
கூத்துக்கலைஞனுக்கு கேமரா முன்னாடி பயம் கிடையாது. முதல் படம் என் மகன் இயக்கத்துல நடிச்சதாலேயும் அதுல கூத்துக்கலைஞரா நடிச்சதாலேயும் எளிதா நடிச்சிட்டேன்.
‘சேத்துமான்’ படத்தில் எதார்த்த்தில் மிளிரும் பூச்சி என்னும் பாத்திரமாக மாறிப்போன மாணிக்கம் ஒரு கூத்துக்கலைஞர், ‘வெங்காயம்’ திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் தந்தை.
“என் மகன் இயக்கின ‘வெங்காயம்’ படத்துல கூத்துக்கலைஞரா நடிச்சிருந்தேன். அந்தப் படம் பார்த்துட்டுதான் இயக்குநர் தமிழ் சார் என்னை நடிக்கக் கூப்பிட்டிருந்தார். என்னை நேர்ல சந்திச்ச அவர், அப்பவே கையோடு ‘சேத்துமான்’ படத்தோட ஸ்கிரிப்ட்டையும் கொடுத்துட்டார். ‘இதைப் படிச்சு உள்வாங்கிக்குங்க... கொஞ்சம் தாடி வளர்க்கணும்’னு சொன்னார். முதல் முறை இந்தக் கதையை முழுவதும் படிச்சதும், ‘இதுல நடிக்கற அளவுக்கு நமக்கு என்ன இருக்குது’ன்னு ஒரு சந்தேகம் வந்திடுச்சு. மறுபடியும் கதையைப் படிச்சேன். அப்பதான் இதுல சமுதாயத்துக்குத் தேவையான கருத்துகள் இருந்ததை உணர்ந்தேன். சாப்பாட்டில்கூட ஜாதி இருக்கிறதை அழுத்தமாச் சொல்ற கதைன்னு புரிஞ்சது. சென்னைக்குக் கூப்பிட்டு ஒத்திகை பார்த்தாங்க. அதன் பிறகுதான் நாமக்கல் பக்கம் எருமப்பட்டிக்கு படப்பிடிப்பு கிளம்பினோம். படத்துக்கு இப்படி ஒரு பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கறது சந்தோஷமா இருக்கு. நான் எதிர்பார்க்கவே இல்ல. இப்படி ஒரு படத்தைக் கொடுத்த தமிழ் சாருக்கும் தயாரிப்பாளர் இரஞ்சித் சாருக்கும் நன்றி சொல்லிக்கறேன்.’’

``நீங்க பரம்பரை தெருக்கூத்துக் கலைஞர்... கூத்துக்கான வரவேற்பு இப்ப எப்படியிருக்கு?’’
‘‘என்னோட முழுப்பெயர் சங்ககிரி முத்துசாமி மாணிக்கம். எங்க தாத்தா, அப்பா முத்துசாமின்னு நாங்க பரம்பரையாகவே தெருக்கூத்துக் கலைஞர்கள். எங்க அப்பா காலத்துல கூத்துக்குப் பெரும் மதிப்பு இருந்துச்சு. விடியவிடிய அவர் கூத்தைப் பார்த்து ரசிப்பாங்க. அவருக்குக் கிடைச்ச மதிப்புல நானும் கூத்துக்கலைஞன் ஆனேன். ஆனா என் காலத்துல கூத்துக்கான மதிப்பு குறைய ஆரம்பிச்சது. தொண்ணூறுகள்ல கிராமப்புறங்கள்ல ‘ஆடல் பாடல்’ நிகழ்ச்சிகள் வந்த பிறகு தெருக்கூத்து தேய ஆரம்பிச்சது. அப்புறம் நான், மேடை நாடக நடிகரானேன். எட்டு நாடகங்கள் எழுதினேன். சங்ககிரி பகுதிகள்ல நாடகங்களும் போட்டுட்டு இருந்தேன்.
எங்க தாத்தா காலத்துல கூத்து ஆடும்போது, அன்னிக்குப் பத்து ரூபா வருமானம் கிடைக்கும். அதை வச்சுதான் குடும்பம் குழந்தைகளைப் படிக்க வச்சு, வாழ வச்சாங்க... என் காலத்துல ஒரு கூத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய் கிடைச்சது. ஆனா, வருஷத்துக்கு அதிகபட்சம் 30 கூத்துதான் போட முடியும். அதுல கிடைக்கற அறுபதாயிரத்தை வச்சு வருஷம் முழுவதும் குடும்பம், குழந்தை குட்டிகளை கவனிக்கறது சிரமம். அதனால கூத்துக்கலைஞர்கள் கூலி வேலை, விவசாய வேலைகளுக்குப் போவாங்க. இப்ப தெருக்கூத்து மேல கல்லூரி மாணவர்கள் ஆர்வம் காட்டுறது சந்தோஷமா இருக்கு.”

``தெருக்கூத்து, மேடைநாடகங்கள் உங்களுக்கு எளிதா கைகூடியிருக்கும். சினிமாவுக்கும் அப்படி இருந்துச்சா?’’
‘‘கூத்துக்கலைஞனுக்கு கேமரா முன்னாடி பயம் கிடையாது. முதல் படம் என் மகன் இயக்கத்துல நடிச்சதாலேயும் அதுல கூத்துக்கலைஞரா நடிச்சதாலேயும் எளிதா நடிச்சிட்டேன். அதன்பிறகு ‘நெடும்பா’ ‘பயாஸ்கோப்’னு படங்கள் பண்ணியிருந்தாலும், என் நடிப்பில் வெளியான இரண்டாவது படம் ‘சேத்துமான்’தான். இந்தப் படம் பார்த்துட்டு அடுத்து நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. ஒரு கூத்துக்கலைஞனா என்னால் சினிமாவில் உணர்ச்சிகளை நல்லா வெளிக்காட்டி நடிக்க முடியும்னு நம்புறேன்.”