாதைகள், பயணங்கள், பாதங்கள் எல்லையற்றவை.’’ ~ பராரிகள்

ஏழு கடல்... ஏழு மலை... - 36

ஜெய்சால்மர் கால்நடைச் சந்தையில் கரியன் மஹராஜோடு பேசிக்கொண்டிருந்தான். மஹராஜ் தனது ஏழு குதிரைகளை விலைபேச யாருமே வரவில்லையென மனவருத்தத்தோடு சொல்லிக்கொண்டிருந்தார். கரியன் மொத்தக் குதிரையையும் தான் விற்றுத் தருவதாக வாக்களித்தான். ராஜவனப்பிலிருக்கும் அந்தக் குதிரைகளை விலைபேச அருகில் வருபவர்களை, ஒரு கும்பல் விரட்டிவிட்டுக் கொண்டிருந்தது. கரியன் அவர்களிடம் பேசப் போனான்.

அந்த கும்பலிலிருந்து ஒருவன் வந்து பேசினான். ``நீ இதுல தலையிடாத. எத்தன வருசமா இவங்க அரண்மனைகள்ல எங்க அப்பன், தாத்தன், பூட்டன்னு தலைமுறை முழுக்க உழச்சி உழச்சி தேஞ்சிருக்கோம் தெரியுமா? இவங்க எங்க குடும்பத்துக்காரங்கள எவ்வளவு கேவலமா நடத்தியிருக்காங்க தெரியுமா? என் குடும்பத்துல எத்தன பேரு நல்ல சாப்பாடு இல்லாம செத்துப் போயிருக்கான்னு தெரியுமா? நாங்க உழைக்கணும். இவனுங்க உக்காந்து திம்பானுங்க. போதாக்குறைக்கு பட்டும் பல்லக்கும் வேற. சாமரம் போட நாலு பேரு, வீட்டுக்கு சாம்பிராணி போட பத்துப் பேரு, கைகால் பிடிக்க பத்துப் பேருன்னு... ப்பா, என்ன ராஜபோக வாழ்க்க. எங்களையெல்லாம் எப்படி நாய் மாதிரி நடத்துனாங்க தெரியுமா? வேண்டாம் போயிடு. இது பல வருஷ வலி. ஒரு காலத்துல எங்க ஆளுங்க கல்யாணத்துக்கு குதிரைல வச்சி மாப்பிள்ளய அழைச்சிட்டு வர்றதுக்கு இவனுங்க என்னமா துள்ளுனாங்க தெரியுமா? குதிரய ராஜவம்சம் தவிர வேற யாரும் வெச்சிக்கக் கூடாதாம். நாங்க சாதாரண மட்டக் குதிரைல ஏறுனாக்கூட இவங்களால தாங்கிக்க முடியாது. ஏன், எங்களுக்கும் குதிரைல ஏறணும்னு ஆச இருக்கக் கூடாதா? இந்த ஊரச் சுத்தி பெரிய பெரிய கோயில் கட்டி வெச்சிருக்காங்களே, இதெல்லாம் யார் கட்டுனது? யார் பணம்? எங்ககிட்ட அநியாயமா வரி போட்டுத்தானே கட்டுனாங்க. கட்டி முடிஞ்சதும் நாங்கெல்லாம் வெளிய போயிரணும். சாமிய சிலையா செஞ்சவனும் அதுக்குப் பிறகு அந்தச் சாமிய பாக்க கோயிலுக்குள்ளே போக முடியாது. இதெல்லாம் இவங்க போட்ட சட்டம்தான? வேணாம். ஒண்ணொண்ணா நினைக்க நினைக்க ஆத்திரமா வருது. நீ கிளம்பு. அந்த ஆளு அப்படியே கிடக்கட்டும். நீ உன் வேலையப் பாரு. இங்க எல்லாருக்குமே அந்தக் குடும்பத்துமேல கோபம் இருக்கு.''

``ஆனா இதுல எதுமே இவர் பண்ணலையே.''

``இவர் பண்ணுனா என்ன, இவரோட அப்பன், தாத்தன் பண்ணுனா என்ன, எல்லாம் அதே குடும்பம்தான. நீ இவனுக்கு வக்காலத்து வாங்க வராத, போயிடு.''

``இந்தக் குதிரையெல்லாம் வித்துத்தான் அவர் மகளுக்குக் கல்யாணம் பண்ணணுமாம். பாவம், விட்டுடுங்களேன்.''

``உனக்கென்ன வந்துச்சி? நீ பாட்டுக்கு உன் வேலையப் பாத்துட்டுப் போயேன். அந்த ஆளு அவன் பொண்ணுக்குக் கல்யாணம் பண்றான், பண்ணாமப் போறான். உனக்கென்ன? கிளம்பு.''

கரியன் அங்கேயே நின்றான். அந்தக் கூட்டத்திலிருந்து வேறு ஒருவன் வந்தான். ``அதான் சொல்றாங்க இல்ல, கிளம்பு. இங்க யாரும் அந்தக் குதிரைங்கள வாங்க வர மாட்டாங்க. இங்க மட்டுமில்ல. இந்த ஊரச் சுத்தி நாப்பது அம்பது மைல் தூரத்துல எந்தச் சந்தைலயும் அவர் இந்தக் குதிரைங்கள வித்துக் காசு பாக்க முடியாது. வேணும்னா ஒவ்வொரு குதிரைக்கும் இருபது ரூபா தாறோம், ஆளுக்கு ஒரு குதிரையா எங்ககிட்டேயே வித்துட்டுப் போகச் சொல்லு.''

``இதெல்லாம் ரெம்ப அநியாயம்ங்க.''

``இந்த ஆளோட குடும்பம் எங்களுக்குப் பண்ணாத அநியாயமா? நீ போ. ஒரு குதிரைக்கி இருபது ரூபாதான் வில. வேணும்னா எங்ககிட்ட வித்துட்டுப் போகச் சொல்லு. இல்லயா, அந்த ஆள இப்படியே பட்டினி கிடந்து சாகச் சொல்லு.''

ஏழு கடல்... ஏழு மலை... - 36

கரியன் பெருமூச்சு விட்டபடியே அங்கிருந்து மீண்டும் மரத்தடிக்கு வந்தான். மஹராஜ் எங்கோ வெறித்துப் பார்த்தபடி புகைபிடித்துக் கொண்டிருந்தார். பார்வையை விலக்காமல் கரியனிடம் கேட்டார்.

``என்ன சொன்னானுங்க, என் குடும்பம் முழுக்க இவங்கள கேவலமா நடத்துனாங்கன்னா? அவங்க சொல்றது உண்மைதான். என் அப்பன், பாட்டன்லாம் அவங்கள அப்படித்தான் நடத்தியிருக்காங்க. தப்புதான். என் பரம்பரைல எல்லாத்துக்கும் அதிகார போதை, ராஜவம்சம்னு செருக்கும் திமிரும்... இந்தா எல்லாம் சரிஞ்சி மண்ணாப் போச்சில்ல. ஒத்த ரொட்டிக்கு இப்படிச் சந்தைல நிக்க வெச்சுடுச்சில்ல. நான் இப்படிப் பிச்சைக்காரனா அழிஞ்சி போறதப் பத்தி ஒண்ணுமில்ல. இவங்க மனசு வெறுத்து விட்ட சாபம். ஆனா இதுல எதுவுமே என் பொண்ணுக்குப் போய்டக்கூடாது. அவ பாவம். அவளுக்கு என்னத் தவிர வேற உலகம் தெரியாது.''

``அவங்க எப்படி தனியா அந்த ஆத்தங்கரை மண்டபத்துல இருப்பாங்க? பேசாம அவங்களக் கூப்பிட்டு வந்து பக்கத்துல வெச்சுக்கோங்க.’’

கரியன் மீண்டுமொருமுறை வேஷ்டியில் முடிந்து வைத்திருந்த தன் சேமிப்புப் பணத்தை எடுத்து மஹராஜிடம் கொடுத்தான். மஹராஜ் இப்போதும் வாங்கிக்கொள்ளவில்லை. ``இருக்குற பாவம் போதும். இந்தப் பாவமும் எனக்கு வேண்டாம். பாவம், நீ எவ்வளவு கஷ்டப்பட்டு எத்தன சந்தைக்கி திரிஞ்சி இந்தப் பணத்த சம்பாதிச்சிருப்ப. நீ பணம் தர வேண்டாம். வேணும்னா இதுல ஒரு குதிரைய நீ எடுத்துக்கோ.’’

``அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். குதிரைய வெச்சி நான் என்ன பண்ணப் போறேன். இந்தப் பணத்த வாங்கிக்கோங்க. உங்க பொண்ணப் போயி முதல்ல பாருங்க. இந்தக் குதிரையை எல்லாம் வேற எங்கயாவது வித்துக்கலாம்.''

``ஆமா, எனக்குத் தெரியும், இவங்க இத வாங்கவும் மாட்டாங்க... வேற யாருக்கும் விக்கவும் விட மாட்டாங்க. பணத்த உள்ள வை. வேணும்னா கேட்டுக்குறேன்.''

``ம்.''

``சரி, நீயும் என்னோட வா.''

``நான் எதுக்கு?’’

``நீதான இந்தக் குதிரையை எல்லாம் வித்துத் தாரேன்னு சொன்ன, இப்போ வரலன்னு சொல்ற?''

கரியன் மறுபேச்சில்லாமல் அவரோடு நடந்தான்.

செல்லும் வழியெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தார். ``பக்கத்துல வேற எங்க குதிர சந்தை நடக்கும்? எப்படியாவது இந்தக் குதிரைகள வித்து என் பொண்ணுக்குக் கல்யாணத்த முடிச்சிடணும். நாம ஒரு காலத்துல ராஜா வீட்டு வாரிசுன்னா இப்போ வரதட்சண கேக்க மாட்டாங்களா என்ன?''

கரியன் வெறுமனே ``ம்'' கொட்டிக்கொண்டே வந்தான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 36

தூரத்தில் கதிசார் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் சிறிய சிறிய கல்மண்டபங்கள். அவற்றின் மேலே கிண்ணங்களைக் கவிழ்த்து வைத்தது போல கல் கூம்புகள். அவற்றின் விளிம்புகளில் தாமரை இதழ்கள் விரிந்து கீழ்நோக்கி வழிந்திருப்பது போன்ற ஓரங்கள். அவற்றில் ஒரு மண்டபத்தைக் கூர்ந்து கவனித்தவாறு மஹராஜ் நடந்தார். மண்டபத்தில் யாரும் தென்படவில்லை. குதிரையின் சேணக் கயிற்றைக் கரியனிடம் கொடுத்துவிட்டு வேக வேகமாக மண்டபத்தை நோக்கி ஓடினார். மண்டபத்தின் அருகில் வர வர அவருக்கு பயம் கவ்விக்கொண்டது. மஹராஜின் மகளைக் காணவில்லை. மண்டபத்தைக் கடந்து ஆற்றுப் பக்கமாய்ப் போய்ப் பார்த்தார். கரியன் அதற்குள் அங்கு வந்து சேர்ந்தான். கண்கள் கலங்க பதற்றத்துடன் நிற்கும் மஹராஜின் தோளில் கைவைத்து ஆற்றின் வடக்கு திசையை நோக்கிக் கை காண்பித்தான். தூரத்தில் புள்ளியாய் ஒரு பெண் வந்துகொண்டிருந்தாள். மஹராஜ் ஓரிரு நொடிகள் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு தன் மகள் என்பதை நிச்சயம் செய்துவிட்டு அந்தப் பெண்ணை நோக்கி ஓடினார். அந்தப் பெண்ணும் அவரை நோக்கி வேகமாக ஓடி வந்தாள். அவள் கைகளில் சிறு சிறு சுள்ளிகளும், கொஞ்சம் காட்டுக்கீரைகளும் இருந்தன. மஹராஜ் அதைக் கைகளில் வாங்கிக்கொண்டார். தன் மகளிடம் சைகையால் `உன்னைக் காணாமல் பதறிப் போனேன்’ என்று சொன்னார். அந்தப் பெண் சிறு புன்னகையுடன் தன் தந்தையின் கைகளை ஆறுதலாகப் பற்றிக்கொண்டாள்.

இருவரும் மண்டபத்துக்கு வந்தார்கள். மஹராஜின் மகள் கரியனைப் பார்த்ததும் சிறியதாய் மருண்டாள். கரியன், மருண்ட முகத்தோடு கூடிய அந்தப் பெண்ணை ஆச்சர்யமும் பிரயாசையுமாய் மெய்மறந்து பார்த்தான். பிரகாசமாய் அவ்வளவு ஒளிகூடிய முகத்தை இதற்கு முன் அவன் பார்த்ததேயில்லை. மஹராஜ் கரியனை சைகையின் மூலம் அறிமுகப்படுத்தினார். கரியனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது. அந்தப் பெண்ணுக்குக் கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லையென்பது. கரியனைக் காட்டி ‘இவன் சந்தையில் தனக்கு பெரிதும் ஆறுதலாகவும் உதவியாகவுமிருந்தான்’ என்று மஹராஜ் சொன்னார். அந்தப் பெண் தன் சேலையை முக்காடிட்டு கரியனை நோக்கிக் கும்பிட்டாள். குதிரைகள் ஆற்றின் ஓரம் புற்களை மேயத் துவங்கின. அந்த இடத்தில் சமைக்கவும், நீர் எடுக்கவுமென இரண்டு மண்பாத்திரங்கள் மட்டுமேயிருந்தன. கரியன் ஆற்றில் இறங்கிக் குளிக்கத் துவங்கினான்.

மஹராஜ் எங்கேயோ கிளம்பிச் சென்று கொண்டிருந்தார். கரியன் ஆற்றில் நெடுநேரம் குளித்தான். குதிரைகளை ஒவ்வொன்றாய் தேய்த்துக் குளிப்பாட்டினான். ஆறாவது குதிரையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது தூரத்தில் மஹராஜ் தள்ளாடித் தள்ளாடி வருவதைப் பார்த்தான். மண்டபத்திலிருந்து மஹராஜின் மகளும் அதைப் பார்த்தாள். ஒரு கட்டத்தில் மஹராஜ் பொத்தெனக் கீழே விழுந்தார். கரியன் அவரை நோக்கி ஓடினான். பின்னாலேயே அந்தப் பெண்ணும் நீர் நிறைந்த பானையைத் தூக்கியபடி நீர் ததும்பத் ததும்ப ஓடிவந்தாள்.

கரியன் அவரைத் தூக்கி, தன் மடியில் கிடத்தி வைத்தான். கீழே விழுந்ததில், கல்லில் முகம் அடிபட்டதால் மூக்கும் வாயும் உடைந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. ரத்த வாடையைத் தாண்டியும் அவரின் முகத்திலிருந்து சாராய நெடி தூக்கலாய் வந்தது. மஹராஜின் மகள் அழுதபடி அவரின் முகத்தை நீரால் கழுவினாள். ரத்தம் செந்நீராய் விழுந்தது. வெயில் சுள்ளென அடித்தது. கரியன் அவரைத் தன் தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு மண்டபத்தை நோக்கி நடந்தான். மண்டபம் முழுக்க ரத்தம் சொட்டுச் சொட்டாய் விழத்துவங்கியது. கரியன் தன் துண்டை நீரில் துவைத்து அவர் முகத்தைத் துடைத்தெடுத்தான்.இப்போது ரத்தம் நீங்கி முகம் தெரிந்தது. கீழ் உதடு வெட்டிப் பிளந்திருந்தது. மூக்கிலிருந்தும் ரத்தம் வந்துகொண்டிருந்தது. கரியன் ஈரத்துணியைக் காயத்தில் வைத்துச் சிறிதுநேரம் பிடித்துக் கொண்டி ருந்தான்.

மஹராஜ் குடிபோதையில் புலம்பத் துவங்கினார். அழத் துவங்கினார். எல்லாமுமே அவரின் மகள் குறித்த கவலையாகவே இருந்தது. போதையின் மயக்கத்தில் சிறிது நேரத்தில் அப்படியே உறங்கத் துவங்கிவிட்டார். மாலை இருளத் துவங்கியதும் மெல்ல எழுந்தவரை கரியன் உணவிட்டு சாப்பிட வைத்தான். அவரின் கீழ் உதட்டுக் காயத்தில் பட்டுவிடாமல் மெதுவாக ஊட்டி விட்டான். மஹராஜின் மகள் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவர் சாப்பிட்டுவிட்டு கரியனை அருகிலிருக்கும் மண்டபத்தில் போய்ப் படுத்துக்கொள்ளச் சொன்னார், ``இன்னிக்கி இரவெல்லாம் என் மகளிடம் நான் பேச வேண்டும் போலிருக்கிறது. நீ அங்கே போய்ப் படுத்துக்கொள்.’’

கரியன் அருகிலிருக்கும் வேறொரு மண்டபத்தில் போய்ப் படுத்துக்கொண்டான். மஹராஜும், அவரின் மகளும் இரவெல்லாம் சைகையில் பேசிக்கொண்டேயிருந்தார்கள். அந்தப் பௌர்ணமி நாளில் எப்போது வரை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்களெனத் தெரியாது. ஆற்றின் குளுமையான காற்று உடலில் பட்டு கரியன் வேகமாகவே உறங்கிவிட்டான்.

அதிகாலை நான்காம் ஜாமத்தில் எங்கோ குதிரைகள் கனைக்கும் சத்தம் கேட்டு கரியன் விழித்துப் பார்த்தான். நான்கு குதிரைகள் இவன் அருகில் நின்று ஓய்வில்லாமல் கனைத்தன. ஒரு குதிரை மஹராஜ் இருக்கும் மண்டபத்தில் நின்றுகொண்டிருந்தது. இரண்டு குதிரைகள் ஆற்றின் கரையில் நின்றபடியும், மருண்டு மருண்டு ஓடியபடியும் இருந்தன. கரியன் ஒன்றும் புரியாமல் மஹராஜ் இருக்கும் மண்டபத்தை நோக்கி வந்தான். அங்கு மஹராஜ் இல்லை. அவரின் மகள் அமைதியான முகத்தோடு உறங்கிக்கொண்டிருந்தாள். குதிரைகள் ஆற்றை நோக்கிக் கரியனை அழைத்தன. கரியனுக்கு ஒன்றும் புரியவில்லை. குதிரைகள் ஆற்றுக்குள் இறங்குவதும், நீரிலிருந்து மேலேறுவதுமாயிருந்தன. அவற்றின் கண்களில் தெரிந்த பெரிய பதற்றம் கரியனைக் குழப்பத்திற்கு உள்ளாகியது. நிலவு மேற்கு நோக்கி இறங்கத் துவங்கியிருந்தது. பௌர்ணமி நிலவில் ஆறு வெண்மையாய் ஜொலித்தது. கரியன் ``மஹராஜா’’ என எல்லாத் திக்குகளுக்கும் கூவிக் கூவி அழைத்தான். குதிரைகள் இன்னும் ஆற்றைநோக்கி மிரண்ட விழிகளால் நிலைகொள்ளாமல் கனைத்தன. குதிரைகளின் பார்வை போகும் திசை நோக்கித் தன் பார்வையைச் செலுத்தினான். ஆற்றின் நடுவே சிறு மண் திட்டிலிருக்கும் இலையெல்லாம் உதிர்ந்த மொட்டை மரத்தில் யாரோ தொங்குவது போலிருந்தது. கரியன் இன்னும் உற்றுப் பார்த்தான். நிலவின் முழுவட்டம் அந்த மரத்தின் பின்னால் சரியாக இறங்கி நிற்க, அந்த முழுவட்டத்தின் நடுவே மஹராஜ் கழுத்தில் சுருக்கிட்டு மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தார்.

கரியன் மஹராஜின் மகளை உசுப்பி எழுப்பி அதைக் காண்பித்தான். அந்தப் பெண் கதறி அழத்துவங்கினாள். அந்த ஜாமத்தின் ஒற்றைக் குரலாய் அவளின் பலத்த அழுகை மட்டும் இருந்தது. கரியனுக்கு என்னவோ போலிருந்தது. பொழுது விடியத் துவங்கியதும் கரியன் ஆற்றுக்குள் இறங்கி அவரின் உடலை எடுத்து வந்து தரையில் கிடத்தினான். அந்தப் பெண் மேலும் கதறி அழத் துவங்கினாள். கரியன் அருகிலிருக்கும் பெரிய பெரிய மரக்கட்டைகளை எடுத்து வந்து அங்கு குமித்து, அவரின் உடலை மேலே வைத்து எரியூட்டினான். இரவுவரை கட்டைகளும் உடலும் எரிந்தன. உறவுகள் யாருமே இல்லாத மஹராஜின் மகள் அந்தத் தீயை இமைகொட்டாமல் உறைந்து பார்த்தபடியே இருந்தாள். அடுத்த நாள் காலை கரியன் எழுந்து பார்த்தபோதும் அவள் அப்படியே உறைந்து, சாம்பலிலிருந்து வரும் சிறிய புகையைப் பார்த்தபடியிருந்தாள். கரியன் அவள் முன் வந்து நின்றபோது அவள் அவனை ``இங்கிருந்து போ'' என்று சைகையால் சொன்னாள். கரியன் மறுத்துத் தலையாட்டிவிட்டு அங்கேயே அவள் முன்னால் நின்றான். அவள் விம்மி அழத் துவங்கினாள். கரியன் அழாதே அழாதே என்பது போல் சைகை செய்துவிட்டு `உன்னத் தனியா விட்டுட்டுப் போகமாட்டேன்’ என்றும் `நீ இல்லாமல் இங்கிருந்து போக மாட்டேன்’ என்றும் சைகையால் சொன்னான். மஹராஜின் மகள் மறுத்துத் தலையாட்டிவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தாள். கரியனும் அவளின் எதிரே அப்படியே அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் ஏதோ முடிவு செய்தவளாக மண்டபத்திலிருந்து இறங்கி வந்தாள். `வா, இங்கிருந்து கிளம்பலாம்’ என்பதுபோல சைகை செய்தாள். கரியன் ஏழு குதிரைகளையும் அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான். இந்த நாட்டின் கடைசி ஊரிலிருக்கும் தன் கடைசி வீட்டிற்கு அந்தப் பெண்ணை அழைத்துப் போகத் தீர்மானித்துவிட்டான்.

அவனுக்கு இறுதிவரை அந்தப் பெண்ணின் பெயர் தெரியவில்லை.

ஏழு கடல்... ஏழு மலை... - 36

மகன் வழி (1978 - முதுவேனிற்காலம்)

‘`நீ எழுந்து, தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ அம்மட்டும் நடந்து திரி.’’ ~ ஆதியாகமம் 13:17 (விவிலியம்)

லேயா இந்தியாவின் முதல் வீடான தன் வீட்டின் முன் நின்று தன் அம்மாவை அழைத்துப் பார்த்தாள். உள்ளிருந்து எந்த எதிர்க்குரலுமில்லை. லேயாவிற்கு சந்தேகமாயிருந்தது. மரக்கதவைத் தள்ளிப்பார்த்தாள். கதவு திறந்துகொண்டது. அவளின் அம்மா படுக்கையறையில் இல்லை. சமையற்கட்டிலும் இல்லை. அந்தச் சிறிய வீட்டில் அம்மா வேறு எங்கேயும் போயிருக்க வாய்ப்பில்லை. சமையற்கட்டில் சூடான மூங்கில் அரிசிக் கஞ்சி கொதித்துக்கொண்டிருந்தது. லேயாவிற்கு அந்தக் கஞ்சி மிகவும் பிடிக்கும். சிவந்து பழுத்த மிளகாய்களை அதில் நறுக்கிப் போட்டுக் கொதியூட்டி, அதன்மேல் வெங்காயப்புற்களை அரிந்து போட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். லேயாவிற்கு சட்டென யோசனை வந்தது. வீட்டின் பின் பக்கம் போய்ப் பார்த்தபோது லேயாவின் அம்மா வெங்காயப் புற்களைப் பிடுங்கிக் கொண்டிருந்தாள். லேயா அவளைக் கட்டிக்கொண்டாள்.

‘`நீ வருவன்னு தோணிக்கிட்டே இருந்துச்சி. அதான் உனக்குப் பிடிச்ச கஞ்சி பண்ணினேன். நீ வராட்டினாலும் எனக்கு உன் நினைப்பு வரும்போதெல்லாம் இந்தக் கஞ்சி பண்ணிக் குடிச்சிப்பேன்.’’

லேயா தன் அம்மாவின் உடல்நிலை குறித்துக் கேட்டுக்கொண்டாள். இருவரும் ஒன்றாய் அமர்ந்து கஞ்சி குடித்தார்கள். இருவர் குடித்தும் தீராத அந்தக் கஞ்சிப் பாத்திரத்தில் நிறைய மிஞ்சியிருக்கும் கஞ்சியை சந்தேகத்துடன் பார்த்தாள். லேயாவின் அம்மா ஒவ்வொரு வயிற்றையும் நன்கு அறிந்தவள். சிறு அளவுகூட உணவை வீணாக்காதவள். அவளுக்கு ஒவ்வொரு வயிற்றின் அளவும், நாக்கின் ருசியும் தெரியும்.

லேயாவின் அம்மா சிரித்தபடியே சொன்னாள், ‘`எனக்கு என்னவோ இன்னிக்கி வேற யாரோ ஒருத்தர் நம்ம வீட்டுக்கு வருவாங்கன்னு தோணுது.’’

இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊரே உறங்கிவிட்டது. லேயாவும் உறங்கிவிட்டாள். உறங்கிப் பல வருடங்களான அவள் அம்மா, இன்னும் உறங்காமல் படுக்கையில் வெறுமனே படுத்துக்கொண்டு கண்களை சும்மா மூடியிருந்தார். யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ஒரு நிமிடம் காற்றில் அமைதியாகக் கூர்ந்து கவனித்தார். சிறிய இடைவெளி விட்டு மீண்டும் மரக்கதவைத் தட்டும் சத்தம். இப்போது லேயா விழித்துப் பார்த்தாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

லேயா ``வெளியே யாரு’’ எனக் குரல் கொடுத்தாள். வெளியிலிருந்து பதில் குரல் வந்தது. லேயாவிற்கும், அவள் அம்மாவிற்கும் ஏற்கெனவே பழக்கப்பட்ட குரல். லேயா போய் கதவைத் திறந்தாள். அங்கு கையில் விளக்கை ஏந்தியபடி அவர்களுக்கு நன்கு தெரிந்த வயதான ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

‘`உன் வீட்டத் தேடி ஒருத்தர் வந்திருக்காரும்மா’’ அவர் தன் கையிலிருந்த கைவிளக்கைத் தூக்கி அவன் நிற்கும் இடத்திற்கு நீட்டினார். லேயாவிற்குக் குழப்பமாய் இருந்தது. தன்னைத் தேடி ஒரு புதிய மனிதன் வந்திருப்பதைப் பார்த்துக் குழப்பமடைந்தாள்.

சூரன், தான்தான் இந்த நாட்டின் கடைசி ஊரின் கடைசி வீட்டிலிருந்து வந்தவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். லேயாவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது. அவனை உள்ளே அழைத்தாள். லேயாவின் அம்மா அந்தக் கஞ்சியை சூரனுக்கு சூடு செய்து கொடுத்தாள்.

‘`இந்த நாட்டோட முதல் வீட்ல யார் வாழறாங்க, அவங்கள பாத்திடணும்னு எனக்கு ரெம்ப நாள் ஆச. அதான் தேடி வந்தேன்’’ என்றான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 36

லேயாவிற்கு தன்னைப் போலவே ஒருவனைக் கண்டதில் ஆச்சர்யம் தாங்கவில்லை. ‘`நானும் இந்த நாட்டோட கடைசி வீட்டையும், அதுல யார் இருக்காங்கன்னும் பாக்குறதுக்கு ரெம்ப ஆசப்பட்டேன்.’’

இருவரும் இரவெல்லாம் பேசிக்கொண்டே யிருந்தார்கள். லேயாவின் அம்மா அவர்களுக்கு இரவெல்லாம் கறுப்புத் தேநீர் வைத்துக் கொண்டேயிருந்தாள். கூடவே ஒரு நீண்ட பயணத்திற்காகத் தன் மகளின் உடைகளையும் எடுத்து வைக்கத் துவங்கினாள்.

~ முற்றும்