சஸ்பெண்ட்... சி.பி.ஐ விசாரணை... சிறப்பு நீதிமன்றம்... கொந்தளிக்கும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள்!

ஒட்டுமொத்தமாக, ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஒரே கோரிக்கை... ‘குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட வேண்டும்’ என்பதாகவே இருக்கிறது.
‘‘அரசாங்கப் பணியில் சேருவதற்கு முன்னால் நாட்டுப்பற்று, மக்கள் பணி, சமுதாயப் பணி என்ற புராணம்... சேர்ந்த பின்னால் அதிகாரமிக்க பதவி, காசு, பணம், துட்டு, ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்ற ஏகபோக வாழ்க்கை என்பதுதான் பலரின் குறிக்கோள். உயர்ந்த தலைமைப் பதவிகளை விரும்பும் அதிகாரிகள், நல்ல குணங்களையும் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அளிக்கப்பட்ட பதவி நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்வதற்கே என்ற பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்’’ என்பது உள்ளிட்ட பதிவொன்றைத் தன் முகநூலில் வெளியிட்டிருந்தார் தமிழக போலீஸின் கூடுதல் டி.ஜி.பி ஒருவர். அவர் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும், போலீஸ் அதிகாரிகள் மத்தியில் இந்தப் பதிவு வைரலாகிவருகிறது. காரணம், பெண் எஸ்.பி-க்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான பிரத்யேக வாட்ஸ்அப் குரூப்பில், குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி-யைக் கடுமையாக விமர்சித்திருந்தவர்களில் முக்கியமானவர் இந்தக் கூடுதல் டி.ஜி.பி.
அதே குழுவில் பெண் எஸ்.பி ஒருவர், ‘சீனியர் போலீஸ் அதிகாரிமீது பாலியல் புகார்’ என்று ஓர் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, ‘‘பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியும் சீனியர்தான். இந்தத் தலைப்பு அதை முன்னிலைப்படுத்தவில்லையே’’ என்று ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். ஐ.ஜி-யான ஒரு பெண் அதிகாரி, ‘‘புகார் கொடுத்து மூன்று நாள்கள் ஆகியும், அந்த போலீஸ் அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கலாமா?’’ என்று பொறியைக் கொளுத்திப்போட... பற்றிக்கொண்டது வாட்ஸ்அப் குரூப்.
ஒட்டுமொத்தமாக, ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஒரே கோரிக்கை... ‘குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட வேண்டும்’ என்பதாகவே இருக்கிறது. அதே வாட்ஸ்அப் குழுவில் குற்றம்சாட்டப்பட்டவரும் இருக்கிறார். இதையெல்லாம் படித்த அவர், கொதித்துப்போய் குழுவின் அட்மினை மென்ஷன் செய்து, ‘இப்படியான பேச்சுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று பதிவு செய்தார். ஆனால், அதை யாருமே கண்டுகொள்ளவில்லை.
குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி-க்கு ஆதரவாக, ஒரு சில போலீஸ் அதிகாரிகள் மீடியாக்களை அழைத்து, கொஞ்சம் அடக்கி வாசிக்கும்படிப் பேசியுள்ளனர். இது தெரிந்த சில ஜூனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகள், முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டு அவரின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரனுக்கு போன் செய்திருக்கிறார்கள். விஷயம் முதல்வர் காதுக்கு எட்டியிருக்கிறது. அதற்கு அவர், ‘‘அந்த அதிகாரியைத்தான் கட்டாயக் காத்திருப்பில் வைத்துவிட்டோமே... நடந்ததை விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர்கொண்ட கமிட்டி அமைத்திருக்கிறோமே? தவறு செய்திருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.

“இந்நேரம் ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால், உடனடி நடவடிக்கையாக அவரை சஸ்பெண்ட் செய்திருப்பார். நீங்கள் செய்யவில்லையே என்ற ஆதங்கம் சிலருக்கு இருக்கிறது. அதனால்தான், அவர்மீது எஃப்.ஐ.ஆர் போட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பெண் எஸ்.பி-க்கள் உங்களைச் சந்திக்க நினைக்கிறார்கள்” என்று முதல்வர் அலுவலக அதிகாரிகள், முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான், அவசர அவசரமாக பிப்ரவரி 28-ம் தேதியே இது குறித்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு முதல்வர் மாற்றினார். கூடிய விரைவில், குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி சஸ்பெண்ட் செய்யப்படலாம். மேலும், இந்த விவகாரத்தில், அந்த அதிகாரிக்கு ஆதரவாகச் செயல்பட்ட சிலர்மீதும், பெண் எஸ்.பி-யிடம் சமாதானம் பேச முயன்ற வேறு சிலர்மீதும் விசாரணை பாயலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு புறம், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி தரப்பில் அகில இந்திய ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு இந்த விவகாரம் சென்றிருக்கிறது. “டி.ஜி.பி ரேங்க்கில் இருப்பவரிடம், அவருக்குக் கீழ் ரேங்க்கில் இருக்கும் அதிகாரிகள் விசாரிப்பது எப்படிச் சரியாகும்?’’ என்ற கேள்வியுடன் அந்தச் சங்கத்தினர், மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகளிடம் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வற்புறுத்திவருகிறார்கள்.
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தால்தான் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் இருக்கும்’ என்று பதிவிட்டிருக்கிறார். மாநில மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரண்டு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசிடம் கேட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றமும் தாமாக முன்வந்து இந்த வழக்கு விசாரணையைக் கையில் எடுத்ததோடு, நேரடியாகக் கண்காணிக்கும் எனவும் அறிவித்திருக்கிறது.
இது பற்றி நம்மிடம் பேசிய பெண் அதிகாரி ஒருவர், ‘‘ஏற்கெனவே, ஐ.ஜி முருகன் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டபோது, விசாரணைக்கு நீதிமன்றத்தில் அவர் தடை வாங்கினார். அதேபோல், இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவரும் இந்த விசாரணைக்குத் தடை கேட்டு நீதிமன்றம் போவார். முருகன் வழக்கு மாதிரியே இந்த வழக்கும் நிலுவையில் இருக்கப்போகிறது. இது மாதிரி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றைத் தொடங்கி, ஒரு மாதத்துக்குள் விசாரணையை முடித்து, கடுமையான தண்டனை கொடுத்தால்தான் பாலியல் குற்றங்கள் குறையும். இல்லையென்றால் அடுத்தடுத்து பெண் அதிகாரிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண் அதிகாரிகளின் பட்டியல் தொடர்ந்து அதிகரிக்கத்தான் போகிறது’’ என்றார் வருத்தத்துடன்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம், சாத்தான்குளம் சம்பவம் எனப் பல விவகாரங்களில் எடுக்கப்படும் நடவடிக்கையின் ஆரம்ப வேகம் அப்படியே தொடர்வதில்லை. அப்படி இல்லாமல், இந்த விஷயத்தில் உடனடித் தீர்வைச் சில பெண் அதிகாரிகள் எதிர்நோக்குகிறார்கள். இந்த விவகாரத்தை எடப்பாடி அரசு எப்படிக் கையாளப்போகிறது என்பதைத் தமிழகமும் ஒருபுறம் உற்றுநோக்கி வருகிறது. தேர்தலுக்காக மக்களைக் கவரும் நடவடிக்கையாக அவை இல்லாமல், எப்போதைக்குமான தீர்வாக இருக்க வேண்டும் என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பும்.
எவ்வளவு பெரிய அதிகாரம் கொண்டவர்களும் சட்டத்திடமிருந்து தப்ப முடியாது என்பதை நிரூபிக்க வேண்டியது அரசின் கடமை!