நீ ஸ்மார்ட்டா இருக்கடா! - பாலியல் புகாரில் பேராசிரியர்... அடித்து உதைத்த மாணவர்கள்!

ஏற்கெனவே சிவசங்கரன் உள்ளிட்ட சில பேராசிரியர்கள்மீது மாணவர்கள் பாலியல் புகார்களைச் சொல்லியிருக்கிறார்கள்.
‘கோவில்பட்டியில் பேராசிரியரை அடித்து உதைத்த மாணவர்கள்’ என்று வெளியான செய்தியின் பின்னணி அறிந்துகொள்ள, களத்தில் இறங்கினோம். ‘காதல் புகார், வன்கொடுமை வழக்கு, ஓரினச் சேர்க்கை’ எனச் தலைசுற்ற வைத்தது விவகாரம்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு கணிதத்துறையின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் சிவசங்கரன். இவர், கல்லூரியிலுள்ள தனது அறையில் இருந்தபோது, அங்கு வந்த நான்கு மாணவர்கள் அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் சிவசங்கரனின் விலா எலும்பு முறிந்திருக்கிறது.
இது குறித்து கோவில்பட்டி மேற்குக் காவல் நிலைய போலீஸிடம் சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில், நான்கு மாணவர்கள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை குறித்து விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம், சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. மேலும் பேராசிரியர்மீது மாணவர்கள் அளித்த பாலியல் தொந்தரவு புகார் குறித்தும் விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை ‘கல்லூரி கல்வி இயக்கக’த்தில் சமர்ப்பிக்க... பேராசிரியர் சிவசங்கரனும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

கணிதத்துறையில் பயிலும் மாணவர்களிடம் பேசியபோது, “அந்த சார், பசங்க பக்கத்துலயே நின்னுக்கிட்டுதான் பாடம் நடத்துவார். பசங்களோட மட்டும்தான் பேசுவார். பொண்ணுங்களை அவருக்குப் பிடிக்காது. வகுப்பில் வைத்தே ‘நீ ஸ்மார்ட்டா இருக்கடா’னு பசங்க கன்னத்தைக் கிள்ளுவார். அவருகிட்ட டியூஷன் படிக்கிறதுக்கும் பசங்களுக்கு மட்டும்தான் அனுமதி. அதிலும் அவருக்குப் பிடிச்ச பசங்களை வீட்டுக்கு லேட்டாத்தான் அனுப்புவார். டபுள் மீனிங்காதான் பேசுவார். அந்தரங்கங்கள் பற்றியும், பசங்களை வர்ணிச்சும் வாட்ஸ்அப்ல மெசேஜ் அனுப்புவார். அதுக்கு என்ன ரெஸ்பான்ஸ் வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டு, அடுத்தடுத்த மெசேஜ்களை அனுப்புவார். அவர் துறைத் தலைவர்ங்கிறதுனாலயும், இன்டர்னல் மார்க்குல கைவெச்சுடக் கூடாதுங்கிறதுனாலயும் அவரு பேசுற பேச்சுகளையெல்லாம் சகிச்சுக்குவோம்” என்றனர்.

இந்தக் கல்லூரியின் மீதான புகார்களைத் தொடர்ந்து வெளிக்கொணர்ந்துவரும் ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்க’த்தின் கோவில் பட்டி கிளைச் செயலாளர் தினேஷ்குமார் பேசும்போது, ‘‘ஏற்கெனவே சிவசங்கரன் உள்ளிட்ட சில பேராசிரியர்கள்மீது மாணவர்கள் பாலியல் புகார்களைச் சொல்லியிருக்கிறார்கள். அதனால், ‘புகார் பெட்டி வைக்க வேண்டும், பாலியல் புகார் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்’ என்று கல்லூரி முதல்வரிடம் கடந்த ஜூன் 1-ம் தேதியே மனு கொடுத்தோம். ஆனாலும், நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்னையில்கூட, மாணவர் ஒருவரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்திருக்கிறார் சிவசங்கரன். ஆனால், அதற்குச் சம்மதிக்காத அந்த மாணவர், ‘உங்களைப் பத்தி கிளாஸ்ல சொல்லிடுவேன்’ எனக் கூறியிருக்கிறார். `பேர் கெட்டுப் போய்விடும்’ என்று பயந்த பேராசிரியர், அந்த மாணவனின் வீட்டுக்கே நேரில் சென்று, ‘உங்க மகன் கிளாஸ்ல படிக்கிற ஒரு பொண்ணை லவ் பண்ணுறான்’ என்று சொல்லியிருக்கிறார். இதை நம்பிய பெற்றோரும் அந்த மாணவனை அடித்திருக்கிறார்கள். இது பற்றிக் கேட்கத்தான் சம்பவத்தன்று நண்பர்களுடன், டிபார்ட்மென்ட் அறைக்குப் போயிருக்கிறான் அந்த மாணவன். ஆனால் அப்போதும் சிவசங்கரன் நக்கலாகவே பேசியதால், கோபத்தில் நான்கு பேரும் சேர்ந்து அவரை அடித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, சிவசங்கரன் மீது 13 மாணவர்கள் பாலியல் புகார் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.
குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு பேராசிரியர் சிவசங்கரனிடம் பேசினோம். “அந்த மாணவர், சக மாணவியைக் காதலித்தார். அடிக்கடி போனிலும் பேசியிருக்கிறார். மாணவியின் தந்தை, துறைத் தலைவர் என்கிற முறையில் எனக்கு மாணவனின் நம்பரை அனுப்பி, என்னிடம் புகார் சொன்னார். உடனே நானும் அந்த மாணவனைக் கூப்பிட்டுக் கண்டித்தேன். ஆனாலும் தொடர்ந்து அந்த மாணவிக்கு அந்த மாணவன் போன் செய்துவருவதாகப் புகார் வரவே, மாணவரின் பெற்றோரிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். அந்தக் கோபத்தில் மூன்று மாணவர்களோடு சேர்ந்து வந்து என்னைக் கண்மூடித்தனமாக அடித்தார் அந்த மாணவர். மற்றபடி என் மேல் சுமத்தப்படும் பாலியல் புகார்களில் உண்மையில்லை. விசாரணை கமிஷனில் எல்லா உண்மைகளையும் நான் சொல்லிக்கொள்கிறேன்” என்றார்.

கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டோம். ‘‘பேராசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி நான்கு மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். அதில் ஒரு மாணவர் பேராசிரியர் மீது கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில், 377, 352, 323, 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் பேராசிரியர் சிவசங்கரன் மீதும் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்.
எல்லோருக்கும் எழும் கேள்விதான். அரசுதான் இதற்கான பதிலை ஆராய வேண்டும். ஏன் கல்விக்கூடங்கள் ஒரு பாதுகாப்பற்ற இடமாக மாறிக்கொண்டிருக்கின்றன?