தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்:அன்போடு அக்கறையோடு உரையாடுங்கள்!

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் மருத்துவர் காமராஜ்

நேற்றுவரை அம்மாவைக் கட்டி யணைத்தபடியும் அப்பாவின் பின்னால் சுற்றிக்கொண்டும் இருந்த குழந்தைகள், டீன்ஏஜில் அடியெடுத்து வைத்ததும் ‘நீ யாரோ, நான் யாரோ’ என்ற மாதிரி விலகிப்போவதை அநேகமாக எல்லா பெற்றோர்களும் உணர்ந்திருப்பார்கள். அது அந்த வயதுக்கான மாற்றம்தான், இயல்பு தான் என்பதால் கவலை வேண்டாம்.

இத்தனை நாள்களாகக் குழந்தைகளிடம் பேச உங்களுக்கு நேரமில்லாமலோ, அவர்களுக்கு வாய்ப்பில்லாமலோ இருந்திருக்கலாம். லாக் டௌன் நாள்களில் அனைவரும் ஒன்றாக இருக்கிறீர்கள். நேரமும் வாய்ப்பும் உங்கள் வசமிருக்கின்றன. உங்கள் குழந்தை டீன்ஏஜில் அடியெடுத்துவைத்திருக்கும் பட்சத்தில் இந்த லாக் டௌன் நாள்களைப் பயனுள்ள ஒரு விஷயத்துக்காக நீங்கள் பயன்படுத்தலாமே...

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்:அன்போடு அக்கறையோடு உரையாடுங்கள்!

டீன்ஏஜில் நுழையும்போது குழந்தைகள் உடல், மன ஆராய்ச்சிகளில் இறங்கியிருப்பார்கள். அவற்றைப் பற்றி அதற்கு முன் அவர்களோ, நீங்களோ பேசியிருக்க வாய்ப்பிருந்திருக்காது. இந்த நேரத்தில் அவற்றைப் பற்றி பெற்றோர் சரியான வழிகாட்டுதலைத் தராவிட்டால் பிள்ளைகள் பிரச்னைகளைச் சந்திக்க வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளின் குழப்பங்களைத் தெளிவாக்கும் இந்தப் பொறுப்பு பெற்றோர்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் உண்டு. இவர்கள் இருவரும் இதைச் செய்யத் தவறினால், டி.வி, இணையவழிச் செய்திகள், சமூக ஊடகங்கள் மூலம் பிள்ளைகள் அவற்றுக்கு விடை தேடத் தொடங்குவார்கள். அப்படி அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் ஆபத்தானவையாக மாறலாம்.

பாலியல் கல்வி என்பது கடல் போன்றது. உடல் அமைப்பில் தொடங்கி, உடலுறவு, பாதுகாப்பான கர்ப்பம், காதல், எதிர்ப்பாலினத்தவரிடம் ஈர்ப்பு ஏற்படுவது ஏன் எனப் பல விஷயங்களையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்களின் கேள்வி, ‘அவசியம் இதையெல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டுமா?’ என்பது.

ஆமாம்... இது அவ்வளவு அவசியமான விஷயம்தான். தர்மசங்கடம் என்ற பெயரில் இதை நீங்கள் தவிர்த்தீர்கள் என்றால், உங்கள் பிள்ளைகளை ஆபத்தை நோக்கி அனுப்பிவைக்கிறீர்கள் என்றே அர்த்தம். இது உலக அளவில் நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மையும்கூட.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

`சரி... நீங்கள் சொல்வதைப்போல நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்கிறோம் என்றே வைத்துக்கொள்வோம். நாங்கள் அதைச் சரியான முறையில்தான் சொல்லிக்கொடுத்திருக்கிறோமா என்பதை எப்படி நம்பலாம்' என்ற கேள்வியும் பெற்றோர்களுக்கு எழலாம்.

பாலியல் கல்வியில் பாடம் எடுப்பவர் பெற்றோரோ, ஆசிரியரோ... யாராக இருந்தாலும் அவர் இதைக் கடமைக்குச் செய்யாமல் குழந்தையின் மீதுள்ள அக்கறையில் பாசிட்டிவிட்டியுடன் போதிக்க வேண்டியது அவர்களுக்கான முதல் தகுதி. இதில் கவனிக்கப்பட வேண்டியது குழந்தைகளின் வயது. எந்த வயதில் எதைச் சொல்லிக் கொடுக்கலாம் என்ற தெளிவும் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு அவசியம். தான் எடுக்கும் இந்த முயற்சி ஆக்கபூர்வமானது என அவர்கள் நம்ப வேண்டும்.

நாம் நம் குழந்தைகளைச் சரியாகத்தான் வழிநடத்துகிறோமா? குழந்தைகளுக்கான அவசிய தகவல்களை விஞ்ஞானரீதியாகக் கற்றுக்கொடுத்திருக்கிறோமா?

பல நேரங்களில் சக மாணவர்கள், சக வயதுப் பிள்ளைகள், சமூக அழுத்தங்களால் ஏற்படும் சந்தேகங்களையும் பிள்ளைகள் எதிர்கொள்வதுண்டு. அவற்றுக்கும் பதிலளிக்க பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் தெரிந்திருக்க வேண்டும். `இந்த வயசுல பேசற பேச்சா இது... அதையெல்லாம் தெரிஞ்சுக்க இன்னும் வயசிருக்கு' என்கிற மாதிரியான பதில்கள் பலனளிக்காது. இது போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமலிருப்பதும் செய்யாம லிருப்பதும்தான் சரி என்ற மனோபாவம் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இருக்கிறது. இந்த மனப்போக்கு தவறானது.

காம்ப்ரஹென்ஸிவ் செக்ஸ் எஜுகேஷனைக் கொடுப்பதுதான் பெற்றோரின் சிறந்த செயலாக இருக்கும். அதாவது பாலியல் தொடர்பான பாசிட்டிவான, விஞ்ஞானபூர்வமான தகவல்களைத் தருவது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தகவல் களைத் தெரிந்துகொள்ளும் குழந்தைகள், வாழ்க்கையில் பல விஷயங்களிலும் விஞ்ஞான பூர்வமான முடிவுகளை சரியாக எடுப்பார்கள். தேவைற்ற கர்ப்பம், தகாத உறவு, அது தரும் மன உளைச்சல், பால்வினை நோய்கள் போன்ற பல ஆபத்துகளிலிருந்தும் தங்களைக் காப்பாற்றிக்கொள்வார்கள்.

பாலியல் கல்வி என்பது பிள்ளைகள் தம் உடல் மற்றும் மனத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், ஹெச்ஐவி போன்ற கொடிய நோய்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும் அவசியமாகிறது.

பாலியல் கல்வியை போதிக்கும் ஆசிரியர்களுக்கு அடிப்படையாக நல்ல கம்யூனிகேஷன் திறமை அவசியமாகிறது. கறாரான ஆசிரியராக, பிரம்பெடுத்து மிரட்டுவதுபோல இல்லாமல் குழந்தைகளின் தேவை அறிந்து அன்போடு அக்கறையோடு உரையாடும் திறமை இருக்க வேண்டும். கூடவே இதில் ஏதேனும் சிக்கல்கள் வந்தால் சரியாக அணுகவும் கையாளவும் தெரிந்திருக்க வேண்டும். டீன்ஏஜ் காதல், டீன்ஏஜ் கர்ப்பம் போன்றவற்றைப் பற்றி பாடமெடுக்கும் மன முதிர்ச்சியும் அவர்களுக்கு இருக்க வேண்டும். குழந்தைகள் உணர்வு ரீதியாக, உடல் ரீதியாக, மன ரீதியாக எதிர்ப்பாலினத்தவரிடம் ஈர்க்கப்படலாம். அதைத் தெளிவாக்க வேண்டியதும் ஆசிரியர் பொறுப்பே. இதில் பெற்றோர்களுக்கும் மிக முக்கியப் பங்குண்டு. குறிப்பாக, பதின்ம வயது கர்ப்பம்... அதைப் பற்றி எதுவுமே தெரியாமல் குழந்தைகள் சிக்கிக்கொள்வார்கள். அது அவர்களது எதிர்காலத்தையே சூன்யமாக்கிவிடும்.

`நமக்கெல்லாம் கொரோனா வராது' என்று ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டிருப்பதைப் போலத்தான் இதுவும். எல்லா பெற்றோர் களுக்கும் தம் குழந்தைகள் தவறு செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கும். ஆனாலும், உலக அளவில் டீன் ஏஜ் கர்ப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் மறுக்க முடியாது. டீன்ஏஜ் கர்ப்பத்தை எதிர்கொள்ளும், குழந்தைகளின் படிப்பு பாதியில் தடைப்படுவதும் மந்தமாகிப் போவதும்கூட உலக அளவில் நடக்கிறது.

நாம் நம் குழந்தைகளைச் சரியாகத் தான் வழிநடத்துகிறோமா என்பதை, குழந்தைகளுக்கான அவசிய தகவல்களை விஞ்ஞானரீதியாகக் கற்றுக்கொடுத்திருக்கி றோமா என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உறுதிசெய்ய வேண்டிய தருணமிது. உங்கள் கடமையைச் சரியாகச் செய்யாமல் தவறுகளுக்கு மட்டும் பிள்ளைகளைக் காரணம் காட்டுவது நியாயமானதில்லை.

டீன்ஏஜ் கர்ப்பம், காதல், உடல் கவர்ச்சி உள்ளிட்ட விஷயங்களைப் பிள்ளைகளுக்கு எப்படிப் புரியவைப்பது? அடுத்த இதழில் பார்ப்போம்.