மேற்கு தாம்பரம் பகுதியிலுள்ள வரதராஜபுரம் பகுதியில் வசித்துவரும் ஜெயக்குமார் என்பவரின் இல்லத்தில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய ஏழுமலை, ராஜேஷ் இருவரும் நேற்று பணிக்கு வந்திருக்கிறார்கள். சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய சிறிது நேரத்திலேயே விஷவாயு தாக்கியதால், இருவரும் மயக்கமடைந்துள்ளனர். அதையடுத்து, இந்தத் தகவல் தாம்பரம் தீயணைப்புத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினரும் தீயணைப்புப்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கழிவுநீர்த் தொட்டியில் மயங்கியிருந்த இருவரையும் தீயணைப்புப்படையினர் மீட்டனர். ஆனால், இருவருமே விஷவாயு தாக்கி உயிரிழந்துவிட்டனர். பின்னர், இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக மணிமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.
தொடரும் சோகம்!
சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (30). இவர் கழுவுநீர் அகற்றும் லாரி ஓட்டுநராக வேலை செய்துவந்தார். இவருடன் திராவிட கதிரவன் (29) என்பவர் கிளீனராகப் பணியாற்றிவந்தார். இவர்கள் இருவரும், கடந்த 17-ம் தேதி அன்று, சென்னை ஈஞ்சம்பாக்கம் சேஷாத்திரி அவென்யூவில் உள்ள ராஜன் என்பவரின் வீட்டில் கழிவுநீரை அகற்றச் சென்றனர். 10 அடி ஆழமுள்ள அந்தக் கழுவுநீர்த் தொட்டியில் கழிவுநீரை அகற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, திராவிட கதிரவன் அந்தத் தொட்டியில் இறங்கி இரும்புக்கம்பியால் கழிவுநீரை வெளியேற்ற கலக்கினார்.

அப்போது விஷவாயு தாக்கியதில், கதிரவன் மயங்கி விழுந்தார். அவரைக் காப்பாற்ற முத்துக்குமார் முயன்றபோது அவரையும் விஷவாயு தாக்கி அவரும் மயக்கமடைந்தார். இந்தத் தகவல் துரைப்பாக்கம் தீயணைப்புத்துறையினருக்கும், நீலாங்கரை காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் இருவரையும் மீட்டு ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்ததில் கதிரவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த முத்துக்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக நீலாங்கரை காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.
கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது தொழிலாளர்கள் இறப்பது தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. குறிப்பாக மலக்கழிவு நீர்த் தொட்டிகளை மனிதர்களைக்கொண்டு சுத்தம் செய்யக் கூடாது. இயந்திரத்தின் மூலமே சுத்தம் செய்ய வேண்டும். மேலும், அந்தப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பாதுகாப்பு தலைக்கவசம், முகக்கவசம், பூட்ஸ் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
பெரும்பாலும் இந்தப் பணியில் ஈடுபவர்கள் எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல்தான் வேலை செய்கிறார்கள். கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்வது தொடர்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்திருந்தாலும், அந்த விதிமுறைகள் வெறும் விதிகளாக மட்டுமே இருந்துவருகின்றன. இன்னொரு பக்கம், `விஷவாயு தாக்கி மரணம்' என்ற செய்தியும் தொடர் கதையாகிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு அரசு ஒரு நிரந்தரத் தீர்வு கொண்டுவந்தே ஆக வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.
தமிழக அரசு இந்த விஷவாயு மரணங்களைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!