அடுக்கடுக்கான பாலியல் புகார்கள்... பின்னணியில் அண்ணாமலை? - பகீர் கிளப்பும் பா.ஜ.க நிர்வாகிகள்!

வேளச்சேரியைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி ஒருவருக்கும், பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற தகவல்களும் கட்சிக்குள் பரவலாகப் பேசப்படுகின்றன.
தமிழ்நாடு பா.ஜ.க-வில் சமீபகாலமாகத் திரும்பிய பக்கமெல்லாம் பாலியல் புகார்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. கே.டி.ராகவனில் தொடங்கிய இந்தப் புகார், கேசவவிநாயகம், திருச்சி சூர்யா சிவா, டெய்சி சரண் எனத் தொடர்ந்து அலிஷா அப்துல்லாவிடம் வந்து நிற்கிறது. “இந்த அஸ்திரங்கள் இத்தோடு நிற்கப்போவதில்லை. இன்னும் நிறைய இருக்கிறது... ஒவ்வொன்றாக வெளிவரும்” என்று அதிர்ச்சி கிளப்புகிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.
தமிழ்நாடு பா.ஜ.க-வில் என்ன நடக்கிறது என்ற விசாரணையில் இறங்கினோம்.
“அண்ணாமலை வந்த பிறகுதான் அதிகம்!”
தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ வெளியானபோதே, அண்ணாமலையின் சம்மதத்துடன்தான் அந்த வீடியோவை வெளியிட்டதாகச் சொன்னார் சர்ச்சைக்குரிய யூடியூபர் மதன். சமீபத்தில் பா.ஜ.க-விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம்கூட, “அண்ணாமலையும் மதனும் பா.ஜ.க-வில் இணைந்த பிறகுதான் பா.ஜ.க-வில் வீடியோ, ஆடியோ கலாசாரமே வந்தது. பெண்கள்மீது பர்சனல் அட்டாக் செய்யப்படுவதும் அதிகரித்தது” எனப் புகார் வைத்தார்.
இது பற்றி பா.ஜ.க சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “அண்ணாமலை தனக்கு எதிராக யாருமே பேசக் கூடாது; யாரும் வளர்ந்துவிடக் கூடாது என நினைக்கிறார். அப்படி யாராவது வளர்கிறார்கள் எனத் தெரிந்தால் உடனடியாக அவர்களை எப்படியாவது காலி செய்ய வேண்டும் எனத் திட்டமிடுகிறார். அதற்கு அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் பாலியல் புகார்கள். பா.ஜ.க நிர்வாகிகள்மீது வைக்கப்படும் அனைத்துப் பாலியல் புகார்களிலும் ஏதாவது ஒரு வகையில் அண்ணாமலையின் பெயர் அடிபடுகிறது. ஆனால், இதுவரை அவர் அதை எந்த இடத்திலும் மறுக்கவில்லை.

திருச்சி சூர்யாவை அண்ணாமலை, தன் அடியாளாகவேதான் பயன்படுத்திவந்தார். கட்சிக்கு வெளியிலிருந்து, இப்போது அவர் பேசுவதெல்லாம்கூட அண்ணாமலையின் வார் ரூம் ஆலோசனைப்படிதான். ‘கட்சிக்குள்ளிருந்து எது பேசினாலும் அது மறுபடியும் நம் மீதுதான் புகாராக எழும். எனவே, கட்சியிலிருந்து இப்போதைக்கு வெளியேறுவதாக அறிவியுங்கள். விரைவில் நல்ல பொறுப்பு கொடுத்து நானே அழைத்துக்கொள்கிறேன்’ என்ற உத்தரவாதம் கொடுத்துத்தான் அவரைக் கட்சியிலிருந்து விலகவைத்திருக்கிறார் அண்ணாமலை. ‘தி.மு.க-வினர் மீது அவதூறு பரப்ப வேண்டும்’ என்ற உத்தரவாதத்தை வாங்கிக்கொண்டு சூர்யாவைக் கட்சிக்கு அழைத்து வந்த அண்ணாமலை, இப்போது அந்த ஆயுதத்தைச் சொந்தக் கட்சிக்கு எதிராகவே திருப்பிவிட்டிருக்கிறார்” என்றார் ஆதங்கத்துடன்.

“கட்சியை வளர்க்கவில்லை... காலி செய்கிறார்!”
சமீபத்தில் சென்னை சின்னமலை அருகே ஹோட்டல் ஒன்றின் டிஜிட்டல் போர்டிலிருந்த பாலியல் வாசகம் சர்ச்சையை ஏற்படுத்த, அந்த ஹோட்டல் பா.ஜ.க மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வத்துக்குச் சொந்தமானது என்றொரு தகவலும் சமூக வலைதளங்களில் பரவியது.
“டிஜிட்டல் போர்டு ஹேக் செய்யப்பட்டதற்கும், வினோஜுக்கும் என்ன சம்பந்தம்?” என கமலாலய வட்டாரத்தில் விசாரித்தோம். ``வினோஜுக்கும், தமிழக பா.ஜ.க தலைமைக்கும் சுமுகமான உறவு இல்லை. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலேயே தலைமையை எதிர்த்து அவ்வப்போது சில கருத்துகளை முன்வைக்கிறார் வினோஜ். டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்ட லாட்ஜுக்கு அருகிலேயே, வினோஜ் தொடர்பிலிருந்த ஹோட்டல் இருக்கிறது. அந்த ஹோட்டல் நிர்வாகப் பொறுப்பிலிருந்து வினோஜ் எப்போதோ வெளியேறிவிட்டார். அந்த ஹோட்டல்தான் ‘ஹேக்’ செய்தவர்களின் குறி. ஆனால், ‘வீடு மாறி திருடிய கதையாக’, வினோஜ் ஹோட்டலுக்குக் குறிவைத்து, அதன் அருகிலிருந்த லாட்ஜின் டிஜிட்டல் போர்டை ஹேக் செய்திருக்கிறார்கள். இதன் பின்னணியிலும் அண்ணாமலையின் வார் ரூம் நிர்வாகிகளே இருப்பதாகச் சந்தேகம் இருக்கிறது” என்றார்கள்.
மேலும், “இது இத்தோடு நிற்கப்போவதில்லை. தமிழ்நாடு அமைச்சர் ஒருவருக்கும், பா.ஜ.க நிர்வாகிக்கும் தொடர்பு இருக்கிறது. வேளச்சேரியைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி ஒருவருக்கும், பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற தகவல்களும் கட்சிக்குள் பரவலாகப் பேசப்படுகின்றன. அண்ணாமலை தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பார் என நினைத்த தலைமைக்கு பாலியல் அவதூறுகள் மூலம் சொந்தக் கட்சியினரையே காலி செய்கிறார் என்ற புகார் பல்வேறு தரப்பிலிருந்து சென்றிருக்கிறது. அவரது அருவருக்கத்தக்க அரசியலுக்கு விரைவில் டெல்லி மேலிடம் முடிவுகட்டும்” என்றார்கள் கோபத்துடன்…

“எல்லாம் பொய்... வன்மம்... அவதூறு”
புகார்கள் குறித்து அண்ணாமலையின் ஆதரவாளரான, மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் கேட்டோம். “எல்லாம் பொய், அவதூறு, வன்மம். இதைத் தவிர வேறெதுவும் இல்லை. கட்சியைக் கெடுக்க சில புல்லுருவிகள் செய்யும் வேலை. இதன் பின்னணியில் தி.மு.க இருக்கிறது. வீடியோ, ஆடியோ வெளியான பலரும் இப்போது அமைச்சர்களாக, எம்.எல்.ஏ-க்களாக இருக்கிறார்கள். அதைக் கேட்க இங்கே யாருமில்லை. இப்படியான புகாரைத் திரைமறைவில் இல்லாமல், நேரடியாக வந்து என்னிடம் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். அந்த தைரியம் யாருக்கும் இல்லை. திட்டமிட்டு இதை யார் செய்கிறார்கள் என எனக்கு நன்றாகவே தெரியும். விரைவில் அவர்களது முகத்திரையைக் கிழிப்பேன்” எனக் கொதித்துவிட்டார்.
எல்லாக் கட்சிகளிலுமே ஒருவரின் வளர்ச்சிக்காக இன்னொருவரை காலி செய்வது இயல்புதான். ஆனால், தமிழக பா.ஜ.க அளவுக்கு வேறெந்தக் கட்சியிலும் பாலியல் அஸ்திரங்கள் பயன்படுத்தப்பட்டதில்லை. பின்னணியைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்தக் கட்சிக்குத்தான் இழப்பு!