லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவர்களை அடையாளம் காணவேண்டியது அவசியம்! - பாலியல் மருத்துவர் காமராஜ்

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

குழந்தைகளின் மீதான பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறும் ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளின் பின்னணி பரவலாக அலசப்படும், ஆராயப்படும். அவற்றில் உண்மையும் பொய்யும் கலந்திருக்கலாம். பல நேரங்களில் நிரபராதிகள் தண்டிக்கப்படலாம், குற்றவாளிகள் தப்பிக்கலாம். சட்ட ஓட்டைகளுக்குள் நாம் போக வேண்டாம்.

குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்துவோருக்கென சில குணாதிசயங்களை ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அவற்றைத் தெரிந்துகொள்ளவேண்டியது பெற்றோரின் கடமை. அப்படிப்பட்ட நபர்களிடமிருந்து குழந்தைகளை விலகியிருக்கச் செய்வது அவர்களின் பொறுப்பு. குழந்தைகளிடம் பாலியல் வன்முறைகளை நிகழ்த்துவோரிடம் பொதுவான சில குணங்களைப் பார்க்க முடியும். அவை...

பொறுப்பெடுத்துக் கொள்ளமுடியாத தன்மை

குழந்தையிடம் பாலியல் வன்முறையை நிகழ்த்துவதைக் கேள்விப்படுகிற நமக்கெல்லாம் ஒவ்வொரு முறையும் நெஞ்சம் பதறும். அப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கோ தம் செய்கைகள் எத்தகையவை, அவை என்ன மாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எந்த அக்கறையும் கவலையும் இருக்காது. அதாவது தவறுகளில் துளியும் பொறுப்பெடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

காமராஜ்
காமராஜ்

`என்னுடைய இளமைக் காலம் மிக மோசமானதாக இருந்திருக்கிறது, என் மனைவி என்னைவிட்டுச் சென்று விட்டாள்’ என்றெல்லாம் காரணங்களை அடுக்குவார்கள். ஆனால், தங்கள் செய்கைகளுக்குப் பொறுப் பெடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பார்கள்.

‘என் குழந்தைப் பருவத்திலும் நான் இத்தகைய அனுபவங்களைச் சந்தித்திருக் கிறேன்’ என்பதுபோன்ற சமாதானங்களைச் சொல்வார்கள். இன்னும் ஒருபடி மேலே போய் தங்களுடைய அத்துமீறல்களுக்கு குழந்தை களையே காரணமாகக் காட்டுபவர்களும் உண்டு.

‘குழந்தைகள்தாம் தம்முடன் செக்ஸ் விளையாட்டுகளில் ஈடுபட அழைத்தார்கள்’ என்று குழந்தைகளையே குற்றவாளிகள் ஆகிவிடுவார்கள். ஆக, தாம் செய்தது மன்னிக்கவே முடியாத பெருங்குற்றம் என்பதையே உணராமல் அதற்கு எந்தவிதப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருப்பார்கள்.

சாடிஸ்ட்டுகள்

ஆங்கிலத்தில் ‘சென்ஸ் ஆஃப் என்டைட்டில்மென்ட்’ என்று சொல்வார்கள். குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்துபவர் களில் ஒரு பிரிவினர், தாம் பெற்ற துன்பத்தைப் பிறரும் அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள். ‘எனக்குச் சிறுவயதில் இதுபோன்ற அனுபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த ஆற்றாமையைத் தீர்த்துக்கொள்ளும் வகையில்தான் பிறர் கஷ்டப்படும் அளவுக்கு அதேபோன்ற செயல்களில் ஈடுபடுகிறேன்’ என்று தம் செயலை நியாயப்படுத்துவார்கள். சிகிச்சைக்கோ கவுன்சலிங்குக்கோ வரும் பலரும் இப்படிப்பட்ட உணர்வை வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம். ‘எனக்கு ஓர் அநீதி நடந்தது, அதை நான் மற்றவருக்குத் திரும்பச் செய்கிறேன் அதில் என்ன தவறு’ என்கிற எண்ணமே இவர்களுக்கு மேலோங்கியிருக்கும்.

தன்னம்பிக்கையற்ற தாழ்வுமனப்பான்மைக்காரர்கள்

புறத்தோற்றத்தில் மிகவும் தைரியசாலிகளாக, நம்பிக்கையானவர்களாக, நல்லவர்களாகத் தெரிவார்கள். உண்மையில் இவர்கள் தைரியமற்றவர்களாகவும் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், இந்த உலகத்துக்குப் பயனற்றவர்களாக உணர்பவர்களாகவும் இருப்பார்கள். இது மிகவும் தவறான விஷயமும்கூட. ஆங்கிலத்தில் low self-esteem என்று சொல்லப்படும் இந்தக் குணமானது இவர்களுக்குக் கடுமையான மன உளைச்சலைத் தந்துகொண்டே இருக்கும். சக வயது மனிதர்களிடம் பேசுவது, பழகுவது, செக்ஸ் வைத்துக்கொள்வது போன்றவற்றைத் தவிர்த்து, குழந்தைகளிடம் அவற்றைச் செய்வது இவர்களுக்கு எளிதாக இருக்கும். குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்வதும் அவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் இவர்களுக்குப் பிடித்த விஷயங்களாக இருக்கும். தாழ்வு மனப்பான்மையே இதற்கான பிரதான காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதிகார விரும்பிகள்

சக வயது மனிதர்களிடம் இவர்களால் தங்கள் அதிகாரத்தைக் காட்ட முடியாது. வீட்டில் மனைவியிடம் கூட அதிகாரத்தைச் செலுத்த முடியாதவர்களாக இருப்பார்கள். ஆனால், குழந்தைகளிடம் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதன் மூலம் அவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதாகவும் உணர்வார்கள்.

இவர்களைப் போன்ற மனிதர்களை நாம் பரவலாகப் பார்க்கலாம். வேலையிடத்தில் பூனை போன்று அமைதியானவர்களாக இருப்பார்கள். அதுவே வீட்டுக்குள் தனக்கு பயப்படும் மனைவியிடம் அதிகார முகத்தைக் காட்டுவார்கள். வேலையிடத்தில் எல்லோரிடமும் திட்டு வாங்குபவர்களாகவும், பயந்த சுபாவம் உள்ளவராகவும் இருப்பார்கள். வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் மனைவியை அடக்கி ஆள்பவராக இருப்பார். குழந்தைகளிடம் அதிகாரத்தைக் காட்டுவதும் அவர்களைக் கட்டுப்படுத்துவதும் வளர்ந்த ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ மிகவும் சுலபமானதும் கூட.

பச்சாதாபம் அற்றவர்கள்

‘அண்ணா என்ன விட்டுடுங்கண்ணா...’ என்று கதறிய பெண் குரலை பொள்ளாச்சி வீடியோவில் பார்க்கவோ கேட்கவோகூடப் பலருக்கும் திராணி இல்லை. மாதக்கணக்கில் அந்தக் கொடூரச் செயல்களில் எப்படி ஈடுபட்டிருப்பார்கள் என்று யோசித்துப் பார்ப்பதே நமக்கெல்லாம் கொடுமையாக இருந்தது. அந்தக் குரலை நினைத்தாலே இப்போதும் குலை நடுங்கும் பலருக்கும்.

ஆனால், அந்த மனித மிருகங்களால் மட்டும் எப்படி அப்படி நடந்து கொண்டிருக்க முடிந்திருக்கும்? அதுதான் `லாக் ஆஃப் எம்பதி'. அதாவது எதிராளியின் இடத்திலிருந்து அவர்களின் உணர்வுகளைப் பார்க்கிற தன்மை இல்லாதது. பாதிக்கப்பட்டவர்களின் இடத்தில் தன்னைவைத்துப் பார்க்க முடியாத நிலை. அந்தக் குரூரம் இவர்களுக்குப் பழகிவிடும். அதன் தொடர்ச்சியாகத்தான் இத்தகைய அரக்கர்கள் குழந்தைகளிடம் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுகிறார்கள்.

இயற்கைக்குப் புறம்பானவர்கள்

குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுபவர்கள் பெரும்பாலும் சக வயதினருடன் உறவுவைத்துக் கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். அதனால்தான் இவர்களின் இலக்கு குழந்தைகளாக இருக்கிறார்கள்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

இவர்கள் குழந்தைகளிடம் இதுபோன்ற அத்துமீறல்களைப் பல இடங்களில் பலமுறை செய்திருப்பார்கள். ஏதோ ஒரு சம்பவத்தில்தான் மாட்டியிருப்பார்கள். பல இடங்களில் தப்பித்திருப்பார்கள். இதைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் வெளிநாடுகளில் ஒரு நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். குழந்தைகளிடம் தவறாக நடந்துகொண்ட நபர்களுக்கென ஒரு பதிவு பின்பற்றப்படுகிறது. அவர்களுடைய பெயர் மற்றும் புகைப்படத்துடன் அதில் பதிவு செய்யப்படும். தவறு செய்தவர் மீண்டும் அதைச் செய்வதை இது தடுக்கும். ஆனால், நம் நாட்டில் ஒருவர் ஒருமுறை தவறு செய்தால், ஒருமுறைதானே செய்தார் என்ற பார்வையோடு அந்த நபர் தப்பிக்கவைக்கப்படுவார். அந்த நபர் இன்னோர் இடத்துக்குப் போய் அங்கேயும் அதே தவற்றைத் தொடர்ந்துகொண்டிருப்பார். நாமும் இப்படியொரு பதிவு முறையைப் பின்பற்றினால் குற்றவாளிகள் தப்பிக்க மாட்டார்கள்.

குழந்தைப்பருவத்தைத் தொலைத்தவர்கள்

குழந்தைப் பருவத்தில் தாயின் அரவணைப்போ, தந்தையின் பராமரிப்போ கிடைக்காமல் மோசமான சூழலில் வளர்ந்தவர்களாக இருப்பவர்களும் இந்தக் குற்றவாளிகளின் பட்டியலில் முக்கிய இடம்பிடிக்கிறார்கள். பெற்றோரில் ஒருவரை இழந்திருக்கலாம். பள்ளிக்கூட வாழ்க்கையும் இவர்களுக்குச் சரியாக அமைந்திருக்காது. மொத்தத்தில் அவர்களது குழந்தைப் பருவமே மோசமானதாக இருந்திருக்கும். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எடுத்துச்சொல்லவோ, வழிநடத்தவோ ஆட்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

பாலியல் பிறழ்வுகளுக்குப் பழகியவர்கள்

பீடோபீலியா... அதாவது தம் பாலியல் வேட்கை. இச்சை போன்ற எல்லாவற்றையும் குழந்தைகளைவைத்துத் தீர்த்துக்கொள்ள நினைக்கிற மனநிலை. இவர்களுக்கு குழந்தைகளின் வயது ஒரு பொருட்டாக இருக்காது. மூன்று மாதக் குழந்தையாக இருந்தாலும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். இவர்களை ‘பீடோபீலியாக்’ என்கிறோம்.

இவர்கள் சிறுவயதில் ஆபாசப் படங்களைப் பார்த்த, ஆபாசப் புத்தகங்களைப் படித்த அனுபவமுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

போதை அல்லது மது அடிமைகள்

இந்த இரண்டு பழக்கங்களும் இருப்பவர்களுக்குத் தங்களின் தவறுகள் புரியாது. அவற்றின் ஆழம் தெரியாமலேயே தொடர்ந்து கொண்டிருப்பார்கள். போதை அல்லது மது எடுத்துக் கொள்ளும்போது ஒரு த்ரில்லுக் காக சட்டத்துக்குப் புறம்பான பல செயல்களில் ஈடுபடுவார்கள். அவற்றுள் ஒன்றுதான் குழந்தை களிடம் ஆபாசமாக நடந்து கொள்வது.

குழந்தைகளைத் தம் இச்சைக்குட்படுத்த இவர்கள் கடைப்பிடிக்கும் டெக்னிக்குகள் பற்றி அடுத்த இதழில் அலசுவோம்.

(எச்சரிக்கை தேவை!)