
‘மார்ஜின் சிறுசு, லாபம் பெருசு’ என்கிற ஃபார்முலாவைக் கையில் எடுத்தது சீரம். எல்லாத் தடுப்பூசிகளையும் குறைவான விலையில் தயாரித்தது
கோவிஷீல்டு தடுப்பூசிகளின் விலையேற்றம் முதல் அதன் சிஇஓ அடர் பூனாவாலாவுக்கு மத்திய அரசு Y பாதுகாப்பு வழங்கியிருப்பது வரை, இந்தியாவின் தற்போதைய வைரல் வார்த்தை ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ தான். 1946-ல் அடர் பூனாவாலாவின் தாத்தா சோலி பூனாவாலா பந்தயக் குதிரைகளுக்கு என்று பிரத்யேகமாகப் பண்ணை ஒன்றை உருவாக்குகிறார். வெறும் 12 குதிரைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பண்ணைதான் தற்போது உலகளவில் 369 பதக்கங்களைக் குவித்து நம்பர் ஒன்னில் இருக்கிறது.

இந்தியாவின் ஆறாவது பணக்காரரான சைரஸ் பூனாவாலாதான் (அடரின் தந்தை) சீரம் இன்ஸ்டிட்யூட்டின் தலைவர். நம்ம ஸ்டேட்டஸுக்கு இனி குதிரைப் பந்தயம் மட்டும் போதாது என நினைத்தவர் 1966-ல் 12,000 அமெரிக்க டாலர் செலவில் சீரம் இன்ஸ்டிட்யூட்டை உருவாக்குகிறார். சீரம் இன்ஸ்டிட்யூட் பெயருக்குப் பின்னும் சுவாரஸ்யமான கதை உண்டு. பந்தயங்களில் ஓடி முடித்து ஓய்வு பெற்ற குதிரைகளை மும்பையின் ஹாஃப்கின் இன்ஸ்டிட்யூட்டுக்கு தானம் தருவது பூனாவாலாக்களின் வழக்கம். குதிரையின் சீரத்திலிருந்து ஹாஃப்கின் இன்ஸ்டிட்யூட் தடுப்பூசிகளைத் தயாரித்து வந்தது. டிப்தீரியா, டெட்டனஸ், ஸ்கார்லெட் காய்ச்சல் போன்றவற்றுக்கான தடுப்பூசிகள் குதிரை சீரத்திலிருந்துதான் உருவாக்கப்படுகின்றன. ஒருமுறை பண்ணையில் இருக்கும் ஒரு குதிரையைப் பாம்பு கடித்துவிட, அதற்கான மருந்து ஹாஃப்கினில் இருந்து வரத் தாமதமாகியிருக்கிறது. குதிரையையும் காப்பாற்ற முடியவில்லை.

அப்போதுதான் ‘நாமளே ஓனராகிட்டா’ என்கிற ஐடியா சைரஸ் பூனாவாலாவுக்கு வந்தது. பண்ணையிலேயே சிறிய அளவிலான பரிசோதனைக் கூடம் அமைத்து டெட்டனஸ் தடுப்பூசியை 1967-ல் உருவாக்கினார். 1980களின் பிற்பகுதியில் சீரத்துக்கு ஐக்கிய நாடுகளுக்குத் தடுப்பூசிகள் அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கிறது. அதன்பின் இன்று வரையில் பூனாவாலாக்களுக்குத் தொழிலில் ஏறுமுகம்தான். 1998-ல் தட்டம்மைத் தடுப்பூசிகளை நூறு நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்தது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்துக்கும் (UNICEF) சீரம்தான் தடுப்பூசிகளின் சப்ளையர். உலகின் மூன்றில் இரண்டு குழந்தைகளின் உடலில் சீரம் தடுப்பூசிகள் உண்டு.

‘மார்ஜின் சிறுசு, லாபம் பெருசு’ என்கிற ஃபார்முலாவைக் கையில் எடுத்தது சீரம். எல்லாத் தடுப்பூசிகளையும் குறைவான விலையில் தயாரித்தது. உலக அளவிலேயே குறைவான விலை என்பதால், உலக அளவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளும் சீரத்துடையதுதான். தட்டம்மை, டிப்தீரியா, டெட்டனஸ், ஹெப்பாட்டிடீஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு சீரம்தான் தீர்வு என்னும் நிலையை இத்தனை ஆண்டுகளில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் எனச் சொல்லிவிட்டு, இப்போது மக்கள் நலனுக்காக 300 ரூபாய் என்கிறார் அடர். 150 ரூபாய்க்கு கோவிஷீல்டை விற்றபோதே, அதில் எங்களுக்கு லாபம் இருந்தது எனப் பேட்டியளித்தவர் அடர். இதைக் கேள்வி கேட்க வேண்டிய மத்திய அரசுதான் தற்போது அடரின் பாதுகாப்புக்காக Y பாதுகாப்பு வழங்கி வரவேற்றிருக்கிறது. சீன, ரஷ்யாக்களின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக அமெரிக்காவும் சீரத்துக்குப் பச்சைக் கொடி காட்டிவருகிறது.

குதிரைப் பந்தயம், தடுப்பூசிகள் மட்டுமே பூனாவாலாக்கள் அல்லர். ஆடம்பரக் கார்களை வாங்கிக் குவிப்பதிலும் பூனாவாலாக்கள் நம்பர் ஒன். அடர் தன் மகனுக்கு வாங்கிக்கொடுத்த பேட்மொபைல் கார் அதன் ஹைலைட். ஃபெராரி, லம்போகினி, பென்ட்லி, மெர்சிடீஸ் என உலகின் டாப் நிறுவனங்களின் ரேர் பீஸ் எங்கு விற்றாலும், அதை வாங்கிவிடுவார்கள். அப்படித்தான் லிங்கன் ஹௌஸ் என்னும் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள மாளிகையையும் வாங்கிப்போட்டார்கள்.

‘‘சீரம் இன்ஸ்டிட்யூட் இந்தியாவில் இருப்பது, இந்தியாவுக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியம்’’ என்கிறார் உலக வங்கியின் தலைவர். உலக வங்கி முதல் நம்மூர் பாலிவுட் வரை எல்லோரின் குட் புக்கிலும் இருக்கும் ஒரு பெயர் பூனாவாலா. அல்லது இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், எல்லோரும் பூனாவாலாக்களின் குட் புக்கில் இருக்கவே ஆசைப்படுகிறார்கள். ஏழை எளிய மக்களுக்கான கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கு உதவுபவர் எனச் சொல்லப்பட்டாலும், அடர் பூனாவாலாவின் மனைவி நடாஷா ஃபேமஸ் ஆனது எல்லாம் அவர் பாலிவுட்டுக்குத் தரும் பார்ட்டிகளில்தான். கட்டுரையின் ஆரம்பத்தில் இந்தியாவின் ஆறாவது பணக்காரராக இருந்த சைரஸ், எப்படியும் அடுத்த ஆண்டு முன்னேறியிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.