காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றவர் மல்யுத்த வீரர் வினேஷ் போகட்.

பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீரர்கள் தேசிய பயிற்சியாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக, பகிரங்கமாகக் குற்றச்சாட்டை முன்வைத்த இவர், ``இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரால் தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல் பற்றி என்னிடம் கூறிய குறைந்தது 10, 12 பெண் மல்யுத்த வீரர்களை நான் அறிவேன். அவர்களின் பெயர்களை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், பிரதமர், உள்துறை அமைச்சரை நாங்கள் சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் பெயர்களைச் சொல்வேன்" என்றார். இவருக்கு அதரவாக 30 மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக நாட்டின் உயர்மட்ட மல்யுத்த வீரர்கள் கொண்டு வந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை விளையாட்டு அமைச்சகம் புதன்கிழமை ஏற்றுக்கொண்டது.
WFI தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் சக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா உள்ளிட்ட பிரபல மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தியதால், மத்திய விளையாட்டு அமைச்சகம் நிலைமையை கவனத்தில் கொண்டு கூட்டமைப்பிடம் விளக்கம் கேட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, அடுத்த 72 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும், இல்லையெனில் தேசிய விளையாட்டு மேம்பாட்டுக் குறியீடு, 2011-ன் விதிகளின்படி, கூட்டமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்த சர்ச்சையை அடுத்து, லக்னோவில் உள்ள SAI மையத்தில் தொடங்கவிருந்த தேசிய முகாமை விளையாட்டு அமைச்சகம் ரத்து செய்தது.
போராட்டத்துக்கு எதிராகக் கொலை மிரட்டல்... பின்னணி என்ன?
பிரிஜ் பூஷன் சரண் சிங் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதாக வினேஷ் போகட் குற்றம் சாட்டினார். மேலும், பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமான அதிகாரிகளிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் அவர் கூறினார்.

பஜ்ரங் புனியா, ``பிரிஜ் பூஷன் மல்யுத்த வீரர்களைத் தவறாக பயன்படுத்திய வீடியோக்கள் உள்ளன. பிரிஜ் பூஷனைத் தனது பதவியில் இருந்து நீக்காவிட்டால், எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பங்கேற்க மாட்டேன், கூட்டமைப்பு தன்னிச்சையாக நடத்தப்படுகிறது. எங்களுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்களின் உதவியும் ஆதரவும் மறுக்கப்படும் நிலையில், தனது சொந்த அகாடமிக்கு வெளிநாட்டு பயிற்சியாளரை நியமித்துள்ளார்" என்று குற்றம்சாற்றியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைசர்கஞ்ச் தொகுதியின் பா.ஜ.க எம்.பி-யான பிரிஜ் பூஷன், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து வேறு தரப்பை முன்வைத்தார்.

இது குறித்து WFI தலைவர் பிரிஜ் பூஷன் கூறுகையில், ``அந்த நேரத்தில் வினேஷ் ஏன் என்னிடம் பேசவில்லை அல்லது காவல்துறையை அணுகவில்லை? அவர் ஏன் பிரதமரையோ விளையாட்டுத்துறை அமைச்சரையோ சந்திக்கவில்லை? அவர் ஏன் இப்போது இதைச் சொல்கிறார்? வினேஷ் போகட் சமீபத்தில் தலைமை பயிற்சியாளரை மாற்ற விரும்புவதாகக் கூறினார். ஒரு வீரரின் பரிந்துரையின் பேரில் ஒரு பயிற்சியாளரை வைத்திருக்க முடியாது. மற்ற மாநில வீரர்களைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். அவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பயிற்சியாளர்களின் பெயர்களுடன் முன்பே வந்திருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இது குறித்து காங்கிரஸ், ``மல்யுத்த சங்கத்தில் பெண் வீரர்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள். பெண் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பா.ஜ.க எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் வீரர்களை பாலியல் சுரண்டல் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.க-வின் உண்மையான குணம் இதுதான். மிகவும் வெட்கக்கேடானது" என்று கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.