அரசியல்
அலசல்
Published:Updated:

கழிவுநீர்த் தேக்கமான காகுப்பம் ஏரி... களமிறங்கிய கலெக்டர்! - ஜூ.வி ஆக்‌ஷன்

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தபோது....
பிரீமியம் ஸ்டோரி
News
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தபோது....

காகுப்பம் ஏரியில் மட்டுமல்லாமல் ஓடையின் வழியாக பொய்யப்பாக்கம் ஏரிக்கும் கழிவுநீர் செல்வதால், அதுவும் பாழாகிவிட்டது.

விழுப்புரம் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், காகுப்பம் ஏரி கழிவுநீர்த் தேக்கமாக மாறியதுடன், விவசாயமும் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இது குறித்து காகுப்பம் ஏரி பாதுகாப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த அகிலன், பாபு, செந்தில் ஆகியோர் நம்மிடம் பேசுகையில், “இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் ஏழு லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, அருகிலிருக்கும் காகுப்பம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. சுத்திகரிப்பு நிலையத்தின் இயந்திரங்கள் இரண்டு வருடங்கள் மட்டுமே நன்றாக இயங்கின. பின்னர் ஒவ்வொன்றாகப் பழுதடைய ஆரம்பித்ததால், கழிவுநீரைச் சுத்திகரிக்காமலேயே காகுப்பம் ஏரியில் விட்டார்கள். இதனால் ஏரியே சாக்கடை நீர்த்தேக்கமாக மாறியதுடன், நிலத்தடி நீரும் மாசுபட்டு பொதுமக்களுக்கு தோல் நோய் ஏற்பட்டது. ஏரித் தண்ணீரைக் குடித்த கால்நடைகள் மர்மநோயால் மடிந்தன. காகுப்பம் ஏரி நீரின் பாசனத்தை நம்பியிருந்த விளைநிலங்களிலும் விவசாயம் பொய்த்துப்போனது.

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தபோது....
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தபோது....
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தபோது....
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தபோது....

காகுப்பம் ஏரியில் மட்டுமல்லாமல் ஓடையின் வழியாக பொய்யப்பாக்கம் ஏரிக்கும் கழிவுநீர் செல்வதால், அதுவும் பாழாகிவிட்டது. குடி தண்ணீருக்காக மக்கள் அலைய வேண்டியிருக்கிறது. எங்கள் நிலைமையை நகராட்சி ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, ‘ஏன் அங்கே குடியிருக்கீங்க... காலி பண்ணிட்டுப் போங்க. ஒரு ஊர் நல்லா இருக்கணும்னா, ஒரு சில பகுதி பாதிக்கப்படத்தான் செய்யும்’ என்று சாதாரணமாகச் சொன்னார். இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்தினோம். ஆனாலும்கூட இரவு நேரங்களிலும், மழைக் காலத்திலும் கழிவுநீரைச் சுத்திகரிக்காமலேயே ஏரிக்குள் திறந்துவிடுகிறார்கள்” என்றனர் ஆதங்கத்துடன்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷாவிடம் விளக்கம் கேட்டபோது, “பொதுமக்களை வேறு இடத்துக்குச் சென்று குடியேறுமாறு நான் சொல்லவே இல்லை. அது தவறான குற்றச்சாட்டு” என மறுத்தார்.

சுரேந்தர் ஷா, தமிழ்ச்செல்வி, மோகன்
சுரேந்தர் ஷா, தமிழ்ச்செல்வி, மோகன்

விழுப்புரம் நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி, “சுத்திகரிப்பு நிலையத்துக்குள் கழிவுநீர் வந்ததும், திடக்கழிவுகள் அடியில் தேங்கி நிற்கும். அப்போது மேலே சற்று தெளிந்த நிலையில் இருக்கும் நீரைச் சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். இப்போது சுத்திகரிப்பு இயந்திரப் பழுதை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இணைந்து சரிசெய்துவருகிறோம். அதனால் ஓரளவு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஏரிக்கு அனுப்பப்படுகிறது” என்றார் சமாளிப்பாக.

காகுப்பம் பகுதி மக்களின் புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மோகனிடம் பேசினோம். உடனடியாகக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வுசெய்த ஆட்சியர், “ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது வெளியேற்றப்படும் தண்ணீர் நல்ல நிலைக்கு மாறியிருக்கிறது. விரைவில் காகுப்பம் ஏரியைத் தூர்வாரி முழுமையாகத் தூய்மைப்படுத்துவோம்” என்றார்.