பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: இணையம்... மொபைல்... சைபர் புல்லியிங் தவிர்க்கலாம் தடுக்கலாம்!

பாலியல் மருத்துவர் காமராஜ்
எப்போதும் மொபைலும் கையுமாக இருக்கும் பிள்ளைகளைப் பற்றிய கவலை அநேகமாக அனைத்துப் பெற்றோர்களுக்கும் உண்டு.
தூங்கும்போது, கழிவறைக்குச் செல்லும்போதெல்லாம்கூட மொபைலைத் தவிர்ப்பதில்லை இன்றைய பிள்ளைகள். போதாக்குறைக்கு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர், டேப்லட் எனக் கூடுதலாக இன்னும் சில டிஜிட்டல் சாதனங்களுக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

பல வீடுகளில் பிள்ளைகள் தனி அறைக்குள் தம்மை முடக்கிக்கொள்வதும் வீட்டிலிருப்போர் உட்பட, யாருடனும் பேசாமல் பழகாமல் இருப்பதையும் பார்க்கலாம். உங்கள் குழந்தையும் இப்படித்தானா? அவள் / அவனது நடத்தையில் அசாதாரண மாற்றங்களை உணர்கிறீர்களா?
அவர்கள் ‘சைபர் புல்லியிங்’ எனப்படும் இணைய அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கலாம்.
அதென்ன சைபர் புல்லியிங்?
லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்லட், ஸ்மார்ட்போன் போன்றவற்றின் மூலம் குழந்தைகளின் மேல் நிகழ்த்தப்படுகிற வன்கொடுமையே சைபர் புல்லியிங். சமூக ஊடகங்கள், சாட் ரூம்ஸ், விளையாட்டுத்தளங்கள் என இரு தரப்பு பார்த்துக் கொள்ளவும் பங்கு கொள்ளவும் வாய்ப்பளிக்கிற எந்தக் களம் மூலமாகவும் இந்த சைபர் புல்லியிங் நிகழலாம்.
ஆன்லைனில், ஆப்களில் குறுந்தகவல்கள் மூலம் அனுப்பப்படும் வெறுக்கத்தக்க கமென்ட்டுகள், ஆபாசமான கமென்ட்டுகள், தவறான தகவல்கள், ஒருவரின் அந்தரங்கம் பற்றித் தவறான விஷயங்களைப் பகிர்வது, ஒருவரது நடத்தையை அநாகரிகமாக விமர்சிப்பது... இப்படி நிறைய விஷயங்களை உள்ளடக்கியதுதான் சைபர் புல்லியிங்.
சைபர் புல்லியிங்கின் வகைகள் மற்றும் தன்மைகளைப் பற்றிப் புரிந்துகொண்டால்தான் குழந்தைகள் அவற்றில் சிக்காமல் இருக்கவும். ஒருவேளை சிக்கிக்கொண்டிருந்தாலும் வெளியே வரவும் முடியும்.

தனிநபரைப் பற்றி ஆன்லைனில் அநாகரிகமான, அருவருக்கத்தக்க, காயப்படுத்தக்கூடிய கமென்ட்டுகளை போஸ்ட் செய்வது.
அடுத்தவரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் போட்டோ அல்லது வீடியோவை வெளியிடுவது.
சம்பந்தமே இல்லாமல் ஒருவரைப் பற்றி போலியான, தவறான இணைய பக்கத்தை உருவாக்குவது... அதற்காக ஆன்லைனில் போலியான ஓர் அடையாளத்தை உருவாக்குவது.
ஒருவரை தற்கொலைக்கோ, வன்முறைக்கோ தூண்டும்வகையிலான ஆன்லைன் மிரட்டல்களை விடுப்பது.
சாதி, மத, இன அரசியலைத் தூண்டும் வகையிலான ஆன்லைன் பதிவுகளைச் செய்வது.
தொந்தரவு கொடுக்கும் நபரின் மெசேஜ், அவர் அனுப்பும் படங்கள், ஆடியோ, வீடியோ என எல்லாவற்றையும் அழிக்காமல் பத்திரமாக வைக்கவும்.
பெரியவர்கள் மட்டுமல்ல... குழந்தைகளும்தான்...
குழந்தைகளுக்கு ‘டாக்ஸிங்’ அபாயம் பற்றிச் சொல்லித்தர வேண்டும். அதைப் பற்றிய விழிப்புணர்வு பெற்றோருக்கும் இருக்க வேண்டும். அதாவது ஒருவரைப் பற்றிய அந்தரங்கத் தகவல்களைத் தேடி, அவற்றை இணையத்தில் உலவவிடுகிற மோசமான கலாசாரம் இது. தனிநபரின் சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் இதர ஆன்லைன் தளங்களிலிருந்து அவரைப் பற்றிய அந்தரங்கத் தகவல்களைச் சேகரிப்பார்கள் இந்த நபர்கள். அந்தத் தகவல்களை இணைய அச்சுறுத்தல்களுக்குப் பயன்படுத்தி, இன்னொருவரின் பெயரையும் புகழையும் கெடுக்கப் பார்ப்பார்கள்.
இதில் பெரியவர்கள் மட்டுமல்லர், குழந்தைகளும் அதிகம் குறிவைக்கப் படுகிறார்கள் என்பதால்தான் இங்கே பேச வேண்டியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த சைபர் புல்லியிங்கும், அதன் மூலம் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படுகிற வன்கொடுமை களும் கடந்த சில ஆண்டுகளில் மிகவும் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காரணம், குழந்தைகளின் கைகளுக்கு மிகச் சுலபமாக வந்து சேரும் ஸ்மார்ட்போன்களும் இன்டர்நெட் இணைப்பும்.

உங்கள் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கிறதா?
சைபர் புல்லியிங்கால் பாதிக்கப்படுகிற பெரும்பாலான குழந்தைகள் அதைப் பற்றி ஆசிரியர்களிடமோ, பெற்றோரிடமோ சொல்வதில்லை. வெளியில் சொன்னால் மொபைல்போனும் இன்டர்நெட் இணைப்பும் தன்னிடமிருந்து பறிக்கப்படும் என்ற பயம்தான் காரணம். ஒருவேளை உங்கள் குழந்தையின் செய்கைகள் உங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தினால் பின்வரும் அறிகுறிகள் அவர்களிடம் தென்படுகின்றனவா எனப் பாருங்கள்.
போன் அல்லது இன்டர்நெட்டைப் பயன்படுத்திய பிறகு மனத்தளவில் அப்செட்டாகி இருப்பது.
தன்னுடைய டிஜிட்டல் தொடர்பான விஷயங்களை ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க முயற்சி செய்வது.
குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என எல்லோரிடமிருந்தும் விலகியிருப்பது.
பள்ளிக்கூடக் கூட்டங்களைத் தவிர்ப்பது.
படிப்பில் மந்தநிலை, அதைப் பற்றிக் கேட்டால் கோபப்படுவது.
அடிக்கடி மூட் அவுட் ஆவது, பசி தூக்கம் என எல்லாவற்றிலும் வித்தியாசங்கள் காட்டுவது.
மொபைலில் மெசேஜோ, அழைப்போ வந்தால் படபடப்பாவது.
கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் தொடர்பான உரையாடல்களைத் தவிர்ப்பது.
பெற்றோர் எப்படி உதவலாம்?
உங்கள் குழந்தை சைபர் புல்லியிங்கினால் பாதிக்கப் பட்டிருப்பது தெரிந்தால் முதலில் அவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுங்கள்.
உங்கள் குழந்தைப் பருவத்தில் நீங்கள் சந்தித்த இதே மாதிரியான அனுபவங்களையும் அவற்றை எதிர்கொண்ட விதங்களையும் அவர்களிடம் பேசுங்கள்.
குழந்தைக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பேசாதீர்கள். அதில் அவர்களது தவறு ஒன்று மில்லை என நம்பிக்கை கொடுங்கள். நடந்த விஷயத்தை உங்களிடம் கொண்டு வந்ததற்காகப் பாராட்டுங்கள்.
இந்தப் பிரச்னை உங்கள் குழந்தை மட்டும் சந்திப்பது இல்லை. நிறைய குழந்தைகளும், ஏன் பெரியவர்களும்கூட பாதிக்கப்படுகிறார்கள். இந்த விஷயத்தையும் விளக்கி ஆறுதல் கொடுங்கள்.
எதிர்காலத்தில் இதேபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்படும்போது சைபர் புல்லியிங் செய்யும் நபருக்கு பதிலளிக்க வேண்டாம் என்பதைச் சொல்லிக்கொடுங்கள். தொந்தரவு கொடுக்கும் நபரின் மெசேஜ், அவர் அனுப்பும் படங்கள், ஆடியோ, வீடியோ என எல்லாவற்றையும் அழிக்காமல் பத்திரமாக வைக்கச் சொல்லுங்கள். அவைதாம் அந்த நபரின் மீது புகார் கொடுக்கும்போது நமக்கான ஆதாரங்களாக இருக்கும் என்பதையும் புரிய வையுங்கள்.
சைபர் புல்லியிங்கை எப்படித் தடுப்பது?
யாராவது ஆபாசமான மெசேஜ் அனுப்பினால் அதற்கு பதிலளிக்காமல் தவிர்க்கச் சொல்லலாம்.
போனில் உள்ள பிரைவசி செட்டிங்ஸில் அதை பிளாக் செய்யலாம்.
காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவில் புகார் செய்யலாம்.
குழந்தைகளுக்கு இத்தகைய பிரச்னைகள் வரும்போது பெற்றோர், நண்பர்களிடம் ஆலோசனைகளும் உதவிகளும் கேட்கும் சுதந்திரத்தைக் கொடுங்கள்.
இத்தகைய துன்புறுத்தல்கள் குற்றச் செயல்கள், அவற்றில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
புதியவர்களுக்கு அந்தரங்கத் தகவல்களைப் பரிமாறுவதைத் தவிர்க்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
நம்பகமான நண்பர்களுக்கு மட்டுமே தொலைபேசி எண்களைப் பகிர வேண்டும் எனச் சொல்ல வேண்டும். இது ஆண் பெண் குழந்தைகள் இருபாலருக்கும் பொருந்தும்.
போன் உபயோகத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதிலுள்ள தொழில்நுட்பங்கள் எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று தெரிந்துவைத்திருக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோர் களுக்கும்தான்.