கட்டுரைகள்
Published:Updated:

ஒரே இரவில் ஏழு வழிப்பறி... கஞ்சா போதையில் வெறியாட்டம்!

கஞ்சா போதையில் வெறியாட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கஞ்சா போதையில் வெறியாட்டம்!

பைக்குலயே ஊர் ஊரா சுத்துறது தான் எங்க பொழுதுபோக்கு. ஜாலியா சுத்துவோம். பெட்ரோல் போட பணமில்லை. அதனாலதான், லைட்டா கஞ்சா போதையை ஏத்திக்கிட்டு வழிப்பறியில இறங்குனோம்.

தமிழகத்தில் கஞ்சா போதையில் அரங்கேறும் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ‘கஞ்சா வேட்டை 1.0, 2.0’ என்று வெர்ஷன்களை அடுக்கி தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், கஞ்சா விற்பனையும் குற்றங்களும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில் வழிப்பறி செய்த சம்பவம், காஞ்சிபுரம் நகரையே குலைநடுங்க வைத்திருக்கிறது!

ஒரே இரவில் ஏழு வழிப்பறி... கஞ்சா போதையில் வெறியாட்டம்!

காஞ்சிபுரம் குள்ளப்பன் நகர்ப் பகுதியில் விமல் என்பவர் சிறிய பெட்டிக்கடை நடத்திவருகிறார். கடந்த டிசம்பர் 21-ம் தேதி இரவு 9 மணிக்கு, கஞ்சா போதையில் அவர் கடைக்கு வந்த மூன்று இளைஞர்கள், பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி, கடையிலிருந்த பணம், விமலின் செல்போன் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பியிருக்கிறார்கள். இந்த கஞ்சா போதைக் கும்பல், வரதராஜ பெருமாள் கோயில் மாடவீதி, சுண்ணாம்புக்காரத் தெரு, சுங்கச்சாவடி, தேனம்பாக்கம் ஏரியாக்களில் அடுத்தடுத்து ஏழு கடைகளில் பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்திருக்கிறது. பணம் தர மறுத்தவர்களைச் சரமாரியாக வெட்டி பணம், செல்போனைப் பிடுங்கியும் சென்றிருக்கிறார்கள்.

Iதினேஷ்குமார்
Iதினேஷ்குமார்

இவர்களின் காட்டுமிராண்டித்தனத்தில் பொதுமக்களும் தப்பவில்லை. தன் மகளை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காகச் சேர்த்துவிட்டு, சாப்பாடு வாங்க வெளியே வந்த தயாளன் என்பவர், மருத்துவமனை வாசலிலேயே போதைக் கும்பலால் வெட்டப்பட்டார். அவரிடமிருந்த செல்போன், பணத்தைப் பறித்துச் சென்றது இந்தக் கும்பல். வெட்டுக் காயங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்குப் பொதுமக்கள் அடுத்தடுத்து படையெடுக்கவும், நகரமே பரபரப்பானது. அவர்களுடைய உறவினர்களும் சூழ்ந்ததால், பதற்றம் தொற்றிக்கொண்டது.

சம்பவ இடங்களுக்கு விரைந்த போலீஸார், விமலின் கடையருகே கிடைத்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், டோல்கேட் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவனும், அவனுடன் மூன்று சிறுவர்களும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்திய போலீஸ், வழிபறியில் ஈடுபட்ட அந்த நான்கு பேரையும் கைது செய்திருக்கிறது. இந்த போதைக் கும்பலுக்கு தினேஷ்குமார்தான் தலைமை தாங்கியிருக்கிறான்.

ஒரே இரவில் ஏழு வழிப்பறி... கஞ்சா போதையில் வெறியாட்டம்!

போலீஸ் விசாரணையில், “பைக்குலயே ஊர் ஊரா சுத்துறது தான் எங்க பொழுதுபோக்கு. ஜாலியா சுத்துவோம். பெட்ரோல் போட பணமில்லை. அதனாலதான், லைட்டா கஞ்சா போதையை ஏத்திக்கிட்டு வழிப்பறியில இறங்குனோம். எங்க வெட்டுனோம், எவ்வளவு பேரை வெட்டுனோம். எவ்வளவு பணம் பறிச்சோம்னே தெரியலை” என்றிருக்கிறான் தினேஷ். போலீஸார் பிடிக்கும்போது, தினேஷ்குமார் கீழே விழுந்ததால், கையில் பலத்த அடிபட்டிருக்கிறது. அவனுக்கு மாவுக் கட்டுப்போட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யிருக்கிறார்கள் போலீஸார்.

காஞ்சிபுரத்தில், கஞ்சா போதையால் குற்றச் சம்பவங்கள் நிகழ்வது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இரவு 9 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் தைரியமாக வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் செய்யும் தகராறால், வணிகர்களும் வியாபாரிகளும்கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதே போன்ற கொடூரச் சம்பவம் மீண்டுமொரு முறை நடப்பதற்குள், காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையை போலீஸ் முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டுமென்பதே பொதுமக்களின் வேண்டுகோள்.

ஆக்‌ஷனில் இறங்குமா காஞ்சி காவல்துறை?